எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சொந்தமாகக் கார் வாங்கி ஓட்ட யாருக்குத்தான் ஆசை இருக்காது? அதுவும் படித்த, வேலை பார்க்கும் இளம் பெண்களுக்கு கார் வாங்கி ஓட்ட வேண்டும் என்ற விருப்பம் இருக்கத்தானே செய்யும். தவிர, கார் வாழ்க்கையின் அத்தியாவசியமாக எப்போதோ ஆகிவிட்டது. அப்படி கார் ஓட்ட விருப்பம் கொண்ட ஜிலு மோள் மரியேட் தாமஸ் பயிற்சிக்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் வாங்க தொடுபுழாவில் இருக்கும் “கேரள சாலை போக்கு வரத்து’ அலுவலகத்தை 2014-இல் அணுகியபோது “நீங்கள் கார் ஓட்ட உரிமம் வழங்க முடியாது’’ என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

காரணம் ஜிலு மோளுக்கு கைகள் இரண்டும் இல்லாததுதான். ஆம்...பிறவியிலேயே ஜிலு மோளுக்கு இரண்டு கைகளும் இல்லை. தன் இரண்டு கால்களை கரங்களாக்கி தனது கேள்விக் குறியான எதிர்காலத்தை மாற்றி அமைத்திருக்கிறார் ஜிலு மோள். இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை:

“பிறவியில் இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தாலும் அந்த இல்லாமையைப் புரிந்து கொண்டது கொஞ்சம் விவரம் தெரிந்த போதுதான். சக வயது பிள்ளைகளுக்கு இருப்பது என்னிடத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அந்த இல்லாமையை எப்படி வெல்வது என்பதில் பெற்றோர் உதவினார்கள். எல்லாரும் படிப்பது மாதிரி நானும் வழக்கமான பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். வலது காலைக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு வேலையையும் கால்களால் நானே செய்யக் கற்றுக் கொண்டேன். காலால் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. கால்களால் காமிராவைப் பிடித்து படம் பிடிப்பேன். எனக்கு ஓவியம் வரைய பிடிக்கும் என்பதால், பட்டப்படிப்பில் அனிமேஷன் , கிராபிக் டிசைன் படித்தேன். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களையும் பெற்றுள்ளேன். கணினியைக்கூட கால்களால் இயக்குவேன். கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக் டிசைனராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு இருபத்தேழு வயதாகிறது. தனியாகத்தான் பயணம் செய்து வருகிறேன்.

எனக்கும் கார் ஓட்ட விருப்பம் வந்தது. “நான் கார் ஓட்டப் பழக வேண்டும்‘’ என்று சொன்ன போது, சும்மா விளையாட்டுக்குச் சொல்கிறேன் என்று பலரும் நினைத்தார்கள். ஓட்டுநர் உரிமம் வழங்கும் அலுவலகத்தில், “உன்னைப் போல் வேறு யாருக்காவது கார் ஓட்டும் உரிமம் தரப்பட்டிருந்தால் அந்த விவரத்தைச் சான்றுடன் எங்களுக்குத் தெரிவித்தால்.. நாங்கள் உரிமம் தர முயலுகிறோம்” என்றார்கள். இந்தியாவில் என்னைப் போல இரண்டு கைகள் இல்லாத யாருக்காவது கார் ஓட்டும் உரிமம் வழங்கியுள்ளார்களா என்று வலைதளத்தில் தேடினேன். இந்தோர் நகரில் விக்ரம் அக்னிஹோத்ரி என்பவர் கால்களால் கார் ஓட்டுகிறார் என்பதை அறிந்தேன். வலைத்தளம் மூலம், அவரைத் தொடர்பு கொண்டேன்.

ஆனால் அவரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. செயற்கைக் கைகளைப் பொருத்திக் கொண்டு கார் ஓட்டலாம் என்று பலர் யோசனை சொன்னார்கள். அதற்கு செலவும் அதிகமாகும். செயற்கைக் கைகளை இயக்கவும் முறையான பயிற்சி பெற காலம் அதிகம் பிடிக்கும் என்பதால் அந்த யோசனையைக் கைவிட்டேன்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் குமுளியில் ஒரு பள்ளியில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போது அந்தப் பள்ளியின் இயக்குநர், “உனது நிறைவேறாத விருப்பம் என்று ஏதாவது உண்டா’’ என்று கேட்டார். நான் சட்டென்று “ கார் ஓட்டணும்‘’ என்றேன்.

உடனே உள்ளூர் அரிமா சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்ல.. அவர்கள் தேவையான நடவடிக்கை எடுத்தார்கள். காரையும் அன்பளிப்பு செய்தார்கள். ஆனால் கார் ஓட்ட உரிமம் வேண்டுமே...

எனது சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. என்னைப் போன்றவர்கள் கார் ஓட்ட சட்டத்தில் இடம் இல்லை. ஆனால், நான் கார் ஓட்டுவதையும், காலால் படம் வரைவதையும் நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி “ஜிலு மோள் சாதாரண பெண் இல்லை.. பலதரப்பட்ட திறமைகள் ஜிலு மோளிடம் உண்டு’’ என்பதை விளக்கினார்கள்.

ஆனால் கேரள அரசு தரப்பு வழக்குரைஞர் “சாலையில் இதர பயணிகளின் பாதுகாப்பைக் கணக்கில் எடுத்து ஜிலு மோளுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்கக் கூடாது’’ என்று வாதம் செய்தார்.

பல சுற்று வாதத்திற்குப் பிறகு, ஜிலு கார் ஓட்ட தேவையான மாற்றங்களை காரில் செய்தால் உரிமம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று இறங்கி வந்தார்கள்.

“நாங்களும் தேவையான மாற்றங்களை காரில் செய்து கொள்வதாக உறுதி அளித்ததுடன், என்னைப் போல மாற்றுத்திறனாளி பிச்சு எருமேலி என்பவருக்கு வழங்கப்பட்ட உரிமத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அதன் பிறகு எனக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

“நான் ஆட்டோமேட்டிக் காரை கால்களால் ஓட்டிப் பார்த்திருக் கிறேன். ஸ்டீரிங்கை கால்களால் இயக்குவது சிரமமாகத் தெரியவில்லை. உரிமம் இல்லாததால் காரை சாலையில் ஓட்டவில்லை. எனக்காக பிரத்யேகமாக மாற்றம் செய்யப்படும் கார் தயாரானதும் சாலைகளில் கார் ஓட்ட ஆரம்பிப்பேன். எனது நீண்ட நாள் கனவும் நனவாகும்‘’ என்கிறார் ஜிலு மோள்.

உரிமம் கிடைத்தால், கைகள் இல்லாமல் கார் ஓட்டும் முதல் இந்திய பெண் ஜிலு மோள் என்ற பெருமையைப் பெறுவார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner