எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தனக்கு ஒதுக்கப்பட்ட பணியுடன் மட்டும் நின்றுவிடாமல் அழிந்துவரும் நாட்டுப்புறக் கலை களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பெரும்பணியையும் சேர்த்தே செய்துவருகிறார் இசை ஆசிரியை ம. அமல புஷ்பம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிவரும் அமல புஷ்பத்தைத் தந்தை வழியாகவே  இசை வந்தடைந்தது. இவரது பூர்விகம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கம்மாப்பட்டி. தந்தை மரியசூசை, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் தச்சுத் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். அவர் அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் பாடல் பாடுவார். வீட்டில் இருக்கும்போது, நாட்டுப் புறப் பாடல்களை  எளிமையான வரிகளுடன் பாடுவார். அதுவே அமல புஷ்பத்துக்கு முதல் உந்துதலாக அமைந்தது.

அம்பாசமுத்திரம் ஏவிஆர்எம்வி பள்ளியில் படித்தபோது பாட்டுப் போட்டி என்றதுமே முதல் ஆளாகப் பெயரைப் பதிந்து போட்டியிடுவதோடு, வெற்றியும் பெற்றிருக்கிறார். இவரது இசை ஆர்வத்தைக் கவனித்த தலைமை ஆசிரியை ருக்மணி சாந்தா, இசை ஆசிரியர் சோமசுந்தரத்திடம் முறைப்படி இசையைக் கற்கும்படி சொன்னார்.

ஆசிரியர் சோமசுந்தரத்துக்கு எங்கள் வீட்டின் ஏழ்மை நிலை தெரியும். அதனால வட்டாட்சியர், எல்அய்சி அதிகாரிகள் வீடுகளுக்குப் பாட்டு கற்றுத்தரப் போகும்போது என்னையும் அங்கே வரச் சொல்லி இசைப் பயிற்சியளிப்பார் என்று சொல்லித் தனது பள்ளிப் பருவ நினைவுகளில் மூழ்கினார் அமல புஷ்பம்.

தற்போது தான் பணியாற்றிவரும் பள்ளியில் மாணவிகளுக்கு கருநாடக இசையைக் கற்றுத்தருவ தோடு ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி, களியல், கோலாட்டம் எனப் பல்வேறு கலைகளையும் கற்றுத்தருகிறார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த  விழாவில் கோவில்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பாடல்களுக்கு இவரது வழி காட்டலில் நடனமாடியது, அனைவரையும் கவர்ந் தது. ஆசிரியை அமல புஷ்பத்தை அழைத்து மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். விழிப் புணர்வுப் பாடல்களையும் அமல புஷ்பமே எழுதி யிருக்கிறார். கருநாடக சங்கீதத்தைக் கற்றவரின் கவனம் நாட்டுப்புறப் பாடல்கள் பக்கம் திரும்பியது குறித்துக் கேட்டோம்.

நான் படித்து முடித்து கிராம சமுதாய முன் னேற்றப் பணித் திட்டத்தில் பணியாற்றினேன். அப்போது கிராமங்களில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளைச் செய்ததோடு அதன் ஒரு பகுதியாகக் கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினோம். எனக்குப் பன்முகத் தன்மை வேண்டும் என்பதற்காக, அப்போது இளையரசனேந்தல் பங்குத் தந்தையாக இருந்த ஞானப்பிரகாசம் எனக்கு நாட்டுப்புறப் பாடல்களை நயத்துடன் பாடப் பயிற்சி அளித்தார் என்று சொல்லும் அமல புஷ்பம், ஞானபிரகாசமும் தனக்கு இன்னொரு  குரு என்கிறார்.

அவரிடம் பயின்றதுதான் பாடல்கள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியதாகக் குறிப்பிடுகிறார். 2009இல்  “ஆச இருக்குதய்யா” என்ற நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டையும் 2012இல் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டையும் வெளியிட்டார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் இவர் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியதால் சென் னையில் பல பெரிய மேடைகளில் பாட வாய்ப்புக் கிடைத்தது. அதன்மூலம் மன்னாரு திரைப்படத்தில் பாடினார். பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், வென்று வருவான் ஆகிய படங்களிலும் பாடினார்.

இசைதான் வாழ்க்கை என முடிவாகிவிட்டது. அதைப் பயனுள்ளதாக  மாற்றத்தான் விழிப்புணர்வுப் பாடல்களை நானே எழுதிப் பாடுகிறேன். இயற் கையோடு இணைந்த வாழ்க்கை, நெகிழி ஒழிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பெண்ணுரிமை எனப் பல்வேறு கருத்துகளில் விழிப்புணர்வுப் பாடல்களை எழுதிப் பாடியுள்ளேன். அதையே என் மாணவி களுக்கும் கற்றுத்தருகிறேன். இதில் முயற்சி மட்டும் தான் என்னுடையது. மாணவிகளின் ஆர்வம்தான் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கிறது என்கிறார் அமல புஷ்பம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner