
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ரேஸர் ஒருவர், ரேஸ் பைக்குகளுக்கான எந்த பிரத்யேக மாற்றங்களும் செய்யப்படாத 1000 சிசி பைக்கை 321 கிமீ வேகத்தில் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெல்லாஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் லெஸ்லி போர்ட்டர்பீல்டு. இவர் பிரபலமான பெண் பைக் ரேஸர் என்பதோடு பல உலக சாதனைகளுக்கும் சொந்தக்காரர். கடந்த 2008ஆம் ஆண்டு போனிவில்லே என்ற இடத்தில், சுஸுகி ஹயபூஸா பைக்கை மணிக்கு 376 கிமீ அனாயாசமாக ஓட்டி, அதிவேகமாக பைக் ஓட்டிய முதல் பெண் என்ற பெருமையுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில், மீண்டும் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார் லெஸ்லி போர்ட்டர்பீல்டு. இவர் அங்குள்ள போனிவில்லே சால்ட் பிளாட்ஸ் என்ற இடத்தில், 1,000 சிசி திறன் கெண்ட ஹோண்டா ஃபையர்பிளேடு பைக்கை மணிக்கு 321 கிமீ வேகத்தில் ஓட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
ரேஸ் ஓட்டுவதற்காக எந்த மாற்றங்களும் செய்யப்படாத அந்த பைக்கில் துணிச்சலாக மணிக்கு 321 கிமீ வேகத்தில் ஓட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும், ஏற்கனவே, இதே ரகத்தை சேர்ந்த பைக்கில் அவர் படைத்திருந்த உலக சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.