காவிரி பிரச்சினையில் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் சிறந்த வழி மத்திய நீர்வள ஆணையத் தலைவர் பேட்டி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி பிரச்சினையில் தீர்வு காண
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் சிறந்த வழி
மத்திய நீர்வள ஆணையத் தலைவர் பேட்டி

புதுடில்லி, செப்.22 காவிரி நதிநீர் பிரச் சினைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அடுத்த 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை மத்திய நீர்வளக் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா வரவேற்று உள்ளார்.

இதுபற்றி அவர் டில்லியில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கருநாடகம் மற்றும் தமிழ்நாடு இடையேயான காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினையில் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு இருப்பது சிறந்த தொரு வழி ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அமைக்கும் இந்த வாரியத்தில், கருநாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என்றார்.

இதுபோன்ற நெருக்கடியான பிரச் சினைகளை தீர்த்துவைப்பதற்கு என்ன செய்யலாம்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், நீரைத் தேக்கி வைப்பதும், அதை பாதுகாப்பதும் மிகவும் அவசியம். ஏனெனில் தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்யாதவரை, நீரை தேக்கி வைப்பது மற்றும் தேவைக்கு ஏற்ப தண்ணீரை திறந்து விடுவது ஆகியவற்றில் நம்மால் திறம்பட செயல்பட முடியாது என்று குறிப்பிட்டார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சஷி சேகர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது. எனவே இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாத சூழ்நிலை இருந்தது. தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப் பதால் 4 வாரங்களுக்குள் அமைக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பிறகு அதுபற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

இதற்கிடையே மத்திய அரசு அமைக்க இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று 4 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக முதலில் அரசாணையை மத்திய அரசு வெளியிடும். இதையடுத்து இந்த வாரியம் செயல்படுவதற்கு தலைமை அலுவலகம் அமைக்கப்படவேண்டும்.

இதைத் தொடர்ந்து அணைப்பகுதிகளில் முகாம் அலுவலகங்கள் அமைக்கப்படும். இந்த அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு தேவையான அதிகாரிகளை மத்திய அரசே நியமிக்கும். இந்த அதிகாரிகள் நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றிய பொறியாளர் களாகவும், 20 ஆண்டு அனுபவம் கொண் டவர்களாகவும் இருப்பார்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக தலைமை பொறியாளர் அந்தஸ்தில் அதிகாரியும், 2 உறுப்பினர்களும் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் இடம் பெறுவார்கள். காவிரி ஆறு ஓடாத மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரே வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுவார்.

மாநில பிரதிநிதிகளை மட்டுமே மாநில அரசுகளால் நியமிக்க இயலும். தலைவர் மற்றும் உறுப்பினர்களையும், முகாம் அலுவலகங்களில் பணியாற்றுபவர் களையும் மத்திய அரசுதான் நியமிக்கும்.

காவிரி மேலாண்மை வாரியம் முழுக்க முழுக்க மத்திய அரசின் அமைப்பாக செயல்படும். அணையில் நீரை திறந்து விடுவது, அணையை மூடுவது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம், வாரியத் தலைவருக்கு உண்டு. அதற்கு முன்பாக உறுப்பினர்களும், மாநில பிரதிநிதிகளும், தங்களின் ஆலோசனைகளையும், எதிர்ப்புகளையும் தெரிவிக்கலாம்.

தொழில்நுட்ப ரீதியாக அணைகளில் நீர் இருப்பு, நீர் வரத்து, மழை வெள்ளம் ஆகியவற்றை ஆய்வு செய்து அதன் அடிப் படையில் காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு பிறப்பிக்கும். தொழில்நுட்ப ரீதியான ஆய்வுக்காக வானிலை இலாகா அதிகாரி ஒருவரும் இந்த வாரியத்தில் இடம்பெறுவார்.

மேலும் அணையை திறப்பது, மூடுவது போன்ற விஷயங்களில் கர்நாடக அரசு இனி தலையிட முடியாது. அது மத்திய அரசின் பொறுப்புக்கு சென்று விடும்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலம் கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹே ரங்கி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணை களும், தமிழகத்தில் லோயர் பவானி, அமராவதி, மேட்டூர் ஆகிய அணைகளும், கேரளாவில் பனசுர சாகர் அணையும் கண் காணிக்கப்பட்டு நீர் மட்டம், நீர்வரத்து, நீர்இருப்பு ஆகியவை கணக்கிடப்படும்.

தமிழகத்துக்கு திறக்கப்படும் தண் ணீரின் அளவு ஒகேனக்கல்லை அடுத்த பிலிகுண்டுவில் கணக்கிடப்படும். இதில் பருவ மழை காலங்களில் காவிரி படுகை பகுதிகளில் பெய்யும் மழை அளவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner