இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழகத் தோழர்களே, கருஞ்சட்டைக் குடும்பத்தினரே, தஞ்சைக்குத் தயாராகி விட்டீர்களா?

மார்ச்சு 10, 11 ஆகிய இரு நாள்களிலும் நமது குடியிருப்பு தஞ்சையில்தானே.

வெளியூர்களிலிருந்து வரும் கழகக் குடும்பத்தினர் தங்குவதற்கு மூன்று திருமண மண்டபங்கள் தஞ்சையில் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டன.

திரும்பிய பக்கங்களிலெல்லாம் சுவர் எழுத்து விளம்பரங்கள்

* இனமானப் படை வருகிறது

* பகுத்தறிவுப் பெருவெள்ளம் பாய்கிறது

* மகளிர் போர்ப்பறை கொட்டுகின்றனர்

* மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி பேராறாகப் புறப்படுகின்றது.

தான் படைத்த சாதனையைத் தானே முறியடிப்பதில் தஞ்சையை விஞ்ச வேறு எது உள்ளது?

கோவிலும், குளமும் என்று திரியும் மக்களிடையே - பெரியதிரை, சின்னதிரைகளின் வெளிச்சத்தில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளாக மக்கள் உள்ள ஒரு சமூக அமைப்பில், புறப்படுகிறது ஒரு புரட்சிப் பூகம்பம்! புரட்டி எடுக்கும் பிற்போக்குச் சழக்குகளை!

ஆட்சி மாற்றம் என்றதும் ஆரியக் கூட்டம் கொஞ்சம் துள்ளி விளையாட ஆசைப்படுகிறது.

அதன் ஆதிக்க ஆணிவேர் வரை சென்று அழிக்கும் அரிமாப் படை கருஞ்சட்டைப் பட்டாளம் என்பதை நிரூபிப்போம் வாருங்கள், தோழர்களே!

தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது ஒரு வகையிலா - இரு வகைகளிலா?

ஈழத் தமிழர் பிரச்சினையிலிருந்து, நதி நீர்ப் பிரச்சினை வரை தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுதானே வருகிறது.

தமிழக மீனவர்கள் என்றால் கிள்ளுக்கீரை என்ற நினைப்பா?

அதிலும் கூட கேரளக் கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் தாக்கப்பட்டால் அதற்கொரு அளவு கோல். தமிழ்நாட்டுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டால் வேறொரு பாராமுகம்!

இந்தக் கொடுமைகளைக் கண்டு குமுறி எழ வேண்டாமா? பாராமுகம் காட்டும் மத்திய அரசுக்குத் தக்க வகையில் புரிய வைக்க வேண்டாமா?

தமிழ் மண்ணின் கந்தக உணர்வின் கர்ச்சனை வெப்பம் எத்தனை டிகிரி என்று காட்ட வேண்டாமா?

இனவுணர்வு என்றால் ஏகடியம் செய்யும் இரு பிறப்பாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பூணூல் கூட்டத்துக்கு நமது புலிப்பாய்ச்சல் என்னவென்று தெரிய வேண்டாமா?

புலி வாலை மிதிக்கத் துடிக்கும் பூசுரர்களே, இதோ, ஒரு புதிய புறநானூறு என்று போர்ப்பாட்டுப் பாட வேண்டாமா?

நமது மங்கைமார் போர் முரசின் வீரியம் விண்ணையும் கிழிக்கக்கூடியது என்பதைக் கூனரும் நிமிரக் கூடிய அளவுக்குக் காட்ட வேண்டாமா?

அதுவும் திராவிடர் இயக்கம் நூற்றாண்டு தொடக்கத்தின் முதல் பாய்ச்சல்  தஞ்சையிலே! தஞ்சையிலே!!

புலிப் போத்தாய்ப் புறப்படுவீர்! இலட்சிய எக்காளமிடுவோம் வாரீர்!  வாரீர்!!

சமூகப் புரட்சி இயக்கத்தினர் போடும் பாட்டையில்தான் அரசுகள் பவனி வரவேண்டும்.

சமூகப் புரட்சி இயக்கம் வழங்கும் தீர்மானங்கள்தான் ஆட்சியின் நடைபாதை!

இதுதானே வரலாறு!  இதுதானே தமிழ்நாட்டின் கடந்த கால வரலாறும்!

* சமூக நீதி வந்தது எப்படி?

* சுயமரியாதைத் திருமணச் சட்டம் வந்தது எப்படி?

* பெண்களுக்குச் சொத்துரிமை கிட்டியது எப்படி?

* சென்னை மாநிலம் தமிழ்நாடாக மாறியது எப்படி?

* இந்திக்கு இடமில்லை தமிழ்நாட்டில் என்னும் இறுமாந்த நிலைக்குக் காரண கர்த்தா யார்?

* மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் முன்னணிப் படை எது?

சாதித்தவை பலப்பல. சாதிக்கப்பட வேண்டியவையும் ஏராளமம் உண்டு.

புரட்சி எண்ணம் கொண்ட இளைஞர் பட்டாளம் அணிவகுக்கும் ஓர் இயக்கத்தால்தான் இவற்றைச் சாதிக்க முடியும்!

சாதிப்போம் வாருங்கள், தோழர்களே!

பெரியார் பெருந்தொண்டர்களே!

பெண்ணுரிமைப் போராளிகளே!

இனமான இளைஞர் பட்டாளமே!

தோள் தூக்கும் தொழிலாளர் அணியினரே!

மானமிகு மாணவ அரிமாக்களே!

பீடுறும் பெரியார் பிஞ்சுகளே!

நாம் தஞ்சையில் சந்திக்கப் போகிறோம்! சமதர்மக் குரல் கொடுக்கப் போகிறோம்!

சமத்துவப் போர்ப்பாட்டுப் பாடப்போகிறோம்!

சமூக நீதி சங்கநாதம் செய்யப்போகிறோம்!

பகுத்தறிவுப் பூபாளம் பாடப்போகிறோம்!

புறப்படுவீர்! புறப்படுவீர்!!

இப்படை தோற்கின், எப்படை வெல்லும்?.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner