வருணத்தை ஒழிக்கும் பார்வை வரவேற்கத்தக்கதே!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- கலி.பூங்குன்றன்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழுக்கூட்டம் கோல்கட்டாவில் கூடி புதிய திசை நோக்கிப் பயணிக்க முக்கிய முடிவினை எடுத்துள்ளது.

இதுவரை வருக்கப் பிரச்சினையே சகல நோய்களுக்குமான மாமருந்து என்று நினைத்து, கொள்கை களம் அமைத்துப் பயணித்த இக்கட்சி வருண பேதம் குறித்தும் கருத்தில் கொண்டு போராட முன் வந்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

வருக்கமா? வருணமா? என்ற சர்ச்சை மூண்டெழுந்து பல கட்டங் களில் திராவிடர் கழகத்தோடு, விடு தலையோடு மல்லுக்கட்டி மற்போர் புரிந்ததுண்டு.

இந்திய சமூக அமைப்பில் பிறப்பின் அடிப்படையில் பேதம் என்கிற கொடுமை வேறு எங்கும் காணமுடியாத கழிசடைத்தனமாகும். பிறவி முதலாளித் துவம் என்பது இந்த சமூக அமைப்பின் கொடிய நஞ்சாகும்.

பொதுவுடைமை பூக்க பொது வுரிமை அடிப்படை என்ற சங்க நாதத்தைத் தந்தை பெரியார் எழுப் பினார்.

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் நூலினை எழுதிய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான தோழர் ஏ.எஸ்.கே. (அய்யங்கார்) அவர்கள் அந்நூலின் என்னுரையில் ஒன்றை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா - நான் அந்த வேலையைச் செய்து வருகிறேனே. . . அவ்வாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை எதிர்ப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும், உருக்கமாகவும் பன்முறை கேட்டுள்ளார். இது முற்றிலும் உண்மை. பெரியார் அவர்களைப் பற்றிச் சரியான கணிப்புப் பல தோழர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. இந் நூலை எழுதுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினைகள் குறித்து மீண்டும் கிளப்பவோ, அசை போடவோ தேவையில்லை. இத்திசையில் தந்தை பெரி யாரும் திராவிடர் கழகமும் மேற் கொண்டுள்ள பிரச்சாரம் - போராட் டம் என்ற களம் அமைத்துப் போராடி வரும் திசையில் தன் போக்கில் பொதுவுடைமை கட்சி ஒன்று அடி யெடுத்து வைக்க எத்தனிக்கும்போது அதனை இரு கரம் கூப்பி வரவேற்கவே செய்கிறோம்.

(1) தீண்டாமை ஒழிப்பு என்கிற போது அது ஜாதி என்னும் வேரி லிருந்து வெடித்துக் கிளம்பக் கூடிய தாகும். அண்மைக் காலத்தில் தீண் டாமை ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் மாநாடுகளை நடத்தி வந்துள்ளது. அதனை ஜாதி ஒழிப்பு மாநாடாக பரிணமிக்கச் செய்துகொள்வது சரியானதாக இருக்க முடியும்.

(2) தனது பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைச் சுமந்திருந்தவர் தான் தந்தை பெரியார்.

தன்மான இயக்கம் கண்ட நிலையில், குடிஅரசு பூகம்பத்தை உருவாக்கிய கால கட்டத்தில் தன் பெயரில் ஒட்டி யிருந்த நாயக்கர் என்ற ஜாதி வாலினை ஒட்ட நறுக்கித் தூக்கி எறிந்தார்.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் பெயருக்குப் பின்னால் தொங்கிக்கொண்டிருந்த ஜாதிப் பட் டத்தைத் துறப்பது என்ற தீர்மானத்தை ஏற்று அந்த மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்ததாகப் பிரகடனம் செய்தனர் இயக்க முன் னோடிகள்.

கம்யூனிஸ்டு கட்சியின் மிகப் பெரிய தலைவர்கள் கூட பெயருக்குப் பின் னால் ஒட்டிக்கொண்டிருக்கும் வருணா சிரமச் சின்னமான ஜாதிப் பட்டத்தைத் துறக்க முடியாமல் இருப்பது நல்லதல்லவே!

பட்டாச்சார்யா என்றும், குப்தா என்றும், சட்டர்ஜி என்றும், முகர்ஜி என்றும், சர்மா என்றும், நம்பூதிரிபாட் என்றும் அறிமுகமாவது நல்லதுதானா?

கேரள மாநிலத்தில் நடக்க இருக்கும் அவர்களின் அகில இந்திய மாநாட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் முடிவு எடுத்தது போல ஒரு தீவிரமான முடிவெடுத்து ஜாதியைத் தூக்கித் தங்களைத் தாங்களே சுத்திகரித்துக் கொள்வது, இளைஞர்கள் மத்தியில் புத்தெழுச்சி வெடித்துக் கிளம்பிடவும், இந்துத்துவாவின் அடிவேரில் தீவைத்தது போன்றதுமான ஒரு புதிய நிலைப்பாடாக இருக்க முடியும்.

மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மக்களவைத் தலைவராக இருந்தவருமான திரு சோம்நாத் சட்டர்ஜி அவர்கள் தன் பெயரன் பூணூல் கல்யாணத்திற்கு அழைப்பிதழ் போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கெல்லாம் கொடுத்தார் என்பது கொதி நிலையின்  உச்சகட்டம்  அல்லவா?

இது போன்ற மூத்த தலைவர்களே கம்யூனிஸ்டு தத்துவத்தை இந்த அளவுக் குத்தான் புரிந்து கொண்டுள்ளனர் என்று கருதவேண்டியிருக்கிறதே!

பகுத்தறிவுக் கோட்பாட்டிலும் மிக உயர்ந்த சிந்தனைப் போக்குத் தேவைப் படுகிறது.

(3) பகுத்தறிவுக் கோட்பாட்டு நிலையில் ஒரு கோடு கிழித்துக் காட்டி, இந்தக் கோட்டின் முன் பகுதியில் இருப்பவர்கள் மதக்கொள்கைகளைப் பின்பற்றலாம்; - பின்பகுதியில் இருப்ப வர்கள் மதக் கோட்பாடுகளிலிருந்து சந்தேகத்திற்கிடமின்றி விலகி இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தினை கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் அவர்களின்  கட்டுரை கட்சியின் தமிழ் மாநில அதிகார பூர்வமான தீக்கதிர் நாளிதழில் (27.-1.-2010) வெளியாகி யிருந்தது.

இந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்ளாமல் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் மனோஜ் கட்சியிலிருந்து விலகினார். கண்ணனூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த அப்துல் வகாப்பும் இதே காரணத்துக்காக கட்சிக்கு முழுக்குப் போட்டதுண்டு.

கேரள மாநில முதலமைச்சராக இருந்த திரு.ஈ.கே. நாயனார் அவர்கள் வாட்டிகன் சென்று போப்பைச் சந்தித்தபோது, வருணாசிரமத்தின் ஒட்டு மொத்த வடிவமான (நான்கு வருணங்களையும் நானே உண்டாக் கினேன். அப்படி என்னால் உண்டாக் கப்பட்ட அந்த நான்கு வருணங் களையும் நானே நினைத்தால் கூட மாற்றியமைத்திட முடியாது என்று கிருஷ்ணன் கூறுவதாக கீதை கூறு கிறது.) கீதையை அன்புப் பரிசாக அளித்தது அண்டத்தையே குலுக்கிய அசாதாரணமான நிகழ்ச்சியல்லவா?

இதில் அழுத்தமாகக் குறிப்பிட வேண்டியது ஒன்று உண்டு. அந்தச் செயலுக்கு அவர் நியாயம் கற்பித்தது தான். மகரஜோதி மோசடி என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையிலும் அதில் தலையிடமாட்டேன் என்று கூறுவதற்கு ஒரு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆட்சி தேவையா என்ற கேள்வி கட்சியைத் துரத்திக்கொண்டேயிருக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்து சமூக அமைப்பில் நாத்திகம் என்பதேகூட ஜாதி மறுப்பே தவிர கடவுள் மறுப்பல்ல.

அதே நேரத்தில் ஜாதியின் பாது காப்பை கடவுளின் அரவணைப்பில் முடிச்சுப் போட்டு வைத்துள்ளனர்.

பிர்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான். தோளிலிருந்து சத்திரியன் பிறந்தான். இடுப்பிலிருந்து வைசியன் பிறந்தான்.

பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்று ஏற்பாடு செய்து வைத்துள்ள வருணாசிரம அமைப்பில் பிர்மாவைத் தனியே பிரித்து வைத்து விட்டு ஜாதியை ஒரு கை பார்க்கிறேன் என்பது நிஜத்தை விட்டு நிழலைத் தாக்கும் பரிதாப முயற்சி யாகும். கேரளாவில் சாஸ்தா கோவிலில் செத்துப்போன குரங்கு ஒன்றுக்கு இரண்டு அமைச்சர்கள் (சி.பி.எம்.) செங்கொடி போர்த்தி புரட்சி ஓங்குக என்று முழக்கமிடும் அளவுக்குச் சீர் கெட்டுப் போகக் கூடாதல்லவா?

சமூக நீதிக் கொள்கையில்கூட தடுமாற்றம் உண்டு. சி.பி.எம். கட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்பதற்குப் பதிலாக பொருளாதாரத்தையும் இதற்குள் திணிப்பதற்கு அனுசரணையாக இருந்த போக்கு கடந்த காலத்தில் உண்டு.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்து கொண்டு வரப்பட்ட (வருமான வரம்பு) ஆணைக்கு ஆதரவு தெரிவித்த நிலை யில், அதே நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (சி.பி.அய்.) அதில் தெளிவாகவே இருந்திருக்கின்றது.

பெரும்பாலான தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக, பொருளா தாரத்தில் கீழ் மட்டத்தில் தள்ளப் பட்டு இருக்கும் நிலையில், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது பெரும்பாலான தொழிலாளர்களுக்கும் பாயக் கூடிய நீர்ப்பாசனமேயாகும்.

குறையைச் சுட்டிக்காட்டி சங்க டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ப தல்ல திராவிடர் கழகத்தின் நோக்கம்.

காலம் கடந்தாலும் சரியான திசையில் பயணத்தைத் தொடர்ந்திருப்ப தாக எடுத்த முடிவுக்கு ஆக்கம் தரும் வகையில் கோடிட்டுக் காட்ட வேண் டிய கடப்பாடாகக் கருதி இவற்றைத் திராவிடர் கழகம் முன் வைக்கிறது - மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியைப் புதிய பாட்டையில் வாழ்த்தி வரவேற் கிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#1 அ.திருமூர்த்தி 2015-06-02 19:02
மண்ணுக்கேற்ற மார்க்சியம் வேண்டும் என்ற அறிவு ஆசானின் கருத்துப் புலப் படும் வகையில் கட்டுரைத் தீட்டிய கவிஞர் அய்யாவுக்கு வாழ்த்துகள்!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner