எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டிஜிட்டல் பரிவர்த்தனையை பெருமையாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எத்தனை இந்தியப் பள்ளிகள் இணையதள வசதியுடன் செயல்பட்டு வருகின்றன என்று தெரியுமா? 2014- 2015 ஆண்டுக்கான இந்தியக் கல்விக் கான மாவட்டத் தகவல் அமைப்பின் கணக் கெடுப்பின்படி 36.6% சதவீத இந்தியப் பள்ளிகளில் மட்டுமே இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் உள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் சர்வதேச அளவில் நடைபெறும் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன் சுக்கான பிரம்மாண்டப் போட்டிகளில் பங்குபெறுவதைக் கற்பனைசெய்துப் பார்க்க முடியுமா? முடியாது என்றே தோன்றும். ஆனால், கடந்த வருடம் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிங் நகரில் நடைபெற்ற ரோபோ கப் 2016, இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானில் உள்ள நகோயா நகரில் நடை பெற்ற ரோபோ கப் 2017 உள்ளிட்ட சர்வதேச ரோபோட் வடிவமைப்புப் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்கள் பெங்களூரு சேவா பாரதி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆறு மாணவர்கள்.

கன்னட வழிக் கல்வி கற்பிக்கும் அரசுப் பள்ளியான இதில் 10-க்கு 10 அடி என்கிற அளவில் இருக்கும் சிறிய வகுப்பறை ஒன்றில்தான் 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட இந்த ஆறு சிறுவர்கள் ரோபோட்டிக்ஸை கற்றுத்தேர்ந் தார்கள். இவர்களுடைய வளர்ச்சிக்குக் காரணம் அம்மாநில அரசோ, மத்திய அரசோ அல்ல.

அறிவியல் படிப்புக்குப் புகழ்பெற்ற இந்திய அறிவியல் நிறுவனமான அய்..அய்.எஸ்சி.யில் இன்ஸ்ட்ரூமெண்டல் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்ற பா. சிறீதர் தான் காரணம். இந்தியாவின் தலைசிறந்த கல்லூரி ஒன்றில் படித்துவிட்டுத் தன்னுடைய பணிவாழ்க்கையை பூனாவில் உள்ள பன்னாட்டு அய்.டி. நிறுவனம் ஒன்றில் தொடங்கினார் சிறீதர்.

நுட்பம் அவசியம்

தான் கற்ற கல்வியினால் சமூகத்துக்கு என்ன பயன் என்கிற கேள்வி அவரைத் துளைக்கத் தொடங்கியது. மூன் றாண்டுகளுக்கு மேல் அவரால் வழக்கம்போல பணிக்குச் செல்ல முடியவில்லை. வாய்ப்பும் வசதியும் மறுக்கப்பட்ட குழந்தைகளிடம் அறிவியலைக் கொண்டு சேர்க்க முடிவெடுத்தார். கணினி அறிவியலை எளிய பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளுக்குப் பிடித்தமான பாடமாக மாற்ற வேண்டுமென்றால் அதை எளிமைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்தார். அய்.டி. வேலையை ராஜினாமா செய்தார்.

2014இல், பெங்களூருவில் உள்ள அக்சரா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். சுவாரசியமும் கேளிக்கையும் கூடிய கணினி அறிவியல் பாடத்திட்டத்தைத் தானே வடிவமைத்தார். சேவா பாரதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் ஆசிரியராகக் களம் இறங்கினார். இன்று அவர் உருவாக்கிய மாணவர்கள், மாஸ்டர் மைண்ட்ஸ் என்கிற பதாகையோடு ரோபோட்களை அட்டகாசமாக வடிவமைத்துவருகிறார்கள்

எவ்வளவுதான் திறமை இருந்தாலும், தங்களுடைய ஆற்றலை வெளிநாட்டில் வெளிப்படுத்த வேண்டுமானால் அங்குச் செல்லச் செலவாகுமே. தினக் கூலிகளின் குழந்தைகளான இவர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கப் பெரிய தொகை தேவைப்பட்டது. இந்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நுட்பத்தைப் புத்திக்கூர்மை யோடு தன்னுடைய மாணவர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினார் சிறீதர்.

கிரவுட்ஃபண்டிங் மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் திரட்டி, தன்னால் முடிந்த தொகையையும் கொடுத்துத் தன்னுடைய மாணவர்களை வெற்றிகரமாக ஜப்பானுக்கு அனுப்பிவைத்தார்.

தன்னுடைய வீட்டிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேவா பாரதி அரசுப் பள்ளிக்குத் தினமும் தன்னுடைய சைக்கிளை மிதித்தபடியே இன்றும் சென்றுகொண்டிருக்கிறார் இந்த எளியவர்களின் ரோபோட் ஆசிரியர்.

விமான நிலைய ஆணையத்தில் காலிப் பணியிடங்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி என்ற பதவியில் பொறியியல் பட்டதாரிகள் நேரடி நியமன முறையில் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

மொத்தம் 200 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் 50 காலியிடங்களும் எலெக்ட் ரிக்கல் பிரிவில் 50 இடங்களும், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் 100 காலியிடங்களும் இடம்பெற்றுள்ளன. மினி ரத்னா அந்தஸ்து கொண்ட இந்நிறுவனம் மத்திய அரசு நிறுவனம் என்பதால் காலியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு உண்டு.

தேவையான தகுதி: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் முதல் வகுப்புடன் கூடிய பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு ‘2016 கேட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ‘2016 கேட்’ நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வோ நேர்முகத் தேர்வோ குழு விவாதமோ கிடையாது. இளநிலை நிர்வாகி பதவிக்குத் தேர்வு செய்யப்படு வோருக்கு ஆரம்ப நிலையில் ரூ.60 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணைய தளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம் உள் ளிட்ட விவரங்களை இந்திய விமான நிலைய ஆணையத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் :
அக்டோபர் 17

பொதுத்துறை நிறுவனங்களின் வேலைக்கு நுழைவாயில்!

மத்திய அரசின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். படிப்பதற்கு கேட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், ஆர்க்கிடெக்சர் உள்ளிட்ட பல்வேறு பொறியியல், தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளில் கேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ. உள்ளிட்ட பட்டதாரிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண், 3 ஆண்டுகள் செல்லத் தக்கது . மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்தியன் ஆயில், கெயில், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டே பொறியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்து வருகின்றன. கேட் தேர்வு மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பொறியாளர் பணி தொடர்பான நியமனங்களை மேற்கொண்டுவருகின்றன.

அந்த வகையில், தற்போது, பொறியியல் பட்டதாரிகளைப் பொறியியல் நிர்வாகப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ‘2018 கேட்’ நுழைவுத்தேர்வு மூலமாகத் தேர்வு செய்ய கெயில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், தேசிய அனல்மின் கழகம், ஓ.என்.ஜி.சி., பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவனம், உள்ளிட்ட பல்வேறு முன்னணிப் பொதுத்துறை நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன. பணி நியமனம் தொடர்பான விரிவான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் அந்த நிறுவனங்களின் இணையதளத்தில் வெளியாகும். அப்போது, கேட் தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

கேட் நுழைவுத்தேர்வை ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒரு மத்திய அரசு உயர்கல்வி நிறுவனம் நடத்தும். அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான கேட் நுழைவுத்தேர்வை கவுஹாத்தி அய்.அய்.டி. நிறுவனம்  நடத்த இருக்கிறது. ஆன்லைன் பதிவு செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக் கல், ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

நுழைவுத்தேர்வுக்கான தகுதி, பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாக்கள், அவற்றுக்கான விடைகள், மாதிரித் தேர்வுகள் உள்ளிட்ட விவரங்களை www.gate.iitg.ac.in என்ற இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

பொறியியல் பட்டதாரிகள் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர கேட் நுழைவுத்தேர்வு முதன்மை நுழைவுவாயில்!

முக்கிய நாட்கள்

ஆன்லைன் தேர்வு: 2018-ல் பிப்ரவரி 3, 4, 10, 11.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 5