எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெருநகரங்களில் ஆட் டோ ஓட்டும் பெண்களை ஓரளவு பார்க்க முடிகிறது. உள்ளடங்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களைப் பார்ப்பது அரிது. எத்தனை யோ துறைகளில் பெண்கள் தடம் பதித்தாலும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபடவில்லை. அந்தத் தொழிலில் உள்ள சிரமங்களும் பாதுகாப்பற்ற நிலையும் இதற்கு முக்கியக் காரணம். இப்படிப்பட்ட சூழலில் திருவண்ணாமலையில் ஆட்டோ திருமகள் என்ற அடைமொழியுடன் கம்பீரமாக வலம் வருகிறார் ரோஜா.

ரோஜாவின் அப்பா முருகன், ஆட்டோ ஓட்டுநர். அம்மா சாந்தி, திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளி. ரோஜாவின் பெற்றோருக்கு அவர் நான்காவது மகள். அக்காக்களுக்குத் திருமணமாகிவிட்டது. தம்பி, தனியார் கல்லூரியில் படிக்கிறான். அவரை வளர்த்ததில் அவரின் அம்மாவின் பங்கு அதிகம் என்று சொல்லும் ரோஜா, பிளஸ் 2 வரை படித்திருக்கிறார். தன் அப்பாவிடம் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்ததாகச் சொல்லும் ரோஜா, இதை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல், சுயமாக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற உத்வேகத்துடன் ஆட்டோ ஓட்டத் தொடங்கியிருக்கிறார். அய்ந்து ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். பல தரப்பு மக்களைச் சந்தித்துள்ளேன். பயணம் இனிமையாக இருக்கிறது என்கிறார். எப்போது ஆட்டோவில் பயணிக்க வேண்டும் என்றாலும், இவரை செல்பேசியில் தொடர்புகொண்டு அழைக்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள். அனைவரிடமும் அன்பாகப் பேசும் தனது குணம்தான் அதற்குக் காரணம் என்று நம்புகிறார் ரோஜா.

எதிர்ப்பும் ஆதரவும்: புதிதாக எதையாவது செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கடந்தே இன்றைய நிலையை ரோஜா எட்டியிருக்கிறார் . அவர் இந்தத் தொழிலில் நுழைந்ததும் சில ஆண் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பெண் என்பதால் அவர் மீது இரக்கப்பட்டு பலர் அவர் வாடிக்கையாளராகக்கூடும் என அவர்கள் நினைத்தார்கள் என்கிறார் ரோஜா.

அதேநேரத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற ஆட்டோ ஓட்டும் சகோதரர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறார். அவர்களது ஒத்துழைப்பால், திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் இங்கு ஆட்டோ ஓட்டவரும் பெண்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது என்று நம்பிக்கையுடன் சொல்லும் ரோஜா, மூன்று பெண்களுக்கு ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்தும் உள்ளார்.

கைம்பெண்களுக்கு மறுவாழ்வு

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கணவனை இழந்த கைம்பெண்கள் அதிகம் என்று 2013இல் அய்,நா. சபை தெரிவித்தது. அந்த ஆய்வறிக்கையின்படி குடியால் கணவனை இழந்த கைம்பெண்களின் எண்ணிக்கையே தமிழகத்தில் அதிகம் என்றது.

இந்தியா போன்ற நாட்டில் பெண்களின் உரிமைகளை போராடி பெறவேண்டிய சூழலில், இத்தகைய பெண் களின் வாழ்க்கை பெரும் போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது. அரசு வழங்கக்கூடிய உதவித்தொகை, அரசாங்கத்திடமிருந்து கிடைக்கக்கூடிய சலுகைகள் சரியாக அவர்களை சென்றடைகிறதா என்ற கேள்விக்கு பெரும்பாலான பெண்கள் சொல்லக்கூடிய பதில் இல்லை என்பதே. இப்படியான சூழலை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார் வேதாரண்யத்தை சேர்ந்த புஷ்பா.

புஷ்பாவின் கணவர் குடிப்பழக்கத்தால் இறந்ததால் தனிமை படுத்தப்பட்டார். தன்னைப்போல யாரும் துயரப்படக்கூடாது என்று விதவைப்பெண்கள் மறுவாழ்வு சங்கம் தொடங்கி நடத்தி வருகிறார். தான் கடந்து வந்த வலிகள் நிறைந்த அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட புஷ்பா திருமணமாகி 11 ஆண்டுகளே கணவருடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறினார்.

இவரைப்போலவே கணவனை இழந்த பெண்களை ஒன்று திரட்டி மறுவாழ்வு சங்கத்தை 2004 ஆம் ஆண்டு உருவாக்கியிருக்கிறார். கணவனை இழந்த பெண்கள் அனைவரும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று சங்கத்தின் வாயிலாக பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்த சமுதாயத்தில் சாதாரண மக்களுக்கு இழைக்கப்படக் கூடிய அநீதிகளை விட விதவைப்பெண்களுக்கு மோச மான அநீதிகள் இழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நானும் அந்த வலிகளை கடந்து வந்திருக்கிறேன் என்றவர் தொடர்ந்து நம்மிடையே பேசினார்.

நான் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள உதயமார்த் தாண்டபுரம் என்கிற ஊரில் பிறந்து வளர்ந்தேன். திருமணம் நடந்து 11 ஆண்டுவரை எல்லா பெண்களைப் போலவும் நானும் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தேன். அப்போதுதான் என் வாழ்க்கையை திருப்பிப்போட்டது அந்த சம்பவம். என் கணவர் குடிப்பழக்கத்தால் இறந்து போக இரண்டு கைக்குழந்தைகளுடன் நிர்கதியாக்கப்பட்டேன்.

இந்த சமுதாயத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இரண்டு குழந்தை களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு என்னை தொடர்ந்து உழைக்க வைத்தது. கேலி பேச்சுக்களுக்கு இடையே என் வாழ்க்கை சென்றது. இந்த நிலை மாறவேண்டும் என்று நினைத்தேன். என்னைப்போலவே குடியால் கண வனை இழந்த பெண்களை ஒன்று திரட்டி கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கணவனால் வஞ்சிக்கப் பட்ட பெண்கள் குழு ஒன்றை உருவாக்கினேன்.

இந்தக் குழு மூலம் கைம்பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தோம். கடந்த 2004 ஆம் ஆண்டு எங்கள் ஊரில் சுனாமி ஏற்படுத்திய பேரழிவிற்குப் பிறகு பல தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் பல உதவிகள் செய்தன. அந்த சமயத்தில் குடும்ப அட்டை உள்ள குடும்பங்களுக்கு அந்த உதவிகள் வந்து சேர்ந்தன. கணவன் இறந்த பிறகு அரசு உதவித் தொகை பெறும் பெண்களுக்கு குடும்ப அட்டை மறுக்கப்பட்டதால் எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

இதை உணர்ந்த தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஊரிலும் எத்தனை விதவைப்பெண்கள் இருக்கிறார்கள் என்று அந்தந்த ஊர் தலைவர்களிடமும், கிராம நிர்வாக அலுவலர்களிடமும் கணக்கெடுப்பு நடத்தி உதவ முன்வந்தார்கள். இப்படி எல்லா விதத்திலும் பாதிக்கப் படுவது கணவனை இழந்த பெண்களாக இருந்தார்கள். அவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது.

சில பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தார்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு எங்களது குழுவை சங்கமாக உருவாக்கினோம். இன்று ஒரு கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறோம். இந்த சங்கத்தின் மூலம் கைம்பெண்களுக்கு குடும்ப அட்டை வழங்கவேண்டும் என்று தமிழக அரசிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும் சுய தொழில் பயிற்சி அளித்து வருகிறோம்.

இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறோம். அவர் களின் பிள்ளை களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். நாகப்பட்டினம், சுற்று வட்டார பகுதிகளில் சங்கத்தை விரிவுபடுத்தியுள்ளோம். தமிழக அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை முறையாக பெற்றுத் தருகிறோம். இந்தப் பணிகளுக்கு இடையில் பல்வேறு சிறுகுறு தொழில்கள் செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்தேன். என்னைப்போலவே எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு சிறு தொழிலை செய்து யாருடைய உதவியும் இன்றி உழைத்து வருகிறார்கள். மறுவாழ்வு குறித்த ஆலோ சனைகள் இங்கு வழங்கப்படுகின்றன.

23 செயற்குழு உறுப்பினர்களைக் கொண்டு சங்கம் இயங்கி வருகிறது. இதில் நான்கு முறை தலைவராக பொறுப் பேற்று இருக்கிறேன்.  பொதுக்குழு செயலாளராகவும் தற்போது இருக்கிறேன். சிறு குழுவாக தொடங்கி இன்று ஆயிரத் துக்கும் மேலான உறுப்பினர்கள் எங்கள் குழுவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்  என்றார் புஷ்பா.

இளம் விஞ்ஞானி கீதாஞ்சலி    

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமியான கீதாஞ்சலி ராவ் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் விஞ்ஞானியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். தண்ணீரில் காரீயம் கலந்திருப் பதைக் கண்டறிய அவர் உரு வாக்கியுள்ள புதிய கருவியான டெத்ஸிற்காக இந்த விருதை அவர் வென்றிருக்கிறார்.

அமெரிக்காவிலுள்ள 5 முதல் 8ஆம் வகுப்பு மாண வர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியை, 3எம் நிறுவனம் நடத்தியது. தினசரி பிரச்சினைகளுக்கான அறிவியல்பூர்வமான தீர்வுகளை மாணவர்கள் இப் போட்டியில் முன்வைக்க வேண்டும்.

25,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையும், அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் விருதும் கொண்டது இப்போட்டி. இதில், நீரில் கலந் துள்ள காரீயத்தின் அளவைக் கண்டறிந்து, புளூடூத் மூலம் கைபேசிக்குத் தகவல் அனுப்பக்கூடிய கீதாஞ்சலியின் கருவிக்கு, முதற்பரிசு கிடைத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner