எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கஷ்டமான துறைகள் என்றாலும், விரல் விட்டு எண்ணும் அளவிற்கு பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் தெய்வா ஸ்டான்லி. சுற்றுச்சுழல் தாக்கம் பற்றியும், காடுகளை ஆராய்ச்சி செய் வதும் தான் இவரது முக்கியப்பணி. இந்தியா மட்டுமல்ல, உலகத்திலுள்ள காடுகளில் இவர் கால் தடம் படாத காடுகளே இல்லை என்று சொல்லலாம். பெண்களுக்கு சிறிதும் தொடர்பு இல்லாத இந்தத்துறைக்கு வந்தது எப்படி? புத்துணர்ச்சி பொங்க பேச ஆரம்பிக்கிறார் தெய்வா: அப்பா ஸ்டான்லி, உடற்கல்வி ஆசிரியர். அம்மா அமலா, தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் பணிபுரிந்தவர். ஆனால் இருவரும் இப்போது இல்லை. ஒரு தங்கை, ஒரு தம்பி. இதுதான் என் குடும்பம். தூத்துக்குடியில் கல்லூரியில் படிக்கும் போது தாவரவியலில் இளங்கலைப் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் தாவரவியலில் முதுகலை படிப்பை முடித்தேன். பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.பில் படிப்பை நிறைவு செய்தேன். பின்னர் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் ஆண்கள் கல்லூரி யில் கடல் உயிரியல் பாடத்தில் முனைவர் படிப்பு படித்த போது நாலாயிரம் ஆண்கள் மத்தியில் நான் ஒரே பெண்ணாக 5 ஆண்டு காலம் படித்தது, பிற பெண்களுக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு புதுமையான அனுபவம். சிறு வயதிலிருந்தே வனம் மற்றும் கடல் பற்றிய விவரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அது தொடர்பான படிப்பு தான் என்னுடைய மேல்நிலைக்கல்வி அனைத்துமே. அதனைத் தொடர்ந்து வனம் மற்றும் கடல் தொடர்பான ஆராய்ச்சியில் என்னுடைய பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகிறேன்.

காடுகளில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

கடலோரம் மற்றும் கடல் வளங்கள், சதுப்பு நிலங்களை ஆராய்ச்சி செய்வதே என்னுடைய முக்கியமான பணி. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காடுகளில் அய்ந்து ஆண்டு களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து சதுப்பு நிலக் காடுகளின் நன்மைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டேன். சதுப்பு நிலங்களில் என்னுடைய வேலை விவரிக்க முடியாத அளவு கடினமாகவே இருந்தது. காட்டுக்குள் செல்லும் போது தேவையான உணவு, தண்ணீரை எப்போதும் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் அவை சீக்கிரமே தீர்ந்துவிடும். நடக்கும் போது அதிக பசி ஏற்படுவதால் உணவும் இருக்காது. குடிக்க தண்ணீர் இல்லாமல் கலங்கின தண்ணீரை கைக்குட்டையில் வடிகட்டிக் குடித்த நாட் களும் உண்டு. குறுக்கும் நெடுக்குமான கால்வாய்களில் நீந்தியும் பல மைல்கள் நடந்தும் போயிருக்கிறேன். இரவு நேரத்தில் காடுகளில் பயணிப்பது ஒன்றும் சாதாரண செயலில்லை. அதற்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் அதிகாரிகளிடம் மாட்டினால் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இரவு நேரத்தில் காடுகளில் தங்கும் போது என் நண்பர்களை அழைத்துச் சென்று கூடாரம் அடித்து தங்குவேன். அப்போது பூச்சிகள் கடித்துவிடும். காட்டு எருமைகளும், குள்ள நரிகளும் கூடாரம் அருகே வந்து கூச்சல் போடும். நம் பயணத்தில் திட்டமிடலுக்கு அப்பாற்பட்டு ஒரு ஏரியோ, ஆற்றையோ கடந்து செல்ல வேண்டியதிருக்கும். அந்தமாதிரி சமயத்தில் பல கி.மீ தூரத்திற்கு நீந்தியும், தண்ணீரில் நடந்தும் செல்ல வேண்டும். இன்னும் பூச்சிக்கடி, உடல்நலத்தில் மாற்றம், வழிதவறி செல்லுதல், சிக்கலான நிலப்பரப்புகள் என்று எத்தனையோ சவால்களும், ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. ஆனால் நான் இம்மாதிரி கடினமான சூழலை ரசித்து வாழ்கிறேன். அந்த ஆர்வம்தான் ஒவ்வொரு காட்டுப் பயணத்தின் முடிவிலும் ஒரு வெற்றியைத் தருகின்றது. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

கடல் மற்றும் வன ஆராய்ச்சியில் கற்றுக் கொண்ட விஷயம் ?

உலகளவில் மாங்குரோவ் காடுகள் (சுரபுன்னை) சுற்றுச்சுழல் பாதுகாவலனாக விளங்குகின்றது. இக்காடுகள் மீன் வளம் உள்ளிட்ட பல்லுயிர் இனப்பெருக்க தொட்டி லாகவும், பறவைகள், ஊர்வன பாலூட்டிகள் போன்ற அனைத்து உயிரினங்களின் தங்கு மிடமாகவும் கடல் அரிப்பை தவிர்க்கும் கேடய மாகவும் உள்ளது. மேலும் உலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங் களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக் குவரத்துக்கும் கடல் பயன்படுகிறது. மீன்பிடித் தல், துறைமுகப் பணிகள், கப்பல் பணிகள், கடல் தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம். தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு கடல் வளத்தையும் பாதித்து வருகிறது. உலகின் கடல் பறவைகளில் தொண்ணூறு சதவீதமானவற்றின் வயிற்றுக் குள் சிறிதளவிலாவது பிளாஸ்டிக் இருப்ப தாகவும், பென்குயின் உட்பட அறுபது சதவீத கடல் பறவைகளின் குடலில் பிளாஸ்டிக் இருப் பதாகவும், சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு எட்டு மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் கடல்களில் கொட்டப்படு கின்றன. இவை ரகசியமாக எல்லைவிட்டு எல்லை தாண்டியும் நடக்கின்றன, இவற்றைக் கட்டுப் படுத்த அனைத்து உலக நாடுகளும் முன்வரவேண்டும்.  இந்தத் துறையில் பெண் களின் பங்களிப்பு அதிகம் கிடையாது. சுய பாது காப்பு, உடல் ஒத்துழைப்பு, குடும்பத்தி னரின் சம்மதம், கஷ்டமான பயணம், வித்தியாசமான களப் பணி போன்றவைகளை அவர்கள் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் வெளி நாட்டுப் பெண்கள் கடல் மற்றும் காட்டு ஆராய்ச்சியில் தனி முத்திரை பதித்து வருகி றார்கள். அவர் களைப் பற்றி தனி ஆவணப் படமே உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner