பக்கம் 4

அன்று கிராமங்கள் எப்படி இருந்தன? பெரியார் பெருந்தொண்டர் பேரா.மெ.அன்பரசு மனம் திறக்கிறார்! இதோ ஒரு செவ்வி:இவரது இயற்பெயர்: ஆரோக்கியசாமி.
பிறந்த ஊர்: மேட்டுப்பட்டி, லால்குடி வட்டம்.
பெற்றோர்: மைக்கேல் - சேசுமலை.

இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி, தன் கல்வியை (எம்.ஏ., பி.எட்.,) வளர்த்துக் கொண்டு, உயர்நிலைப்பள்ளி வரலாற்றுத் துறை ஆசிரியராகப் பணி. படிக்கும் பொழுதும், பணியில் இருந்தபோதும் இயக்கப் பணி என்பது இவரின் உயிர் மூச்சு.
இவருக்கு ஒரு நண்பர். பெயர் சாமிக்கண்ணு. சர்வ சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, நமது அன்பரசு, நண்பர் சாமிக்கண்ணு அவர்களிடம் கேட்டார்.

‘ஆமாம் - நம் நாட்டில் நிறைய கட்சிகள் எல்லாம் இருக்குதே, தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்களே, நமக்கு ஏற்றது எது?’ என்று ஒரு கேள்வியைப் போட,
சாமிக்கண்ணு சும்மா படபடத்தார். நீதிக்கட்சிதான் நம் கட்சி. நமக்குப் படிப்பு, உத்தியோகத்துக்கெல்லாம் பாடுபடும் கட்சி. நமக்குத் தலைவர் தந்தை பெரியார்தான் என்று சொல்லி - அதுதான் நமது அன்பரசின் மூளையில் விழுந்த முதல் விதை!

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள் - நமது கழகம் வளர்ந்ததே, தந்தை பெரியார் கொள்கை பாய்ந்ததே அந்தக் காலத்தில் திண்ணைப் பேச்சுகளில்தான். ஒரு சாமிக்கண்ணு எதிர்பாராத விதமாக பெரியாரைப்பற்றிச் சொல்ல - கழகத்துக்கு ஒரு பேராசிரியர் மெ.அன்பரசு கிடைத்தாரே - (தோழர்கள் இதனை ஒரு முன் மாதிரியாகக் கொள்வார்களாக).

திருச்சி தேவர் மன்றத்தில் ஒரு மாநாடு - தலைவர் மில் அதிபர் பாலசுப்பிரமணியனார். மிராண்டா அம்மையார் (ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி) கொடியேற்றிப் பேசினார். அதுதான் அன்பரசு கேட்ட முதல் பொதுக்கூட்டம். அவர் மூளைக்கு வேலை கிடைத்துவிட்டது - அது சும்மா இருக்குமா? அவரைச் சுழல வைத்தது.

திருச்சியில் அரசு ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது திருச்சியில் நடக்கும் கழகக் கூட்டங்களுக்குச் செல்லுவது - தந்தை பெரியார் உரையைக் கேட்பது என்பது இவரின் அன்றாடப் போக்காகவே மாறிவிட்டது. அதன்பின் திருச்சி பெரியார் மாளிகைக்கு அடிக்கடிச் செல்லுவது - தந்தை பெரியாரைக் காண்பது - சந்தர்ப்பம் கிடைக்கும்போது உரையாடுவது என்றுதான் ஆரம்பமானது இவரின் பெரியாரியக்கப் பொதுவாழ்வு.

இவரின் சொந்த ஊரோ ஒரு சிறு கிராமம். அந்தக் காலத்தில் ஊர்ப்புறங்கள் எப்படி இருந்தன - மக்களின் மனப்போக்குகள் எப்படி இருந்தன?
இதோ அவர் வாயாலேயே கேட்கலாம்.

‘‘எங்கள் ஊர் சின்ன கிராமம். ஊர்ப் பையன்களை சேர்த்துக்கொண்டு ஊருக்குப் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு வந்தோம். எங்கள் பகுதி என்பது தாழ்த்தப்பட்ட வர்கள் நிறைந்த பகுதி. கடைவீதிக்குச் செல்லவேண்டும் என்றால், இடையில் ஒரு குட்டை. எப்பொழுதும் அதில் தண்ணீர் கிடக்கும். பெண்களாக இருந்தாலும் முழங்கால் அளவுக்கு நனைந்துதான் செல்லவேண்டும். அதற்குப் பாதை அமைக்கத் திட்டமிட்டோம்.

சுலபத்தில் முடிகிற காரியமா? ஆனாலும், இளங்கன்று பயமறியாதே - ஊர் வாலிபர்களை வைத்துக்கொண்டு அதனைச் செய்து முடித்தோம். இதனால் ஊரில் எங்களுக்கு நல்ல பெயர்.

அந்தக் காலத்தில் கிராமங்களில் ஜாதித் திமிரும், ஆதிக்கமும் அதிகம். பூவாளூரிலிருந்து ஒரு சாவு சேதி சொல்ல ஒரு தோழர் மாங்குடிக்குச் சென்றார். அவர் தாழ்த்தப்பட்ட தோழர். காலில் செருப்பு வேறு அணிந் திருந்தார். அவ்வளவுதான், பூவாளூர் மேல்தட்டு ஜாதியினர் கட்டி வைத்துவிட்டனர். அடி உதைதான். யாருக்குச் சேதி சொல்ல வந்தாரோ அவர் கேள்விப்பட்டு ஓடோடி வந்தார்.

‘எஜமான், தப்பு நடந்துவிட்டது மன்னிச்சுடுங்க’ என்று சொல்லி சாஷ்டாங்கமாகக் காலிலும் விழுந்து 5 ரூபாய் தண்டமும் கட்டினார்.
ஒரு மாதம் ஆயிற்று; மாங்குடிக்காரர் பூவாளூருக்கு வண்டியில் வந்தார். மாங்குடியில் அடிபட்ட அந்தத் தோழர் வண்டியில் வந்தவரைப் பார்த்துவிட்டார். அந்த ஆள்தான் கட்டி வைத்து அடித்த ஆசாமி. டக்கென்று அடையாளம் தெரிந்தது. குறுக்கே ஓடிவந்து நாலு சாத்து சாத்தினார்.

சேதி மாங்குடிக்குப் பறந்தது. ‘படை திரட்டி’ வந்தனர். அதற்குள் போலீசும் ஊருக்குள் வந்துவிட்டது. உள்ளூர் ஆட்கள் எல்லாம் தலைமறைவாகி விட்டார்கள். வீட்டி லிருந்த கிழவர்களை எல்லாம் போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்துச் சென்றுவிட்டனர்.
புள்ளம்பாடியில் தேர்த் திருவிழா. தலைப்பாகை கட்டியிருந்த பூவாளூர்க்காரனுக்கு அடி உதை. பேருந்தில் பயணம் செய்யும் புள்ளம்பாடிக்காரர்களை கீழே இறக்கி பூவாளூர்காரர்கள் சாத்துப்படி!

இரு ஊர்காரர்களுக்குள் கொள்வன - கொடுப்பனக் கிடையாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திராவிடர் கழக மாவட்டத் துணைத் தலைவர் ஆல்பர்ட் அவர்களின் மகள் திருமணத்தின்மூலம் தான் அந்தப் பகைமை முடிவுக்கு வந்தது.

இதையெல்லாம் நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், இப்படியெல்லாம் இருந்த கிராமப்புறங்கள் இன்று மாறியிருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் இந்தப் பகுதிகளில் தந்தை பெரியார் அவர்கள் வருகையும், திராவிடர் கழகக் கொள்கைப் பிரச்சாரமும்தான் முக்கிய காரணம்’’ என்று 88 வயது நிறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் படபடவென்று சொன்னதெல்லாம் எதைக் காட்டுகிறது?

இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலும், கருத்தும் இதில் மய்யங் கொண்டுள்ளன. 75 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மண்டிக் கிடந்த ஜாதி உணர்வு - அதன் காரணமாக பகை உணர்வு - ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது - அமைதி தொலைந்த வாழ்க்கை - இதன் அடித்தளத்தைப் பெயர்த்து மனிதனை மனிதனாகப் பார்க்க வைத்த சாதனைக்குரிய பெருமைக்குரியவர் தந்தை பெரியாரே! இயக்கம் திராவிடர் கழகமே!

அந்தக் காலகட்டத்தில் ஆசிரியராக இருந்தவர்கள் ஆற்றிய பெரியார் பெரும் பணிபற்றியும், அன்பரசு கூறினார்.

திருவேங்கடம் பிள்ளை - லால்குடி உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்தார். பெரியார் பற்றாளர், வெளிப்படையாக எதையும் பேசமாட்டார். ஆனால், காரியத்தில் கண்ணாக இருப்பார். லால்குடிக்குத் தலைமை ஆசிரியராக அவர் வந்ததும், 60 சதவிகிதம் அளவுக்குத் தாழ்த்தப்பட்டவர்கள் பள்ளிக்கு வருவதற்குக் காரணமாக இருந்தார் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் பேரா.அன்பரசு.

