எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண்களுக்காக பெண்களே நடத்தும் தொலைக்காட்சி

 

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு பெண்களே நடத்தும் தொலைக்காட்சி டிவி சேனல் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.  சான் டிவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி சேனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் தலைநகர் காபூலில் துவங்கப்பட்டுள்ளது.

இந்தச் சேனலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பேசப் போகிறது. சேனலின் சிறப்பம்சம் என்னவென்றால் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாகவும் பெண்களே இருக்கிறார்கள்.

ஆப்கன் போன்ற ஆண்கள் அடக்குமுறை அதிகமுள்ள நாட்டில் இத்தகைய சேனல் துவங்கப்பட்டுள்ளது அந்நாட்டில் புதுமையானதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த டிவி சேனல் சமூக வலைத்தளத்தில் பிரபலமடைந்துள்ளது.

இதுகுறித்து சான் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாள ராகவுள்ள கதிரா அகமதி (20) கூறும்போது, “பெண்களுக்காக தொலைக்காட்சி சேனல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் தங்களது உரிமைகளைப் பற்றி அறியாத பெண்கள் பலர் உள்ளனர். அத்தகைய பெண்களுக்காக  இந்தச் செய்தி சேனல் செயல்பட இருக்கிறது. இதன் மூலம் அப்பெண்களின் குரலை உயர்த்த முடியும்“ என்றார்.

சான் டிவி காபூலை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. பெண்கள் பிரச்சினைகளுடன், ஆரோக்கியம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன.

சான் ட்வி நிறுவனர் ஹமித் சமார் கூறும்போது, “காபூல் போன்ற நகரங்களில் பெண்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் நிகழ்ச்சிகளை காண்பதற்கு பெண்கள் பலர் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த டிவி சேனலில் பணிபுரியும் பெண்களில் பெரும்பாலான வர்கள் மாணவிகள். இவர்களைத் தவிர்த்து வீடியோ, ஆடியோ, கிராபிக்ஸ் போன்ற தகவல் தொழிநுட்பம் சார்ந்த பணிகளில் ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு பணிபுரியும் பெண்கள் பலருக்கு ஊடகத் துறையில் இருப்பதால் அச்சுறுத்தல்கள் பல வருகின்றன. சில பெண்களை ஏற்றுக் கொள்ளாத குடும்பங்களும் உள்ளன” என்றார்.

பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசும் டிவி சேனல் உருவாக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இன்றைக்கும் ஈட்டலாம் வருவாய்

பொருளாதார ரீதியிலாக பெண்கள் சுய சார்போடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பெண் கல்வி ஊக்குவிக்கப் படுகிறது. பெண்களுக்கான தொழிற் பயிற்சிகள் வழங்கப்படு கின்றன. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் என்பது பெண்களுக்கும் பொருந்தும்.

ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு தையற்பயிற்சி, எம்பிராய்டரிங் மற்றும் கைவினைப்பொருட்களுக்கான பயிற்சிகள் தமிழகமெங்கும் பரவலாக அளிக்கப்பட்டதன் நோக்கம் இதுதான்.தான் கற்றுக்கொண்ட கைவினைக் கலையை நூற்றுக் கணக்கானோருக்கு கற்றுக் கொடுத்து அவர்களை தொழில் முனை வோர் ஆக்கியவர் சிஸ்டர் மெர்சி. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செயின்ட் உர்சுலாஸ் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கைவினைக் கலைப் பயிற்று மய்யத்தை நிர்வகித்து வருகிறார் மெர்சி. தூத்துக்குடிதான் என் சொந்த ஊர். ஆடை உருவாக்கம், எம்பிராய்டரி, ஓவியம் படித்தேன். அதன் பிறகு மும்பையில்  ஸ்கிரீன் ப்ரின்டிங், டெக்ஸ்டைல் டிசைனிங், பத்திக் ப்ரின்ட் கத்துக்கிட்டேன். கன்னியாகுமரி மாவட்டத்தில்  12 ஆண்டுகளில் 3500க்கும் மேற்பட்ட வங்களுக்கு எம்பிராய்டரி, லேஸ் மேக்கிங்  பயிற்சிகள் கொடுத்திருக்கேன். சென்னையில் 15 ஆண்டுகள் லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் பள்ளியில் இருந்தேன். அப்போ பள்ளி மாணவிகளுக்கு மட்டுமில்லாமல், பள்ளி முடித்த பெண் களுக்கும் பல விதமான கைவினைக் கலைப்பயிற்சி கொடுத்திருக் கேன். பயிற்சியின்போது செய்யப்படும் பொருட்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தையும் அவர்களுக்கே கொடுத்து விடுவேன்.  இன்னைக்கு மெஷின் எம்பிராய்டரி வந்துட்டதால இதன் மதிப்பு குறைஞ்சிருச்சுன்னு சொல்லலாம். ஆனா இன்னைக்கும் இதன் மூலமாக வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்ட முடியும் என்றார் மெர்சி.

ஜப்பான் செல்லும் சுடரொளி

கிராமத்து இளம் பெண்ணின் எளிமையான தோற்றம். கண்ணில் தீர்க்கமான பார்வை. அதற்கேற்ப அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் சுடரொளி. பெயருக்கேற்ப, அறிவியல் ஆர்வத்தைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்துள்ளார் அவரது ஆசிரியை கலையரசி.
மாணவி சுடரொளி சேலத்தை அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ் 1 படித்துவருகிறார்.  அவருடைய தந்தை சுடலேஸ்வரன் பெயிண்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தாய் பாப்பாத்தி, தங்கை ராஜலட்சுமி, தம்பி விக்னேஸ் வரன் என எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2014-ல் காட்டூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்தபோது, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றார். அப்போது, எளிய முறையில் செலவு குறைவான தொழில்நுட்பத்தில் விவசாயம் செய்வது குறித்து பருவகால மாற்றத்துக் கேற்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வேளாண்மை என்ற தலைப்பில் தனது அறிவியல் படைப்பினைக் காட்சிப்படுத்தினார். பின்னர் மாநில அளவிலான கண்காட்சியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

காட்டூர் பள்ளியில் படித்தபோது, எனது அறிவியல் ஆர்வத்தை கவனித்த எனது ஆசிரியை கலையரசி, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கு என்னை ஊக்கப் படுத்தினார். விவசாயத்தில் ஆர்வம் கொண்ட நான் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகளைக் காணும்போதெல்லாம் அதைத் தடுக்க முடியாதா என்று யோசிப்பேன். அதைத் தடுப்பதற்காக, ஒருங்கிணைந்த பண்ணை முறை என்ற திட்டத்தை அறிவியல் கண்காட்சிக்கான படைப்பாக எடுத்துக் கொண்டேன். இந்த திட்டம் அப்துல் கலாமின் கனவுகளில் ஒன்று என்கிறார் சுடரொளி.

விரைவில் வேளாண் விஞ்ஞானி

கோழி வளர்ப்பின் தொடர்ச்சியாக மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பின் தொடர்ச்சியாக இயற்கை உரம் உற்பத்தி, உரத்தின் மூலமாக அதிக மகசூல், வீட்டுக் கழிவு நீரில் விவசாயம், சூரிய சக்தியின் மூலமாக பாசனம் என 28 வகையான திட்டங்களை செயல்படுத்தி, விவ சாயத்தில் லாபம் பெற முடியும் என்பதை இந்த அறிவியல் கண்காட்சியில் செயல்வடிவில் காட்டினார். இதற்காக, ஏழு மாதங்கள் நேரடி விவசாயத்திலும் ஈடுபட்டார்.

இந்தப் படைப்பு தேசிய அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வுக்கான விருதுக்குத் தேர்வானது. துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியிடம் விருது பெற்றார். அதனை அடுத்து தற்போது இந்திய மாணவர்கள் 30 பேருடன் சக்குரா எக்சேஞ்ச் புரோக்ராம் ஜப்பான் எனும் பயணம் மூலமாக ஜப்பானுக்கு மே 27 அன்று புறப்படுகிறார்.

அங்கு 10 நாள் சுற்றுப் பயணம் செய்து ஜப்பான் நாட்டின் முக்கிய ஆராய்ச்சி நிலையங்களை நேரில் பார்வையிடுவதுடன், அந்நாட்டின் விஞ்ஞானி களுடன் கலந்துரையாட உள்ளார்.

அறிவியல் சுற்றுப் பயணத்துக்குப் பின்னர் இந்தியா திரும்பும்போது, விவசாயத்தைக் காக்கும் வேளாண் விஞ்ஞானியாக உருவெடுக்கும் உத்வேகத்துடன் சுடரொளி பிரகாசித்தபடி வருவார் என்பதில் அய்யமில்லை.


நான்கு முறை சிகரம் தொட்ட பெண்

எவரெஸ்ட் சிகரத்தை நான்கு முறை தொட்ட பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷு ஜாம்சென்பா. இதற்கு முன்பு 2011இ-ல் இரு முறையும், 2013-இல் ஒரு முறையும், எவரெஸ்ட் சிகரத்தை தொட்டிருக்கிறார். இந்த முறை மே 12 அன்று எவரெஸ்ட்டை அடைந்தார். இதன் மூலம் அதிக முறை எவரெஸ்ட்டை தொட்ட பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner