எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எதுவுமே வீண் இல்லை!

எதையுமே மூன்றாவது கோணத்தில் இருந்து அணுகுவது தன்னை வித்தியாசப் படுத்திக் காட்டும் என்று நம்புகிறார் சங்கவி. சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவியான இவர், தன்னைக் கவர்ந்த கலையையும் தன் அடையாளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

படிப்புக்கு இடையில் கிடைக்கிற நேரத்தைத் தன் கலையார்வத்துக்கான தளமாகக் கச்சிதமாகப் பயன்படுத்து கிறார் சங்கவி. கைவினைக் கலையைப் பொழுது போக்காகச் செய்வதைவிட உணர்வு பூர்வமாக ஒன்றிப்போய் செய்யும் போது அதன் விளைவு கற்பனைக்கு எட்டாத அழகுடன் மிளிரும் என்று சொல்லும் சங்கவி, எளிய பொருட்களையும் கலையழகு சொட்டும் படைப்பாக்கி விடுகிறார்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியம் வரையறதுல ஆர்வம் அதிகம். காலேஜ் வந்ததும் கைவினைப் பொருட்கள், பொம்மைகள் மீது என்னோட கவனம் திரும்பியது. பத்திரிகைகளில் கைவினைப் பொருட்களின் படங்களைப் பார்க்கும் போது, நாமும் செய்யலாமேன்னு தோணுச்சு. அப்படி செய்ய ஆரம்பிச்சு, பிறகு இண்டர் நெட் டைப் பார்த்து என்னை மேம்படுத்திக் கிட்டேன்.

கொஞ்சம் நேரமும் பொறுமையும் இருந்தா எல்லோராலும் இதைக் கத்துக்க முடியும் என்று சொல்லும் சங்கவி, காகிதத் தில் செய்யும் க்வில்லிங் கிராஃப்ட்டை எந்த விதமான கருவியும் இல்லாமல் செய்கிறார்.

தான் செய்கிறவற்றை உறவினர்களுக் கும் நண்பர்களுக்கும் பரிசாகக் கொடுப் பதில் மகிழ்ச்சியடையும் இவர், வேண்டாம் என்று தூக்கியெறிகிற பொருட்களில் ஒளிந் திருக்கிற கலையழகை நாம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார். பயனில்லை என்று வீசிவிடுகிற பொருட்களை வைத்தும் கலைப் பொருட்களைச் செய்யலாம். இப்படிப் பொருட்களை மறுசுழற்சி செய்வதால் குப்பைகளின் அளவு கணிசமாகக் குறையும் என்று சமூக அக்கறையுடன் சொல்லுகிறார் சங்கவி.   


நீதித்துறையில் பெண்கள்

கல்வித்துறையில் அதிக சதவிகிதம் படித்தவர்கள் கொண்ட மாநிலம் கேரளா. அதிலும், அதிகம் பெண்கள் படித்த மாநிலமாக வரலாறு படைத்த கேரளாவில் தற்போது இன்னொரு சாதனையும் நிகழ்ந்துள்ளது. கேரள நீதித்துறை வரலாற்றிலே முதன் முறையாக கேரள உயர் நீதிமன்றம் 4 பெண்களை அமர்வு நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளது.

1959ஆம் ஆண்டு இந்தியாவிலே முதன்முறையாக கேரளத்தைச் சேர்ந்த அனு சாண்டி என்ற பெண்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அது மட்டுமல்ல முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். பாத்திமா பீவிதான் அவர். இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஆசிய அளவிலும் முதல் பெண் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவியேற்ற பெருமை இவருக்குண்டு.

அதிலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாக இருந்தும் நீதிமன்ற துறையில் உயர்ந்த பதவி வகித்ததும் இவர் மட்டும் தான். இவர்கள் வரிசையில் பி.வி. ஆஷா, அனு சிவராமன், மேரி ஜோசப், வி.சிர்சி ஆகிய நால்வரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகி உள்ளனர். திருச்சூர் விமலா காலேஜில் பட்டப்படிப்பும், எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டமும் பயின்றவர் பி.வி.ஆஷா.

1983இல் அரசியலமைப்பு மற்றும் சிவில் சட்ட நிபுணராக பதிவு செய்தார்.பிறகு தன் வழக்குரைஞர் வாழ்க்கையை எர்ணாகுளத்தில் தொடங்கினார். தற்போது கேரள உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகி உள்ளார். அனு சிவராமன் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். செயின்ட் தெரசா காலேஜில் பட்டப்படிப்பும், எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் பயின்றவர் இவர். 10 ஆண்டுகளாக கொச்சி மாநகராட்சிக்கு சட்ட ஆலோசகராக இருந்தவர், மூத்த அரசாங்க வக்கீலாகவும் சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மேரி ஜோசப்பும் அனு சிவராமனுடன் சேர்த்து கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் மகாராஜா அரசு சட்டக்கல்லூரியில் சட்டமும் பயின்றவர். 1983இல் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்ட நிபுணராக பதிவு செய்தார். மாவட்ட நீதிபதியாக ஆவதற்கு முன்னர் அரசாங்க வழக்குரைஞராகப் பணியாற்றி உள்ளார். வி.சிர்சி திருவனந்தபுரத்தின் பிரதான மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாகப் பணியாற்றியவர். அட்டிங்கல் கொலை வழக்கின் தீர்ப்பின் போது மக்களால் பாராட்டப் பெற்றவர்.

முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியான பாத்திமா பீவி, உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் நியமனம் பற்றிக் கூறுகையில், இது வரவேற்கத்தக்க ஒன்று. கோகலே சட்ட அமைச்ச ராக இருந்த காலகட்டத்தில் உயர் நீதிமன்றங்களில் பெண்களை நியமிக்கும் பணியில் முதன்முதலாக செயல்பட்டார். அப்போது நான் கீழ்நிலை நீதிமன்றங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உச்ச நீதிமன்றமும் அரசாங்கமும் இணைந்து மேலும் பல பெண் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. அதை உயர்த்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.