எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வழி நெடிலும் குப்பைக் குவியல்கள். அருகிலே அழிந்து கொண்டிருக்கும் அழகிய ஏரி. உள்ளே நுழைய முடியாத அளவிற்கு துர்நாற்றம்... அவ் விடத்தில் மக்காத குப்பைகளைத் தேடி எடுத்துக் கொண்டிருந்த மனிதர்கள்... தங்கள் வாழ் வாதாரத்தை அதிலே தேடி கொண்டிருந்தார்கள்..! நாங்கள் சென்றது பெருங்குடி குப்பை கிடங்கு. சென்னை சமூகப்பணி கல்லூரியின் முதுகலை சமூகப்பணி முதலாமாண்டு மாணவர்களாகிய நாங்கள் எங்கள் களப்பணிக்கு “குப்பை சேகரிப்பவர்களைத்” தேர்ந்தெடுத்தோம்.

அந்த குப்பைக் கிடங்கில் சிறிது நேரம் நின்று அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்களுக்கு கடினமான இருந்தது. ஆனால், காலம் முழுவதும் அங்கே வேலை செய்யும் அவர்களும் மனிதர்கள் தானே என உணர்ந்தோம். அங்கே சில மணி நேரங்கள் இருந்து அவர்களிடம் நாங்க தெரிந்து கொள்ள நினைத்ததைக் கேட்டறிந்தோம். குப்பை யைக் கொட்டி செல்லும் லாரிகளின் புழுதியின் இடையில் குப்பை சேகரிக்கும் பணியோடு சேர்ந்து எங்கள் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்..!

குப்பைக் கிடங்கில் மக்காத குப்பைகளைச் சேகரித்து, அதை பழைய இரும்பு கடையில் போட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்தும் இவர்களில் பலர், ஒரு காலத்தில் அருகிலிருக்கும் ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி கொண்டிருந்தவர்கள். குப்பை கிடங்கு வந்ததும், ஏரி மாசுபடிந்து மோசமான நிலைக்கு சென்றது. ‘  ‘ கலாச்சாரத்தால் குப்பை கிடங்கு பெருத்தது. ஏரி சுருங்கியது. மீன்பிடி தொழில் முடங்கியது. அதனால், மீன் தேடுவதை விடுத்து குப்பையைத் தேடும் நிலைமைக்கு தள்ளப் பட்டார்கள்.

இங்கு வேலை செய்பவர்கள் பல இன்னல் களுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக நோய்கள், மயக்கம், விபத்துகள், போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் இங்கு கொட்டப்படும் குப்பையின் நிலைமை. நாம் குப்பையில் போடும் உணவு மீதிகள்... பிளாஸ்டிக் பொருட்கள்.

உபயோகப்படுத்திய மருந்து குப்பிகள், ஊசிகள்... சானிட்டரி நாப்கின்கள் என அனைத்தும் அங்கு கலந்து தான் கொட்டி கிடக்கும் இதில் வேலை செய்பவர்களுக்கு எத்துனை பாதிப்புகள் ஏற்படும் என நமக்கு புரியும்.

இதற்கு நாம் என்ன செய்யமுடியும்? என கேள்வி எழும். ‘நாம்‘ நினைத்தால் மாற்றம் கொண்டு வரலாம். நாம் என்பது இங்கு பொதுமக்களை, அரசாங்கத்தை, மாநகராட்சியைக் குறிக்கிறது. பொதுமக்களுக்கும், குப்பை சேகரிப்பவர்களுக்கும் பாதிக்காத இடமாக குப்பை கிடங்கை மாற்றவும், மக்காத பொருட்களின் உற்பத்தி மற்றும் உபயோகத்தைக் குறைக்கவும், ‘நாம்‘ நினைத்தால் முடியும். தெருக்கள். வீடுகள். பொது இடங்கள். அலுவலகங்கள்... என அனைத்து இடங்களிலும் மக்கும் குப்பைக்கென ஒரு குப்பைத் தொட்டியும் மக்காத குப்பைக்கென ஒரு குப்பைத் தொட்டியும் வைத்து அதை மக்கள் சரியாக பயன்படுத்தினால் பாதி பிரச்சினை தீரும்.

மேலும், இந்த குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து எடுத்து செல்ல தனித்தனி லாரிகளை மாநகராட்சிக்கு அரசு அமைத்துத் தர வேண்டும். அப்படி எடுத்து செல்லும் மக்கும் குப்பைகளை ஒரு இடத்தில் கொட்டி அதை உரமாக்கலாம். மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து புது பிளாஸ்டிக் உற்பத்தியைத் தடுக்கலாம். மறுசுழற்சி செய்யும் இடத்திலும், உரம் தயாரிக்கும் இடத்திலும் குப்பை சேகரிப்பவர்களை சென்னை மாநகராட்சிக்கு கீழ் பணியமர்த்தலாம். இதனால், அவர்கள் வாழ்வும் மேம்படும்! குப்பைக் குவியலும் குறையும்! இயற்கையும் காக்கப்படும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner