எழுத்துரு அளவு Larger Font Smaller Font


குடும்பத்தில் முந்தைய தலைமுறையினர் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் அல்லது வேறு புற்றுநோய்கள் இருந்தால் அதன் காரணமாகப் பொதுவாக மார்பகப் புற்றுநோய் வரலாம். இதனை மரபணு சார்ந்த புற்றுநோய் என்பார்கள். மற்றவர்களைவிட தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம். அதே நேரம் நிச்சயம் வரும் என்று சொல்லவும் முடியாது.

புகை, குட்கா, பாக்கு, புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அல்லது வேறு புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம். நாற்பது வயதைக் கடந்த பெண்கள் சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மார்பகத்தில் சிறு கட்டி வந்தால்கூட உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
புற்றுநோய் தாக்கியவர்களுக்கு மார்பகத்தில் கட்டிகள் வளரும். இந்தக் கட்டிகளால் வலி இருக்காது. வலி இருந்தாலும் இல்லை யென்றாலும் அசட்டையாக இருக்காமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல மார்பகத்தைச் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம், வீக்கம், காம்பில் நீர்வடிதல், ரத்தக்கசிவு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயை அறிந்துகொள்ளும் மமோகிராம்  பரிசோதனையைக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். சுய பரிசோதனையிலேயே கட்டிகளைக் கண்டுபிடித்து விடலாம். அதனால் மாதத்துக்கு இரண்டு முறை சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

தெரியுமா உங்களுக்கு...?

சமீபத்தில் தமிழ்நாடு பெண் விவசாயிகள் உரிமைகள் கழகம், விவசாயப் பணியில் ஈடுபட்டும் விவசாயிகளாக பெண்கள், அங்கீ கரிக்கப்படாத நிலை இருப்பது தொடர்பான ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்களில் 65.5 சதவீதம் பேர் வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயப் பணிகளில் ஒட்டுமொத்த உடல் உழைப்புப் பணியில் 37 சதவீதம் பேர் பெண்கள். உணவு உற்பத்தி மற்றும் பால் உற்பத்தித் தொழிலில் 90 சதவீதம் பெண்களே உள்ளனர். விதைக்கும் பருவத்தில் ஒரு பெண் 3 ஆயிரத்து 300 மணி நேரத்தை வயலில் செலவிடுகிறார்.

ஆணோ ஆயிரத்து 860 மணி நேரமே செலவிடுகிறார். ஆனால், பெண்களுக்கு விவசாயிகள் என்ற தகுதி கிடைப்பதில்லை. நில உரிமையாளராக யார் இருக்கிறாரோ அவர்களையே சட்டம் விவசாயி என்று அங்கீகரிக்கிறது. 2010-2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வேளாண்மை கணக்கெடுப்பில் 12.69 சதவீதம் கிராமப்புறப் பெண்களே நில உரிமையாளராக இருக்கின்றனர்.

களமாடும் பெண்கள்

பன்னிரண்டு வயதில் திருமணமாகி, அய்ந்து குழந்தை களை அடுத்தடுத்து பெற்று, அதிகம் படித்தறியாத ஒரு சராசரி கிராமத்துப் பெண்ணால் என்ன செய்துவிட முடியும்? இந்தக் கேள்விக்கான பதிலாக பேருருவெடுத்து நிற்கிறார் சம்பத் பால் தேவி.உத்தரப்பிரதேசத்தின் புந்தேல் கண்ட் பகுதியில் இருக்கும் தனது கிராமத்துத் தெருவில் வழக்கம்போல் நடந்து சென்று கொண்டிருந்தார் அவர். அப்போது ஒரு வீட்டு வாசலில் அபயக் குரல். தன் மனைவியை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து மோசமாக அடித்துக் கொண்டிருந்தான் ஒரு கணவன். வலி பொறுக்க முடியாமல் அவள் அழுகிறாள்; குழந்தைகள் கதறுகின்றன. அவன் அடிப்பதை நிறுத்துவதாக இல்லை.

தெருவில் போகும் ஆண்களும் பெண்களும் இது ஏதோ நமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பது போல கடந்து செல்கின்றனர். சம்பத் தேவியால் அப்படி கடந்து போக முடியவில்லை. ஏன் அந்தப் பெண்ணை இப்படி அடிக்கிறாய்? அவளும் உன்னை மாதிரி ஒரு ஜீவன்தானே? என அந்த கணவனிடம் தட்டிக் கேட்கிறார் அவர். என் பொண்டாட்டியை நான் அடிப்பேன்... கொலைகூட செய்வேன்.அதைக் கேட்க நீ யாரு எனக் கேட்டு சம்பத் தேவியையும் திட்டுகிறான் அந்தக் கணவன். அவ மானத்தில் தலைகுனிந்தபடி வந்துவிடுகிறார் அவர். ஆனால் அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை. ஓர் அபலைப் பெண்ணை காரணமே இல்லாமல் அவள் கணவன் அடிக்கிறான் என்றால், அதைப் பார்க்கும் எல்லோரும் சும்மா வந்துவிட வேண்டுமா? அடி வாங்கியே நொறுங்கிப் போவதுதான் அவளது விதியா?

சம்பத் தேவி ஒரு புரட்சிப் பெண் பேருரு எடுத்தாள் அன்று. அடுத்தநாள் தன்னுடன் 5 பெண்களை அழைத்துக் கொண்டார் அவர். எல்லோரது கைகளிலும் மூங்கில் கம்புகள். வீடு புகுந்து அந்தக் கணவனை அப்பெண்கள் அடிக்கிறார்கள். இனிமேல் பொண்டாட்டியை அடிப்பியா? எனக் கேட்டுக் கேட்டு அடிக்கிறார்கள். தெருவே திகைத்துப் போய்ப் பார்க்கிறது.

அன்றிலிருந்து அவன் தன் மனைவியை அடிப் பதில்லை.இந்தச் சம்பவம் அந்த எளிய கிராமத்தையே மாற்றியது. 5 பேர் அய்ம்பது பேர் ஆனார்கள். அக்கம்பக்க கிராமங்களுக்கும் தகவல் பரவி, சம்பத் பால் தேவிக்கு ஆதரவு பெருகியது. நிறைய பிரச்சினைகள் அவரைத் தேடி வர ஆரம்பித்தன. வரதட்சணை கேட்டு மருமகளை மிரட்டிய மாமனாருக்கு அடி, மனைவியை வீட்டை விட்டுத் துரத்த முயன்ற கணவனுக்கு அடி, மருமகளை ஸ்டவ்வை வெடிக்கச் செய்து கொலை செய்ய முயன்ற மாமியாருக்கு அடி என எங்கும் மூங்கில் கம்புகளால் நீதியைத் தேடினர்.

நிறைய பேர் சேரச் சேர, தங்கள் அமைப்புக்கு ஒரு அடையாளம் தேவை என தீர்மானித்தார் அவர். அதுதான் பிங்க் நிற சேலை. இந்த சேலையை வைத்தே குலாபி கேங் என்ற பெயரும் இவர்களுக்கு வந்துவிட்டது. பளிச்சென தெரியும் இந்த உடை அணிந்தே இந்த அமைப்பினர் செயல்பாடுகளில் இறங்குகின்றனர். குலாபி கேங் என்ற இவரது அமைப்பில் இப்போது 20 ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, பெண்களை பள்ளியிலிருந்து நிறுத்துவது என பெண் விடுதலைக்கு எதிராக எங்கு தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்கப் புறப்பட்டு விடுகிறது இந்தப் பெண்கள் படை. குடும்பப் பிரச்சினைகளை தாண்டி பொதுப் பிரச்சினைகளையும் கையில் எடுத்திருக்கிறது இந்த அமைப்பு.

லஞ்சம் வாங்குவதற்காகவே அடிக்கடி மின்சாரத்தை நிறுத்திய மின்துறை அதிகாரிகளை அலுவலகம் புகுந்து அடித்தனர்; பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் புகார் வாங்க மறுத்த காவல்துறையினருக் கும் இதே தண்டனை. இப்படி குலாபி கேங் எடுக்காத பிரச்சினைகள் இல்லை. குலாபி கேங் என்ற பெயரில் இந்த அமைப்பைப் பற்றி மிஷ்தா ஜெயின் என்ற பெண் இயக்குநர் ஆவணப் படம் ஒன்றையும் எடுத்து வெளியிட்டார். இந்த அமைப் பின் நிஜமான உறுப்பினர்களே இதில் நடித்திருக்கிறார்கள்.எல்லாவற்றுக்கும் அடிப்பது வன்முறை இல்லையா என நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு இயல்பாகத் தெரியும் நியா யத்தை நாங்கள் செய்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பெண் விடுதலை என்பது, ஒரு பெண் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தித் தருவது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இப்போது பிங்க் சேலை என்பது பெண் சக்தியின் குறியீடாக இங்கு மாறியிருக்கிறது என்கிறார் சம்பத் தேவி.

ஆவணப்படத்தில் பால்ய திருமணம் செய்யப்பட்டு வாழ்க் கையை தொலைத்தவர், எப்படி முழுநேர இயக்கப் போராளியாய் மாறினார் என்பதை வயற்காட்டில் நின்று சம்பத் பால் தேவி விவரிக்கும் இடம் கவிதை.  அவரது அன்றாட நடவடிக்கைகள் படமாக்கப்பட்ட விதத்தோடு அவர்கள் பற்றிய மக்களின் மாற்றுக் கருத்தும் போகிறபோக்கில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.தூங்கும் நேரம் தவிர, மீதி நேரம் முழுக்க முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடியே வாழ்ந்தவள்தான் நான். அது என் இயல்பு இல்லை. ஒரு நாளில் வெகுண்டெழுந்து வீட்டைவிட்டு வெளியே வந்தேன். சுயமாக சம்பாதித்தேன். என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களை சேர்த்து கொண்டு பயப்படும் பெண்களுக்கு அனுசரணையாக பேசத் தொடங்கினேன்.

சில நேரங்களில் தடி எடுக்கும் சூழலும் வந்தது. அதற்காக வம்பு வழக்கும் வராமல் இல்லை. ஆனால் மக்களே எங்களுக்கு குலாபி கேங் என்று பெயர் சூட்டினார்கள். ஆண்களும் தன்னார்வலராக எங்களுக்கு உதவி செய்கிறார்கள். இப்போது மாநில முதல்வர்கள் வரை எங்களை கவனிக்கிறார்கள். குலாபி கேங் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப் பினர்களுடன் வளர்ந்து நிற்கிறது! என்கிறார் இந்த ஆவணப்படத்தில் சம்பத் பால்.

ஒவ்வொரு கிராமமாகப் போவோம். புதிய சுதந்திரம் பெறுவோம்! குலாபி கேங் ஜிந்தாபாத்! இதுதான் இவர்களது முழக்கம்! 20 பேரில் ஆரம்பித்த இந்த குலாபி கேங் இயக்கம் உத்தரப்பிரதேசம் தாண்டி மத்தியப்பிரதேசம் வரை ஊடுருவி இரண்டு லட்சம் பேர் வரை பேரியக்கமாய் உருவெடுத்துள்ளது.இந்த கேங்கின் நிறுவனர், தலைவி சம்பத் பால் தேவி. 53 வயதில் அலுவலகம் அமைத்து பெரும் கட்சி நிறுவனத்தை நடத்துவது போல கட்டுக் கோப்பாய் நடத்துகிறார். வன் முறை தீர்வு இல்லைதான். ஆனாலும் இப்பெண்களின் துணிச்சலை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner