எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஷிவாங்கி பதக் (16) அரியாணாவின் ஹிஸர் நகரைச் சேர்ந்தவர். உலகின் மிக உயரமான சிகரமான எவ ரெஸ்ட்டின் உச்சத்தை கடந்த வாரம் தொட்டு இவர் சாதனை படைத் திருக்கிறார். மே 7 அன்று மலையேறத் தொடங்கிய ஷிவாங்கி மூன்றே நாட்களில் எவரெஸ்ட்டின் அடிவார முகாமை அடைந்தார்.

பின்பு அங்கிருந்து, கடல் மட்டத்திலிருந்து 9 கி.மீ. உயரத்தில் இருக்கும் சிகரத்தை ஆறு நாட்களில் அடைந் துள்ளார்.

மலையேறத் தொடங்கும் முன் காஷ்மீரில் நான்கு மாதம் மேற் கொண்ட கடுமையான பயிற்சி இதற்கு உதவியுள்ளது. எவரெஸ்ட்டைத் தொட்டதும் தன்னையறியாமல் தேசிய கீதத்தைப் பாடியதாகக் கூறுகிறார்.

மனித உரிமை போராளி யூரி

மே 19, 1921 இல் கலிபோர்னியாவில் பிறந்த யூரி கொச்சியாமா ஒரு ஜப்பானியர். டிசம்பர் 7, 1941இல் பேர்ல் ஹார்பர் மீது வீசப்பட்ட குண்டு அவரது வாழ்வைப் புரட்டிப்போட்டது. நோயாளியான அவருடைய தந்தை அன்று கைது செய்யப்பட்டார்.

ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலையானவர், அதற்கு அடுத்த நாளே மரணத்தைத் தழுவினார். அந்த நேரம் அமெரிக்காவில் இருந்த 1,20,000 ஜப்பானியர்களை அகதி முகாமில் அடைக்க அதிபர் ரூஸ்வெல்ட் உத்தரவிட்டார்.

யூரியின் குடும்பம் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு குதிரை தொழுவத்தில் அடைக்கப்பட்டது. சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட இந்த அனுபவமும் வலியும் அவரை மனித உரிமைப் போராளியாக்கியது. 1963இல் அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற போராளியான மல்கம் எக்ஸைச் சந்தித்துள்ளார்.  இன்று நடக்கும் பல போராட்டங்களுக்கும் அதை முன்னெடுத்துச் செல்லும் போராளிகளுக்கும் யூரிதான் முன்னோடி. அவரது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

தடை தாண்டிப் பாய்ந்து பதக்கங்கள் வென்ற வீராங்கனை

நீளம் தாண்டுதலில் சாதிக்கும் அளவுக்கு இந்தியாவில் திறமை வாய்ந்த வீராங்கனைகள் யாருமில்லை என்ற காலம் ஒன்று இருந்தது. அந்த இருண்ட பக்கங்களுக்கு ஒளிகொடுத்தவர் கேரளத்தைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ். உலக வாகையர் பட்டம், உலகத் தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். இதன் மூலம் இந்திய நீளம் தாண்டுதல் விளையாட்டை உலக அளவில் கவனம் பெறச் செய்தவரும் இவர்தான்.

படிப்பைத் தாண்டி வேறு எதையும் யோசிக்கக் கூடாது என்று சொல்லும் பெற்றோர் மத்தியில் அஞ்சுவின் தந்தை கே.டி. மார்க்கோஸ் சற்று வித்தியாசமானவர். விளை யாட்டுதான் வாழ்க்கை என்று அஞ்சுவுக்கு அவர் கற்றுக் கொடுத்தார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் விளையாட ஊக்குவித்தார். தொடக்கத்தில் ஏழு விளை யாட்டுகளின் கலவையான ஹெப்டத்லானில்தான் அஞ்சு ஆர்வம் காட்டிவந்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நீளம் தாண்டுதல், தடை தாண்டும் விளையாட்டுகள் மீது அஞ்சுவுக்குக் காதல் ஏற்பட்டது. இதற்கு அவரது உயரமும் ஒரு காரணம். உயரமாக இருப்பவர்கள் நீளம் தாண்டுதலில் சுலபமாகச் சாதிக்க முடியும். 185 செ.மீ. உயரம் இருந்த அஞ்சுவுக்கும் அந்த உயரம் சாதகமானது.

தொடர்ந்து நீளம் தாண்டுதலில் மாநில அளவில் வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருந்த அஞ்சு 1996இல்தான் முதன்முதலாகத் தேசிய அளவிலான போட்டிகளில் காலடி வைத்தார். அப்போது டில்லியில் இளையோர் ஆசிய வாகையர் பட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதன் முறையாகப் பங்கேற்ற அஞ்சு, நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றார். அதுதான் அஞ்சுவின் பதக்க வேட்டைக்குப் பிள்ளையார்சுழி போட்டது. இதன் பிறகு மாநில அளவிலும் தேசிய அளவிலும் தொடர்ந்து சாதித்துவந்தவர், சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையை வசமாக்கினார்.

முதல் சர்வதேசப் பதக்கம்

2003இல் பாரிசில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. நீளம் தாண்டுதல் மகளிர் பிரிவில் அஞ்சுவும் இடம் பெற்றிருந்தார். அதற்கு முன்புவரை உலக வாகையர் பட்டப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பெண்கள் யாரும் சாதித்ததில்லை. இந்த முறையும்கூட அப்படியொரு வாய்ப்பு இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. தகுதிச் சுற்றில் அஞ்சு களத்தில் இருந்தபோது ஆசியர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. அய்ரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த வீராங் கனைகளே நிறைந்திருந்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய அஞ்சு, 6.59 மீட்டர் தாண்டி, பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். தகுதிச் சுற்றில் 6.59 மீட்டர் நீளம் தாண்டியிருந்த நிலையில், இறுதிச் சுற்றில் 6.70 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற ரசியாவின் கால்கினாவுக்கும் அஞ்சு வுக்கும் 0.04 மீட்டர்தான் வித்தியாசம். என்றாலும் அஞ்சு வெண்கலப் பதக்கம் வென்று அன்று சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமைத் தேடிந்தந்தார். உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

சாதனை மேல் சாதனை

2004இல் ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. உலக வாகையர் பட்டப் போட்டியில் அஞ்சு சாதித்திருந்த தால், அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தகுதிச் சுற்றைத் தாண்டி இறுதிச் சுற்றுக்குள் அஞ்சு நுழைந்ததே அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. எப்படியும் அஞ்சு சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரால் அய்ந் தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவரால் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும் 6.83 மீட்டர் நீளத்தைத் தாண்டியது, அவரது தனிப்பட்ட சாதனையாகப் பதிவானது. அவர் நீளம் தாண்டுதல் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும்வரை அதுவே அவரது அதிகபட்ச தனிநபர் சாதனையாகத் தொடர்ந்தது.

அடுத்த ஆண்டே இன்னொரு களத்துக்குத் தயா ரானார் அஞ்சு. 2005இல் மொனாகோவில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. ஒலிம்பிக்கில் விட்ட பதக் கத்தை எப்படியும் பெறுவது என்ற முடிவோடு உழைத்தார். தங்கப் பதக்கத்துக்குக் குறிவைத்திருந்தார். போட்டியில் 6.75 மீட்டர் நீளத்தைத் தாண்டினார். ஆனால், அந்தப் போட்டியில் அவரால் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. வெள்ளிப் பதக்கத்துடன் அஞ்சு திருப்தியடைய வேண்டியிருந்தது. ஆனால், தங்கம் அவரைவிட்டுச் செல்லவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.

அந்தப் போட்டியில் முதலிடம் பிடித்த ரஷ்ய வீராங் கனை கொடோவா, ஊக்க மருந்து பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் 9 ஆண்டுகள் விசா ரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டது. மிகவும் தாமதமாக கொடாவோ பெற்ற தங்கப் பதக்கம் 2014இல் பறிக்கப்பட்டது. அந்தப் பதக்கம் இரண்டாம் இடம் பிடித்த அஞ்சுவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை யையும் அஞ்சு பெற்றார்.

இந்தப் பதக்கங்கள் மட்டுமல்ல, 2002-ல் மான்செஸ்டர் காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2002-ல் (பூசன்) தங்கம், 2006இல் (தோகா) வெள்ளிப் பதக்கம் ஆகிய வற்றையும் அஞ்சு அள்ளினார். மேலும், ஆசிய வாகையர்  பட்டப் போட்டியில் 2005-ல் (இஞ்ச்சேன்) தங்கம், 2007இல் (அம்மான்) வெள்ளிப் பதக்கங்களையும் தன்வசமாக்கினார்.

2000இல் ராபர்ட் பாபி ஜார்ஜை அஞ்சு திருமணம் செய்து கொண்டார். இவரும் விளையாட்டு வீரர்தான். தேசிய டிரிப்பிள் ஜம்ப் வாகையர் பட்டம். திருமணம் செய்தபிறகு தான் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டு அஞ்சுவின் பயிற்சியாளராக மாறினார் பாபி ஜார்ஜ். அஞ்சு சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற்றதெல்லாம் இவரது பயிற்சியின் கீழ்தான். ஒரு வகையில் சிறுவயதில் அஞ்சு வின் தந்தை அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். திரு மணத்துக்குப் பிறகு அவருடைய கணவர் வழிகாட்டியானார்.

2002இல் அஞ்சுவுக்கு அர்ஜூனா விருது வழங்கப் பட்டது. அடுத்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் 2004இல் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டன. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளிலும் பங்கேற்ற அஞ்சு, அதன் பிறகு நீளம் தாண்டுதலிலிருந்து விடை பெற்றார். தற்போது 41 வயதாகும் அஞ்சு பாபி ஜார்ஜ், டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் என்றழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு உதவும் திட்டத்தின் செயல் உறுப்பினராக இருந்துவருகிறார். மத்திய அரசு அதிகாரி யாகவும் பணியாற்றிவருகிறார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner