பூமாலை வாங்கப் போய், புழுதியைச் சுமந்து திரும்பிய கதை!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- ஊசிமிளகாய்

இன்று (9.9.2016) ஆங்கில ‘இந்து’ நாளேட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தி.

பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் சொந்த மண்ணான குஜராத்திலேயே பெரும் எதிர்ப் பைக் கண்டு அமித்ஷா தனது வரவேற்பு நிகழ்ச்சியை நாலே நிமிடங்களில் முடித்து ‘வெற்றிகரமாக’த் திரும்பிய செய்தி அது!

பட்டிதார்கள் என்ற பட்டேல் பிரிவினர் அதிகம் வசிக்கும் குஜராத்தின் சூரத் பகுதியில், தங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது என்று உலகுக்குக் காட்டும் ஒரு முயற்சியாக, அங்கே பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, குஜராத் புதிய முதலமைச்சர் விஜய் ரூபானி, மாநில பா.ஜ.க. தலைவர் ஜித்வாகினி, குஜராத்தின் மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபாலா, மன்சூக் மாண்டேவியா போன்ற அத்தனைப் பேருக்கும் பெரு வரவேற்பு நிகழ்ச்சியை ‘ஏக தடபுடலாக’ ஏற்பாடு செய்து, அக்காட்சிகளின்மூலம் அப்பகுதியில் பட்டி தார்களின் பேராதரவு பா.ஜ.க.வுக்கு இருக்கிறது என்று காட்டிட செய்த ஏற்பாடு புஸ்வாணமாகியதோடு, சொல்லொணா அவமானத்தோடு திரும்பும் நிலையை பா.ஜ.க.வுக்கு ஏற்படுத்தி விட்டது!

இத்தனைக்கும் 1,700 போலீஸ்காரர்கள் காவல் - ‘பந்தோபஸ்த்’ போடப்பட்டும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 4 நிமிடங்களில் தனது பேச்சை முடித்து அந்த இடத்தைவிட்டுப் பறந்துவிட்டார்!

கூட்டம் நடந்த இடத்தில் கல் வீச்சுகள் கண்ட கண்ட பக்கங்களிலிருந்தும்! அந்தோ பரிதாபம்!!

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, குஜராத்தின் மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா ஆகிய இருவரும் 5 நிமிடங்களுக்குமேல் பேச முடியாத அளவுக்குக் கூச்சல், குழப்பம், நாற்காலி, கற்கள் வீச்சுகள்!

பெரு ஏற்பாடான நிகழ்ச்சி 45 நிமிடங்களில் முடிந்தது; ‘தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்‘ என்று தலைதெறிக்க ஓடினர் கூடிய காவிகள்!

என்றாலும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொன்ன கதைபோல, பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஜித்வாகினி,  பெரும் ஆதரவு இருந் தும், ஒரு சிறு பட்டிதார் கும்பல் இப்படி ரகளை செய்தது என்று ஏதோ ஒரு விந்தையான விளக்கத்தைக் கூறினார்!

அப்பகுதிக்கே வரக்கூடாது என்று பட்டேல்களின் - பட்டிதாரின் இட ஒதுக்கீடு ‘ஹீரோவான’ ஹர்திக் பட்டேல் உதய்ப்பூரிலிருந்து கொண்டு ‘எங்கள் மக்களையே பிரித்தாளும் பா.ஜ.க.வின் தந்திரங் களும், சூழ்ச்சிகளும் இனி ஒருபோதும் பலிக்கவே பலிக்காது!’ என்று - இந்த சூரத் சம்பவம்பற்றிக் கூறியுள்ளார்!

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வரலாற்றி லேயே காங்கிரஸ் மகாசபை நடந்தபோது, இதே சூரத்தில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட முதன்முதலில் செருப்புகளை வீசி, கலவரம் செய்த வரலாற்றின் பதிவுக்குரிய நிகழ்வுகளின் கர்த்தாக்கள் பாலகங்காதர திலகரும், அவரது தீவிரவாத கோஷ்டியினரும் என்பது நினைவு கூரத்தக்கது!

முதல் அரசியல் ஒழுக்கக்கேட்டைத் துவக்கிய பெருமைக்குரியவர் திலகரும், அவரது கோஷ்டியினரும் என்பதும் அதே சூரத்தில்தான்; மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ.க.வுக்கே இந்நிலை!

‘‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’’ என்பதுபோல, குஜராத் தேர்தல் முடிவுகளுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் முன்னோட்டம் போலும்!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner