பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணுக்குப் பணம் கொடுப்பது?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி 1: கடவுளை பெரியார் விமர்சித்தது தன் அறிவுப் பெருக்கின் அடிப்படையிலா? கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் தீய விளைவுகளின் காரணத்தாலா?

- செங்கை மணியரசன், பொத்தேரி

பதில்: தந்தை பெரியார் அவர்கள் ஓர் ஒப்பற்ற சுயசிந்தனையாளர். அவர்கள் கடவுள் பற்றிய கேள்விகளை சிறு வயதிலிருந்தே - தன் வீட்டுக்கு வந்த இதிகாச - புராண காலட்சேப வைதிக சாஸ்திரிகளை மடக்கிக் கேள்வி கேட்ட இயல்பான பகுத்தறிவாளர்.

தனது ஆராய்ச்சி அறிவுக்காக அல்ல, முன்னுரிமை ஜாதி, வர்ணதர்ம, தீண்டாமை, பெண்ணடிமை என்ற பிறவி பேத தீமைகளைக் களைவதற்கேயாகும்.

மற்ற நாடுகளில் கடவுள் வெறும் மூடநம்பிக்கை மட்டுமே! நம் நாட்டில் மூடநம்பிக்கை + ஜாதி வர்ணத்திற்கு மூலகாரணமாக கற்பிக்கப்பட்டது அதனால்.

கேள்வி 2: கல்வி நிறுவனங்களில் பெரியாரைப் பற்றிய பாடங்கள் வைக்க என்ன தயக்கம்?

- கு.சீத்தாள், மடபுரம்

பதில்: இப்போது சிற்சில வகுப்புகளிலும், பல்கலையில் சென்னைப் பல்கலைக்கழக அரசியல் துறை போன்றவற்றில் வைத்தாலும் கூட அவை ஒரு சிறு பகுதி அளவிலேயே உள்ளன. அழகப்பா பல்கலையில் கூட சிலவற்றை வைத்துள்ளனர் என்றாலும் பல கட்டங்களில் வைக்கப்பட வேண்டும்.

கேள்வி 3: திராவிடர், திராவிடம் என்பதெல்லாம் கிடையாது என்று பார்ப்பனர்கள் கூறுவது ஏன்?

- த.ந.பரமானந்தன், சேலையூர்

பதில்: அது தாங்களும் ‘தமிழர் என்று’ போர்த்திக் கொள்ளும் ஏமாற்றுப் போர்வையைப் பிடுங்கிவிடும் என்பதால்.

கேள்வி 4: நியூசிலாந்து மசூதிகளில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு - 49 பேர் உயிரிழப்பு? - மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறதா?

- வி.கோபாலன், சென்னை-44

பதில்: மிகுந்த வேதனையும், துயரமும் அடைய வேண்டிய - வெட்கித் தலைகுனிய வேண்டிய - இரக்கத்தோடும், மனித நேயத்தோடும் கண்டிக்கப்படவேண்டிய கோர நிகழ்வு இது. மதமோ, கடவுளோ மனிதர்களைத் திருத்தத் தோற்றுவிட்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டும் ஆகும்!

கேள்வி 5: பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணுக்குப் பணம் கொடுப்பதால் மட்டும், அப்பெண்ணுக்கு நியாயம் கிடைத்தது ஆகுமா?

- கு.சா.மாலதி, வேடந்தாங்கல்

பதில்: இது ஒரு தவறான தீர்வு - மேலும் கொச்சைப்படுத்துவது. முன்பு வாஜ்பேயி, இன்ஷுரன்சு செய்து பணம் தரலாம் என்ற அரிய யோசனையை பா.ஜ.க. பிரதமராக இருந்து ஆண்டபோதும் சொன்னாரே!

கேள்வி 6: தேர்தல் நேரத்தில் கட்சிகளின் கொடி மரங்களைக் கூட தேர்தல் அதிகாரிகள் அறுத்து எடுத்துச் செல்வது ஏன்? தேர்தலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

- வே.அர.குமாரன், ஆவடி

பதில்: அசல் இயந்திரத்தனம். கொடிகளைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. ஒரு கூத்துக்கு மீசையை சிரைத்துக் கொண்ட பழைய கதை!

கேள்வி 7: பிஜேபியை எதிர்க்கும் அணியில் உ.பி.யில் குழப்பம் ஏன்?

- சொ.பாரதி, புதுவை

பதில்: தேவையற்றது; தெளிவற்றது. தன் முனைப்புப் போதையுள்ளது! முன்பு கெட்ட பின்பும் ‘ஞானம்’ வரவில்லையே!

கேள்வி 8: அசாமுக்கு மாற்றப்பட்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை தமிழகத்துக்கு மாற்றிட சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது பற்றி...?

- அ.பரிமளன், சிவகங்கை

பதில்: மத்திய அரசின் மரமண்டை ஆணவத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி!

கேள்வி 9: தமிழ்நாட்டில் - தேர்தலில் சினிமாக்காரர்களின் அலை எப்படி இருக்கிறது?

- சொ.விசுவம், விருகம்பாக்கம்

பதில்: ஒரு சிறு திருத்தம். ‘அலை’ இல்லை; வலை எப்படியிருக்கிறது? சில மீன்கள் வலையை அறுத்து வெளியே ஓடுகிறதே!

கேள்வி 10: சிவனடியாருக்கு மனைவியைக் கொடுத்து வழியனுப்பினானாமே ஒரு பக்தர் - இது உண்மையாக இருக்குமா?

- சீ.வானதி சேகரன், கோம்பை

பதில்: உண்மையோ இல்லையோ - இது பெரிய புராணம் - கல்வெட்டு திருவிடைமருதூர் கோயிலில் உள்ளதே! தத்துவம் என்ன என்பதே முக்கியம். பார்ப்பனர் கடவுளுக்கும் மேலானவர், அவர்கள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுத்து ‘திருப்தி’ செய்வதே கீழ்ஜாதிக்காரன் கடமை என்ற வர்ணதர்மத்தின் வெளிப்பாடு. மனு சொல்லும் பாடம் - ஆரிய தர்மமும்கூட!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner