திருவாரூர் "பார்க்காத" மாநாடா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூர் "பார்க்காத" மாநாடா?  

மின்சாரம்

வடமொழி சுலோகத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 24இல் "இந்தியன் எக்ஸ்பிரஸ் - மேகசின்" பிரிவில் வெளியான முதல் பக்கக் கட்டுரையில் ஒரு பகுதி இதோ:

Only When fire will cool, the moon burn, or the ocean fill tasty water a woman be pure

"எப்பொழுது  தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ அல்லது கடல் நீர் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ, அப்போதுதான் ஒரு பெண்ணும் தூய்மையானவளாக இருப்பாள்"

அனேகமாக இந்து மதத்தில் "புனித" நூல்கள் என்று சொல்லப்படும் எதை எடுத்துக் கொண்டாலும் அதன் சாரமும், காரமும் இதே இராகத்தில் தானிருக்கும்.

"பெண்களுக்குத் திருமணம் உபநயனம்; கணவனுக்குக் கடமையாற்றுவது குருகுலவாசம்; இல்லறம் காத்தலே வேள்வி."
இந்து மதம் கூறும் பெண் இவர்தான்! மனுதர்மத்தை எடுத்துக் கொண்டால் பக்கத்துக்குப் பக்கம் பெண்மீது வசவுதான்.

அந்தக் காலத்து வசவுகளை விட்டுத் தள்ளுங்கள். இந்தக் காலத்து "காம" கோடிகள் என்ன சொல்லுகிறார்கள்?

"விதவைப் பெண்கள் தரிசு நிலத்துக்குச் சமமானவர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள்!" இப்படி சொல்லியிருப்பவர் வேறு யாருமல்லர்  - சாட்சாத் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதிதான். ("தினமணி" தீபாவளி மலர் - 1997).

வேலைக்குப் போவோர் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று "திருவாய்" மலர்ந்த திருவாளரும் சாட்சாத் அவரேதான்.

மாநிலங்களவையில் ஒரு நாள், திரைப்பட நடிகையான ஷபனா ஆஸ்மி எம்.பி.  ஒரு பிரச்சினையை எழுப்பினார் - சர்வதேச பெண்கள் நாளையொட்டி அவர் பேசியது.
"மாகஹா அவுர் பப்பா கஹா ஹை?"
அம்மா எங்கே, அப்பா எங்கே? என்ற கேள்வி;  அதற்குக் குழந்தை பதில் சொல்லுகிறது எப்படி?

"மாசோய்பர் அவுர் அப்பா
ஆபீஸ் பர் ஹை"
அதன் பொருள்: "அம்மா சமையல் அறையில் இருக்கிறார் - அப்பா ஆபீஸில் இருக்கிறார்"

எதற்காக ஷபனா ஆஸ்மி இந்த எடுத்துக் காட்டைக் கூறினார் என்பது தான் முக்கியம். பெண் என்றால் சமையல்காரி ஆண் என்றால் அரசு அதிகாரிதானா?

பள்ளிப் பாடத் திட்டத்தில் இருக்கும் இந்தப் பகுதியை எடுத்துக்காட்டி, என்ன சொன்னார் தெரியுமா? அதுதான் நெற்றியடி, ஒரு முகத்திரைக் கிழிப்பு!

"காவிமயக் கல்வி என்பது இது தானா?" என்று முகச் சதையைக் கிழித்துத் தள்ளும் - அளவுக்கு வீசிய வெடிகுண்டு  அது.

இப்பொழுதுதான் என்ன வாழ்கிறது? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் என்ன பகர்கிறார்? "ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்து அதிகம் படிக்கிறார்கள் - அத்தகையவர்கள் ஆண்களைவிட அதிகம் சம்பாதிக்கிறவர்கள், ஆண்கள் சொல்லுவதை எதிர்த்துப் பேசுகிறார்கள் - அத்தகையவர்களை விவாகரத்து செய்து விடுங்கள்" என்று பேசவில்லையா?

ஒவ்வொரு "துக்ளக்" இதழையும் பாருங்கள் - பெண்களை மட்டம் தட்டா விட்டால் அவர்களுக்கெல்லாம் தூக்கமே வராது!

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் இன்னும் நிலுவை என்னும் ஊறுகாய் ஜாடியில் தானே குறட்டை விட்டுத் தூங்குகிறது! எத்தனைப் பிரதமர்களை ஏப்பமிட்டு ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவற்றைப்பற்றி எல்லாம் சிந்திக்க இந்த நாட்டில் எந்த இயக்கம் இருக்கிறது? எந்த சிந்தனை இருக்கிறது?  இதற்கான தத்துவம் யாரிடத்தில் இருக்கிறது?

ஒரே ஒரு கணம் உள்ளத்தைத் திறந்து வைத்து சிந்தித் தால் உண்மையின் வெளிச்சம் தெரியாமல் போகாது.

அந்த ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம்தான் - சுயமரியாதை இயக்கம்தான் - தத்துவத்தைத் தந்த தலைவரும் தந்தை பெரியார் ஒருவர் மட்டுமேதானே!

"பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிப் பெற வேண்டிய மனிதசமூகம் பகுத்தறிவு இருந்தும், நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது"

("குடிஅரசு" 16.6.1935)

ஆணாக பிறந்து ஒரு தாயாக இந்தச் சமூகத்தை - பெண் குலத்தைப் பார்த்த ஒரே தலைவர் நம் அய்யா அல்லவா!

யாரும் அவ்வளவு எளிதாக நம்பி விட மாட்டார்கள் தான். இன்றைக்கு 88 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாநாடு. சென்னையில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் நடந்த மாநாடு அது. தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாடு என்று பெயர்.

தீர்மானங்கள் என்ன தெரியுமா?

மக்கள் பிறவியிலும், ஆண், பெண் என்ற தன்மையிலும் உள்ள உயர்வு, தாழ்வு என்கிற வித்தியாசங்கள் கண்டிப்பாய் ஒதுக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

* குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
* எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆண், பெண் என்கின்ற வித்தியாசம் இல்லாமலும், உயர்வு, தாழ்வு என்கின்ற வித்தியாசம் இல்லாமலும், கட்டாயப் படிப்பு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

1928இல் இப்படிப்பட்ட தீர்மானங்கள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் எந்த நாட்டிலும் கூட நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று தானே!

பெண்களுக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - எத்தனை எத்தனைப் போராட்டங்கள்!

அதைவிட ஒரு சமூகப் புரட்சி இயக்கத்துக்கு ஒரு பெண்ணைத் தலைமை தாங்கி நடத்திட வழிவகை செய்துகொடுத்தவர் முழுப் புரட்சியாளர் தந்தை பெரியார் தானே! அந்தத் தலைவர் அன்னை மணியம்மையார்தானே!

தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் சமுதாயத்துக்கு ஆற்றிய அந்த அளப்பரிய புரட்சித் தொண் டினைப் போற்றிதான் பெண்கள் மாநாடு கூட்டி "பெரியார்" என்ற பட்டத்தினை நன்றி உணர்வு பொங்க அளித்து மகிழ்ந்தார்கள்.

பெண்கள் உரிமைப் பிரச்சினைக்காக திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தொகுத்து  எண்ணிப் பார்த்தால் தலையே சுற்றும் - மலைக்கவும் செய்யும்.

இந்தக் காலத்திலும் பெண் அமைச்சர்களே இல்லாத மாநிலங்கள் உண்டு. பெண் நீதிபதிகளே இல்லாத உயர்நீதிமன்றங்கள் உண்டு.
உலகளவில் ஆண் - பெண் சமத்துவத்தில் 'பாரத புண்ணிய பூமி'யான இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? 120ஆம் இடம்.

முசுலிம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்று பொத்தாம் பொதுவில் சொல்லி என்ன பலன்? முசுலிம் நாடுகளான வங்காளதேசம் 112ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 115ஆம் இடத்திலும் இருக்கின்றனவே! அதற்கும் கீழேயல்லவா இந்தியா கவிழ்ந்து கிடக்கிறது.

இந்திய உச்சநீதிமன்றத்திலே ஒரு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. சொன்னால் யாரும் சுலபத்தில் நம்பக் கூட மாட்டார்கள்.

"மருமகளை மாமியார் எட்டி உதைத்தால், அது ஒன்றும் குற்றமல்ல; 'என் மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான்' என்று மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல; இது குற்றவியல் பிரிவு 428இல் கீழ் தண்டனைக்குரிய குற்றமல்ல" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வுதான் இப்படி  ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது (22.7.2008).

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இடதுசாரி மகளிர்கூட எழுச்சி கொள்ளவில்லையே! திராவிடர் கழக மாநாடுகளில் தானே தொடர்ந்து கண்டித்துத் தீர்மானம் போட்டு வருகிறோம்.

இதே திருவாரூரைச் சேர்ந்த முதல் இந்திய நீதிபதி என்று தம்பட்டம் அடிக்கும் திருவாளர் முத்துசாமி அய்யர்தான் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது கணவன் மனைவியை அடிப்பது குற்றமாகாது என்று தீர்ப்பு சொன்னவர்.

அந்தத் திருவாரூரில்தான் தோழர்களே! வரும் டிசம்பர் 17ஆம் தேதி திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு - மாநாடு! பேரணி! பேரணி!!
என்ன மாநாட்டுக்குத் தனித் தன்மை?

ஆண்களுக்கும் இடம் உண்டு என்று சொல்லும் அளவுக்கு "அ" முதல் ஃ வரை எல்லாம் பெண்கள்! பெண்கள்தான்.

வரவேற்புக் குழு முழுவதும் பெண்கள்தான் - வசூல் குழு முதல் விளம்பரக் குழு வரை பெண்கள், பெண்களே! திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் கழக மகளிர் அணியினர் குழு குழுவாக கடைக்குக் கடை ஏறி சென்று நிதி வசூல் செய்வதை  அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்; ஆண்களுக்கோ ஒரு வகையில் அதிர்ச்சி என்று கூடச் சொல்லலாம்.

மாநாட்டு மேடையில் கழகத் தலைவர் என்கிற முறையில் - தவிர்க்கவே முடியாது என்ற நிலையில் நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மட்டுமே நாற்காலி உண்டு என்று தெரிய வருகிறது.

வித்தியாசமான மாநாடாக இருக்கப் போகிறது. நடப்பது திருவாரூரில் இருந்தாலும், அனேகமாக தமிழ்நாடே பேசும் மாநாடாக அமையப் போகிறது என்பதில் அய்யமில்லை.

தீப்பொறி பறக்கும் தீர்மானங்களுக்குப் பஞ்சம் இல்லை.

பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் வேண்டும் என்று ஒரு முறை தந்தை பெரியார் அவர்களைக் கேட்டபோது - ஒரே வரியில் பளிச்சென்று பதில் சொன்னார். "ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ, அவை அத்தனையும் பெண்களுக்குத் தேவை" என்றாரே பார்க்கலாம்.

ஏதோ திராவிடர் கழக மகளிர் நடத்தும் மாநாடு என்று எண்ணி ஒதுங்கிட வேண்டாம். மகளிர் மாநாடு என்றால் அனைத்து மகளிருக்குமான உரிமை முழக்கம்தான்.

"பெண்ணே தரையைப் பார்த்துக் குனிந்து நட" என்பதுதானே நாம் இதுவரை கேட்ட குரல்! "பெண்ணே தலை நிமிர்ந்து நடந்து செல்!" என்ற குரல்தான் இனி கம்பீரமாக கேட்கப் போகிறது.

பாரதி விரும்பியது புதுமைப் பெண்ணென்றால், பெரியார் விரும்பியது புரட்சிப் பெண் என்பதை நிரூபிப்போம் - திருவாரூர் வாருங்கள்.

"திருவாரூர் பார்க்காத மாநாடா?" என்று கேட்பது புரிகிறது. ஆனாலும், திருவாரூரில் நடந்த மாநாடுகளிலேயே இது ஒரு திருப்பமான மாநாடு!

வாய் வார்த்தையல்ல, பார்க்கப் போகிறீர்கள் - வாருங்கள்  வாருங்கள் தோழர்களே!

(தோழர்கள் என்றால் ஆண் - பெண் இருபாலரும்தான்!).
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner