எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கணினியில் தமிழ் வளர்க்கும் கிராமத்துப் பெண்கள்!

கேள்விகளற்ற மனதில் பயமும் தயக்கமும் மட்டுமே அலையடித்துக்கொண்டிருக்கும். முதல் தலைமுறை பட்டதாரிகளாக கல்லூரியில் காலடி வைக்கும் கிராமத்து இளம்பெண்களின் மனதில் தோன்றி மறையும் ஏக்க மின்னல்கள் அதிகம். நகரத்துப் பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு அவர்கள் தலையில் ஏற்றிக் கொள்ளும் தாழ்வு மனப் பான்மையே அவர்களின் சிந்தனைச் சாலையில் தடை கற்களாக விழுந்து எல்லாவற்றையும் மந்தப் படுத்தி விடுகிறது.

பின் தனது தனித்திறமைகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டி, மதிப்பெண் எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, ஆங்கிலம் பேசத் தடுமாறி என்று அவர்களது நம்பிக்கையை உடைத்தெறியும் அத்தனை ஆயுதங்களும் அவர்களுக்குள்ளேயே உருவாகி  உருக்குலைத்து விடும்.நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியில் ஆயிரத்து 330 மாணவிகளுடன் நிற்கும் கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரி மாணவிகளோ வேறு விதம்! தயக்கம், பயம் எல்லாவற்றையும் ஓட ஓட விரட்டிய இந்தப் பெண்களின் நிமிர்ந்த நன்னடை பிரமிக்க வைக்கிறது.

வாசிப்பு, யோசிப்பு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பகிர்வு என உலக விஷயங்களை எல்லாம் கிளறி, பிரித்து, மேய்ந்து புதிய சிந்தனைக்கான வாசல்களை எப்போதும் திறந்தே வைத்திருக்கின்றனர் இவர்கள்! இணையத்தில் தமிழில் தகவல்களை ஏற்றும் கணித்தமிழ் பேரவையில் மாணவிகள் கலக்குகின்றனர். பல்வேறு புதிய தகவல்கள், கண்டு பிடிப்புகள் உள்பட படித்த, பிடித்த விஷயங்களை தமிழில் கட்டுரைகளாக எழுதுகின்றனர் (ksrcasw.blogspot.in).

இக்கல்லூரிக்கு வருபவர்கள் எல்லாமே கிராமத்து மாணவிகள். பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகள். வகுப்பறைக்கு அப்பாலும் நடக்கும் புத்தக வாசிப்பே அவர்களது சிந்தனைக்கு சிறகு அளிக்கிறது. வள்ளுவர் வாசகர் வட்டம் புத்தக வாசிப்புக்கான களமாக உள்ளது. விருப்பம் உள்ள புத்தகங்களைப் படித்து வந்து வாசகர் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம், விமர்சிக்கலாம். இதனால் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

மாணவிகளின் கலைத்திறனை வெளிப் படுத்த மெல்லினம் என்ற காலாண்டு இதழ் வெளி யாகிறது... என்று அறிமுகம் செய்கிறார் கல்லூரியின் செயல் இயக்குனர் கவிதா சீனிவாசன்.

துறை சார்ந்த புதிய தகவல்களை தெரிந்து கொள்ள பேராசிரியர்களைக் கொண்ட அறிவுப் பரிமாற்றம் மன்றம் இயங்குகிறது. மாணவிகளின் தயக்கத்தை உடைத்து, ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க, போராடி ஜெயித்த வெற்றி யாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை தருகிறோம். கணித மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை சொல்ல Rhapsodical மன்றம் செயல்படுகிறது.

கணினி அறிவை மேம்படுத்த ஸ்மார்ட் ஸ்டார் மன்றம் இயங்குகிறது. வணிகத்தையும் வார்த்தை களோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கான மாடல் களை உருவாக்கி கண்காட்சி நடத்துகிறோம் என்கிறார் வணிகவியல் துறைத்தலைவர் ராதிகா. கணித்தமிழ்ப் பேரவை மாணவி வைசாலி இரண்டாம் ஆண்டு வணிகவியல் படிக்கிறார்... கல்லூரிக்கு வரும் முன்னர் கணினிப் பயன்பாடு பற்றி பெரிய அளவில் எனக்குத் தெரியாது. கணித்தமிழ் பேரவையில் கணினியைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள கற்றுக் கொண்டேன். கணினியில் எனக்கு வேலைவாய்ப்பும் கிடைத் துள்ளது.

இணையத்தில் ஆசிரியராகவும், எழுத்தா ளராகவும், மறுமொழியாளராகவும் இருக்கிறேன் என்கிறார் வைசாலி. பட்டிமன்றங்களில் பட்டை கிளப்பி வரும் பி.எஸ்சி. கணிதம் மூன்றாம் ஆண்டு மாணவி கு.நந்தினி சிந்தனை மன்றத்தால் செதுக்கப் பட்டவர். ஒரு காலத்தில் மேடை ஏறினாலே பேச்சு வராது. அவ்வளவு படபடப்பாக இருக்கும். சிந்தனை மன்றமே என் கண்களைத் திறந்தது.

எனக்குள் இருக்கும் பேச்சாற்றலை கண்டு கொள்ள உதவியது. சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றது பெருமையாக இருக்கிறது என்கிறார் நந்தினி.

மெல்லினம் இதழை தன் ஓவியங்களால் அழகு செய்யும் சுகன்யா இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கிறார். கல்லூரி வந்த பின்னரே ஓவியத்தில் புதிய முயற்சிகள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. செய்திப் பலகையிலும் என் ஓவியங் களுக்கு தனி இடம் உண்டு. எனது ஓவியங்களை கல்லூரியின் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு எனது திறமையை உலகம் அறியச் செய்கின்றனர் என்கிறார் சுகன்யா. மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. கணிதம் மாணவி கீர்த்தனா கல்லூரியின் செல்லக் கவிதாயினி.