Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர் களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை.

ஏனென்றால் பரிசுகளும், பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் சுற்றி ஒரு கூட்டமும் சேர்கிறது. அந்த ஒரு நிலை வரும் வரையில் அவர்கள் உழைக்கும் போது அவர்கள் தனியர்களே. அவர்கள் இருப்பதைக் கூட உலகம் அறியாமலேயே இருந்து விடவும் கூடும்.

திறமை மிக முக்கியம். அதுதான் முதல் தேவையும் கூட. திறமை இல்லாவிட்டால் உழைப்பு வீண் தான். ஆனால் திறமை இருந்தும் அதற்காக உழைக்கா விட்டால் திறமையும் வீண் தான். இதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியும் பார்க்கலாம்.

திறமையும் முக்கியம், உழைப்பும் முக்கியம் என்றாலும் எது எந்த அளவு முக்கியம் என்ற கேள்விக்கு விஞ்ஞானி எடிசன் 1 விழுக்காடு திறமையும், 99 விழுக்காடு உழைப்பும் வெற்றிக்குத் தேவை என்கிறார். இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களைப் புரிந்த அவரைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர் இருக்க முடியாது என்பதால் அதை வெற்றிக்கான ஒரு வழியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலக வரலாற்றில் இரண்டு துறைகளில் நோபல் பரிசுகள் பெற்றவர்கள் இருவர். அதில் முதலாமவர் மேரி கியூரி அம்மையார். இயற்பியல், வேதியியல் என்ற இரண்டு துறைகளில் 1903, 1911 ஆம் ஆண்டுகளில் அவர் நோபல் பரிசுகள் பெற்றார். வேதியியலில் நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்த ரேடியத்தைக் கண்டுபிடிக்க அவர் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்கு ஆராய்ச்சிக்கேற்ற வசதிகளை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

குதிரை லாயமே அவரது ஆராய்ச்சி சாலையாக அமைக்கப்பட்டது. பொருளை அரைப்பது, கழுவுவது, அடுப்பு மூட்டி சூடாக்குவது போன்ற சில்லறை வேலைகளைச் செய்யக்கூட வேலையாட்கள் இல்லை. அந்த வேலைகளை அவரே தான் செய்தார். கனிமத்தை அரைக்கும் இயந்திரத்தைச் செக்குமாடுகள் போல அவரே இழுத்து அரைத்தார். இப்படி ஒரு நாள், இரு நாளில்லை பல ஆண்டு காலம் பல துன்பங்களை ஏற்று உழைத்துத் தான் ரேடியத்தை அவர் கண்டுபிடித்தார்.

இப்படி ஒவ்வொரு உண்மையான உயர்ந்த சாதனையின் பின்னும் பெரும் உழைப்பு இருக்கிறது. வெற்றிக்கான முயற்சிகளில் பல சமயங்களில் செய்ததையே தொடர்ந்து பல காலம் செய்ய வேண்டி இருக்கும். அந்த உழைப்பு விருப்பமானதாக இருப்பது மிக அபூர்வம். எடிசன் குறிப்பிட்ட 1 திறமை இருப்பவர்கள் ஏராளம். ஆனால் அந்த 99 விழுக்காடு உழைப்பு என்று வரும் போது தான் பல திறமையுள்ளவர்கள் பின்வாங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்த ஒரே மாதிரியான  உழைப்பில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. ஒருசில முயற்சிகளில் பலன் கிடைத்து விட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் சாதனை என்பது என்றுமே சாத்திய மில்லை.

எனவே எந்தத் துறையில் சாதிக்க ஆசைப்பட்டாலும் முதலில் அதற்கான திறமை உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். அந்தத் திறமை இருக்குமானால் அதை மெருகேற்றவும், வெளிக் கொணரவும் முறையான திட்டமிட்ட உழைப்பைத் தர மனதளவில் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். மனம் தயாராகா விட்டால் எந்த முயற்சியும் அரைகுறையாகவே முடியும். சாதனையின் உயரத்திற்கேற்ப பயணிக்கும் தூரமும், நேரமும் அதிகமாகத் தான் இருக்கும்.

அந்தப் பயணத்தில் சலிப்படைந்து விடாதீர்கள். பாதியில் நிறுத்தி விடாதீர்கள். சாதனைப் பயணத்தில் பாதியில் நிறுத்தியவர்களை யாரும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. சலிப்பு வரும் போதெல்லாம் முடிவு நிலையின் பெருமையை எண்ணி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து முயன்றால் ஒரு நாள் கண்டிப்பாக சாதித்து முடித்திருப்பீர்கள்!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்