அரக்கோணம் - புதிய கல்விக்கொள்கை - நுழைவுத் தேர்வு எதிர்ப்பு மாநாடு தடைகளைத் தகர்ப்போம் - தடம் பதிப்போம் வாரீர்! வாரீர்!!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரக்கோணம் - புதிய கல்விக்கொள்கை - நுழைவுத் தேர்வு எதிர்ப்பு மாநாடு
தடைகளைத் தகர்ப்போம் - தடம் பதிப்போம் வாரீர்! வாரீர்!!

- மின்சாரம் -

தோழர்களே, தோழர்களே, கருஞ்சட்டைக் குடும்பத்தினரே; சமூகநீதிச் சிந்தனையாளர் களே; புதிய கல்வி என்னும், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்ட விரும்பும் ஒடுக்கப்பட்ட மக்களே! நமது தலைக்கு மேல் சுழலும் அந்த அபாயக் கொடுவாளை முறிக்க வேண்டும் என்று ஆத்திரப்படும்
அரிமாக்களே!

மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, கிராமப்புற மக்கள் நுழைவுக் கூடாது என்பதற்காக ‘நீட்டாக’த் திட்டம் தீட்டியுள்ள அந்த “நீட்” நுழைவுத் தேர்வை நொறுக்கிக் கூடையில் அள்ள வேண்டும் என்று கொதித்தெழும் கொள்கைச் சிங்கங்களே!

இந்துத்துவா என்னும் பாசிசப் பார்ப்பனீயம் அதிகாரச் சிம்மாசனத்தில் கொலுவேறிக் கொக்கரிக்கும் கொட்டத்தை அடக்க விரும்பும் கூர்முனை ஈட்டிகளே!

மாணவர்களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போட மும்முரமாக முஷ்டியைத் தூக்கி நிற்கும் துஷ்டர்கட்கு பாடம் கற்பிக்க நினைக்கும்
பகுத்தறிவாளர்களே!

மாணவர்களே, மாணவர்களின் பெற்றோர்களே, ஆசிரியப் பெருமக்களே, முத்தரப்பு மக்களாகிய நீங்கள் அனைவரும் ஆயுத எழுத்துப்போல அரண் செய்ய வேண்டிய கால கட்டம் இது.

அடங்கி கிடந்தால் ஆபத்து! ஆபத்து!! சுணக்கம் நம்மைச் சுருட்டிப் போட்டால் நம் எதிர்காலமும் சுருண்டு போகும் - சுண்டிப்போகும்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
ஏறுநீ! ஏறு!!

எங்கள் பகைவர் எங்கே மறைந்தார் இங்குள்ள இளைஞர்கள் ஒன்றாதல்கண்டே எனும் நிலையை ஏற்படுத்துவீர்! ஏற்படுத்துவீர்!!
அரக்கோணத்தில் வரும் சனியன்று மாலை (19.11.2016) எழுச்சி மிகு பேரணி! கனல் கக்கும் கருத் தரங்கம்!!

கருத்து மாரி பொழியும் தலைவர்களின் உரை வீச் சுகள்; காலக்குரலாக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்.

நம் இனத்திற்கு இன்னல் சூழும்போதெல்லாம் இன முழக்கமிட்டு எரிதழலாய்க் கிளம்பும் சிப்பாய் கூட்டம் தானே திராவிடர் கழகம்.
இது ஒரு கட்சி மாநாடு அல்ல.

நம்மை ஒடுக்க கச்சை கட்டும் தீய சக்திகளை எதிர்கொள்ளும் இலட்சிய வீரர்களின் பாசறைப் பாடி வீடு!

அயராது பாடுபட்டு நாம் ஈட்டிய உரிமைகளை தக்க வைத்துக் கொள்ளவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக புதிய சாசனம் எழுதவும் புறப்படுவீர்! புறப்படுவீர்!!

புதிய புறநானூறு படைப்போம் வாரீர்! வாரீர்!!

வற்றாத உணர்ச்சித் துள்ளலோடு கூவி அழைக்கிறோம்!
கொள்கை முழக்கத்தோடு வாரீர்! வாரீர்!!

அரக்கோணம் மாநாடு அறக்கோட்டமாகட்டும்! - ஆர்த்தெழும் அலை கடலாகட்டும்!
தமிழர் தலைவர் அழைக்கிறார். தடம் பதிப்போம், தடைகளைத் தகர்ப்போம் வாரீர்! வாரீர்!!

(குறிப்பு: மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் விரிவாக - சிறப்பாக - வரலாறு படைக்கும் வகையில்  தோழர்கள் தேனீக்களாகப் பறந்து பறந்து  உழைத்து வருகிறார்கள் - அவர்களுக்கு எல்லாம் முன்கூட்டியே வாழ்த்துகள்).
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner