‘கடவுள் கருணையே வடிவானவனா?’ ஆத்மா புரட்டு தேவையா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- ஊசி மிளகாய்‘ஆன்மீகம்‘ என்ற சொல்லே அர்த்தமற்ற பித்தலாட்டச் சொல்லாகும்.

‘ஆத்மா’ என்பதைத் தமிழன்பர்கள் ‘ஆன்மா’ என்று தமிழ்ப்படுத்தினர் - அதிலிருந்து விரிந்த சொல்லே ‘ஆன்மீகம்‘ என்பதாகும்!

ஆத்மா என்றால் உயிரா என்றால், ‘இல்லை’ என்கின்றனர். உடலுக்கு அழிவு உண்டு; ஆத்மாவுக்கு அழிவு இல்லை. உடலைக் கொல்ல முடியும்; ஆத்மாவை யாரும் கொல்ல முடியாது என்று ஒரு ‘புருடா’வின் அண்ணன் மற்றொரு புருடா விட்டது  - கண்ணன் பேரில் கீதை என்பதை எழுதி - மக்களை பக்தியின் பேரால் இன்றளவும் ஏமாற்றி வரும் பார்ப்பனீயம்! வருணாசிரம முறையான நான்கு ஜாதி சதுர்வர்ணத்தைக் காப்பாற்றவே கீதை; அதனை முட்டுக் கொடுக்கவே ஆத்மா கற்பனை.

கடவுள் கற்பனையின் மூத்த அண்ணன் கற்பனை ஆத்மா. பெர்ட்ரண்ட் ரசல், தந்தை பெரியார் எல்லாம் சொன்னார்கள்.

‘‘கடவுள் கற்பனையைக் கண்டு பரப்பியவனைக் கூட மன்னிக்கலாம்; இந்த ஆத்மா கற்பனையை - உருவாக்கி - பரப்பிடும் அயோக்கியர்களை மன்னிக்கக்கூடாது’’ என்றனர்!
ஆன்மீகம் என்ற பெயரால் எத்தனை எத்தனை வன்புணர்ச்சி - வல்லாண்மைகள்!

மனித உயிர்கள் பலியாவது மிகச் சர்வ சாதாரணமாகிவிட்டதே!

‘புனித’ கங்கா உள்ள வாரணாசி என்ற காசி அருகில், ஆன்மீகப் புண்ணியம் தேட திரட்டப்பட்ட பக்தி என்று புத்தியை அடகு வைத்த அறியாமைக் கூட்டத்தினர் நெரிசலில் சிக்கி 24 பேர் (உண்மையில் எத்தனையோ) இறந்தனர்! பலருக்கும் படுகாயம்!

ஜெய் குருதேவ் என்பவரின் பிறப்பு, இவரது தாய் தந்தை போன்ற விவரங்கள் எதுவுமே யாருக்கும் தெரியாது. இவர் தனது சொந்த மாவட்டம் இட்டாவா என்று கூறியதாக அவரது சீடர்கள் குறிப்பிட்டிருந்தனர்.   

இவர் ஆன்மீக சபையில் பேசும்போது தன்னுடைய வயது 470 என்றும், தான் அவுரங்கசீப்பை பார்த்தவன் என்றும் அடிக்கடி கூறுவார்  இந்த ‘கப்சா’ சக்ரவர்த்தி! ஆனால், இவரது இறப்பிற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இவரது சீடர்கள் இவருக்கு 116 வயது என்று கூறியுள்ளனர்.

‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இதழில் வெளியிட்டுள்ள செய்தியில், இவர் இறந்த பிறகு இவரது ஆசிரமத்தில் இருந்து 10,000 கோடி இந்திய ரூபாய் கையிருப்பில் இருந்ததாகவும், அதே அளவிலான சொத்துமதிப்பு உள்ளதாகவும், நவீன வசதிகள் கொண்ட 250 உல்லாச ஊர்திகள் இருந்தன என்றும், இந்தக் கார்கள் அனைத்தும் அவரது பக்தர்கள் கொடையாக கொடுத்தவை என்றும் எழுதியுள்ளது.

இந்தக் கார்களின் மதிப்பு ரூ. ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்றும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது!

கடவுள் கருணையே வடிவானவன் என்பது எவ்வளவு பெரிய ‘கப்சா’ என்பது இப்போதாவது புரியவேண்டுமே! புரிந்ததா? இல்லையே!

கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செய்து திரும்பும் குடும்பங்கள் விபத்துக்குள்ளாகி செத்தனர் என்பதைக் கேட்டு, நம் நெஞ்சு வலிக்கிறது - காரணம், மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை என்று மனிதநேயத்தோடு சிந்திக்கும் பான்மையரான நமக்கு!

ஒரே வார்த்தையில் அதற்கு  ‘சமாதானம்‘ ‘உம், அவன் விதி முடிந்தது!’ எவ்வளவு அருமையான போதைப் பொருள் கண்டுபிடிப்பு!

பகுத்தறிவைப் பயன்படுத்தாமல், பக்தியின்மூலம் நோயைக் குணப்படுத்திட பக்தி வியாபாரம் செழித்தோங்குகிறது  - பாழ்படுத்தப்படும் இந்தப் பகுத்தறிவு வயலில்! மூடநம்பிக்கை எருமைகள் மேய்ந்துகொண்டுள்ள கொடுமை!

என்று அகலும் இந்த மூடத்தனத்தின் முடைநாற்றம்?

அய்யகோ, நமக்குத்தான் எவ்வளவு வேலை?.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner