சமீபத்தில் போட்டித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தற்போது டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 பணியிடங்களுக்காக நேர்முகத் தேர்வை நடத்தி வருகிறது. தமிழக அரசின் பல்வேறு பிரிவு அதிகாரி பணியிடங்களுக்காக நடத்தப்படும் இந்தத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கான சில குறிப்புகள்....
* நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று விடுங்கள். வெளியூர்களில் இருந்து கலந்து கொள்பவர்களே அதிகம் இருப்பதால், ஒரு நாள் முன்பாகவே சென்னைக்குச் சென்று தயாராகிக் கொள்வது என அறிவுறுத்தப்படுகிறது.
* நேர்முகத் தேர்வு நாளன்று காலை செய்திகளை அதன் பின்னணியுடன் அறிந்து கொள்ளுங்கள். இன்றைய செய்தி என்ன என்று கேட்கப்பட்டால், அன்றைய முக்கியச் செய்திகளில் 2 அல்லது 3 செய்திகளை தவறாது கூறவும். பின்பு உங்கள் பதிலிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் தயார் செய்து கொண்டு செல்லவும்.
* நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் எளிய நேர்த்தியான உடையை அணிந்து கொள்ளவும். கண்களை வெறிச்சிடச் செய்யும் பளிச் உடைகளை அணிய வேண்டாம். உங்களுக்குப் பழக்கமான ஆடைகளாகவும், காலணிகளாகவும் இருப்பவற்றை அணிந்து கொள்ளுங்கள்.
* பதிலளிக்கும் போது நேர்முகத் தேர்வாளர்களின் கண்களை அல்லது முகத்தைப் பார்த்து பதிலளிக்கவும். தரையைப் பார்த்துக் கொண்டு பதிலளிப்பது அல்லது மேலே பார்த்து பதிலளிப்பது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
* பதில் தெரியாத கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்று நேர்மையாக பதிலளியுங்கள். புரியாத கேள்விகளை உங்களுக்கு புரியவில்லை என்பறால் திரும்ப கூறுங்கள் என்று கோருங்கள்.
* கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இத்தனை கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று தேர்வாணையம் நிர்ணயிப்பது இல்லை. எனவே இத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க வில்லையே என கவலைப்பட வேண்டாம்.
* முதல் நாள் கலந்து கொள்பவர்கள் எழுத்துத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர் கடைசிநாளில் கலந்து கொள்வதால் நாம் மிகக் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்றெல்லாம் தேர்வு பற்றிய அனுமானங்களில் நீங்களாகவே ஈடுபட்டு காலத்தையும் நம்பிக்கையையும் வீணாக்க வேண்டாம்.
* பட்டப்படிப்பில் நீங்கள் படித்த பாடம், நடப்புச் செய்திகள், அடிப்படையான பொது அறிவு, தமிழகம் குறித்த தகவல்கள், உங்கள் குடும்பப் பின்னணி, எதற்காக இந்த வேலை உங்களுக்கு அவசியம் போன்ற நேர்முகத் தேர்வுக்கான அடிப்படை முறையில் தயாராகிக் கொள்ளுங்கள்.
நேர்முகத் தேர்வு என்பது உங்களது ஆளுமைத் திறனை பரிசோதிப்பதாகவே அமைவதால், தேவையில்லாமல் உங்களது அடிப்படைத் தோற்றத்தை செயற்கையாக மாற்ற முயற்சிக்காதீர்கள். வாழ்த்துக்கள்.