எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இரண்டு வயதில் பார்வையை இழந்தபோதும், மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து போராடி, கல்வி என்னும் ஆயுதம் ஏந்தி,  இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஆட்சியர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் கருநாடகாவைச் சேர்ந்த பிரஞ்ஜால் பட்டீல்.

விழித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளர் பெண்ணான பிரஞ்ஜால் பட்டீல்  கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆட்சியர் அலுவலகத்தில்  பயிற்சி ஆட்சியராக ஜூலை மாதம் பொறுப்பேற்றிருக்கிறார். ஊக்கமும் தைரியமும் கொடுத்து, தன்னை வாழ்க் கையில் உயர்த்திய தன்  தாயை கவுரவப்படுத்த விரும்பிய பிரஞ்ஜால் பட்டீல், தன் தாய் தன்னை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர வைக்க வேண்டுமென  விரும்பியதற்கிணங்க, உயர் அதிகாரிகள் அனுமதியோடு அவரின் தாய் ஜோதி, மகளை  இருக்கையில் அமர வைத்த நெகிழ்வான  தருணமும் கேரள மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பட்டீல்-ஜோதி இணையருக்குப் பிறந்த ஒரே மகள் பிரஞ்ஜால் பட்டீல். இவருக்கு இரண்டு வயதாக  இருந்தபோது, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அதன் காரணமாய் கண் பார்வை பறிபோனது. வெளி உலகைக் காணும் திறனை முற்றிலும்  இழந்தபோதும், நம்பிக்கையை இழக்காத பிரஞ்ஜாலுக்கு, அகக்கண் மூலமாக உலகைப் பார்க்கும் தைரியத்தை கொடுத்தனர் பிரஞ்ஜாலின்  பெற்றோர். படிப்பில் தீராத தாகம் கொண்டிருந்த அவர், பெற்றோர் தந்த ஊக்கத்தால், தொடுதிரை உதவியோடு பள்ளிப் படிப்பைத்  தொடர்ந்தார். தொடர்ந்து மும்பைக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தவர், டில்லியில் உள்ள சர்வதேசக் கல்லூரியில் எம்.ஃபில்.   மற்றும்  பி.எச்டி. பட்டங்களையும் வென்றார்.

சிறு வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரஞ்ஜால் பட்டீல் வளர்ந்திருக்கிறார். அதன் காரணமாக  ஆட்சியராக வேண்டும் என்று முடிவெடுத்தவர், கடந்த 2014இல் தனது ஆட்சியர் கனவை நிறைவேற்றிக்கொள்ள அய்.ஏ.எஸ். தேர்வினை  எழுதி இருக்கிறார். தேர்வின் முடிவில் அவருக்கு 773ஆவது இடம் கிடைக்கவே, அவரின் ஆட்சியர் கனவிற்கு தற்காலிகத் தடை  ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் ரயில்வேத் துறையில் தேர்வாகி, கணக்குப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தன்னால் ஆட்சியர் ஆக  முடியவில்லையே என்ற எண்ணம் மனதிற்குள் இருந்துகொண்டே இருந் திருக்கிறது. தனது லட்சியத்தை அணைய விடாமல் பார்த்துக்கொண்ட அவர், 2017இல் மீண்டும் அய்.ஏ.எஸ். தேர்வை எழுதினார். இந்த முறை அவருக்கு 124ஆவது இடம் கிடைத் துள்ளது. தேர்வில் வென்று,  தனது ஆட்சியர் கனவை நிறைவேற்றிக் கொண்ட பிரஞ்ஜால், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த  மாதம் பயிற்சிக்  ஆட்சியராக பொறுப்பேற்று தான் கண்ட  கனவை நிஜமாக்கியிருக்கிறார்.

ஆட்சியர் பொறுப்பை ஏற்றதும் பத்திரிகையாளர் களைச் சந்தித்த பிரஞ்ஜால், சிறுவயது முதலே எனது கனவு அய்.ஏ.எஸ். ஆக வேண்டும்  என்பதே. பார்வை இழந்த காரணத்திற்காக என் கனவை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை. என் கனவுக்காக கடுமையாக  உழைத்தேன். இதோ, இப்போது என் கனவு நனவாகி விட்டது. என் லட்சியம் வென்றது என பெருமையுடன் தெரிவித்தார். மேலும்,  உடல்  குறைகளைப் பற்றி நாம் கவலைப் பட்டுக் கொண்டே இருந்தால், வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. கண் பார்வை பறிபோனாலும்,  அதை நினைத்து நான் ஒருபோதும் வருந்தியது இல்லை. வாழ்வில் வெற்றி பெற நிறைய வழிகள் உள்ளன. நமக்கு என்ன தேவையோ  அதற்காக மட்டுமே அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெற்றி என்பது நம் கைகளில் என்கிறார் இவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner