
23ஆவது ஒலிம்பிக் போட்டி 1984இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது. இந்த நகரில் நடைபெற்ற 2-வது ஒலிம்பிக் போட்டி இது. இதற்கு முன்பு, 1932ஆம் ஆண்டிலும் லாஸ் ஏஞ்சலீஸில் ஒலிம்பிக் நடைபெற்றது. அப்போது செலவுக்கு ஏற்ப வருவாய் கிடைக்கவில்லை. எனவே இந்த ஒலிம்பிக்கில் ஏற்கெனவே இருந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி செலவு குறைக்கப்பட்டது.
இதனால் முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்த ஒலிம்பிக்கில் வருவாய் அதிகம் கிடைத்தது. ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற அமெரிக்காவின் கார்ல் லீவிஸ் 100 மீட்டர், 200 மீட்டர், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மொராக்கோ வீராங்கனை நவால் இல் மௌதாவாகெல் 400மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது இதுவே முதல்முறை. போர்ச்சுகல் வீரர் கார்லோஸ் லூப்ஸ் மாரத்தான் ஓட்டத்தில் புதிய சாதனையைப் பதிவு செய்து, ஒலிம்பிக் வரலாற்றில் தனது நாட்டுக்கு முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். 2 மணி நேரம் 9 நிமிடம் 21 விநாடிகளில் அவர் பந்தய தூரத்தைக் கடந்தார். இது 24 ஆண்டுகளுக்குப் பின்னரே முறியடிக்கப்பட்டது.
மகளிருக்கான மாரத்தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியை நடத்திய அமெரிக்கா 83 தங்கப் பதக்கத்துடன் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. மொத்தம் 140 நாடுகளைச் சேர்ந்த 6,829 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 23 விளையாட்டுகளில் 221 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.