பாண்டே 'ஜி'யின் : மக்கள் மன்றம் பேசுகிறது?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாண்டே 'ஜி'யின் : மக்கள் மன்றம் பேசுகிறது?

கருஞ்சட்டை

தினத்தந்தி தொலைக்காட்சி சார்பில் ஒரு பட்டிமன்றம் மதுரையில் நேற்று. தலைப்பு "பொது சிவில் சட்டம் தேவையா - திணிப்பதா?" என்பதாகும். தேவை என்ற தலைப்பில் கோவை பி.ஜே.பி. பிரமுகர் கோவை இராதாகிருஷ்ணன், ஆசிர்வாதம் ஆச்சாரியார், வழக்குரைஞர் சுதா இராமலிங்கம் ஆகியோரும், திணிப்பே என்ற அணியில் சுதர்சனன் நாச்சியப்பன், பாதிரியார் ஜெகத்கஸ்பர், தமீமுன் அன்சாரி ஆகியோரும் வாதிட்டனர்.

பொது சிவில் சட்டம் தேவை என்று ஒப்புக் கொண்டவர்கள் கூட அதனைக் கொண்டு வர வேண்டும் என்பவர்கள் யார்? அவர்கள் எத்தகையவர்கள்? அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் எத்தகையவை? அவர்களின் உள்நோக்கம் என்ன என்ற வினாவை எழுப்பினார்கள். அந்த அய்யப்பாட்டில் நியாயம் இருக்கவே செய்தது.

பெண்கள்மீது கரிசனம் கொண்டவர் போல பேசி இந்தப் பொது சிவில் சட்டம் தேவை என்று பேசும் பிரதமர் நரேந்திர மோடி தனி வாழ்விலும் பெண்ணைக் கைவிட்டவர்தான். குஜராத்தில்  ஆயிரக்கணக்கானவர்கள் கைம் பெண்ணாக ஆக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்த அன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் - இன்று முசுலிம் பெண்களுக்காகக்   கிளீசரின் கண்ணீர் விடும் நரேந்திர மோடி.

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, அந்தச் சிசுவை உருவி தீயில் போட்டு ஆனந்தக் கூத்தாடியவர்களுக்குத் துணை போனவர் என்கிறபோது சம்பந்தப்பட்டவர்கள் சந்தேகப் படுவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது - மறுக்க முடியுமா?

பொது சிவில் சட்டம் தேவை என்ற அணியில் பேசிய வழக்குரைஞர் சுதா ராமலிங்கம் அவர்களே இந்த வகையில் வினாவைத் தொடுத்தார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

எங்களுடைய மூதாதையர்கள் இந்துக்கள் - சிறுபான்மை சமயத்திற்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்கள் எங்களின் முன்னோர்களான இந்துக்களின் வழி வந்தவர்கள் தான் என்று பாதிரியார் ஜெகத்கஸ்பர் பேசியது பார்வையாளர்கள் மனச் சாட்சியைச் சிலிர்க்கச் செய்தது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களின் பகைவர்கள் போல சித்தரிக்கும் ஆபத்தைச் சுட்டிக் காட்டியது கவனிக்கத்தக்கது. பொது சிவில் சட்டம் என்பது திணிப்பே என்று பேசியவர்கள்கூட, குறிப்பாக ஜெகத் கஸ்பர் அவர்கள், பொது சிவில் சட்டம் வரட்டும். எப்பொழுது வர வேண்டும் என்பதுதான் முக்கிய கேள்வி என்றார்.

அந்தச் சமுதாயத்துக்குள் சீர்திருத்த உணர்ச்சி தோன்ற வேண்டும். அந்த அடிப்படையில் மாற்றம் வருவதை வரவேற்கலாம்; சில பிரச்சினைகளை சட்டம் போட்டுத் தீர்க்க முடியாது என்று குறிப்பிட்டது கவனிக்கத் தக்கதாகும்.

முசுலிம் சமுதாயத்துப் பெண்களும் படிக்க ஆரம்பித்து விட்டனர். முசுலிம் பெண்கள் முக்காடு போட்டு வருவது இதன் மூலம் தானாகவே கழன்று விட்டதே. கல்வியில் நாட்டம் கொள்ள ஆரம்பித்ததால் திருமண வயது என்பது தானாகவே உயர்ந்த விட்டதே!
ஒரு புள்ளி விவரம் பொறி தட்டுவதாக அமைந்து விட்டது இந்துக் குடும்பங்களில் விவாகரத்து பெறுவோர்  சதவீதத்தைக் காட்டிலும், தலாக் முறையில் விவாகரத்துப் பெறும் பெண்களின் சதவீதம் குறைவு என்று சொல்லப்பட்டதுதான் அது.

இந்துக் கடவுள்கள் முருகன் இரண்டு மனைவி யுடன் இருப்பதுபற்றியும் சுதர்சனன் நாச்சியப்பன் சுட்டிக் காட்டியது முக்கியமானதே! முருகன் மட்டுமல்ல - அவன் அப்பன் சிவனுக்குக்கூட இரண்டு மனைவிகள், தலையில் கங்கை, பக்க வாட்டில் பார்வதிதேவி. அது மட்டுமா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடியதால், ரிஷிகளின் சாபம் ஏற்று, சிவனின் சிசுனம் அறுந்து விழுந்த இந்து புராணத்துக்கு என்ன பதிலோ!

இந்து மத முக்கிய இதிகாசமான இராமாயணத்தில் ராமனின் தகப்பனான தசரத சக்ரவர்த்திக்கு 60 ஆயிரம் மனைவிகள், தர்மப் பத்தினிகள் மேலும் மூவர் ஆயிற்றே.

அய்ந்து கணவன் ஒரு மனைவி என்பதுதானே மகாபாரதத்துக் கதாநாயகி துரோபதையின் பரிதாப நிலை.

கிறித்துவ மதத்திலும், முசுலிம் மதத்திலும், மத நிறுவனர் உண்டு, மத நூல் என்று தெளிவாக உண்டு என்று சுதர்சனன் நாச்சியப்பன் எடுத்துச் சொன்னபோது, நடுவராக இருந்த ரெங்கராஜ பாண்டே குறுக்கிட்டுக் கீதையைச் சுட்டிக் காட்டினார். உடனே சுதர்சனன் நாச்சியப்பன் அவர்கள் தனக்குக் கீதையின் மீது மிகுந்த மதிப்புண்டு; எனது கைப்பேசியில்கூட கீதை சுலோகத்தைப் பதிவு செய்து வைத்துள்ளேன் என்று சமாளித்தார்.

கொஞ்சம் துணிவோடு 'செவிளில் அறைந்தது' போல் பதில் சொல்லி இருக்கலாம். பைபிளோ, குரானோ தன்னைச் சார்ந்த மக்களை பிறப்பின் அடிப்படையில் பேதம் வகுக்கவில்லை.

நான்கு வகை வருண தர்மத்தையும் நானே படைத்தேன். அப்படி வருணத்தைப் படைத்த நானே நினைத்தாலும் அவர்களுக்கான வருணத்திற்குரிய தொழிலை மாற்றி அமைக்க முடியாது என்று கீதாசிரியன் கிருஷ்ணன் சொன்னது போல ஏசுவோ, நபியோ கூறவில்லையே என்று பளிச் சென்று பதிலடி கொடுத்திருந்தால், அங்குக் கூடியிருந்த பார்வையாளர்கள் அத்தனைப் பேரும் இந்த அணியின் சட்டைப் பைக்குள் வந்து விழுந்திருப்பார்களே!

'வைஸ்யர்களும், பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியிற் பிறந்தவர்கள்' என்று கீதையில் 'பகவான்' கிருஷ்ணன் சொன்னதாகக் காணப்படுகிறதே, நடுவர் ரெங்கராஜ பாண்டேஜி அவர்களே! இதற்கு உங்களின் பதில் என்ன? என்று ஒரு 'குத்து' விட்டிருந்தால் பாண்டே ஜியின் சப்த நாடியும் நடுங்கி, ஒடுங்கி வெளிறிப் போயிருக்குமே!

பொது சிவில் சட்டம் பற்றி சர்ச்சை கிளம்பி யுள்ளதே. அது சுற்றிச் சுற்றி முஸ்லிம்களை மய்யப் புள்ளியாக வைத்துச் சுழலுகிறதே தவிர, இந்து மத்தை ஏன் முன்னிலைப்படுத்தவில்லை?

இந்தப் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் பிறப்பின் அடிப்படையில் ஜாதி - அந்த ஜாதியின் அடிப்படையிலேயே உயர்வு தாழ்வு இருக்கிறதே - அது தகர்க்கப்பட்டு பொது நிலை சமத்துவத்திற்கு வழி வகுக்கப்படுமா? தனிச் சுடுகாட்டு ஏற்பாடு முறை ஒழிக்கப்படுமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கொண்டு வரப்படுமா?

பிறவியில் பேதப்படுத்தும் இந்து மத வேதங்கள், சாத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் தடை செய்யப்படுமா? இந்துக் கூட்டுக் குடும்பத்திற்கென்று அளிக்கப்பட்ட வரிச் சலுகை நீக்கப்படுமா? வாரிசு உரிமை முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா? சூத்திரர்கள் துறவு பூண முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒழிக்கப்படுமா? என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும்.

ஒன்று மட்டும் உண்மை. எந்த மதமாக இருந்தாலும் மாற்றம் என்பதுதான் மாறாதது என்பதை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்.

நடுவராகப் பணியாற்றிய தோழர் ரெங்கராஜ பாண்டே, தன் பெயருக்குப் பின்னால் 'ஜி' சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று நடுவர் என்ற முறையில் உத்தரவுப் போட்டார்; அதாவது ரெங்கராஜ பாண்டே ஜீ என்று கூற வேண்டுமாம். தன் மரியாதையை தானே உயர்த்திட முதுகில் தம்பட்டம் கட்டிக் கொண்ட ஒருவரை இதன்மூலம் நாம் பார்த்துக் கொண்டு விட்டோம். வடநாட்டுக் கலாச்சாரத்தை இறக்குமதி செய்து விநியோகம் செய்துள்ளார் இந்தப் பீகார்காரர் - எச்சரிக்கை!

நடுவராக இருந்து மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அவரை அறியாமலேயே தன் உண்மை உருவத்தை தனக்குத்தானே கிழித்துக் காட்டிக் கொண்டு விட்டார்.

சுதர்சனன் நாச்சியப்பன் அவர்களைப் பார்த்து தான் அந்தக் கேள்வி. இந்து மதத்தைப் பற்றிப் பேசும் நீங்கள் மற்ற மதத்தைப் பற்றிப் பேசத் தயங்குவது ஏன்? இந்து மதம் என்றால் யாரும் ஈசியாக விமர்சனம் செய்யலாம் தானே? என்று மிகுந்த மனப் புழுக்கத்தோடு ஆர்.எஸ்.எஸின் முன்பாட்டை உள் வாங்கி ஏழரைக் கட்டையில் உமிழ்ந்ததுதான் உண்மையான ரெங்கராஜ பாண்டே ஜியின் சரியான முகவரி!  பட்டிமன்றத்தில் ஒருங்கிணைப்பாளராக தலை காட்டியவர்; நடுவராக தன்னைத்தானே நகர்த்திக் கொண்ட தந்திரம். ரெங்கராஜ பாண்டே ஜிக்கே உரித்தான தனித்தன்மையான சாமர்த்தியம்தான் - பாண்டே ஆயிற்றே அவர்!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner