எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வானைத் தொடத் தயாராகும் நாசாவின் நட்சத்திரம்

பிளஸ் டூவில் முதல் இடம், இரண்டாவது இடம் எடுத்தவர்கள் பற்றி கடந்த ஆண்டுவரை எல்லா ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு பேசும். நல்லவாய்ப்பாக, இந்த ஆண்டு முதல் அதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், ஒருவருடைய அறிவைச் சோதிக்கச் சிறந்த அளவுகோலாக தேர்வைத்தான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

தேர்வுக்கும் திறமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நிரூபித்திருக்கிறார் ஒரு மாணவர். 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்ட கலாம் சாட் என்ற குட்டியூண்டு செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம். இந்த கையடக்கச் செயற்கைக்கோள் நாசாவின் எஸ்.ஆர். ராக்கெட்டில் ஜூன் மாதம் விண்வெளிக்கு பயணிக்க உள்ளது. இதை உருவாக்கிய மாணவர் முகமது ரிஃபாக் ஷாரூக் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண் சராசரி 62.5 சதவீதம்.

நாசா வருடந்தோறும் மாணவர்களுக்காக நடத்தும் சர்வதேசச் செயற்கைக்கோள் வடிவமைப்புக்கான போட்டி கப்ஸ் இன் ஸ்பேஸ். இதில் கலந்துகொண்ட 57 நாடுகளைச் சேர்ந்த எட்டாயிரம் போட்டி யாளர்களில் இறுதி செய்யப்பட்டவர்கள் 80 பேர். அவர்களில் தான் உருவாக்கிய சற்றே பெரிய தீப்பெட்டி அளவிலான செயற்கைக் கோளை ஏந்தியபடி நிமிர்ந்து நிற்கும் ஒரே இந்தியர் முகமது ரிஃபாக் ஷாரூக்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு நடத்திய அறிவியல் போட்டியில் முதன் முறையாகக் கலந்துகொண்டார். இப்போது அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

இந்த இளம் விஞ்ஞானி அடுத்துப் படிக்கப்போவது என்ன தெரியுமா? எனக்குச் சிறு வயதிலிருந்தே பிடித்தப் பாடம் இயற்பியல். ஸ்பேஸ் கிட்ஸ் செயல் அதிகாரி சிறீமதி கேசனின் வழிகாட்டுதலால் இயற்பியல், மின்னணு பாடங்களில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. பத்தாம் வகுப்பில் 500-க்கு 432 மதிப்பெண் பெற்றேன். ஆனால் அப்போதே மருத்துவம், பொறியியலுக்கு பின்னால் ஓடக்கூடாது, என்னுடைய தனித்திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என உறுதியாக முடிவெடுத்தேன். என்னுடைய அம்மா, சித்தி, மாமா, பள்ளி ஆசிரியர்கள் என பலரும் அதை ஊக்குவித்தார்கள்.

எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு நவம்பரில்தான் பிளஸ் டூ படிப்பில் சேர முடிந்தது. அதனால் அரையாண்டுத் தேர்வு, ஒரு மாதிரித் தேர்வு மட்டுமே எழுதிவிட்டு நேரடியாகப் பொதுத் தேர்வை எழுதினேன். அதனால் கணிதத்தில் 200-க்கு 92, வேதியியலில்
200-க்கு 89, கணினி அறிவியலில் 200-க்கு 145 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். ஆனால் மதிப்பெண்கள் என்னுடைய இலக்கு இல்லையே! அதனால், எனக்குப் பிடித்த பி.எஸ்சி. இயற்பியல் படிக்கப்போகிறேன் என உற்சாகமாகப் பேசுகிறார் ரிஃபாக்.

விண்வெளியில்  விவசாயம் சாத்தியமா?

டெக்னாலஜி டெமான்ஸ்டிரேட்டர் வகையைச் சேர்ந்த இவருடைய செயற்கைக்கோள் செம்டோ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. மிக நுண்ணிய அலகு நானோ என்றால், அதை விடவும் சிறியது செம்  ஆகும். அதனால்தான் வெறும் 64 கிராம் கொண்ட அதில் எட்டு சென்சார்கள், ஆன்போர்டு கணினி, மூன்று கிராம் எடையில் அத்திப் பழ விதைகள் உள்ளிட்ட பலவற்றைப் பொருத்தி உள்ளார்.

இந்தச் செயற்கைக்கோள் மூலமாக விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல தகவல்களை அறிய முடியும். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ரிஃபாகின் குறிக்கோள், விண்வெளியில் விவசாயம் சாத்தியமா என்பதைக் கண்டுபிடிப்பதே. வெறும் 240 நிமிடங்கள் மட்டுமே இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஆய்வு செய்யும். அப்போது அதில் உள்ள அத்தி விதை அங்குள்ள கதிர்வீச்சை கிரகிக்கும். பிறகு அந்தச் செயற்கைக்கோள் கடலில் விழுந்துவிடும். அதை மீட்டு எடுத்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி விண்வெளியில் எப்படி வேளாண்மை செய்யலாம் எனக் கண்டறிவேன் என்கிறார்.

விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்திய தேர்தல் ஆணையத்தில் உதவி இயக்குநர் பணி

வேலை: உதவி இயக்குநர் பணி கல்வித் தகுதி: பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.சி.ஏ படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளை அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்து இருக்க வேண்டும். சாப்ட்வேர் எஞ்சினியரிங், டி.பி.எம்.எஸ்., நெட்வர்கிங், நெட்வர்கிங் செக்யூரிட்டி பிரிவுகளில் சிறப்புத்தகுதி இருந்தால் கூடுதல் நன்மை.   கூடுதல் தகவல்களுக்கு : : http://eci.nic.in/


அச்சுத் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்பு

இணைய ஊடகம் வந்த பின்னர் அச்சு ஊடகத் துக்கு எதிர்காலம் இல்லை என்று சொல்லப்பட்ட காலம் உண்டு. ஆனால் உலகம் முழுவதும் இணைய ஊடகம் பரவிய பின்னரும் அச்சு ஊடகம் பலம் வாய்ந்ததாகவே உள்ளது.

அமெரிக்காவில் நீல்சன் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், ஒரு பிராந்தியத்தில் அச்சுப் பத்திரிக்கைச் செய்தியை 28 சதவீதம் பேர் படிக்கிறார்கள் எனில் அதே செய்தியை இணையம் வழியாக 10 சதவீதம் பேர் மட்டுமே படிக்கிறார்கள். இணையம் மற்றும் முகநூல் மூலம் ஒரு செய்தித் தளத்துக்கு வருபவர்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கே தங்கியிருப்பதில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இணையம் வழியாகத் தரப்படும் விளம்பரங்கள் வாசகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, அச்சிதழ் விளம்பரங்களே வாசகர்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. டைப்செட்டிங், பக்க வடிவமைப்பு, பேஸ்ட்டிங், ப்ளேட் மேக்கிங், இமேஜ் செட்டிங், பிரிண்டிங், பைண்டிங் என அச்சுத் தொழில் நுட்பத்தின் அனைத்துப் படிநிலைகளிலும் குறிப் பிட்ட தொழில்திறன்கள் தேவையாக உள்ளன.

அய்.டி.அய். என்றழைக்கப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் ப்ளேட் மேக்கிங், ஆப்செட் மெஷின் ஆபரேஷன், ஸ்கிரீன் பிரிண்டிங், கேமரா ஆபரேஷன், டிடிபி, புக் பைண்டிங் ஆகியவற்றில் சான்றிதழ் பயிற்சி தரப்படுகிறது. இதில் ஏட்டுப் படிப்பு மட்டுமின்றி நேரடி செய்முறைப் பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்துவரும் தொழில் துறைகளில் ஒன்று அச்சுத் தொழில். இந்தியாவின் அனைத்து மாநகரங்களிலும் நூற்றுக்கணக்கான தரமான அச்சுக்கூடங்கள் இன்னமும் சுறுசுறுப்பாக இயங்கிவருகின்றன.

அரசுத் துறைகளில் பெரும்பாலானவை அச்சு மற்றும் பதிப்புச் செயல்பாட்டுக்காகத் தனிப்பிரிவையே வைத்துள்ளன. இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகம், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், இந்திய தத்துவ ஆய்வுக் கழகம், இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம், சாகித்ய அகாடமி, என்.சி.இ.ஆர்.டி., பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கல்வித் துறை ஆகி யவை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பிரசுரங் களையும் நூல்களையும் வெளியிடுகின்றன.

அச்சுத் தொழில்நுட்பத் தைக் கல்வியாகப் பயின்றவர் களுக்கு விளம்பர நிறுவனங்கள், பத்திரிகை நிறுவனங்கள், அரசு அச்சகங்கள், அச்சு இயந்திரத் தொழிற்சாலைகள், பேக்கேஜிங் தொழிற்கூடங்கள், புத்தகங்கள் அச்சிடும் நிறுவனங்களில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகள் சார்ந்து அச்சுத் தேவைகள் அதிகரிக்கும் நிலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அச்சு தொழில்நுட்பவியலாளர் களுக்கான வாய்ப்புகளும் தேவைகளும் அதிக மாகவே இருக்கும்.

அச்சுத் தொழில்நுட்பம் கைவரப்பெற்றவர் களுக்குப் பல துறைகளில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வெளியீட்டு நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் அச்சுக்கூடங்கள், ஆப்செட், ப்ளெக்சோகிராஃபி மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிற்கூடங்கள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியலாம். நாளிதழ், பத்திரிகை ஆகியவற்றில் அச்சடிக்கப்படும் தகவல்களின் எழுத்துரு, நிறச் சேர்க்கை, பக்க அளவு உள்ளிட்ட பலவற்றைத் தீர்மானிக்கும் துறையான பிரீ-பிரஸ் சொல்யூஷனிலும் வேலை கிடைக்கும்.

எங்கே படிக்கலாம்?
இளங்கலை பிரிண்டிங் டெக்னாலஜி

# அண்ணா பல்கலைக்கழகம், காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கிண்டி, சென்னை

# அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகம், கோவை
டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி

# இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிரிண்டிங் டெக்னாலஜி, சென்னை

# இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிண்டிங் டெக்னாலஜி, சிவகாசி

# சலேஷியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிராஃபிக் ஆர்ட்ஸ், சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner