எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்வையற்ற நிலையிலும் அய்ஏஎஸ் படித்து சாதனை படைத்த பிரஞ்ஜால் பாட்டீல், கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

பார்வையற்ற ஒருவர், அதிலும் பெண் அதிகாரி, மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்பது, நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.

பிரஞ்ஜால் பாட்டீலை இந்த பதவிக்கு நியமித்ததன் மூலம், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு புதிய வழிகாட்டியுள்ளது.

கர்நாடக மாநிலம் உல்லாஸ் நகரை சேர்ந்தவர் என்.பி. பாட்டீல். பொறியாளர் ஆவார். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதியின் மகள்தான் பிரஞ்ஜால் பாட்டீல். இவர் 2 வயதாக இருந்தபோது, காய்ச்சல் ஏற்பட்டு 2 கண்களிலும் பார்வை பறிபோனது.

எனினும், பெற்றோரின் ஊக்கத்தால், நன்கு படித்த பிரஞ்ஜாலின் பாட்டீல், தொடுதிரை உதவியுடன், மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் டில்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. டாக்டர் பட்டமும் பெற்றார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2014-ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். தேர்வையும் பிரஞ்சால் பாட்டீல் எழுதினார். ஆனால், அதில் அவருக்கு 773ஆவது இடமே கிடைத்தது. இதனால் அவரால் ஆட்சியராக முடியவில்லை. அதே நேரத்தில் ரயில்வே துறையில் தேர்வாகி கணக்குப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். எனினும் மாவட்ட ஆட்சியர் லட்சியத்தை அவர் கைவிடவில்லை.

2017ஆம் ஆண்டு மீண்டும் அய்.ஏ.எஸ். தேர்வு எழுதிய அவர், இந்த முறை 124ஆவது இடத்தைப் பிடித்தார். ஆட்சியர் ஆவதற்கு 124ஆவது ரேங்க் போதுமானதாக அமைந்தது.

இந்நிலையில்தான், பிரஞ்ஜால் பாட்டீலை, கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட பயிற்சி ஆட்சியராக அம்மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு நியமித்துள்ளது. பிரஞ்ஜால் பாட்டீலும், பயிற்சி ஆட்சியராக திங்கட்கிழமையன்று எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக, தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது தாய்தான், தன்னை ஆட்சியர் இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். அதிகாரிகளும் அதற்கு அனுமதியளித்தனர்.

அதன்படி அவரது தாய் ஜோதி, மகள் பிரஞ்ஜால் பாட்டீலை ஆட்சியர் இருக்கையில் அமர வைத்தார்.

சாதிப்பதற்கு - கடினப் பயிற்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை

தொழில்முறை நீச்சல் போட்டியாளராக இருப்பது ஒன்று. சாதனை நோக்கில் நீச்சல் போட்டியாளராக இருப்பது இரண்டு. புலா இந்த இரண்டும் சேர்ந்த கலவை. தொடக்கத்தில் தொழில்முறை நீச்சல் போட்டியாளராக உருவாகி, பின்னர் சாதனை படைக்கும் நோக்கில் நீச்சலில் புலிப் பாய்ச்சல் காட்டியவர் இவர். இந்தியாவின் நீச்சல் ராணி எனப் புகழப்பட்டவர். தொழில்முறையாகக் குறைந்த போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் சாதனை நோக்கில் இவர் நிகழ்த்தியவை மலைக்க வைப்பவை.

ஆறு வயதில் நீச்சல்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர் புலா சவுத்ரி. சிறுவயதில் மற்ற குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிய போது புலாவோ வீட்டருகே இருந்த குட்டையில் இறங்கி விளையாடுவாராம். தினமும் குட்டையில் நேரத்தைக் கழித்து கால்களைத் தண்ணீரில் அடித்து நீந்தப் பழகியபோது அவருக்கு ஆறு வயது. தொடர்ந்து நீச்சலில் ஆர்வம் காட்டியதால், ஹூக்ளி ஆற்றில் நீச்சல் பழகப் பெற்றோர் அனுப்பி வைத்தனர். அந்த ஆற்றில் நீந்தித்தான் நீச்சல் நுணுக்கங்களை அவர் கற்றுக்கொண்டார்.

தங்கம் மேல் தங்கம்

மூன்றாண்டுகளுக்குள் நீச்சல் அத்துப்படியான நிலையில் போட்டிகளில் களம்கண்டார். ஒன்பது வயதில் தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்றார். அவரைவிட வயதில் மூத்தவர்கள் போட்டியிட்டபோதும் வெற்றி என்னவோ புலாவுக்குத்தான் கிடைத்தது. அவர் பெற்ற முதல் பதக்கம் இது. இதன்பிறகு தேசிய ஜூனியர், சீனியர் அளவிலான போட்டிகளில் புலா தொடர்ந்து பங்கேற்றார். தேசிய அளவில ஆறு தங்கப் பதக்கங் களையும் வென்றார்.