அந்த உயர்நிலைப்பள்ளியில் மாணவர் இலக்கிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பள்ளிக்கு வெளியிலும் இளைஞர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இரண்டிலும் அன்றைய மாணவரான முத்துச்செழியன் செயலாளராக இருந்தார். அன்றைய ஆரோக்கியசாமியான நமது அன்பரசு மாணவர்களோடு நன்கு தொடர்பு கொண்டு பெரியார் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.

அன்றைய கல்லூரி மாணவர்களான க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன் போன்றோர்களை அழைத்துக் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
நமது அன்பரசு அவர்கள் ஆசிரியர் பணியில் சிறப்பாகப் பணியாற்றினார். மாணவர்களுக்குப் பகுத்தறிவுக் கருத்து களை எடுத்துக் கூறியுள்ளார். மூடநம்பிக்கைகளைப்பற்றி விளக்கியும் ஏராளமான மாணவர்களை சிந்திக்கத் தக்கவர்களாக உருவாக்கியவர் ஆவார்.
பணியில் இருந்தபோது இடைநிலை ஆசிரியர் மன்றத் தில் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்து வழி நடத்தினார்.

பணி ஓய்வுக்குப் பிறகு பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியரணி அமைப்புகளில் மாநிலப் பொதுச்செய லாளராகப் பொறுப்பேற்று பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வந்தார்.

கழக மாநாடுகளில் எல்லாம், கருத்தரங்குகளில் எல்லாம் உரையாற்றி வந்தார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும் பணியாற்றினார். இளைஞர் பருவந்தொட்டு கழக மாநாடு களுக்குச் செல்லுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

புள்ளம்பாடியில் தந்தை பெரியார் சிலை அமைப்பு - பெரியார் படிப்பகம் உருவாக்கம் - இவற்றில் இவரின் பங்கும் குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு முன்னதாகவே அவ்வூர் கோவிலுக்கு அருகே திருவள்ளுவர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி, தவத்திரு குன்றக்குடி அடி களாரைக் கொண்டு திறப்பு விழா செய்தார்.

தமது மாமனார், மாமியார் ஆகியோரின் மூப்பின் காரணமாக அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டிய நிலையில், புள்ளம்பாடியை விட்டு இடம்பெயர்ந்து,

திருக் காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பழமானேரி என்னும் கிராமத்தில் தமது அருமை இணையர்
மானமிகு நவமணி அவர்களின் துணையோடு (அவரும் ஆசிரியரே, இப்பொழுது ஓய்வு) வாழ்ந்து வருகிறார்.

அவர் வீடு என்பதற்கு அடையாளம் அங்கே திராவிடர் கழகக் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கும் - அறிவுலக ஆதவன் அய்யாவின் படம் பளிச்சென்று தெரியும்.

70 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கொள்கை, ஒரே தலைமை, ஒரே கொடி என்று ஆடாது அசையாது வைரம் பாய்ந்த மாமனிதர்களாக ஒளிவீசுவோர் திராவிடர் கழகத்தில்தான் உண்டு என்பதற்கு நமது பேராசிரியர் மெ.அன்பரசு ஓர் உதாரண மாமனிதர்.

இன்றைய நிலையில், இயக்கம் எப்படி இருக்கிறது என்று கடைசியாக ஒரு கேள்வி! அடேயப்பா - என்ன சிரிப்பு - என்ன புளகாங்கிதம் - ‘ஆசிரியர் பணி அயராப் பணி; இளைஞர்களின் பாசறையாக  இயக்கம் எந்தக் காலத்தையும்விட நமது ஆசிரியர் காலத்தில் இருப்பது கண்டு என்னைப் போன்ற பெரியார் பெருந் தொண்டர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி’ என்று கலகலப்பாக சிரிக்கிறார் - விடைபெற்றோம்!
(லால்குடியில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின்போது, பட்டறையைத் தொடங்கி வைத்து உரையாற்ற வந்த பேராசிரியர் மெ.அன்பரசு அவர்களிடம் பேட்டி கண்டவர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். உடனிருந்தோர் ஆசிரியர் ஆல்பர்ட் (ஓய்வு), உலகநாதன், அதிரடி க.அன்பழகன் ஆகியோர். நாள்: 15.4.2017, மாலை 5 மணி).

Banner

Banner
Banner
Banner