எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி ஆட்டம் அது. 2016இல் மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியாவும் நேபாளமும் மல்லுக்கட்டின. மைதானத்தில் கால்பந்து ரசிகர்கள் ஆர்ப்பரித்துக்கொண் டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் அந்தப் பெண்ணின் கடைசி ஆட்டத்தைக் காணவே அங்கே குவிந்திருந்தனர். அந்தப் பெண் நடுகள வீராங்கனையாகப் பம்பரம்போல் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தார்.

அந்தப் பெண்ணுக்கு 36 வயது என்று நம்புவது கடினமே. இளம் பெண்களுக்கு நிகராக அநாயாசமாக விளையாடினார். இறுதியில் இந்திய மகளிர் கால்பந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. அந்த வெற்றியோடு தனது சர்வதேசக் கால்பந்து பயணத்தை அந்தப் பெண் முடித்துக் கொண்டார்.  அந்தப் பெண்தான் ஆயினம் பெம்பெம் தேவி.

வட கிழக்கு மாநிலங்களில் இயல்பாகவே கால்பந்து காதலர்கள் அதிகம். வீதியில் சிறுவர்களும் சிறுமிகளும் கால்பந்தை உதைத்துக் கொண்டிருப்பது அங்கு வாடிக்கை. பெம்பெம் தேவிக்கும் இப்படித்தான் கால்பந்து விளையாட்டு அறிமுகமானது. பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் வீதியில் வியர்க்க விறுவிறுக்கக் கால்பந்தை உதைத்து விளையாடிக்கொண்டிருப்பார்.

நன்றாகப் படித்தபோதும், தேவியின் கால்பந்து ஆர்வம் அவருடைய அப்பா நாகேஷோர் சிங்குக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. மிகவும் ஏழ்மையான குடும்பம் அவர் களுடையது. கூலித் தொழில் செய்துதான் அவருடைய அப்பா பிள்ளைகளைப் படிக்க வைத்தார். ஆனாலும், வீட்டிலிருந்த சகோதரர்களும் சகோதரிகளும் கொடுத்த ஆதரவால் தேவியின் கால்பந்துக் காதல் தீவிரமானது.

கால்பந்து விளையாட்டு நுணுக்கங்களை விரைவாகவே கற்றுக்கொண்ட தேவி, 1991இல் 11 வயதிலேயே யாவா கிளப்புக் காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். கால்பந்தை லாகவமாக உதைக்கும் அவரது திறமையால், 13 வயதிலேயே மணிப்பூர் சப் ஜூனியர் அணியில் அவருக்கு இடம் கிடைத்துவிட்டது. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் அவர் பந்தைக் கடத்தும் திறமையைப் பார்த்துத் தேசிய கால்பந்து தேர்வாளர்கள் மலைத்துப்போயினர். 1994இல் தனது 15 வயதில் தேசிய அணியில் தேவி இடம்பிடித்தார்.

அதுவரை ஒழுங்காக படிக்கிற வேலையை பார் என்று கறார் குரலில் கண்டித்த அவருடைய அப்பா, அதன் பிறகு தேவியின் படிப்பில் கண்டிப்பு காட்டவில்லை. தேசிய அணியில் தேவி இடம்பிடித்ததும் அவரது சர்வதேசக் கால்பந்து இன்னிங்ஸ் தடபுடலாகத் தொடங்கியது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் தேவி மட்டும் ஜெட் வேகத்தில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிக்கொண்டிருந்தார்.

1997ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இந்திய மகளிர் அணி பயிற்சி பெற்று திரும்பியபிறகு, வெற்றிகளைக் குவிக்கக் தொடங் கியது. அதற்கு தேவியின் ஆட்டமும் முக்கியக் காரணம். இன்னொரு புறம் மணிப்பூர் அணி சார்பாகப் பங்கேற்று, தேசிய அளவிலும் பல சாதனைகளை அரங் கேற்றினார். 1998இல் மணிப்பூர் காவல்துறையில் காவலர் பணி இவரைத் தேடி வந்தது. மிகக் குறைந்த சம்பளமே கிடைத்தாலும், அந்தப் பணத்தைக் கொண்டு நிம்மதியாகக் கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடினார்.

தேசிய அளவில் 19 தொடர்களில் பங்கேற்று 16 வெற்றிகளை மணிப்பூர் அணிக்குப் பெற்றுத் தந்திருக்கிறார் தேவி. இதில் 9 வெற்றிகள் மணிப்பூர் அணியின் கேப்டனாக அவர் சாதித் தவை. 2003இல் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். தேவியின் துடிப்பான ஆட்டத்தால், இந்திய அணி ஏ.எஃப்.சி. கோப்பைக்குத் தகுதி பெற்றது. 2012ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக அணியை அவர் வழிநடத்தியிருக்கிறார்.

2010இல் ஆசிய கோப்பை 2012இல் தெற்காசிய கால்பந்து வாகையர் பட்டம் உட்பட5 சர்வதேசத் தொடர்களை இவரது தலைமையின் கீழ் இந்திய அணி வென்றது. 85 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ள தேவி 50-க்கும் அதிகமான கோல்களை அடித்திருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பெம்பெம் தேவிக்குத் தனி மதிப்பு உண்டு. 2014இல் மாலத்தீவில் உள்ள ரேடியண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்காக அவர் விளையாடினார். அந்த அணி 2014, 2015 ஆண்டுகளில் கோப்பையை வெல்லவும் தேவி காரணமாக இருந்தார்.

கால்பந்தின் தூதுவர்: சிறந்த கால்பந்தாட்டக்காரருக்கான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் விருது 2001, 2013 ஆகிய ஆண்டுகளில் தேவிக்கு வழங்கப்பட்டது. ஆனால், அர்ஜூனா விருது அவ ருக்குக் கடந்த ஆண்டுதான் கிடைத்தது. அதற்கு முன்புவரை அந்த விருதுக்கு அவரது பெயர் பரிசீலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது  கெட்டவாய்ப்பாகும்.

ஃபிபா அமைப்பின் இந்திய கால்பந்து தூதராகவும் தேவி இருந்திருக்கிறார்.  மணிப்பூரில் தலைமைக் காவலராக அவர் பணி புரிந்துவருகிறார்.

தீயணைப்புதுறையில் சாதனைப் பெண்

ஆடவர் மட்டும் எனப் பலரும் நினைத்திருந்த தீயணைப்புத் துறையில் கால்பதித்த முதல் பெண் அர்சினி கனேகர். நாக்பூரைச் சேர்ந்த இவர், இளங்கலை படித்த போது தேசிய மாணவர் படையில்  சேர்ந்தார். அதன் பின் அர்சினியின் வாழ்க்கையில் புதிய உத்வேகம் பிறந்தது. என்.சி.சி. சீருடை அணிந்தவர், ஏதாவது ஒரு சீருடைப் பணியில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று, இந்தியாவின் முதல் பெண் தீயணைப்புத்துறை அதிகாரி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

தோழி காட்டிய வழி

இளங்கலை முடித்தபின் எம்.பி.ஏ-வில் சேர்ந்தார். ஆனால், சீருடைப் பணி மீதான காதலும் அதில் சாதிக்க வேண்டும் என்ற கனவும் அர்சினியை உள்ளிருந்து இயக்கின. நண்பர்களுடன் பேசும்போதுகூடத் தன் கனவு குறித்தே அர்சினி ஆர்வத்துடன் பேசுவார். நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்புத் துறைக் கல்லூரியில் வழங்கப் படும் மூன்றரை ஆண்டு பயிற்சிப் படிப்பு பற்றித் தோழி மூலமாகத் தெரிந்துகொண்டார். மறுநாளே, தோழியுடன் நாக்பூருக்குச் சென்று நுழைவுத் தேர்வையும் எழுதினார். வாரங்கள் உருண்டோடின. எம்.பி.ஏ. படிப்பும் தொடர்ந்தது. திடீரென ஒரு நாள் நாக்பூர் தீயணைப்புத் துறைக் கல்லூரியிலிருந்து அழைப்புக் கடிதம் வந்தது. நாக்பூர் சென்ற அர்சினிக்கு, வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது. கல்லூரிக்குள் சென்றபோதுதான் இதுவரை அந்தக் கல்லூரியில் பெண்கள் யாரும் பயின்றதில்லை என அர்சினிக்குத் தெரிந்தது. அது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவரது லட்சியத்துக்கு வலுச்சேர்த்தது.

கடினத்தை வென்ற மன உறுதி

ஆண்களுக்கு மட்டுமே விடுதி இருந்ததாலும் மூன்றரை ஆண்டுகளும் கல்லூரியிலேயே தங்கிப் பயில வேண்டும் என்பதாலும் அர்சினியைச் சேர்த்துக் கொள் வதில் கல்லூரி நிர்வாகத்துக்கு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு அர்சினியைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளச் சிறப்பு அனுமதி பெற்றது. கல்லூரியில் பெண்கள் விடுதி இல்லாததால், வீட்டி லிருந்து கல்லூரிக்கு வந்து படிக்க சிறப்பு அனுமதியும் அர்சினிக்கு வழங்கப்பட்டது. தினமும் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொள்வது அர்சி னிக்குக் கடினமாகவே இருந்தது. பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல, அதிகாலையிலேயே வீட்டிலிருந்து அர்சினி புறப்பட்டுச் செல்வார். மேலும், பயிற்சியின்போது பெண் என்பதால் எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. அதை அர்சினி விரும்பவும் இல்லை.

நான்தான் அந்தக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண். எனவே, பயிற்சி வகுப்புகளுக்குத் தாமதமாகச் செல்லக் கூடாது என்பதில் உறுதியோடு இருந்தேன். என் செயல்பாடு மூலம் அடுத்தடுத்து சேரப்போகும் மாணவிகளுக்கு அளவுகோலை நிர்ணயிக்க விரும்பினேன். அங்கே கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். ஆனால், மாண வர்களைவிட நான் பின்தங்கிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன். பயிற்சியின்போது ஒருபோதும் நான் பின்தங்கியது இல்லை என்கிறார் அர்சினி.

நெருப்போடு விளையாட்டு

கல்லூரிப் படிப்பின் போதே, கல்லூரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நடைபெறும் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் பணிக்கு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள். 2001இல் சிலிண்டர் வெடித்ததால் சீரடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி அர்சினிக்குக் கிடைத்தது. சிறிய அள விலான தீ விபத்து என்பதால், அதைப் பெரிய சிக்கலோ சவாலோ இல்லாமல் கட்டுப்படுத்திவிட்டார் அவர்.

2002இல் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்து இந்தி யாவின் முதல் தீயணைப்பு வீராங்கனை என்ற வரலாற்றை அர்சினி படைத்தார். 2005இல் டில்லியில் பணியாற்றிய போது, ஒரே நாளில் அய்ந்து தீ விபத்துகளைக் கட்டுப் படுத்தும் நெருக்கடியான சந்தர்ப்பம் அர்சினிக்கு அமைந் தது. அதில் ஒரு நகரில் உள்ள காலணி குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீயின் காரணமாக ஒட்டு மொத்தக் கட்டடமும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. அதன் எதிரே இருந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் மீதிருந்து தண்ணீரை அடித்தும் தீ கட்டுப்பட வில்லை. இறுதியாக அர்சினியும் அவருடைய குழுவினரும் உயிரைப் பணயம் வைத்து, தீ விபத்து நேர்ந்த கட்டடத்தின் மேற்பகுதிக்குச் சென்று தண்ணீரை அடித்துத் தீயை அணைத்தனர்.  இந்திய விமானப் படையின் முதல் ஹெலிகாப்டர் பைலட் சிவானி குல்கர்னி தான் அர்சினியின் ரோல் மாடல். என்.சி.சி-யில் இணைந்த போது அவரைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந் தால், அன்று முதல் சிவானி யைப் போல் சீருடைப் பணியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner