
இந்தியாவில் அரசுத் துறை சார்ந்த பணிகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யூ.பி.எஸ்.சி., அமைப்பு நடத்துவது நாடு அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் 2 முறை பாதுகாப்பு படைகள் - பணியிடத் தேர்வு எனப்படும் சி.டி.எஸ்., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு அடிப்படையில் இந்தியன் மிலிட்டரி அகாடமி, ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, நேவல் அகாடமி, ஏர் போர்ஸ் அகாடமி போன்ற இடங்களி லுள்ள காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்தியப் பாதுகாப்புப் படையில் ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படை என்ற முக்கிய மூன்று படைகளுடன் பாரா-மிலிட்டரி போர்ஸ் எனப்படும் கோஸ்ட் கார்டு, அஸ்ஸாம் ரைபிள்ஸ், ஸ்பெஷல் பிரான்டியர் போர்ஸ் என்ற படைகளும் உள்ளன. இந்தப் படைகளின் முக்கிய பணி இடங்களுக்காகத்தான் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
எதற்கு பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்
மன உறுதி மற்றும் தைரியம் உள்ளவர்களுக்கும், இந்திய தேசத்தின் மீது அபாரமான பற்று உடைய வர்களுக்கும், வாழ்வில் வரும் சவால்களை தைரியமாக எதிர்கொள்பவர்களுக்கும், தங்கள் வாழ்க்கையையே இந்தத் தேசத்திற்காக அர்ப்பணிக்கும் உயர்ந்த கொள்கை உடையவர்களுக்கும் பாதுகாப்புப் பணியே சிறந்த தேர்வாக இருக்கும்.
வரும் 2015-க்குள் இந்தியா சர்வ தேச அளவில் மிக முக்கியமான நான்காவது நாடாக மாறும் என்றும், இந்தியாவில் பாதுகாப்புக்காக உபயோகிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை தர அடிப்படையிலும், கொள்ளளவிலும் புதிய உச்சங்களை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் தொழில் நுட்ப ரீதியிலும் இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் பன்னாட்டு முக்கியத்துவத்தைப் பெறும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
தகுதிகள் என்ன வேண்டும்
இந்தியன் மிலிடரி அகாடமி மற்றும் ஆபிஸர்ஸ் டிரெய்னிங் அகாடமி பணி இடங்களுக்கு சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது 19 முதல் 24/25-க்குள் இருக்கவேண்டும்.
நேவல் அகாடமியின் காலி இடங்களில் நுழைய இயற்பியல் மற்றும் கணிதத்தில் பட்டப் படிப்பு அல்லது பொறியியல் பட்டப் படிப்பு தேவை. வயது 19 முதல் 22- க்குள் இருக்க வேண்டும். ஏர்போர்ஸ் அகாடமியின் பதவிக்கு இயற்பியல் மற்றும் கணிதத்தை பிளஸ்2 அளவில் படித்திருப்பதோடு பட்டப்படிப்பு அல்லது பொறியியல் பட்டப் படிப்பு தேவைப்படும். வயது 19 முதல் 23க்குள் இருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு திருமணமாகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு எப்படி இருக்கும்
இந்தியன் மிலிட்டரி அகாடமி, நேவல் அகாடமி மற்றும் ஏர்போர்ஸ் அகாடமி ஆகிய பிரிவுகளுக்கான தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகையில் இருக்கும். எழுத்துத் தேர்வில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். சர்வீஸஸ் செலக்சன் போர்டு எனப்படும் எஸ்.எஸ்.பி.,யினால் இந்த நேர்காணல்கள் நடத்தப்படுகிறது. இதிலும் வெற்றிகர மாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி மற்றும் திறனறியும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதிலும் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித் திருக்கும் பிரிவுக்கு ஏற்றபடி ஓரியண்டேஷன் பயிற்சி தொடங்குகிறது.
எப்படி விண்ணப்பிப்பது
பொதுவாக இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடப்படும். இவற்றுக்கான தேர்வுகள் முறையே செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படுகிறது. விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விபரங்களை யூ.பி.எஸ்.சி., அமைப்பு முக்கிய நாளிதழ்களில் மே, ஜூன், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வெளியிடும். குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி இதற்காக பரிந்துரைக்கப்படும் இடங்களில் இருந்து விண்ணப் பங்களைப் பெற வேண்டும். விண்ணப்பங்களை புது டில்லிக்கு அனுப்பவேண்டும். நாட்டின் மீது பற்றுக் கொண்ட இளைஞர்களை வரவேற்க இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்கின்றன. நீங்கள் தயாரா?