எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவின் முதல் முன்மாதிரி கிராமம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடி. கோயிலும் கோயில் சார்ந்த குடிகளும் நிறைந்தது. குன்றக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கையில் குடையும் இன்னொரு கையில் புத்தகப் பையுமாக வலம்வரும்

லலிதா அம்மாள், 82 வயதிலும் பாதம் தேய சமூக சேவையாற்றி வருகிறார்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கவும், பெண்கள் அறியாமையிலிருந்து விடுபடவும் வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூகப் பணியாளரான லலிதா அம்மாளைத் தெரியாதவர்கள் அந்தப் பகுதியில் குறைவு. இந்தச் சேவையைச் செய்வதற்காக 1985ஆம் ஆண்டு அப்போதைய குன்றக்குடி அடிகளார் ஆதீன மடம் சார்பில் லலிதா அம்மாளைச் சமூகப் பணியாளராக நியமித்தார்.

சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைத்து கருதப்படும் குலத்திலிருந்து சேரிக்குச் சென்றவர் லலிதா. குழந்தைகள் கல்வி பெறவேண்டிய அவசியத்தைப் பெற்றோரிடம் எடுத்துரைத்து, பள்ளியில் சேர்த்துவிடும் பணியை அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொண்டுவருகிறார். பெண்களுக்கு அரசாங்கம் வழங்கும் அனைத்துத் திட்டங்களும் சென்றுசேர இணைப்புப் பாலமாகத் திகழ்கிறார். திருமண உதவித்தொகை, கணவரை இழந்த பெண்களுக்கான உதவித்தொகை, முதியோர்களுக்கு உதவித் தொகை, கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவி என்று அரசாங்க உதவிகள் அனைத்தும் கிடைத்திட உதவி புரிந்துவருகிறார்.

தினந்தோறும் அரசுப் பள்ளி, ஊட்டச்சத்து மய்யம், சத்துணவுக் கூடம், அரசு மருத்துவமனை என்று ஒவ்வோர் இடத்துக்கும் நடந்தே செல்கிறார். வகுப்புக்கு வராத மாணவர்களைக் கணக்கெடுக்கிறார். காரணம் அறிய அவர்களின் வீடுகளுக்குச் செல்கிறார். உடல் நலம் சரியில்லாத குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்கிறார். கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கிய மகப்பேறுக்கு மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் அயராது உழைத்துவருகிறார்.

அய்ம்பது வயதில் சமூகப் பணியாளராக மாறி, 32 ஆண்டுகளாகச் சிறிதும் சோர்வின்றி உழைத்துவரும் லலிதா அம்மாளை, மக்கள் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் கொண்டாடுகிறார்கள். தள்ளாத வயதிலும் தளராத உற்சாகத்துடன் நடைபோடுகிறார் லலிதா அம்மாள்.