எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலை நிமிர்ந்த பெண்கள்!

பாளையங் கோட்டை யைச் சேர்ந்த பெண்கள், அரசுத் திட்டத்தின் மூலம் தாங்கள் கற்றுக்கொண்ட பயிற்சியை களத்தில் வெளிப் படுத்தி வருகிறார்கள்.

கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக பாளையங் கோட்டை தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர்கள் கைகோத்தனர். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை உதவியுடன் ஸ்டாண்ட் திட்டம் மூலமாகப் பெண்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளித்தனர். சமூக, பொருளாதார நிலைகளில் பெண்களை ஆற்றல்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தொழில்நுட்பப் பயிற்சிகள் மூலம் கிராமப்புறப் பெண்களின் விவசாயத் திறன்களை உயர்த்தி, அதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

இதற்காக ஸ்டாண்ட் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் பெண்களை ஒன்றிணைத்து பெண்கள் கூட்டமைப்புகள் உருவாக்கப் பட்டன. மொத்தம் 30 கிராமங்களில் 600 பெண்கள் இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கூட்டமைப்புகளுக்குத் திறன்சார் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதன்படி கல்லூரி வளாகத்தில் பயிற்சி, கிராமங்களில் நேரடி பயிற்சி, அசோலா மற்றும் மண்புழு உரம் உருவாக்கும் களப்பயிற்சி என்று மூன்று கட்டமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக தூய சவேரியார் கல்லூரி வளாகத்திலேயே இரண்டு இடங்களில் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் அசோலா வளர்த்தல், மண்புழு வளர்த்தல், திசு வளர்த்தல், அலங்கார மீன் வளர்த்தல் போன்ற பயிற்சிகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டன.

பயிற்சியின் முடிவில் தாங்களே அசோலா, மண்புழு உரம் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் அளவுக்கு கிராமப்புற பெண்கள் ஆற்றல் பெற்றனர். தற்போது வங்கிகளில் கடன் பெற்று சுயமாகத் தொழில் தொடங்கவும் பலர் காத்திருப்பதாகச் சொல்கிறார் இந்தத் திட்டத்தை நெறிப்படுத்தி நடத்தியவரும் தற்போது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளராகவும் உள்ள ஜான் டி பிரிட்டோ.

இங்கு பயிற்சி பெற்ற பெண்கள் எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து நிற்பார்கள். பொருளாதார உரிமைகளைப் பெறும் இவர்கள், சமுதாயத்துடன் இணைந்து கிராம வளங்களை உயர்த்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சில பெண்கள் கடனுதவி பெற்று அசோலா தயாரிப்பில் ஈடுபட்டு, அவரது நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறார்கள்!