எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பி.காம்-க்கும் அப்பால்....

வர்த்தக நடவடிக்கைகளில் சரியாகவும் கவனமாகவும் ஈடுபடுவதற்கான கல்விதான் வணிகவியல். வர்த்தகம் சார்ந்த கடமைகளையும் பொறுப்புகளையும் வணிகவியல் கல்வி தருகிறது. உற்பத்தியாளர் தொடங்கி கடைக்கோடி வாடிக்கை யாளர்வரை பொருட்களைக் கொண்டுசேர்க்கும் சேவைகள் தரும் வணிக நடவடிக்கைகளை வணிகவியல் கல்வியாக அளிக்கிறது.

இந்தியாவில் வணிகவியல் கல்விக்கு மதிப்பும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் காலம் இது. பிளஸ் டூவில் காமர்ஸ் பாடம் எடுத்துத் தேறியவர்கள் அக்கவுண்டன்சி, பிஸ்னஸ் ஸ்டடீஸ், எகனாமிக்ஸ், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படையான அறிவைப் பெற்றிருப்பார்கள். பிளஸ் டூவுக்குப் பிறகு பி.காம். தவிரவும் வணிகவியலை அடிப் படையாகக் கொண்ட படிப்புகள் நிறைய உண்டு.

பெருநிறுவன
மேலாண்மை கல்வி

வியாபாரம் மற்றும் நிறுவன மேலாண்மைச் சூழலுக்கேற்ற திறன்களைப் பயிற்றுவிக்கும் மூன்றாண்டுப் படிப்பு பேச்சுலர் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (பி.பி.ஏ.). இதைப் படித்தால் பெருநிறுவன மேலாண்மை (கார்ப்ரேட் மேனேஜ்மெண்ட்) தொடர்பான அடிப்படைகளையும் திறன்களையும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியா முழுவதும் பி.பி.ஏ. படிப்பு மேலாண்மைக் கல்வி, சந்தைப்படுத்தல், தொழில்முனைவு, நிதி மற்றும் அக்கவுண்டிங் ஆகியவற்றை முதன்மைப் பாடங் களாகக் கொண்டு கற்றுத்தரப்படுகிறது. எம்.பி.ஏ. படிப்பதற்கான சிறந்த அடிப்படைகளையும் பி.பி.ஏ. வில் கற்றுக்கொள்ளலாம். சேல்ஸ் எக்சிக்யூட்டிவ், ரிசர்ச் அசிஸ்டெண்ட், ஆஃபீஸ் எக்சிக்யூட்டிவ் போன்ற பணிகளுக்கு பி.பி.ஏ. அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது.

இளங்கலையோடு முதுகலை

பிளஸ் டூ முடித்தவுடன் அய்ந்தாண்டு ஒருங் கிணைந்த பி.பி.ஏ. பிளஸ் எம்.பி.ஏ. சேரலாம். அய்ந்தாண்டு படிப்பு நிறைவுக்குப் பின்னர் நிறைய வேலைவாய்ப்புகளும் உள்ளன. இந்தூர் இன்ஸ்டி டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்(அய்.அய்.எம்.) கல்வி நிலையத்தில் அய்ந்தாண்டு படிப்பு உள்ளது. ஆப்டிட்யூட் டெஸ்ட், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அய்.அய்.எம்.இல் ஒருங் கிணைந்த படிப்பை முடித்த மாணவர்களைக் கல்லூரி வளாகப் பணி நியமனத்தின் (கேம்பஸ் பிளேஸ்மெண்ட்) அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் சம்பளத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நிகரான படிப்பு: பி.பி.ஏ.வுக்கு சமமான மேலாண்மைப் படிப்பு பேச்சுலர் ஆஃப் பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் (பி.பி.எம்.). வர்த்தக நிர்வாகத் துக்குப் பதில் வர்த்தக மேலாண்மையைச் சொல்லித் தருவது ஒன்றே வித்தியாசம். வெற்றி கரமான நிர்வாகிகள் மற்றும் வர்த்தகத் தலைவர் களாவதற்கான அடிப்படைகளை இப்படிப்பில் தெரிந்துகொள்ளலாம். நிறுவனங்கள், நிறுவன நடத்தைகள், மனிதவள மேலாண்மை, தொழில் துறை உறவுகள், வர்த்தக நிறுவனங்களின் சட் டங்கள் மற்றும் தொடர்பானவற்றை அறிந்து கொள்ளலாம். டிபார்ட்மெண்ட் மேனேஜர், ரீடெய்ல் ஸ்டோர் மேனேஜர், சேல்ஸ் ரெப்ர சென்டேடிவ், பைனான்சியல் அட்வைசர் முதலிய பொறுப்புகளை ஏற்கலாம்.

உணவகத்தை நிர்வகிக்கலாம்

தற்போது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் துறை இது. அய்ந்து நட்சத்திர விடுதிகளும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டப் படிப்புகளை நடத்துகின்றன. ஆனால், இந்தப் பட்டப் படிப்புகள் ஏ.அய்.சி.டி.இ./ யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்றவையா என்பதைத் தெரிந்துகொண்டு சேர்வது அவசியம். அத்துடன் நேஷனல் கவுன்சில் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி அமைப்பும் (என்.சி.எச்.எம்.சி.டி.) ஓட்டல் மேலாண்மைக் கல்விக்கு அங்கீகாரம் தருகிறது.


மீன் வளம் பற்றி படிக்கலாம்

படிப்பு விஷயத்தில் இன்று உள்ள தேவை நான்கைந்து ஆண்டுகளுக்குப் பின் இருக்குமா இருக்காதா என்பதையெல்லாம் யோசிக்காமல் ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்தால் அது பயன் தராது. ஆகவே பயன் தரும் வகையிலான படிப்புகளில் சேர்வது நல்லது. குறைந்த செலவில், வேலை வாய்ப்புக்கு உத்திரவாதமுள்ள பல பட்டப் படிப்புகள் உள்ளன.

அப்படியான படிப்புகளில் ஒன்று மீன் வளம் பட்டப் படிப்பு. மீன் வளம் பற்றிய படிப்பு என்றதும் இது என்ன படிப்பு என்று சிலர் யோசிக்கலாம். மனிதனுக்குப் பசி என்னும் உணர்வு இருக்கும் வரை, உணவு சார்ந்த தொழில் துறையின் தேவை நீடிக்கும். இந்தியாவின் மீன்வள ஏற்றுமதி வருமானம் ஆண்டுக்கு 34,000 கோடி ரூபாய். உலக அளவில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். இதில் இந்தியாவின் கடற்கரையின் நீளம் 8,129 கி.மீ., பரப்பளவு 20 லட்சம் சதுர கி.மீ. இது தவிர ஆறுகள், கால்வாய்களின் நீளம் இரண்டு லட்சம் கிலோ மீட்டர், நீர்த் தேக்கங்களின் பரப்பளவு முப்பது லட்சம் ஹெக்டர். இவை மீன் வளத்துக்கு உகந்த சூழலைத் தருகின்றன.

மேலும் இந்தியத் தட்பவெப்பம் இத்துறைக்கு மிகவும் ஏதுவானது. உப்பு நீர் மீன்வளர்ப்பு, நன்னீர் மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு ஆகியவை வேகமாகப் பெருகிவருகின்றன. அதே சமயம் உலகின் தேவையும் பெருகிவருவதால், ஏற்றுமதிக்கான தேவையும் அதிகமாக உள்ளது.

மீன் பிடிப்பது மட்டுமல்ல; குஞ்சு பொரிப்பகங்கள், மீன் வளர்ப்புப் பண்ணைகள், மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை நல்ல லாபம் தரக்கூடியவை. படித்து முடித்த பின் குறைந்த செலவில் சுயமாகவும் தொழில் செய்யலாம். 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்றே மாதங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் இறால் வளர்ப்பின் மூலம் 24 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். தொழில் தொடங்கவில்லை என்றாலும் இங்கே இருக்கும் நிறுவனங்களில் வேலைக்கும் செல்லலாம். கனடா, ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, அய்ரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் இந்தத் துறைக்கு நல்ல மதிப்பும் தேவையும் இருக்கின்றன.

சமீபத்தில் ஒரு இறால் பண்ணையைப் பார்க்க நேர்ந்தது. அது சுமார் 200 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இறால் வளர்ப்புப் பண்ணை. அதன் வடிவமைப்பிலும் செயல்முறையிலும் தொழில்நுட்பம் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர், அய்.அய்.டி.யில் படித்து, அமெரிக்காவில் வேலை பார்த்த ஒருவர். சுமார் முப்பது வருடங்களாக இந்தப் பண்ணையை நடத்திவருகிறார். அவர் அமெரிக்காவில் சம்பாதித்ததைவிட இங்கு அதிகமாகச் சம்பாதிப்பதாகக் கூறுகிறார். அந்தக் கிராமத்தினர் பலருக்கு வேலை வாய்ப்பும் அளித்து இருக்கிறார்.

ஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இத்துறையில் வெகுவாக முன்னேறிவருகின்றன. மத்திய அரசும் மாநில அரசும் இத்துறையைப் பெரிதும் ஊக்குவிக்குகின்றன. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள உப்பு நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு நிறுவனம் , நன்னீர் மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு நிறுவனம்  ஆகியவை இலவசப் பயிற்சியும் ஆலோசனையும் வழங்குகின்றன.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் பொன் னேரியிலும் தூத்துக்குடியிலும் உள்ளன. இளங்கலைப் பொறியிலாளர் பட்டப்படிப்பு, மீன் வளம் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை இங்கே படிக்கலாம்.


நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி வாய்ப்பு

நபார்டு வங்கி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குப் பல்வேறு வகையான கடன்களை வழங்கிவருகிறது. இவ்வங்கியில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பதவியில் 91 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. பொது, பொருளாதாரம், வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், கால்நடை மருத்துவம், மீன்வளம், வனவியல், சமூகப் பணி, சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்துதல் எனப் பல்வேறு பிரிவுகளில் இந்தக் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுப் பிரிவில் மட்டும் 46 காலியிடங்கள் இருக்கின்றன.

தேவையான தகுதி:  உதவி மேலாளர் (பொது) பணிக்கு விண் ணப்பிக்கக் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 45 சதவீத மதிப்பெண் போதுமானது. பொதுப் பிரிவு தவிர்த்து இதர தொழில்நுட்பப் பிரிவுகளைப் (பொரு ளாதாரம், விவசாயம் போன்றவை) பொறுத்தவரையில், அந்தந்தப் பாடப்பிரிவில் இதே மதிப்பெண் தகுதியுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தமட்டில், 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை:  விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகள் இருக்கும். இரண்டுமே ஆன்லைன் வழித் தேர்வுகள்தான்.

முதல்நிலைத் தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியும் வயதுத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் நபார்டு வங்கியின் இணையதளத்தை (www.nabard.org)பயன்படுத்தி ஜூலை மாதம் 10ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.   உதவி மேலாளர் பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் ரூ.56 ஆயிரம் அளவுக்குச் சம்பளம் கிடைக்கும்.