சர்வதேசப் போட்டிகளிலும் புலா பங்கேற்றிருக்கிறார். தெற்காசிய அளவிலான நீச்சல் போட்டி அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது. 1991இல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற புலா, தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த வெற்றிக்குப் பிறகு தொழிற்முறை நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதைக் குறைத்துக்கொண்ட புலா, நீண்டதூர நீச்சல் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டினார். அந்த ஆர்வம் பின்னர் வெவ்வேறு கண்டங் களில் கடல்களைக் கடக்கும் அளவுக்கு ஆர்வம் அதிகமானது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகளை எதிர்த்து நீந்தவும் பயிற்சியெடுத்தார். சுமார் இரண்டரை ஆண்டுகள் கடலிலேயே பொழுதைக் கழித்தார். கடல் பயிற்சி எதுவும் வீணாகவில்லை. 1989இல் முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஆச்சரியமூட்டினார்.

ஆங்கிலக் கால்வாயைக் கடந்த பிறகு புலாவின் தன்னம்பிக்கை அதிகரித்தது. தொடர்ந்து உலகில் உள்ள பல வளைகுடாக்களையும் கை கால்வாய்களையும் கடக்க அவர் முடிவு செய்தார். இதற்கிடையே 1996இல் உள் நாட்டிலும் அவர் மிகப் பெரிய சாதனையை அரங் கேற்றினார். அப்போது முர்ஷிதாபாத்தில் தேசிய நீச்சல் போட்டி நடந்தது. அதில் நீண்டதூர நீச்சல் போட்டியில் பங்கேற்ற புலா  81 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வெற்றிவாகை சூடி, புதிய சாதனையையும் படைத்தார். அப்போது அவருக்கு 16 வயதுதான்!

ஏழு கடல் தாண்டி...

இந்த வெற்றிக்குப் பிறகு அவரது கவனம் முழுக்க கடலின் பக்கம் திரும்பியது. 1996-க்கும் 2005-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் அய்ந்து கண்டங்களில் உள்ள ஏழு கடல்களில் நீந்தி உலக சாதனை படைத்தார். 1998இல் மத்திய தரைக் கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கும் ஜிப்ரால்டர் ஜலசந்தியை மூன்றரை மணி நேரத்தில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். அதன் பின்னர் அய்ரோப்பாவில் உள்ள திர்ரேனியக் கடல், நியூசிலாந்தில் உள்ள குக் நீரிணைப்பு, கிரீஸில் உள்ள டொரன்னஸ் வளைகுடா, கலிபோர்னி யாவில் உள்ள கேட்டலினா கால்வாய் ஆகியவற்றை நீந்திக் கடந்தார்.

தென்னாப்பிரிக்காவின் ரோபன் தீவிலிருந்து கேப்டவுன் நகருக்கு நீந்தி சாதனை படைத்தார். 1999இல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததன் பத்தாவது ஆண்டு தினத்தையொட்டி மீண்டும் ஆங்கிலக் கால்வாயை இன்னொரு முறை கடந்தார். இதன் மூலம் ஆங்கிலக் கால்வாயை இரண்டு முறை கடந்த முதல் ஆசியப் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார்.

2004இல் இலங்கையின் தலைமன்னார் இந்தியாவின் தனுஷ்கோடி இடையிலான தொலைவை 14 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் உலகில் அய்ந்து கண்டங்களில் உள்ள ஏழு கடல்களில் நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றார்.

முதன்முறை ஆங்கிலக் கால்வாயைக் அவர் கடந்த பிறகு 1990-லேயே அர்ஜூனா விருதுக்குப் புலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இன்னொரு மகுடமாக அதே ஆண்டில் பத்மசிறீ விருதுக்கும் தேர்வானார். ஒரே ஆண்டில் இரட்டை விருதுகளைப் பெற்று அந்த விருது களுக்குப் பெருமைச் சேர்த்தார். நீச்சலைத் தாண்டி அரசி யலிலும் இறங்கி, மூழ்காமல் நீந்தி வெற்றிக்கொடி நாட்டி னார் புலா. மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராகவும் அவர் இருந்ததே அதற்குச் சான்று.

தற்போது 48 வயதாகும் புலா, கொல்கத்தாவில் நீச்சல் பயிற்சி மய்யம் ஒன்றை நிறுவி, ஏராளமான இளம் பெண்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்துவருகிறார். நீச்சலில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் அடிக் கடி கேள்வி எழுப்பப்படுவது வாடிக்கை. அப்போதெல்லாம் அவர் சொல்லும் ஒரே பதில் இதுதான்: ஒரே ஒரு நாள்கூட பயிற்சியைத் தவறவிட்டுவிடாதீர்கள். சாதிப்பதற்குக் கடினப் பயிற்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை. நீச்சலில் சாதிக்க வேண்டுமென்றால் கனவில்கூட கடல்தான் வர வேண்டும்.

காவல்துறையில்

பெண்கள்!

உலகில் முதன்முதலில் லண்டன் மாநகர காவல் துறையில்தான் 1916 -ஆம் ஆண்டு 30 பெண் காவலர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

* இந்தியாவில், 1937 - ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதன்முதலில் காவல் துறையில் பெண்களையும் சேர்த்து கொண்டார்கள்.

* 1948 ஆம் ஆண்டு டில்லியில் ஒரு பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் பெண்கள் காவலர் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

* 1973-ஆம் ஆண்டு பெண்களை முழுமையாகக் கொண்ட காவல் நிலையம் கேரள மாநிலம் கொல்லங் கோட்டில் துவங்கப்பட்டது.

* தமிழ்நாட்டில் 1973- ஆம் ஆண்டு ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக்காவலர், இருபது பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

* 1992ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முழுவதும் பெண்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner