ஓ, பஞ்சம, சூத்திரத் தமிழர்களே! உங்களைத்தான்...
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- மி ன் சா ர ம் -

தி.மு.க. ஆட்சியின் மீதும், கலைஞர் அவர்கள் மீதும் கல்லெறியும் ஊடகங்கள், உயர் ஜாதியினர் அடுத்து ஆட்சிக்கு வரத் துடிக்கும் ஜெயலலிதா அம்மையாரை நோக்கி எந்த வினாவையும் விடுப்பதில்லையே - ஏன்? ஏன்?

(1) அந்த அம்மையார் ஆட்சிக் காலத்தில் ஒரே ஆணையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்பினாரே...

சாட்டையைக் கொண்டு அரசு அலுவலர்களை வேலை வாங்குவேன் என்றாரே...

பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை கல்தா கொடுத்துத் தள்ளினாரே...

13,000 மக்கள் நலப் பணியாளர்களை பச்சாதாபம் இன்றி வீட்டுக்கு அனுப்பினாரே- இதனால் 13 ஆயிரம் குடும்பங்கள் வீதிக்கு வந்தனவே...

- இப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் முதலமைச்சராக வரலாமா என்று கேள்வி கேட்க முன்வராதது ஏன்?

(2) தி.மு.க. ஆட்சியில் ஊழல், ஊழல் என்று ஒப்பாரி வைக்கும் அம்மையார் அளவுக்கு மீறி சொத்துக் குவியல் வழக்கினை வாய்தா வாங்கி வாங்கித் தள்ளிக் கொண்டு போவது பற்றி ஒரு கண்டனம் உண்டா?

(3) எதிர்க் கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் தலை நகரில் தங்கி பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் கொடநாடு பங்களாவில் மாதக் கணக்கில் டேரா அடிப்பது பற்றி அரைப் பத்தி எழுதியதுண்டா?

(4) குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயலலிதா இடம் பெற்ற மூன்றாவது அணி தேர்தலைப் புறக்கணிக்கத் தீர்மானித்த நிலையில், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும் பா.ஜ.க. வேட்பாளர் செகாவத்துக்கு ஓட்டுப் போட்டார்களே- இது பற்றி பிரச்சினை வந்தபோது, எனக்குத் தெரியாமலேயே இப்படி ஓட்டுப் போட்டுவிட்டனர் என்று சொன்னாரே ஜெயலலிதா. இதுபற்றி எவ்வளவு எழுதி இருக்க வேண்டும்? கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதற்கு லாயக்கற்றவர் இவர் - உடனே பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எழுதியதுண்டா- கூறியதுண்டா?

இதே மாதிரி தி.மு.க.வில் நடந்திருந்தால்... அடேயப்பா, இந்த ஆரியப் பார்ப்பனர்கள் ஆகாயத்துக்கும் பூமிக்கும் வானரமாகத் தாவி எவ்வளவு விமர்சன அம்புகளை ஏவு ஏவு என்று ஏவியிருப்பார்கள்?

5. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே, தன் கட்சியின் 160 பேர்களைக் கொண்ட அ.தி.மு.க. பட்டியல் வெளியிட்டது குறித்து எப்படி எப்படி எல்லாம் விமர்சித்திருக்க வேண்டும் - ஏன் அதனைச் செய்யவில்லை?

மாறாக ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இல்லாமலேயே அது நடந்துவிட்டது என்று சற்றும் கூச்சம் இல்லாமல் எழுதினார்களே - ஜெயலலிதாவுக்குச் சம்பந்தம் இல்லாமலே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது என்றால், ஜெயலலிதா வெறும் டம்மிதான் என்று பச்சையாகப் பரிகாசம் செய்து எழுதியிருக்க வேண்டாமா? மாறாக, அது ஒரு திருப்பம் என்று தினமலர் எழுதியதே - இதற்குப் பெயர்தானே பார்ப்பனியம் என்பது!

(6) தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் மேசையின் முன் அமர்ந்து, கூடிப் பேசி முடிவெடுத்து, செய்தியாளர்களை அழைத்து பட்டியலையும் அறிக்கையையும் வெளியிடுகிறார்களே - அந்த நிலை அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாதது குறித்து ஏதாவது விமர்சனம் உண்டா?

அ.தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து தே.மு.தி.க.வின் தொகுதிப் பட்டியல் தொலைப் பதிவி (Fax) மூலம் செல்லுவதும், அதில் கையொப்பமிட்டு நடிகர் விஜயகாந்த் தொலைப் பதிவி (Fax)   மூலம் அ.தி.மு.க.வுக்கு அனுப்பி வைப்பதும்தான் அ.தி.மு.க. கூட்டணியில் நல்லுறவு தாண்டவமாடுகிறது என்பதற்குப் பொருளா? இது குறித்து விமர்சனம் இல்லாமல்போனது - ஏன்?

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் தனது கூட்டணியின் பிரதான கட்சியான தே.மு.தி.க. பிரச்சாரம் பற்றியோ,விஜயகாந்தின் பிரச்சாரம் குறித்தோ ஒரே ஒரு வரிகூட இடம் பெறுவதில்லையே, இதற்குப் பெயர்தான் கூட்டணியா என்று கேள்வி கேட்டதுண்டா?

(7) தமிழ்நாட்டின் பொருளாதார வளத்தைப் பெருக்கும் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து முடக்கி இருப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்று எழுதிட பேனாவுக்கு மை இல்லாமல் போய்விட்டதா?

(8) கட்சி அலுவலகத்திற்கு ஜெயலலிதா செல்வதற்கேகூட கட்-அவுட் வைத்து, மேள தாளத்துடன் அழைத்துச் செல்லும் நகைச்சுவை குறித்து நான்கு வரிகள் எழுதியதுண்டா?
ஜெயலலிதா செய்யும் இத்தகு செயல்களில் நூறில் ஒரு பங்கு கலைஞரோ, தி.மு.க.வோ செய்திருந்தால், இந்த நாட்டு ஊடகங்கள் உலகத்தின் ஒவ்வொரு சந்து பொந்துக்கும் தூக்கிச் சென்று குத்தாட்டம் போட்டு இருக்கமாட்டார்களா?

ஏன் இதனைச் செய்யவில்லை?

காரணம், ஜெயலலிதா பாப்பாத்தி (அவரே சட்டப் பேரவையில் சொன்னதுதானே) கலைஞர் ஒரு சூத்திரர். (அவரே சட்டப்பேரவையில் அறிவித்தது தானே!).

இதற்கு மேலும், பஞ்சம,  சூத்திரத் தமிழர் களுக்கு எடுத்துச் சொல்ல என்ன இருக்கிறது?
ஆனந்தவிகடன் குடும்பத்தைச் சேர்ந்த ஜூனியர் விகடனோ நாட்டில் நடக்க இருக்கும் தேர்தல் ஆரியர் - திராவிடர் போராட்டமே - இதில் ஆரியப் படைக்குத் தலைவர் ஜெயலலிதா என்று அறுதியிட்டுக் கூறிவிட்டது.

இதற்கு மேலும் தமிழர்களே, உங்கள் முடிவு எதுவாக இருக்க வேண்டும் ?

நீங்கள் ஆரியர் பக்கமா?

திராவிடர் பக்கமா?

சிந்திப்பீர்! செயல்படுவீர்!!சாதனைதான்!

கமிஷன் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு எத்தனை அர்த்தங்கள் -
குழு அமைத்தல்
பணியமர்த்தல்
தவறு செய்தல்
குற்றம் இழைத்தல்
தரகு வழங்குதல்
தரகு பெறுதல்
இத்தனைக்கும் இலக்கியமாகத் திகழும் தேர்தல் கமிஷன் -
ஏ அப்பா, சாதனைதான்!

- பேராசிரியர் அ. அய்யாசாமி.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner