ஜூ.வி.க்கு ஒரு பதில்: முதலாளிமாரின் குரல் (HIS MASTER’S VOICE)
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்கள் பச்சையாக வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டன. நடுநிலை இதழ்கள் என்று போக்குக் காட்டி தமிழர்களின் சட்டைப் பைகளை உறிஞ்சிடும் இது போன்ற இதழ்கள், குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தங்களைத் தமிழர்களுக்கு விரோதிகள் என்பதை வேறு வழியில்லாமல் அடையாளம் காட்டிக் கொண்டுவிட்டன. இந்த இடத்தில் தமிழர்கள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டால் அவர்களின் நடுநிலை முகமூடி கிழிக்கப்பட்டுவிடும்.

இந்த இதழ்கள் சாமார்த்தியமாக ஒன்றைச் செய்து விட்டு, தமிழர்களைப் பிடித்து அவர்களின் கைகளில் எழுது கோல்களைக் கொடுத்து, சகட்டு மேனிக்கு எழுதச் சொல்லி, அதன் மூலம் தங்களின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு ஒரு சொறிகல்லை உருவாக்கிக் கொண்டு விடும். ஜூனியர் விகடன் இதழில் (10-4-2001)  கட்டுரை ஒன்றை தோழர் திருமாவேலன் எழுதியுள்ளார்.

இந்தக் கட்டுரை அசல் பார்ப்பனத் தன்மையில் - தந்தை பெரியார் அவர்களைப் பயன்படுத்தி, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைத் தாக்குவது என்பதுதான் அந்தப் பார்ப்பனீயத்தனம் என்பது!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கடைசிப் போராட்டம். தந்தை பெரியார் காலத்திலேயே கலைஞர் அவர்கள் போராட்டத்துக்கு அவசியமின்றி சட்டம் ஒன்றை உருவாக்கினார். அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர் 13 பார்ப்பனர்கள். ஆச்சாரியார் கைச்சாத்துக் கொடுக்க, பல்கிவாலா என்ற வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் வாதாடினார். சட்டம் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டது.

மறுபடியும் 5 ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மீண்டும் ஒரு முறை அதற்காகச் சட்டம் ஒன்றை இயற்றினார். அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு முறையில் அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களைக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் தருணத்தில், பார்ப்பனர்கள் மீண்டும் உச்ச நீதி மன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி, தடையைப் பெற்று விட்டனர்.

தலைசிறந்த வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வாதிட்டது. எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பிட்ட வழக்கை விசாரிக்க முன்வராமல் அதனைத் தள்ளி வைப்பதிலேயே தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகள் அனைவரும் குறியாக இருந்தனர். உச்சநீதிமன்றத்தின் இத்தகு செயல்பாட்டுக்கு மேல் ஒரு அரசு வேறு எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்திருந்தும், இந்தச் சட்டம் ஏன் நடைமுறைக்கு வரவில்லை என்று கேள்வி கேட்பது - அறிவைப் பின்னுக்குத்தள்ளி ஆத்திரத்திற்கு மகுடம் சூட்டுவதாகும்.

இட ஒதுக்கீடு தொடர்பாகவும் கலைஞரை நோக்கிக் கணைகளை ஏவுகிறது ஜூ.வி. அமெரிக்காவில் எப்படி இருக்கிறது என்றெல்லாம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமெரிக்காவில் பார்ப்பனர்கள் இல்லையே - என் செய்வது! விஜயன் போன்ற கோடாரிகள் கிடையாதே - என் செய்வது!!

முறையாகச் சட்டம் இயற்றப்பட்டு, நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட ஒரு நிலையிலும்கூட, இங்கே நீதிமன்றம் தலையிடுகிறது. 20 ஆண்டு காலமாக அது தொடர்பான முக்கிய வழக்கில் தீர்ப்புச் சொல்லாமல் காலம் கடத்துகிறது. இந்த நிலையெல்லாம் அமெரிக்காவில் உண்டா?

பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று மண்டல் குழு பரிந்துரைத்ததில், வேலை வாய்ப்பில் மட்டும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய தற்காக, வி.பி. சிங் தலைமையிலான ஓர் அரசே கவிழ்க்கப்பட்டதே - இந்த நிலை - தோழர் திருமா வேலன் சுட்டிக் காட்டும் அமெரிக்காவில் உண்டா?

கல்வியில் 27 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதில் எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள்?

இந்தப் பிரத்தியட்ச உண்மைகளை அறிந்து வைத்திருந்தும், இட ஒதுக்கீட்டின் அடுத்த கட்டத்திற்கே ஏன் தாவவில்லை என்று கேட்பது அறிவுடைமைதானா? நுழைவுத் தேர்வை ஒழித்தது சாதாரணமான செயல் தானா? ஜெயலலிதா தோற்ற இடத்தில் கலைஞர் வெற்றி பெற்றது எப்படி? - இதுபற்றி ஒரு வரி எழுதிட மனம் வரவில்லையே நமது தமிழரான தோழருக்கு!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை, இட ஒதுக்கீடு போன்றவற்றில் குறை சொல்லும் விகடன்கள், இந்தப் பிரச்சினைகளில் அவற்றின் கொள்கை என்ன? இதற்காக ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டது உண்டா? கலைஞர் அவர்கள் இத்திசையில் செயல்பட்டாலும் குற்றம் - மேற்கொண்ட முயற்சிகளில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டாலும் அதன் அடிப்படையிலும் கலைஞர் குற்றவாளி என்று குத்துவது -இதை அறிவு நாணயத்தின் எத்தனையாவது பக்கத்தில் செதுக்குவது?

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அறிந்து கொள்வது என்பது ஒன்று; அரசியலுக்குச் சென்றவர்கள் அதனை முழுமையாகச் செயல்படுத்துவது என்பது எந்த அளவில்  என்பது இன்னொன்று. இதனை தந்தை பெரியார் அவர்களே உணர்ந்த நிலையில்தான், கலைஞரை ஆதரித்தார் - தொடர்ந்து அவர் முதல் அமைச்சர் ஆக இருக்க வேண்டும் என்ற கருத்தினையும் தெரிவித்தார். இதனை வசதியாக ஜூ.வி. மறைப்பது ஏன்? அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை கலைஞர் அவர்கள் செயல்படுத்திய அளவுக்குச் சாதனையைப் படைத்த மற்றவர் யாவர்?

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத் துறைக்குக் கொண்டுவந்தது, வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் வள்ளலாரின் கொள்கைக்கு முரணாக உருவ வழிபாட்டை நடத்தி வந்த அர்ச்சகப் பார்ப்பனரை வெளியேற்றியது - இவையெல்லாம் தந்தை பெரியார் பார்வையில் வரவேற்கப்பட வேண்டியவை அல்லவா?

இவற்றில் ஒன்றைக்கூட பாராட்டாத நிலையில், குற்றம் எங்கே இருக்கிறது என்று தேடிப் பிடிக்கும் வேலையில் இறங்குவது - ஏற்கெனவே விடையை எழுதி விட்டு மேலே கணக்குகளை ஜோடிக்கும் விதாண்டா வாத வித்தையைச் சேர்ந்ததே! இதில் இன்னொரு முக்கியம ன கடைந்தெடுத்த பார்ப்பனீயத்தின் சித்து விளையாட்டு கவனிக்கத்தக்கது.

நான் பாப்பாத்தி என்றும், ராமர் பிறந்த அயோத்தியில் கோயிலைக் கட்டாமல் , வேறு எந்த இடத்தில் கோயில் கட்ட முடியும் என்றும் கேட்ட ஜெயலலிதா - ஆரியர் படைக்குத் தலைமை தாங்க முழுத் தகுதி படைத்தவர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் திராவிடர் படைக்குத் தலைமை தாங்க கருணாநிதிக்கு இருக்கும் தகுதியை ஏற்பதற்கு இல்லை.

இந்தப் பகுதி கட்டுரையாளரின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதா ஆரியர் படைக்குத் தலைமை தாங்கத் தகுதி படைத்தவர் என்பதை சரியாகவே ஒப்புக் கொண்டுள்ளார். நடைபெறவிருக்கும் தேர்தலில் கலைஞரா? -  ஜெயலலிதாவா? என்ற கேள்வி எழுந்து நிற்கும் ஒரு நிலையில், ஜூ.வி.யில் எழுதப்பட்ட கட்டுரையின் அடிப்படையில் (ஆரியர் - திராவிடர்) திராவிடர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்- ஆதரிக்க முடியும்? ஆரியர்களுக்குத் தலைமை வகிக்கும் ஜெயலலி தாவையா? முழுமையான அளவுக்குத் தந்தை பெரியார் திராவிட இயக்கக் கொள்கையைச் செயல்படுத்த முடியா விட்டாலும், ஒரு மாநில அரசு என்ற அளவில் முடிந்த அளவுக்குத் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை - திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும், செயல்படுத்தும் கலைஞரையா? யாரை ஆதரிக்கவேண்டும்? திராவிடர் படைக்குத் தலைமை தாங்க கருணாநிதிக்கு  இருக்கும் தகுதியை ஏற்பதற்கு இல்லை என்று சொன்னால் மட்டும் போதுமா? அரசியலில் திராவிடருக்குக் கலைஞர் தலைமை வகிக்கத் தகுதியற்றவர் என்றால், வேறு யார் தலைமை வகிக்கத் தகுதி உடையவர் என்று கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்க வேண்டாமா?

கலைஞர் அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்று கூறும் ஜூ.வி. எழுத்தாளர் ஒப்புக் கொண்டு எழுதியுள்ளபடி ஆரியர் படைக்குத் தலைமை வகிக்கும் ஜெயலலிதாவின் கையில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டுமா? தீர்வு எதையும் கூறாமல் வெறும் குற்றப் பத்திரிகை படிப்பது மட்டும் பொறுப்பான செயலாகுமா?

அண்ணா என்ற பெயரையும்,திராவிட என்ற இனப் பண்பாட்டுச் சொல்லையும் பயன்படுத்தி அவற்றின் ஆணி வேரை அன்றாடம் வீழ்த்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, அண்ணா, திராவிட என்னும் பெயர்கள் உள்ள ஒரு கட்சிக்குத் தலைமை தாங்கத் தகுதியில்லை என்று எழுதிட மனம் வரவில்லை ஜூ.விகடன் எழுத்தாளருக்கு. ஆரியர் எப்படி திராவிடப் படைக்குத் தலைமை தாங்க முடியும் என்ற கேள்வி எழுப்பிடத் துப்பில்லை.

பச்சையாக ஆரியத்துக்கு வக்காலத்து வாங்கும் (His Master’s Voice) முதலாளிமாரின் குரலை எதிரொலிப்பது என்பது அல்லாமல் வேறு என்னவாம்? இதில் தந்தை பெரியாரை வேறு துணைக்கழைப்பது பச்சையான பார்ப்பனியத்தனம் அல்லவா!

ஜெயலலிதாவிடம் மூட்டை மூட்டையாகக் குடிக் கொண்டிருக்கும் கேடுபாடுகளை நன்கு தெரிந்திருந்தும் எந்தப் பார்ப்பனரும், பார்ப்பன ஏடுகளும் அவற்றை வெளிப்படுத்துவதில்லை; பெரிதுபடுத்துவதும் இல்லை.   பார்ப்பனர் இதழில் பணிபுரியும் நமது தமிழருக்கு இந்தச் சூட்சமம் தெரிந்திருந்தால், கலைஞர் அவர்களைக் குற்றப்படுத்திக் காட்டுவதிலேயே குறியாக - வெறியாக இருப்பாரா? பெரியாரைப் பற்றி எழுதினால் மட்டும் போதாது - ஈரோட்டுக் கண்ணாடி என்று கூறிக் கொண்டு போலிக் கண்ணாடி போட்டுப் பார்க்கக் கூடாது. பார்ப்பனர்களுக்கு நம்மினத்தில் இருந்து கைத்தடிகள் கிடைப்பது என்பது அதிசயமான ஒன்றல்ல. இது இராமாயணக் காலந் தொட்டு நடந்து வருவதுதானே?

குறிப்பு: ஒரு விடயத்தில் தோழர் திருமா வேலன்அவர்களைப் பாராட்ட வேண்டும் நடப்பது ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் என்பதை ஒப்புக் கொண்டு, அதனை ஆனந்த விகடனில்! பதிவு செய்தாரே - அதற்காகப் பாராட்டலாம்.

- மின்சாரம்.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner