எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலக அளவில் இந் திய பெண்களை குறிப் பாக, தமிழ்நாட்டு பெண் களை வியந்து பார்க்கின் றனர் என்றால் அதற்கு அவர்களின் நகை சேமிப்புதான் காரணம் என்றால் மிகையாகாது.

முன்பெல்லாம் தங்க நகையைப் பொருத்த வரை பொற்கொல்லர்கள் வடிவமைத்து செய்து தரும் நகைகளே பெரும்பாலும் பெண்கள் அணிந்து வந்தனர்.

காலப்போக்கில் மனிதர்களின் தேவையும், ரசனையும் மாறிவிட, கணினி மூலம் வடிவமைப்புகள் மாறி, இயந்திரங்களின் மூலம் தற்போது நகைகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் நகைகள் தயார் செய்தல், நகைகளை வடிவமைத்தல், நகைகளை மதிப்பீடு செய்தல், பாலீஷ் செய்தல் போன்ற பலவிதமான பயிற்சிகள் அரசாங்கத்தின் மூலம் குறைவான கட்டணத்தில் ஒரு ஆண்டும், மூன்று மாதம், இரு வாரம் என பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இப்பயிற்சிகள் மட்டுமின்றி நவீன நகை வடிவமைப்பு பயிற்சிகள், நகை உற்பத்தி மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சி பெற்றோர், சொந்தமாக வீட்டில் இருந்தபடியே இத்தொழிலை செய்யலாம். அடுத்ததாக நகை பாலீஷ் செய்யும் பயிற்சி, நகைகளை சுத்தம் செய்யும் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுகின்றன. ஆண், பெண் இருபாலரும் இதில் கலந்து கொள்ளலாம்.

நவீன நகை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி

இது ஒரு வருட கால பயிற்சியாகும் . இப்பயிற்சியில் நகைகள் செய்வது, மதிப்பீடு உட்பட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு படிப்பு போதுமானது. இப்பயிற்சி முடிப்பவர்களுக்கு பயிற்சி காலத்தின் போதே பெரிய, பெரிய நகை தொழிற்சாலைகள், கடைகள் மூலம் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

இது இரண்டு வார கால பயிற்சியாகும். இப்பயிற்சி முடித்தவர்கள், வங்கிகளில் பகுதிநேர, முழு நேர நகை மதிப்பீட்டாளர் பணிக்குச் செல்லலாம்.

கணினி நகை வடிவமைப்பு பயிற்சி

இது 3 மாத கால பயிற்சியாகும். இப்பயிற்சியில் கணினி மூலம் நகைகள் டிசைன் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற்றோர் பல நகை தயாரிப்பு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.

சென்னையில் இப்பயிற்சி அளிக்கப்படும் இடம்

டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி, சென்னை - 600 113. தொ.பே. 9600318040, 9445368910.

சுமை தூக்கும் பெண் தொழிலாளி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரயில்நிலையத்தில் 2013-ஆம் ஆண்டிலிருந்து சுமை தூக்குபவராக வேலை செய்கிறார் மஞ்சு தேவி. அந்த ரயில்வே நிலையத்தின் முதல் பெண் போர்ட்டர் மட்டுமல்ல அவர், வடமேற்கு ரயில்வேயிலும் அவர்தான் முதல் பெண் சுமைதூக்கும் தொழிலாளி.

டில்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும் விழாவுக்கு அவருக்கு அழைப்பு வந்தபோது, “அய்யய்யோ... நானா என்னால் முடியாது. அங்கே வந்து போக எல்லாம் என்னால் முடியாது. எனக்கு மூன்று குழந்தைகள். அவர்களை விட்டு விட்டு என்னால் வர முடியாது’’ என்று மறுத்திருக்கிறார். அருகில் இருந்தவர்கள் எல்லாரும் பேசி அவரைச் சம்மதிக்க வைத்து டில்லிக்கு அனுப்பி வைத்திருக் கிறார்கள். அவருக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு அமைச்சகம் இந்த ஆண்டுக்கான “சாதனைப் பெண் மணி’ விருது கொடுக்கவே, டில்லிக்கு அழைத்திருந் தார்கள்.

மஞ்சு தேவியின் சொந்த ஊர் ஜெய்ப்பூர் அல்ல. ஜெய்ப் பூர் மாவட்டத்தில் உள்ள சுந்தர்புரா என்கிற கிராமம்தான் அவருடைய சொந்த ஊர். எதற்கு ஜெய்ப்பூருக்கு வந்தார்?

மஞ்சு தேவியின் கணவர் மகாதேவ் ஜெய்ப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் சுமைத்தூக்கும் தொழிலாளி. நீண்ட காலமாக கல்லீரலில் பாதிப்பு. அய்ந்தாண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். அப்போது மஞ்சு தேவிக்கு வயது 33. “மூன்று குழந்தைகள். கல்வியறிவில்லை. குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது? என்ன வேலை செய்வது?’ கவலையில் மூழ்கி இருந்த மஞ்சுவின் கண்களில் பட்டது கணவர் மகாதேவின் போர்ட்டருக்கான அனுமதி, அடையாளவில்லை. அதன் எண் 15.

“நான் போர்ட்டர் வேலை செய்தால் என்ன?’

மஞ்சு தேவி உடனே ரயில்வே சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களைப் போய் பார்த்தார். அவரால் போர்ட்டர் வேலை செய்ய முடியுமா? என்று முதலில் சந்தேகத்துடன் பார்த்த சங்கத்தினர், மஞ்சுதேவியின் மன உறுதியை அதற்கும் மேலாக அவருடைய அழுகையைப் பார்த்து வேறு வழியின்றி ரயில்வே அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர்.

“ரயில்வேயில் பெண் போர்ட்டர்களே இல்லையே?’’ கைவிரித்தனர் அதிகாரிகள். மஞ்சு தேவி கெஞ்சினார். வேறு வழியின்றி அனுமதி கொடுத்தனர். ரயில்வேயில் சுமைதூக்கும் பெண் தொழிலாளி என்பவரே இல்லை யாதலால், அவர்களுக்கென சீருடையும் இல்லை. அதற்குப் பிறகு, அதிகாரிகள் கலந்து பேசி சீருடையை முடிவெடுத் திருக்கிறார்கள். ஏதோ ஒரு வேகத்தில் மஞ்சுதேவி வேலைக்கு வந்துவிட்டாரே தவிர, போர்ட்டர் வேலை செய்வதில் ஆயிரம் சிரமங்கள் இருந்தன. 100க்கும் அதிகமான ஆண் போர்ட்டர்கள் மத்தியில் ஒரு பெண் போர்ட்டர்.

“அவர்களுக்கு மத்தியில் உட்கார்வதற்கே முதலில் உடம்பெல்லாம் கூசியது. நான் நினைப்பதை அவர்களிடம் பேச கூட முதலில் தயக்கமாக இருந்தது’’ என்கிறார் மஞ்சுதேவி.

ரயில் பயணிகளோ இந்தப் பெண்ணால் சுமையைத் தூக்க முடியுமா? என்று சந்தேகப்பட்டு, ஆண் போர்ட்டர் களிடம் சுமையைக் கொடுத்தனர். உண்மையில் ஒரு 30 கிலோ எடையைத் தூக்கும் உடல் வலிமை கூட மஞ்சு தேவிக்கு அப்போது இல்லை. வறுமையால் மஞ்சுதேவியின் குடும்பம் வாடிப் போனது.

“வேலைக்குச் சேர்ந்த புதிதில் நான் வேலை செய்த நேரத்தைவிட அழுத நேரமே அதிகம்‘’ என்கிறார் மஞ்சுதேவி. தப்பாக முடிவெடுத்துவிட்டதாக குழம்பித் தவித்திருக்கிறார். மஞ்சுதேவியின் அம்மாதான் அந்த நேரத்தில் மஞ்சுதேவிக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அவரை தைரியமிக்க பெண்ணாக மாற்றியிருக்கிறார். அதற்குப் பின்தான் மஞ்சு தேவி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். பிரச்சினைகள், கஷ்டங்கள் இருக்கின்றன. முதலில் என்ன சூழ்நிலை இருக்கிறதோ, அதை ஒத்துக் கொள்வது, அதன் பிறகு அதிலிருந்து மீள படிப்படியாக முயற்சி செய்வது என்ற முடிவே அது.

கிராமத்தில் மஞ்சுதேவியின் அம்மாவுடன் இருந்த குழந்தைகள் ஜெய்ப்பூருக்கு வந்தார்கள். 3 ஆயிரம் ரூபாய் வாடகையில் ஓர் அறையே உள்ள வீட்டில் வாழ்க்கை. குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தாயிற்று. “எனது கிராமத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அவர்கள் தினம்தோறும் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்கிறார்களா? என்று கூட என்னால் கண்காணிக்க முடியாது. போர்ட்டர் வேலையில் கிடைக்கும் கூலியில் வாரத்துக்கு ஒருமுறை கிராமத்துக்குப் போய் அவர்களைப் பார்த்துவிட்டு வருவதும் கூட என்னால் முடியாமல் போய்விடும். அதனால் அவர்களை ஜெய்ப்பூருக்கு அழைத்து வந்துவிட்டேன்’’ என்கிறார் மஞ்சுதேவி.

“”போர்ட்டர் வேலைக்குச் சேர்ந்த தொடக்கத்தில் ஒரு சிறிய சூட்கேஸ் பெரிய மலை மாதிரி எனக்குத் தோன்றும்‘’ என்று கூறும் மஞ்சுதேவி, இப்போது 80 கிலோ பொருள் களைக் கூட அனாயசமாக தூக்கி, வண்டியில் வைத்து இழுத்துச் செல்கிறார்.

“இந்த போர்ட்டர் வேலையில் உள்ள சங்கடமே, பெருங்கூட்டம் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் சுமை யையும் இழுத்துக் கொண்டு மிக வேகமாக உரிய ரயில் பெட்டியை நோக்கி விரைந்து செல்வதுதான்’’ என்கிறார்.

காலை 5.00 மணிக்கே ரயில் நிலையத்துக்கு வந்துவிடும் மஞ்சுதேவி, ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு சுமை தூக்க வாய்ப்பளிக்கும் ரயில் பயணி களுக்காகக் காத்திருக்கிறார். இவ்வளவுதான் இன்றைக்கு கூலி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. என்றாலும் மஞ்சுதேவி தனது குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.  “நம்மால் முடியும் என்று நாம் நினைக்க ஆரம்பித்தால், நம்மால் முடியாதது என்று எதுவுமில்லை’’ என்கிறார் உறுதியாக மஞ்சுதேவி.

கவனம் கொள்க!

மாதவிடாய்  நாட்களில் கால்கள் இழுப்பதும், அடி வயிற்றில் அதிக வலியும் இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகிய வற்றை சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்சினைகள் குணமடையும்.

மாதவிடாய்க்கு முன்பு வைட்டமின் பி6, டி சத்துக்கள் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன், தர்பூசணி, கீரை போன்றவற்றை சாப்பிடுங்கள். வலியில்லாத மாதவிடாய்க்கு தயாராக இந்த வைட்டமின்கள் தேவை.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner