இளைஞர்

தமிழில் எழுதி சாதித்தேன்

ஆங்கிலம் நன்கு அறிந்தவர்கள் மட்டும்தான் யூ.பி.எஸ்.சி.யை வெல்ல முடியும் என்றில்லை. தமிழில் எழுதியும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் அ.தினேஷ்குமார். இவர் தமிழில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதி 2012 பேட்ச்சின் உ.பி. மாநிலப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

விடாமுயற்சி நிச்சயம் வெற்றி

கரூரில் உள்ள சோமூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். அவ்வூரைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் படிக்கத் தொடங் கியவர் கரூரில் ஒரு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப் பிரிவில் பிளஸ் டூ முடித்தார். பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 1998-ல் பட்டம் பெற்றார். தமிழ்வழிக் கல்வியில் பிளஸ் டூ வரை படித்தவருக்கு ஆங்கிலத்தில் பொறியியல் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபோது நாளிதழ்களைப் படித்து யூ.பி.எஸ்.சி. தேர்வு பற்றி தெரிந்துகொண்டார். சென்னையில் உள்ள தமிழக அரசு அண்ணா பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் தனக்கு புலமை குறைவு என்பதால், தமிழிலும் யூ.பி.எஸ்.சி. எழுதலாம் எனும் வாய்ப்பைப் பயன்படுத்த முடிவெடுத்தார். அப்பயிற்சி நிலையம் நடத்திய நுழைவுத் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அப்போது யூ.பி.எஸ்.சி. வெல்வோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சாதாரணமாக எல்லோரும் சந்திக்கும் பிரச்சினைகளை விடக் கூடுதலாகப் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 35 வயது வரை யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் வாய்ப்பை முழுவதுமாக விடா முயற்சியோடு பயன்படுத்தினார். 1999 முதல் 2011 வரை தொடர்ந்து 10 முயற்சிகளையும் எடுத்தார். ஒன்பதாவது முயற்சியில் அய்.ஆர்.எஸ். (அய்.டி.) பணி கிடைத்தது. இதற்காக நாக்பூரில் பயிற்சி எடுத்துக்கொண்டே தன்னுடைய இறுதி வாய்ப்பில் அய்.ஏ.எஸ். ஆனார்.

படித்தது கிராமப்புறப் பள்ளிகள்தான் என்றாலும் அங்கு அருமையான ஆசிரியர்கள் எனக்கு வாய்த்தார்கள். சிறுவயது முதலே வழியில் கிடைக்கும் செய்தி தாள்களின் துண்டுகளையெல்லாம் பொறுக்கிப் படிப்பேன். இதனால் என்னுடைய பட்டப் பெயரே பேப்பர் பொறுக்கிதான். வழக்கமாக, யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்கள் அதிகபட்சமாக நான்கு முறை முயற்சித்தும் வெல்ல முடியாமல் போனால், மன அழுத்ததில் பின்வாங்கிவிடுகிறார்கள்.

அதற்கு அவர் களுடைய குடும்பச் சூழலும் காரணமாக இருக்கலாம். ஆனால், நான் விடாமல் முயன்றதற்கு முக்கியக் காரணம் என்னுடைய அப்பாதான். அவர்தான் என்னுடைய முன்மாதிரி. ஏழ்மையில் வாடிய எங்கள் குடும்பத்தைத் தன்னுடைய கடின உழைப்பால் தூக்கி நிறுத்தினார் அவர் எனப் பெருமிதம் கொள்கிறார் தினேஷ்குமார்.

முயற்சிகளுக்கு இடையே செய்த பணிகள்

தன் 10 முயற்சிகளுக்கு இடையே தினேஷ்குமார் எழுதிய தேர்வில் 1999 டிசம்பரில் சரக்கு ரயில் பெட்டிகளின் கார்டு பணி கிடைத்துள்ளது இதில் இரு ஆண்டுகள் ஜோலார்பேட்டையில் பணியாற்றியுள் ளார். பிறகு, குரூப் டூவிலும் வென்று சென்னை தலைமை செயலகத்தின் சுற்றுலாத்துறையின் உதவி பிரிவு அலுவலராக 7 ஆண்டுகள் இருந்துள்ளார். பிறகு மீண்டும் ஒரு குரூப் டூ தேர்வு எழுதி வென்றவர் தமிழக அரசின் பதிவு அலுவலகத்தில் சார் பதிவா ளராகவும் பணியாற்றி உள்ளார்.

இதுவன்றி, மத்திய பாதுகாப்புப் படையின் யூபிஎஸ்சிக்கான தேர்வில் வென்று சி.ஆர்.பி.எப்பில் உதவி கமாண்டண்ட் பணி கிடைத்தது. ஆனால், அவர் இதில் சேரவில்லை. அய்ஏஎஸ் பதவி கிடைத்த வுடன் செய்த பணிகள் மெயின்புரியில் பயிற்சி இணை ஆட்சியர், ஆக்ரா மற்றும் லலித்பூரில் துணை ஆட்சியர் பணிகள், தற்போது சித்ரகுட் மாவட்டத்தில் முதன்மை வளர்ச்சி அதிகாரியாக உள்ளார்.

தமிழால் கிடைத்த பலன்

தமிழ்வழிக் கல்வி பயின்று வெளி உலகைச் சந்திக்கும் இளைஞர்களுக்கு ஆங்கிலத் திறன் குறை வாக இருப்பது உண்மைதான்.

அதற்காக ஆங்கிலத்தில் எழுதினால் தவறாகிவிடும் எனப் பயந்து யூ.பி.எஸ்.சி. எழுதாமல் இருக்கக் கூடாது. ஆங்கிலத்தில் படித்து அதைத் தமிழில் புரியும்படி எழுதினாலே வெற்றி நிச்சயம். நேர்முகத் தேர்வையும் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சந்திக்கலாம். மொழி வளமையைவிட நம்முடைய அறிவாற்றலுக்கும் புரிதலுக்கும்தான் அதில் கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். பல பாடப் பிரிவுகளுக்குத் தமிழில் உகந்த கலைச்சொற்கள் இல்லை.

அத்தகைய வார்த்தைகளை நாம் ஆங்கிலத் திலேயே எழுதலாம். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் குறிப்பிடும்போது அதன் ஆங்கில வார்த்தையை அடைப்புக்குறிகளுக்குள் எழுதினால் உகந்த மதிப்பெண் கிடைத்துவிடும். யூ.பி.எஸ்.சி. தேர்வைத் தமிழில் எழுதும் மாணவர்களைவிடப் பத்து மடங்கு அதிகமான எண்ணிக்கையில் வட மாநிலத்தவர்கள் இந்தியில் எழுதுகிறார்கள்.

வெற்றிக்குப் பிறகு வேலை செய்யும்போது ஆங்கிலம் சரளமாகப் பேசியாக வேண்டுமே என்றும் அஞ்சத் தேவை இல்லை. இதற்கான பக்குவமும் அறிவும் அனுபவத்தில் வளர்ந்துவிடும்.

தவறைத் தாமதமாக உணர்ந்தேன்!

ஒவ்வொரு முயற்சியிலும் செய்த தவறுகளைக் கண்டுபிடிக்கவே கிட்டத்தட்ட அய்ந்து ஆண்டுகள் பிடித்தன. நேர்முகத் தேர்வைச் சந்திப்பதிலும் பல சங்கடங்கள் ஏற்பட்டதைத் தாமதமாகத்தான் உணர்ந் தேன். கடைசி முயற்சிக்கு முன்னதாகச் சென்னையின் மனிதநேயப் பயிற்சி மய்யத்திலும் டெல்லி டைர க்ஷன்ஸ் மய்யத்திலும் எடுத்த பயிற்சி கைகொடுத்தது. தமிழுடன் சேர்த்துப் புவியியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன்.

அப்போதுதான் தெரிந்தது புவியியலுக்குத் தமிழில் அதிகமான பாடப் புத்தகங்கள் இல்லை என்பது. அதனால் புவியியலை ஆங்கிலத்தில் படிக்க வேண்டியதாயிற்று.

இதற்குச் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் வெளியிடப் பட்டிருந்த கலைச்சொல் அகராதிகள் உதவின. எனினும், அதில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னால் புதிய சொற்கள் சேர்க்கப்படாதது பெரும் குறையாக இருந்தது.

ஆங்கிலத்தில் படித்துத் தமிழில் குறிப்புகள் எடுத்தேன். இதனால் சற்றுக் கூடுதலான நேரம் செலவானது. அதிக முயற்சி எடுப்பவர்கள் மனஅழுத் தத்துக்கு ஆளாகாமல் தோல்வியைத் தள்ளி நின்று பார்த்து நிதானமாகச் செயல்பட வேண்டும்.

சிண்டிகேட் வங்கியில் அதிகாரி ஆகலாம்!

தற்போது பொதுத்துறை வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு அதிகாரி பணிக்கு இளம் பட்டதாரிகளைத் தேர்வுசெய்து வரு கின்றன.

வங்கிப் பணியில் சேரும் ஆர்வம் கொண்ட திறமையான இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களை வங்கியியல் சார்ந்த டிப்ளமா படிப்பை  படிக்க வைத்து அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர் களைத் தங்கள் வங்கியிலேயே பணியில் அமர்த்திக் கொள்கின்றன. அண்மையில்தான் இந்தியன் வங்கி இதுபோன்ற தேர்வுமுறைக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது பொதுத்துறை வங்கி யான சிண்டிகேட் வங்கியும் இத்தகைய தேர்வுமுறைக்கு அறிவிப்பு செய்திருக்கிறது.

முதுகலை டிப்ளமா படிப்பு

சிண்டிகேட் வங்கியானது மேற்குறிப்பிட்ட முறையில் வங்கி அதிகாரி பணியில் 400 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காகத் தேசிய அளவில் போட்டித்தேர்வு நடத்தப்படும்.

இதன் மூலம் தேர்வுசெய்யப்படும் பட்டதாரிகள் பெங்களூரு மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் என்ற கல்வி நிறுவனம் மற்றும் மங்களூர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள நிட்டில் எஜுகேஷன் இண்டர்நேஷனல் கல்வி நிறுவனத்திலும் வங்கியில் முதுகலை டிப்ளமா படிப்பில் சேர்க்கப்படுவர். இங்கு 9 மாதங்கள் படிக்க வேண்டும். அப்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும். படிப்புக் கட்டணம் ரூ.3.5 லட்சத்தைச் சிண்டிகேட் வங்கியே கல்விக்கடனாக அளித்துவிடும்.

படித்து முடித்தவுடன் அரசு வேலை

இந்த 9 மாதப் படிப்பை முடித்தவுடன் சிண்டிகேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் 3 மாதம் பயிற்சி  பெற வேண்டும். அப்போது மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததும் சிண்டிகேட் வங்கியில் அதிகாரியாகப் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை மாதாந்திர தவணையில் செலுத்திவிடலாம்.

படித்து முடித்த கையோடு உடனடியாக அரசு வேலைவாய்ப்பையும் வழங்க வகைசெய்யும் இந்த டிப்ளமா படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர் எனில் 55 சதவீத மதிப்பெண் போதும். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும்,

ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். உரிய கல்வித் தகுதியும் வயது தகுதியும் உடைய பட்டதாரிகள் சிண்டிகேட் வங்கியின் இணையதளத்தை (..) பயன்படுத்தி டிசம்பர் மாதம் 28ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

என்ன கேட்பார்கள்?

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் தேர்வு நடைபெறும். ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வில் ரீசனிங், கணிதம், ஆங்கிலம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் தலா 50 வினாக்கள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும்.

இதற்கு 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாகக் குழு விவாதம், நேர்முகத் தேர்வு நடத்தப் படும். இறுதியாக எழுத்துத் தேர்வு மதிப்பெண், குழுவிவாதம், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப் படையில் வங்கியியல் படிப்புக்குத் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். கூடுதல் விவரங்களைச் சிண்டிகேட் வங்கியின் இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிய போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம்
தடகள வீரர் ஹர்ஷவர்த்தன் உறுதி


‘ஆசிய விளையாட்டு போட்டியில், தங்கம் வெல்வதே லட்சியம’ என, மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்ற, பெரிய நாயக்கன்பாளையம் ஜி.கே.டி., மெட்ரிக் பள்ளி மாணவர் ஹர்ஷவர்த்தன் கூறினார்.

சமீபத்தில், இவர், சிறீவில்லிப்புத்துரில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில், முதலிடம் பெற்று, தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.

இவர், மாவட்ட மற்றும் டிவிஷன் அளவிலான உயரம் தாண்டுதல் போட்டி களில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார்.

இது குறித்து ஹர்ஷவர்த்தன் கூறியதாவது:

படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் ஈடுபட, வீட்டில் உள்ளவர்கள் ஊக்கப்படுத்தினர்.

குறிப்பாக, எனது தந்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளையாட்டுகளை பார்த்து, ‘இது போல நீயும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும்‘ என, உற்சாகமூட்டினார்.

தாண்டுதலில் எனக்கு உள்ள ஆர்வத்தை பார்த்து, அதில் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் குறித்து, எங்கள் பள்ளி உடற்கல்வி இயக்குனர் அருள்குமார் கற்றுக் கொடுத்தார்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தேசிய அள விலான உயரம் தாண்டுதல் போட்டி, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்தது. இதில், நான்காம் இடம் பெற்றேன்.இதை தொடர்ந்து, ‘பேட்டில் டெஸ்ட்’ என்ற போட்டியில் பங்கேற்று, இரண்டாம் இடம் பெற்றேன்.

இதனால் சென்னையில் நடந்த உயரம் தாண்டுதல், 10 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்க தகுதி பெற்றேன். அதில், பயிற்சியாளர் போஸ், உயரம் தாண்டுதல் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்து, பல பயிற்சிகளையும், யுக்திகளையும் கற்றுக் கொடுத்தார்.

தற்போது, தினமும் காலை, மாலை வேளையில் ஆறு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டி தெலுங்கானாவில் நடக்கிறது. அதில், பங்கேற்று தேசிய அளவில் முதலிடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இது தவிர, சர்வதேச அளவில் நடக்கும் ‘வோர்ல்டு ஸ்கூல் கேம்ஸ்’ போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற வேண்டும். எதிர்காலத்தில், 22 வயது நிறைவடைந்த பிறகு, ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங் கேற்று தங்கம் வெல்வதே என் லட்சியம்.

இவ்வாறு, அத்லட்டிக் வீரர் ஹர்ஷவர்த்தன் கூறினார்.

மாநில அளவிலான தடகளப் போட்டியில் சாதனை

தேசிய அளவில், பள்ளிகளுக்கான தடகள போட்டியில் பங்கேற்க, மாநில போட்டியில் சாதனை படைத்த மாணவர் மகாராஜா தேர்வு பெற்றுள்ளார்.

கடந்த வாரம் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் நடந்த மாநில பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டியில், மாநிலம் முழுவதும், 16 மண்டலங்களைச் சேர்ந்த, 14, 17, 19 வயது மாணவ, மாணவியர் பல்வேறு தடகள பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர். இதில், கோவை மண்டலம் சார்பில் பங்கேற்ற மகாராஜா - 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை பிரிவு நேரு ஸ்டேடியம் விளையாட்டு விடுதி-யில் தங்கி, சபர்பன் பள்ளியில், பிளஸ் 2 படித்து வரும் மாணவர் மகாராஜா நம்மிடம் பகிர்ந்து கொண்டது:

சாத்துரில் பிறந்த நான், அங்குள்ள நகராட்சி பள்ளியில், 10ஆவது வகுப்பு வரை படித்தேன். அப்போது பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை சாந்தி ஆகியோருடன், என் தந்தை முனியாண்டி, தாய் மூக்கம்மாள் ஆகியோரும் தடகள போட்டியில் பங்கேற்ற ஊக்குவித்தனர். அப்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு மாநில அளவில் தேர்வு போட்டி நடந்தது.

நான் அதில் பங்கேற்று போராடி தேர்வு பெற்றேன். அதன்பின், தடகளத்துக்கென கோவை நேரு ஸ்டேடிய விளையாட்டு விடுதியில், 2ஆவது ஆண் டாக தங்கி, பயிற்சியாளர் ஜெயச்சந்திரனிடம்
பயிற்சி எடுத்து, சபர்பன் பள்ளியில் படித்து வரு கிறேன்.

மண்டல விளையாட்டு மேலாளர் ராஜமகேந் திரனும், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி மாத்யூ வும் எனக்கு போதிய உதவிகளையும் செய்து வருகின்றனர்.

நான், இந்தாண்டு துவக்கத்திலிருந்தே பதக்கங் களை குவித்து வருகிறேன்.

குறிப்பாக, கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த ‘யூத் நேஷனல்’ போட்டியில் பங்கேற்று வெள்ளி யும்; கடலூரிலும், கிருஷ்ணகிரியிலும், நடந்த போட்டிகளிலும், தெலுங்கானாவில் நடந்த தேசிய போட்டியிலும் பங்கேற்று பதக்கம் பெற்றேன்.
தற்போது, பள்ளி மாவட்ட, மண்டல போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்று, கலசலிங்கம் பல்கலையில் நடந்த மாநில பள்ளிகள் போட்டியில் முதலிடம் பெற்றேன்.

மேலும், 110 மீ., தடைஓட்டத்தில் பழைய சாதனை 14.4 வினாடிகளாக இருந்தது. நான் தற்போது 14.2 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளேன்.

இதன்மூலம், டிச., 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மகாராஷ்டிரா புனேயில், இந்திய பள்ளிகள் விளை யாட்டு ஆணையம் சார்பில் நடக்கவுள்ள தேசிய தடகள போட்டியில் பங்கேற்கவுள்ளேன். அதில், நிச்சயம் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு நம்பிக்கை ஒளிரும் கண்களுடன் கூறினார் மகாராஜா.

வங்கியில் அதிகாரி ஆகலாம்:
படிப்புடன் வேலை

அய்.டி.பி.அய்., யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் திறமையான இளம் பட்டதாரிகளை தேர்வுசெய்கின்றன. அவர்களை தங்களது வங்கியிலேயே டிப்ளமா படிப்பு படிக்க வைத்து, வேலையும் வழங்குகின்றன. அந்த வரிசையில், தற்போது முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியும் இணைந்திருக்கிறது.

இந்தியன் வங்கி, அதிகாரி பணியில் 324 காலியிடங்களை மேற்சொன்ன முறையில் நிரப்ப உள்ளது. அதற்காக தகுதியான பட்டதாரிகளை தேர்வுசெய்து அவர்களை பெங்களூருவில் உள்ள இந்தியன் வங்கி மணிபால் வங்கியியல் பயிற்சி நிறுவனத்தில் வங்கியியல் மற்றும் நிதி சேவை தொடர்பான முதுகலை டிப்ளமா படிப்பை படிக்க வைக்கும். ஓராண்டு காலம் கொண்ட இந்த படிப்புக்கு ரூ.3.5 லட்சம் செலவாகும். இதில், விடுதி கட்டணம், உணவுக் கட்டணம், இதர கட்டணங்கள் என அனைத்து கட்டணங்களும் அடங்கிவிடும். படிப்புக் கட்டணம் ரூ.3.5 லட்சத்தை செலுத்த இந்தியன் வங்கியே கல்விக் கடன் வழங்கும். படித்து முடித்து பணியில் சேர்ந்ததும் இந்த கடனை 7 ஆண்டுகளில் மாதாந்திர தவணையாக செலுத்திவிடலாம்.

படித்து முடித்தவுடன் வேலை உத்தரவாதத்துடன் கூடிய இந்த டிப்ளமா படிப்பில் சேரப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர் எனில் 55 சதவீத மதிப்பெண் போதும். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு விதிகள்:  எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முதல்நிலை, மெயின் என இரண்டு தேர்வுகள் இருக்கும். இரு தேர்வுகளுமே ஆன்லைனில்தான் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.

மதிப்பெண் 100. ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். மெயின் தேர்வைப் பொருத்தமட்டில், ரீசனிங், ஆங்கிலம், கணிதம், வங்கித்துறை தொடர்புடைய பொது அறிவு, கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.

மெயின் தேர்வில் ஆங்கிலத்தில் விரிவாக பதிலளிக்கும் தேர்வும்  உண்டு. கடிதம், கட்டுரை எழுதுதலில் இருந்து 2 கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண் 50. அரை மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், சிறுபான்மையினர் (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர்) மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு இலவசப் பயிற்சி அளிக்க இந்தியன் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ஜனவரி 12 முதல் 19ஆம் வரை ஒரு வார காலம் நடத்தப்படும்.

கூடுதல் விவரங்களை (www.indianbank.co.in)    இணையதளத்தில் விளக் கமாகத் தெரிந்துகொள்ளலாம்.  ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் - டிசம்பர் 22,  இலவச பயிற்சிக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் - ஜனவரி 5,  முதல்நிலைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் - ஜனவரி 11 ,  ஆன்லைன் வழி முதல்நிலைத் தேர்வு நாள் - ஜனவரி 22

முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியாகும் நாள் - ஜனவரி 30

மெயின் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் - பிப்ரவரி 16

ஆன்லைன்வழி மெயின் தேர்வு - பிப்ரவரி 28

Banner
Banner