எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரமிக்க வைத்த பார்வையிழந்த பெண்

மாக்குலர் டிஸ்ட்ரோபி என்ற அரிய வகை பார்வைக் குறைபாட்டால் 80% பார்வையை இழந்த பிராச்சி சுக்வானி, அகில இந்திய அளவில் நடைபெற்ற கேட் தேர்வில் 98.5 % மதிப்பெண்கள் பெற்று இந்தியாவையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த சுக்வானி மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே பார்வையை இழக்க நேரிட்டது. ஆனாலும் அவரது படிப்பின் மீதுள்ள ஆர்வமும் பெற்றோரின் ஊக்கமும் பி.பி.ஏ. பட்டம் பெற வைத்தது.  தன்னுடைய கனவான அகமதாபாத் அய்.அய்.எம். நிறுவனத்தில் படிப்பை மேற்கொள்வதற்காக கேட் தேர்வை எழுதினார். இவர் பெற்ற மதிப்பெண்களால் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான அகமதாபாத் அய்.அய்.எம்., பெங்களூரு அய்.அய்.எம்., கொல்கத்தா அய்.அய்.எம். போன்றவை தங்கள் நிறுவனத்தில் சேரும்படி சுக்வானிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதுதான் என் தற்போதைய லட்சியம். அதில் தன்னிறைவு அடைந்தவுடன் பார்வையற்றவர் களுக் கான தொண்டு நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்க வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியம் என்கிறார் பிராச்சி சுக்வானி.

தந்தை சுரேஷ் சுக்வானி துணிக்கடை நடத்தி வருகிறார். அம்மா கஞ்சனா எல்.அய்.சி. முகவராக உள்ளார். மகளின் வெற்றி குறித்து அவர்கள், பிராச்சி ஒரு புத்தகப் புழு. புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். பார்வைக் குறைபாட்டைச் சரி செய்வதற்காகச் சென்னையில் சிகிச்சை மேற்கொண்டோம்.

அவளுக்காகப் பிரத்தியேகக் கண்ணாடியை வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றனர். பிராச்சியின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.

பார்வை இழந்த பின்பும் படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற பிராச்சியின் முயற்சியும் இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோளும் இருந்தால் எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து இலக்கை அடைய முடியும் என்பதைக் காட்டியுள்ளார் என்று பெருமையோடு கூறுகிறார் கல்லூரிப் பேராசிரியர் பாரத் தேசாய்.

தன்னந்தனியாக இரண்டே மாதங்களில்
60 அடி ஆழ கிணறு தோண்டி
தண்ணீர் எடுத்து 51 வயது பெண் சாதனை

மாநிலத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில் தனக்கு சொந்தமான 150 பாக்கு மற்றும் 20 தென்னை மரங்களை காப்பாற்ற தன்னந்தனியாக இரண்டு மாதமாக முயற்சித்து 60 அடி ஆழத்துக்கு கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து சாதனை படைத்த பெண்ணை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

வடகர்நாடகா மாவட்டம், சிரசி நகர், கணேச நகரை சேர்ந்தவர் கவுரி (51). இவர், 45 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் இருந்து கொண்டு அங்குள்ள 150 பாக்கு மரங்கள், 20 தென்னை மரங்கள் மற்றும் வாழை தோப்பு போன்றவைகளை பராமரித்து வருகிறார்.  தற்போது மாநிலத்தில் தண்ணீர் இன்றி மக்கள் தவித்துவரும் நிலையில், அவர் வசிக்கும் கணேச நகரிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால், கவுரிக்கு சொந்தமான விளைப் பயிர்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டது. தண்ணீர் இல்லாததால் விளைச்சல்களை காப்பாற்ற முடியாத நிலை உருவாகியது. இதனால் கவுரி கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
கூலி வேலையில் அதிக வருவாய் கிடைக் காததால் வேலைக்கு செல்வதை விட்டுவிட்டார்.

பின்னர், தனக்கு சொந்தமான பாக்கு தென்னை வாழை தோட்டத்தை எப்படியாவது நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என எண்ணினார். இதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் கிணறு தோண்ட முடிவு செய்து அதில் தீவிரமாக ஈடுபட்டார்.

கல்லுடன் கூடிய மண்ணை வெட்டியெடுக்க கடப்பாரை, மண்வெட்டி, சுத்தி, இரு இரும்பு வாளிகள் போன்றவற்றை கொண்டு 8 அடி அகலம் கொண்ட கிணற்றை வெட்டத் தொடங்கினார். அதன்படி நாள் தோறும் 3 அடி ஆழம் தோண்டத் தொடங்கினார்.

நாள் தோறும் விடா முயற்சி மேற்கொண்டு இரண்டு மாதங்களாக பள்ளம் தோண்டினார்.

நாள் தோறும் கிணற்றில் இருந்து மண்ணை வெட்டி எடுத்துள்ளார். பொதுவாக ஒரு கிணற்றை தோண்ட வேண்டும் என்றால் மண்ணை வெட் டுவது, அதை மேலே கொண்டு கொண்டுவருவது போன்ற பணிகளுக்கு குறைந்தது 3 முதல் 4 பேர்களாவது தேவைப்படும். ஆனால், தன்னந் தனியாக கிணறு தோண்டியே ஆகவேண்டும் என தீர்மானித்து 2 மாதங்களில் யாருடைய உதவியும் இன்றி கவுரி 60 அடி ஆழ கிணறு தோண்டி சாதனை படைத்துள்ளார்.

இதே நகரில் பல இடங்களில் தண்ணீர் எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் 8 இடங்களில் சுமார் 80 அடி வரை கிணறு தோண்டியுள்ளனர். ஆனால், அந்த கிணறுகளில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை.

ஆனால், கவுரி தோண்டியுள்ள 60 அடி கிணற்றில் 7 அடி தண்ணீர் கிடைத்தது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், நகரில் உள்ள மக்கள் கவுரி தோண்டியுள்ள கிணற்றினை வியப்புடன் வந்து பார்த்து கவுரிக்கு வாழ்த்து தெரிவித்துச்  செல்கின்றனர்.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு  கவுரியின் இந்த பணி ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

100 மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் கடந்த 101 வயது மூதாட்டி

ஆக்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் 101 வயதான மூதாட்டி தங்க பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

உலக மாஸ்டர்ஸ் போட்டி: 100 மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் கடந்த 101 வயதான இந்திய பாட்டி

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் மான் கவுர் என்ற 101 வயதான மூதாட்டி 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். இவர் பந்தைய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் (74 நொடிகளில்) கடந்து தங்க பதக்கம் வென்றார். இதே தூரத்தை 2009இல் 64.42 வினாடிகளில் கடந்த சாதனைப் படைத்தவர்.

100 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இவருடன் யாரும் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இல்லை. இருந்தாலும் போட்டி அமைப்பாளர்கள் அவரை ஓட சம்மதித்தனர். அவர் ஓடும்போது, நியூசிலாலந்து மீடியாக்கள் சண்டிகரில் இருந்து ஒரு அதிசயம் என்று புகழ்ந்து தள்ளியது.

தீவிர மருத்துவ பரிசோதனைக்குப்பின் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார் மேன் கவுர். அவரது மகனுடன் சேர்ந்து ஏராளமான தடகள போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டம், இரண்டு கிலோ எடையுள்ள குண்டு எறிதல், 400 கிராம் எடைகொண்ட ஈட்டி எறிதல் போட்டிகளிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டது மிகமிக மகிழ்ச்சி யளிக்கிறது. நான் மீண்டும் ஓடுவேன் என்றார் கவுர். 93 வயது வரை மேன் கவுர் தடகளத்தில் கலந்து கொண்டது கிடையாது, அவரது மகன் குர்தேவ் சிங், சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டி வட்டாரத்தில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தினார். இதனடிப்படையில்தான் தடகளத்தில் பங்கேற்று வருகிறார் கவுர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner