
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தவர்களை முன்னேற்றும் எண்ணத்தில் பஞ்சாப் சிந்து வங்கிக்கான துவக்கம் அமைந்தது. பின்னர் வங்கிகளின் தேசியமயமாக்கத்தின் போது இந்த வங்கியும் பொதுத் துறைக்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இன்று வரை சிறப்பான முன்னேற்றமும், பல்வேறு சாதனைகளையும் பஞ்சாப் அண்டு சிந்து வங்கி செய்து வந்துள்ளது. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் என்ற பெயரில் பல்வேறு அதிகாரி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகளும், காலி இடங்களும்: பஞ்சாப் அண்டு சிந்து வங்கியில் சார்டர்டு அக்கவுண்டண்ட் பிரிவில் 35 இடங்களும், ஜெனரலிஸ்ட் பிரிவு அய்.டி., அதிகாரிகளில் 125 இடங்களும், அக்ரிகல்சர் பீல்டு ஆபிசர் பிரிவில் 100 காலி இடங்களும், ராஜபாஷா அதிகாரி பிரிவில் 15 காலி இடங்களும், சிவில் அண்டு எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டெக்னிகல் ஆபிசர் பிரிவில் மொத்தம் 10 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
மேலே கூறப்பட்ட சிறப்பு அதிகாரிகள் பணி நியமனத்தில் சார்டர்டு அக்கவுண்டண்ட் பதவிக்கு உச்ச பட்ச வயது 32 ஆகவும், இதர பிரிவுகளுக்கு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சார்டர்டு அக்கவுண்டண்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்க பட்டப் படிப்புடன் சி.ஏ., படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு வருட காலத்திற்கு வங்கி அல்லது நிதித் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஐ.டி., மற்றும் அக்ரிகல்சர் பீல்டு ஆபிசர் பிரிவுகளுக்கு தொடர் புடைய துறையில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ராஜ பாஷா பிரிவுக்கு விண்ணப்பிக்க இந்தி மொழியில் சில குறைந்த பட்ச கல்வித் தகுதிகள் உள்ளன.
டெக்னிகல் ஆபீசர் பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில் அல்லது எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கடந்த் ஆண்டு ஐ.பீ.பி.எஸ்., நடத்திய அதிகாரிகளுக்கான பொது எழுத்துத் தேர்வை சில குறைந்த பட்ச நிபந்தனைகளுடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சார்டர்டு அக்கவுண்டண்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்க இந்த நிபந்தனை தேவையில்லை. முழுமையான தகவல்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர தகவல்கள்: இரண்டு ஆண்டு காலம் வரை புரொபேஷனரி அதிகாரி அடிப்படையில் பணியாற்ற வேண்டிய பதவியாகும் இது. அய்.பி.பி.எஸ்., மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க ரூ.200/-ஐ ஏதாவது ஒரு பஞ்சாப் அண்டு சிந்து வங்கிக் கிளையிலோ அல்லது நெப்ட் முறையிலோ செலுத்த வேண்டும்.
இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டால் ரூ.ஒரு லட்சத்திற்கான பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். முழுமையான தகவல்களை இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.06.2012
இணையதள முகவரி :www.psbindia.com/spec%20ad.pdf