மேசைக் கணினிகளுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையை மொத்தமாகக் கைப்பற்றும் முகமாக உபுண்டு 12.04 எல்.டி.எஸ். என்ற இயங்கு முறைமையினை கனோனிக் கல் (Canonical) நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தி யுள்ளது. உலகெங்கும் விரும்பி பயன்படுத்தப்படும் இலவச ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரிய நான்காவது தொகுப்பாக இது வெளிவருகிறது. அய்ந்தாண்டுகளுக்கான பராமரிப்பு மேம்பாட்டினையும் இது உள்ளடக்கியது. மைக்ரோ சாஃப்ட் ஆர்.டி.பி. 7.1 உடன் இணைந்து சிட்ரிக்ஸ் மற்றும் வி.எம்.வேர் என்ற டெஸ்க்டாப் வெர்சுவலைசேஷன் சார்ந்த பயன்பாடுகளையும் இது கொண்டுள்ளது.
அலுவலக பயன்பாட்டைப் பொறுத்தவரையில் மும் முனையில் இதன் பயன்பாடுகள் உள்ளன. நீண்ட கால திட்டமிடல் சார்ந்த முறைமைகளுக்கு, டெஸ்க் டாப்பைப் பயன்படுத்தும் பெரிய நிறுவனங்களுக்கு உபுண்டு 12.04 எல்.டி.எஸ். மிகச் சிறந்த தீர்வாகும் என்று கனோனிக்கல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜேன் சில்பர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இத்தொகுப்பினை தேவைக்கேற்ப மேம்படுத் தித் தருவதற்காக மென்பொருள் நிறுவனங்களுடன் நாங்கள் உடன்பாடு செய்து கொண்டுள்ளோம். இதன் மூலம் டெல், எச்.பி.., லெனோவா நிறுவனங்களின் கணிப் பொறிகளை வாங்குவோருக்கு தொடர்ந்து நாங்கள் இதன் மேம்பாட்டுத் தொகுப்புகளை அளிக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.