Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 24- இந்திய விமானப்படையில் ஏர்மென் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். இதற்கான நேரடி தேர்வு முகாம் மதுரையில் அடுத்த மாதம் (ஜூலை) 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிளஸ்-2 முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்

இதுதொடர்பாக சென்னையில் உள்ள ஏர்மென் தேர்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:- இந்திய விமானப்படையில் தொழில் நுட்பப் பிரிவில் ஏர்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான நேரடி தேர்வுமுகாம் அடுத்த மாதம் (ஜூலை) 22ஆம் தேதி மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர் களுக்காக மட்டும் இந்த சிறப்பு தேர்வு முகாம் நடத்தப்படுகிறது.

கணிதம், இயற்பியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்தவர்களும் பங்கேற்கலாம். விண்ணப்ப தாரர்கள் 1.7.1991-க்கும் 30.9.1995-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். தேர்வு முகாமில் கலந்துகொள்ள முன்கூட்டியே விண்ணப்பம் எதுவும் அனுப்ப தேவையில்லை. தேவையான கல்விச்சான்றிதழ்களுடன் (இருப்பிடச்சான்று உள்பட) நேரில் வந்தால் போதும். கல்விச்சான்றிதழ்களை மேற்படிப்புக்காக கல்லூரிகளில் ஒப்படைத்து விட்டால் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் தேர்வில் கலந்துகொள்ளலாம். தேர்வுக்கு வரும்போது எச்.பி. பென்சில், ரப்பர், கறுப்பு அல்லது நீலக் கலர் பால்பாயிண்ட் பென் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

எழுத்துத்தேர்வு ஒரு மணி நேரம் நடக்கும். இதில், ஆங்கிலம் (20 கேள்விகள்), கணிதம், இயற்பியல் (இரண்டிலும் தலா 25 கேள்விகள்) ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியே தேர்ச்சி பெற வேண்டும். தவறான விடைகளுக்கு மைனஸ் மார்க் எதுவும் கிடையாது. வினாக்கள் சி.பி.எஸ்.இ. தரத்தில் இருக்கும். தேர்வுக்கான பாடத்திட்டத்தை இந்திய விமானப்படை இணையதளத்தில்  தெரிந்து கொள்ளலாம்.

எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உடல்திறன் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில், 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். உடல்திறன் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இறுதியாக மருத்துவத்தேர்வு நடக்கும். ஏர்மென் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு சம்பளமாக மாதம் ரூ.20,500 பெறலாம். சம்பளத்தை தவிர ரேஷன், சீருடை, மருத்துவ வசதிகள், தங்குமிடம், குழந்தைகளின் படிப்புக்கு அலவன்சு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் உள்பட ஏராளமான சலுகைகள் கிடைக்கும்.

வெவ்வேறு நிலைகளில் பதவி உயர்வு பெறுவதுடன் தகுதி, திறமை பெற்றிருப்பின் விமானப்படையில் அதிகாரியாகவும் வாய்ப்பு உண்டு. ஏர்மேன் தேர்வு தொடர்பாக சந்தேகம் இருப்பின் சென்னை தாம்பரத்தில் உள்ள ஏர்மேன் தேர்வு மய்யத்தின் கமாண்டிங் அதிகாரியை 044-22390561 என்ற டெலிபோனிலும், 94452-99128 என்ற செல்போன் எண்ணிலும் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்