தந்தை பெரியார் நினைவு நாளில் அவர்தம் சிந்தனை முத்துகள்....
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பகுத்தறிவுப் பகலவன் 43 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர்தம் சிந்தனை முத்துகள் சிலவவற்றை காணலாம்.
சுயமரியாதை

நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துவிட்ட பிறகுதான் சுய மரியாதையை நினைப்பதற்கு யோக்கியதை உண்டு.

(குடிஅரசு 10.7.1927)
மேல்நாட்டானுக்குப் பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும்; நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு, ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலான பலதுறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.
(குடிஅரசு 13.4.1930)

தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதை வேண்டும், தன்மான உணர்ச்சியும், எதையும் பகுத்துணரும் திறனும் ஆராய்ந்து அறியும் அறிவும்தான் மிகவும் தேவை.
(விடுதலை, 3.4.1956)

மனிதன் உலகில் தன் சுயமரியாதையை-தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.    (விடுதலை, 20.9.1962)
மானமுள்ள ஆயிரம் பேருடன் போரா டலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
(குடிஅரசு 10.5.1936)

பெண்ணுரிமை

பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள்மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில்  இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படாமல்,இவர் இன்னாருடைய கணவன் என்று அழைக் கப்பட வேண்டும்.
(குடிஅரசு 5.6.1948)

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே பெரிதும் காரண மாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னவாகும்? எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம்.    
(குடிஅரசு 27.10.1940)

இன்றையப் பெண்கள் வெறும் அலங் காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள்; அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது.    
(விடுதலை, 26.5.1958)

குழந்தை மணம் ஒழிந்து, திருமண ரத்து, விதவை மணம், கலப்பு மணம், திருமண உரிமை ஆகியவைகள் இருக்குமேயானால், இன்றுள்ள விபசாரத்தில் 100-க்கு 90 பகுதி மறைந்து போகும்.
(விடுதலை, 21.4.1950)

ஜாதி

எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல. அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்.
(விடுதலை, 13.11.1961)

பிறவியால் கீழ்-மேல்,  உயர்வு-தாழ்வு கற்பிக்கும் ஜாதிமுறை என்பதை அடியோடு போக்கடிக்க வேண்டும்.
(பெரியார் ஒரு வாழ்க்கை நெறி, 29)

மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை. ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால் ஜாதியைவிட்டுச் ஜாதி சாப்பிட்டால், கல் யாணம் செய்தால், ஜாதியை விட்டுத் தள்ளி விடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.
(குடிஅரசு 20.12.1936)

ஜாதி எனும் வார்த்தையே வடமொழி, தமிழில் ஜாதி என்பதற்கு வார்த்தையே இல்லை. என்ன இனம்? என்ன வகுப்பு? என்று மட்டுமே கேட்பார்கள். பிறக்கும்போது ஜாதி வித்தியாசத்தை, அடையாளத்தைக் கொண்டு பிறப்பதில்லை, மனிதரில் ஜாதி இல்லை. ஒரு நாட்டிலே பிறந்த நமக்குள் ஜாதி சொல்லுதல் குறும்புத்தனம்.
(விடுதலை, 15.9.1957

சமூகச் சீர்திருத்தம்

சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரால் இங்கும் அங்கும் ஏதோ மாறுதல்களைச் செய் வதோ, ஒட்டு வேலை - மேல்பூச்சு வேலை செய்வதோ பயன்தராது. இன்றையச் சமுதாய அமைப்பையே அடியோடு ஒழித்துவிட்டுப் புதியதொரு சமுதாய அமைப்பை-ஜாதியற்ற, உயர்வு தாழ்வு அற்ற சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும்.    
(விடுதலை, 15.5.1962)

சமூகக் கொடுமைக்கு அடிப்படையான மதம், ஜாதி, பழக்க வழக்கம், சாத்திரங்கள், கடவுள், கட்டளைகள் என்பவை தகர்க் கப்படாமல் எப்படிப்பட்ட அரசியல் சீர் திருத்தமேற்பட்டாலும் ஒரு காதொடிந்த ஊசியளவுப் பயனும் பாமர மக்களுக்கு ஏற்படாது.

(குடிஅரசு 23.6.1935

சீர்திருத்தங்கள் - மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கவும், அறிவை விசாலப்படுத்தவும், உயிர்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அதிகப் படுத்தவுமே அமையவேண்டும்.
(குடிஅரசு 9.12.1928)

சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக்கொள்ளுதலே யாகும்.
(விடுதலை, 29.1.1956)

சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் ஆளாயிருத்தல் கூடாது. சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறிவதே சீர்திருத்தத்திற்கு உண்மையான பாதை யாகும்.    
(விடுதலை, 23.3.1958)

அந்நியர்கள் நம்மை மதிக்கமாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்பு பலமாய்விடுமே-என்கிற உலக அபிமானமும், பயமும், பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் ஒருகாலமும் உண்மையான சீர்திருத்தத்திற்கு உதவமாட்டார்கள். அக்குணங்களைக் கொண்டவர்களால் நடைபெறும் எவ்விதச் சீர்திருத்தமும் ஒரு காலமும் பயனளிக்கவே முடியாது.    
(விடுதலை, 22.3.1958)

நான்

நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரி யென்றுபடுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக் களே தவிர பொய்யல்ல.    
(விடுதலை, 15.7.1968)

எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண் டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
(விடுதலை, 8.9.1939)

மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்கவேண்டுமென்பதிலும் எனக்கு 1925 ஆம் ஆண்டு முதலே உறுதி யான எண்ணமும் ஆசையும் உண்டு.    
(விடுதலை, 12.10.1967)

நான் மறைந்துநின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒருசமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்தச் சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயேதான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்ட னாகவே இருந்து தீர வேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.
(குடிஅரசு 24.11.1940)

தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக்கொடு என்றார் காந்தியார். அப்போதுநான், கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப்படுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல என்றேன்.
(விடுதலை, 9.10.1957)

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்குக் கண் வலியாய் இருப்பவர்கள், அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்ணோய்க்குப் பரிகாரம்.
(விடுதலை, 15.10.1967)

எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்றுபட்டபடி நடவுங்கள் என்பதேயாகும்.
(குடிஅரசு 24.11.1940

நான் சாதாரணமானவன்;என் மனத்தில்பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடா தீர்கள். நான் தெய்வத் தன்மை பொருந் தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேத வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள் என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளி விடுங்கள்.

ஒருவனுடைய எந்தக் கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.
(குடிஅரசு, 13.04.1930)
.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner