எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

கேரளத்தில் பிறந்த எலன் மேரி, சிறு வயதிலேயே வீதியில் ஆக்கி விளையாடத் தொடங்கிவிட்டார். பெரும்பாலும் சிறுவர்களுடன் சேர்ந்துதான் ஆக்கி விளையாடினார். ஆக்கி மீதான விருப்பமும் ஈர்ப்பும் அதைத் தொடர்ந்த கடின உழைப்பும் விரைவாகவே அவரைச் சிறந்த வீராங்கனையாக அடையாளம் காட்டியது.

கேரளத்தில் பிறந்திருந்தாலும், எலனின் ஆக்கி வாழ்க்கை பெங்களூருவில்தான் தொடங்கியது. விரைவில் அவருக்கு கருநாடக ஆக்கி அணியில் இடம் கிடைத்தது. அவரது உயரமும் பந்தைத் தடுக்கும் லாவகமும் தேசிய ஆக்கி தேர்வாளர் களைக் கவர்ந்தன. 15 வயதிலேயே இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். மிக இளம் வயதில் தேசிய அணியில் இடம்பிடித்த வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

முதல் தொடர்

தேசிய அணியில் இடம் கிடைத்தாலும், ஆடும் குழுவில் சேர்த்துக்கொள்ளப்படாமல் புதுமுக ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் பெஞ்சில் அமர வைக்கப்படுவார்கள். அதுவும் இளையோர் என்றால் ஆடும் வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான். எலனுக்கு இது போன்ற இடர்பாடுகள் எதுவும் ஏற்படவில்லை. 1992இல் இந்திய மகளிர் ஆக்கி அணி ஜெர்மனிக்குச் சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

அந்தத் தொடரிலேயே இந்திய அணியின் கோல் கீப்பராக ஹெலன் மேரி அறிமுகமானார். எப்போதும் ஆக்கி அணிக்கு இரண்டு கோல் கீப்பர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். பெரும்பாலும் எல்லாத் தொடர்களிலும் இரண்டு கீப்பர்களில் ஒருவராக எலன் மேரியும் இடம்பிடித்துவந்தார்.

1992 முதல் அவர் ஆக்கி விளையாடிவந்தாலும், 2002இல் தான் எலன் மேரிக்கு முதல் சர்வதேசப் பதக்கம் கிடைத்தது. தென் ஆப்பிரிக்காவில் நடை பெற்ற வாகையர் பட்ட சேலஞ்ச் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அதுவே அவரது முதல் சர்வதேசப் பதக்கம்.

தடுப்பால் கிடைத்த தங்கம்

அதே ஆண்டில், மான்செஸ்டரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாகத் தங்கப் பதக்கம் வென்று, மற்றுமொரு முக்கியமான சாதனையை இந்திய மகளிர் ஆக்கி அணி படைத்தது.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற் றது. முற்றிலும் எதிர் பாராத தருணத்தில், சவாலான கோணத் தில் இங்கிலாந்து அணி வீராங்கனை யால் அடிக்கப்பட்ட ஒரு கோலை எலன் மேரி தடுத்ததால்தான் இந்திய அணியின் அந்த வெற்றி உறுதியானது.

சர்வதேச அங்கீகாரம்

ஆப்ரோ - ஆசிய விளையாட்டுப் போட்டி, 2003இல் அய்தராபாத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டிவரை ஆக்கி அணி முன்னேறியது.

ஆனால், இறுதிப் போட்டியில் பலம்மிக்க தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. தென் ஆப் பிரிக்க அணியைவிட சற்றுப் பலவீனமாக இருந்த இந்திய அணி பதக்கம் வெல்வது கேள்விக் குறியாகவே இருந்தது.

எலன் மேரியின் உத்வேகம் அளிக்கும் ஆட்டம், மற்ற வீரர்களையும் தொற்றிக்கொண்டதால் அந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு முழு முதற் காரணம் எலன் மேரி என்றால் அது மிகையல்ல.

வழங்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் அந்தத் தொடரின் இறுதியாட்டம் நீடித்தது. ஆட்டத்தின் இறுதியில் இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்ததால், பெனால்டி மூலம் வெற்றி தீர்மானிக்கப் பட்டது. பெனால்டி வாய்ப்பில் தென் ஆப்பிரிக்க அணி அடித்த இரண்டு கோல்களை அநாயாசமாகத் தடுத்தார் எலன் மேரி. இந்திய அணியின் வெற்றிக்கு அவரது  கோல் தடுப்பே காரணம். இந்தத் தொடர் எலனின் புகழைச் சர்வதேச அளவுக்கு எடுத்துச் சென்றது.

இந்தக் காலகட்டத்தில் மூன்று தங்கப் பதக்கங் களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் அவர் தனதாக்கியுள்ளார். 2004இல் மத்திய அரசு ஹெலன் மேரிக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கவுரவித்தது.

41 வயதாகும் எலன் மேரி, ஆக்கி நினைவுகளை அசை போட்டபடி ரயில்வே துறையில் தற்போது பணியாற்றிவருகிறார்

சிகரத்தை எட்டிய சாதனைப் பெண்மணி

தனது கனவும் லட்சியமும் நிறைவேறும் தருணத்தை நினைத்து 1984 மே 23 அன்று அந்தப் பெண் மலையில் முன்னேறிக்கொண்டிருந்தார். காத்திருந்த அந்தத் தருணம் கைகூடியதும் கையோடு கொண்டு வந்திருந்த தேசியக் கொடியை உயரே பறக்கவிட்ட பெருமிதத்தோடு உற்சாகக் குரல் எழுப்பினார். அவர், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலில் ஏறிச் சாதனை படைத்த இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால்.

சிறு வயது ஆசை

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப சிறு வயதிலேயே மலையேற்றம் மீது பச்சேந்திரி பாலுக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு அவர் பிறந்த உத்தரகாண்ட் மாநிலம்  நகுரி என்ற கிராமும் ஒரு காரணம். இமயமலை அருகே அந்தக் கிராமம் இருந்ததால் மலை மீது ஏறி இறங்குவது அவரது வாழ்க்கையில் ஓர் அங்க மாகவே இருந்தது. சிறு வயதிலிருந்தே பச்சேந்திரி பால் வித்தியாசமானவர். எப்போதும் எதையாவது செய்தபடி துறுதுறுவென இருப்பார்.

பச்சேந்திரிக்கு 12 வயதாக இருந்தபோது பள்ளியில் மலையேற்றம் சென்றார்கள். அந்தக் குழுவில் அவரும் இடம்பிடித்தார். 4 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட மலையை ஏறிவர முயன் றார் பச்சேந்திரி. அப்போதுதான் மலையேற்றம் என்ற சாகச விளையாட்டு குறித்த புரிதல் அவருக்கு ஏற்பட்டது. மலையேற்றம் மீதான ஆர்வம் அவருக்கு அதிகம் ஏற்பட்டாலும், அதையெல்லாம் படிப்புக்காக மூட்டைகட்டி வைத்தார்.

கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பிறகு நகுரி கிராமத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் பச்சேந்திரி பாலுக்குக் கிடைத்தது. அவரை ஆசிரியராக்கி  பார்க்க அவரது குடும்பத் தினர் விரும்பினர். ஆனால், பச்சேந்திரி பாலுக்கோ படிப்புக்காக இத்தனை நாட்களாக ஒதுக்கிவைத்திருந்த மலையேற்ற சாகச விளை யாட்டின் மீதுதான் தீவிர பற்று இருந்தது.

முதல் மலையேற்றம்

மலையேற்றத்தை முறைப்படி கற்க விரும்பினார். இதற்காக  மலையேறும் கலையைக் கற்றுத்தரும் பள்ளியில் சேர்ந்தார். மலையேற்றத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்ற பிறகு மலையேற்ற சாகசத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1982இல் கங்கோத்திரி மலையில் 6,675 மீட்டர் உயரத்தையும் ருத்ரகரியா மலையில் 5,818 மீட்டர் உயரத்தையும் மலையேற்றம் மூலம் எட்டினார்.

வெற்றிகரமாகச் செய்துகாட்டிய இந்த மலை யேற்றம் மூலம் பச்சேந்திரி பாலுக்கு  நேசனல் அட்வென்ச்சர் ஃபவுண்டேசனில் வேலை தேடி வந்தது. இங்கே அவருக்குக் கிடைத்தது பயிற்றுநர் வேலை. மலையேற்றம் செய்ய விரும்பும் பெண்களுக்கு அதன் நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார்.

எவரெஸ்ட்டுக்குப் பயணம்

இந்தப் பணிக்கு இடையே சிறு சிறு மலை யேற்றங்களிலும் அவர் ஈடுபட்டார். சிறு சிறு மலைகளை ஏறித் தன்னுடைய தன்னம்பிக்கையை வளர்ந்துவந்தார். தொடர்ந்து மலையேற்ற சாகசத்தில் நிபுணத்துவம் பெற்றதால், 1984 மார்ச்சில் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மகளிர் குழுவில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. 6 பெண்கள், 11 ஆண்கள் இதற்காகத் தேர்வு செய்யப் பட்டார்கள். இவர்களில் பச்சேந்திரியும் ஒருவர். இது மிகப் பெரிய, சவால் மிக்க பணி என்பதால், அதற் கான முன்னேற்பாடுகளில் இறங்கினார் பச்சேந்திரி பால்.

அவர்கள் சென்ற குழுவில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. நோய் தாக்குதல் போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் பச்சேந்திரி பாலுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் மன உறுதியோடு பயணத்தைத் தொடர்ந்தார். மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரைத் தாங்கிக்கொண்டு முன் னேறினார். பல இடங்களில் கடுமையான பனிமலை முகடுகளைத் தாண்ட வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம் தாண்டி

எவரெஸ்ட்டை நெருங்கினார்.

விருதுகள்

மலையேற்றத்தில் பச்சேந்திரி பால் செய்த சாதனைகளுக்காக அவர் பெறாத விருதுகளே இல்லை.  அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் 1984இல் பத்ம விருது வழங்கப்பட்டது. அடுத்தடுத்து தொடர்ந்து மலையேற்றத்தில் சாதனையை நிகழ்த்திய தால், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருது 1986இல் வழங்கப்பட்டது.

1990இல் எவரெஸ்ட்டை அடைந்த முதல் இந்தியப் பெண் என்று உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தார்.  பல்வேறு மாநில அரசுகளின் வீரதீர சாகச விருதுகளையும் பச்சேந்திரி பால் பெற்றி ருக்கிறார்.

மலையேற்றத்தை ஆண்களுக்கான சாகச விளையாட்டாக நினைத்த காலம் ஒன்று இருந்தது. அதை மாற்றிக்காட்டியவர் பச்சேந்திரி பால். அவர் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பிறகு ஏராளமான பெண்கள் மலையேற்றத்தில் ஆர்வம் கொண் டார்கள். இன்றும் ஏராளமான பெண்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பச்சேந்திரி பால்தான் வழிகாட்டி. தற்போது 64 வயதாகும் பச்சேந்திரி பால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கும் பணியை விடாமல் செய்துவருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner