மகளிர்

பொதுவாக “ஆர்ம் ரெஸ்லிங்’ எனப்படும் “கை மல் யுத்தம்‘, சிலர் தங்கள் கை வலுவை வெளிப்படுத்தவும், சாதாரண சண்டைகளின் போது எதிராளியை வீழ்த்தவும் பயன்படுத்துவதுண்டு. இதில் ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுவதுண்டு. கருநாடகாவில் மண்டியா மாவட்டம், பாலஹள்ளியில் வசிக்கும் ரீட்டா பிரியங்கா இதில் கடுமையான பயிற்சி பெற்று, இதை ஒரு தீவிர விளையாட்டாக கருதி தேசிய அளவில் பங்கேற்று இதுவரை 16 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

“கோர் நேச்சர் ஃபிட்னஸ் சென்டர்’ இயக்குநர் விஸ்வ நாத்திடம் பயிற்சி பெற்ற ரீட்டா பிரியங்கா, வரும் செப்.2-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை ஹங்கேரி நாட்டில் புடாபெஸ்ட்டில் நடைபெறும் 39ஆவது “உலக ஆர்ம் ரெஸ்லிங்’ வாகைர் பட்டப் போட்டியில் பங்கேற்க நிதி உதவி செய்யும் - உதவும் கரங்களை எதிர்பார்க்கும் ரீட்டா கூறுகையில்:

என்னுடைய தந்தை அந்தோனிராஜ் ஒரு மல்யுத்த வீரர். அவரிடம் பயிற்சி பெற்ற நான், மைசூரில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா குஸ்தி பந்தயத்தில் முதன் முறையாக 2004- ஆம் ஆண்டு பங்கேற்றேன். தொடர்ந்து 15 ஆண்டுகளாக தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதோடு, சித்தூர் ராணி சென்னம்மா, சாமுண்டீஸ்வரி விருதுகளையும் பெற்றுள்ளேன். கடந்த அய்ந்தாண்டுகளாக கை மல்யுத்தத்தில் விஸ்வநாத் சார் மூலம் பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன்.

இந்த முயற்சிக்கு என்னுடைய தந்தைதான் இதற்கு காரணம். நான் மல்யுத்த பயிற்சி பெறும்போது கருநாடகாவில் பெண் மல்யுத்த வீராங்கனைகள் யாருமே இல்லை. நான் பயிற்சி பெறுவது பலரது விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் என் பெற்றோர் அளித்த ஊக்கம், தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்க வைத்தது. மேலும் பல பெண்கள் பயிற்சி பெற விரும்பினர். மைசூரு சாமுண்டி மைதானத்தில் மல்யுத்த பயிற்சியளிக்கும் மய்யமொன்றை துவங்கும்படி அரசிடம் கோரினோம். எவ்வித பதிலும் வராததால் என்னுடைய தந்தையே பயிற்சி மய்யமொன்றை துவங்க, விஸ்வநாத் சார் பெரிதும் உதவியளித்து வருகிறார்.

தற்போது நான் 63 கிலோ எடை பிரிவில் பங்கேற்பதால் என்னுடைய எடையை பராமரிப்பது முக்கியமாகும். உடல் எடையில் ஏற்ற இறக்கம் இருக்கக் கூடாது என்பதால் தினமும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது, பயிற்சியில் ஈடுபடுவது என முறைப் படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் இந்த விளையாட்டிற்குத் தேவையான சக்தியைப் பெற வெளிப்புறங்களிலும் கவனம் செலுத்துவது, புஜ வலிமைக்கு மிகவும் அவசியம்.

நான் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதால் உணவில் அதிக புரதம் கலந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் பணநெருக்கடியால் அனைத்து தேவை யான உணவுகளையும் சாப்பிட முடிவதில்லை. உணவில் புரதம் மற்றும் நார் சத்து அதிகம் இருக்க வேண்டுமென்பதால் கேழ்வரகு, முட்டை, பால், வெண்ணெய், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்கிறேன்.

நான் கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க எனக்கு ஊக்கமளித்தவரே விஸ்வநாத் சார்தான். அவர் ஒரு சிறந்த பாடி பில்டர் மட்டுமின்றி பயிற்சியாளரும் கூட. நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், இலவசமாக பயிற்சியளித்து வருகிறார். இதுவரை அவர் அளித்து வரும் பயிற்சிக்கு பணம் எதுவும் வாங்கவே இல்லை. அவரது பெருந்தன்மைக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.

கை மல்யுத்தம் பற்றி....

இந்த விளையாட்டில் ஈடுபடும் வீரர்களை 50 கிலோ எடை பிரிவில் 5 பேர், 60 கிலோ எடை பிரிவில் பத்து பேர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்கும் அனைவரையும் வரிசைப்படி திரும்ப திரும்ப வீழ்த்த வேண்டும்.

நான் அங்கேரியில் நடைபெறவுள்ள சர்வதேச கை மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பது பெருமையாக உள்ளது. அதே நேரத்தில் செப்டம்பரில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க நான் பெடரேஷனுக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பணத்தை கொடுத்துதவும்படி அமைச்சர்கள் உள்பட பலரிடம் கேட்டேன். முதலில் பணத்தை செலுத்தி, வெற்றி பெற்று வந்தவுடன் திரும்ப கொடுப்பதாக அவர்கள் சொல்கிறார்களே தவிர, போவதற்கே பணம் இல்லாமல் நான் தவிப்பதை புரிந்து கொள்ளவில்லை.

மாநிலத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க ஆதரவு இல்லை. இறுதியில் தேவையான பணத்தை என்னுடைய தந்தையும் நானும்தான் புரட்டினோம் என்றார்.ஆதி மருத்துவர்கள் பெண்கள்தான். உணவில் தொடங்கி மகப்பேறுவரை பெண்களே மருத்துவத்தின் ஆணிவேராக அன்றும் இன்றும் திகழ்ந்துவருகின்றனர். நவீன அறிவியலின் ஒரு கூறான அலோபதி மருத்துவத் துறையில் 19ஆம் நூற்றாண்டில் நுழைந்து பெண்கள் சாதிக்கத் தொடங்கினர். இந்திய அளவில் அப்படி சாதித்த அய்ந்து பெண்கள் பற்றிப் பார்ப்போம்.

சென்னையின் அடையாளம்

பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலம். இந்தப் பின்னணியில் ஒரு பெண் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டது எங்கே தெரியுமா? சென்னையில்! 1875இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டார் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப். அதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே பெண்கள் மருத்துவம் படிக்க முடிந்தது. சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் மேற்படிப்பு படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையை நிறுவியவர் இவரே.

இருபது ஆண்டு சேவை

எடித் பீச்சி, பிரிட்டனின் ஆரம்பகால பெண் மருத்துவர்களில் ஒருவர். பெண்ணுரிமைச் செயல்பாட் டாளரும் கூட. ஸ்விட்சர்லாந்தில் 1877இல் மருத்துவப் பட்டம் பெற்றார். 1883ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், பம்பாயின் புகழ்பெற்ற காமா மருத்துவமனையின் பெண்கள் பிரிவுக்குத் தலைமை ஏற்று சேவை புரிந்தார். 1896இல் பம்பாயில் பரவிய ஆட்கொல்லி நோயான பிளேக், காலராவைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றினார். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் பணியாற்றினார். ஆண்  பெண் மருத்துவர்களுக்கு இடையிலான ஊதிய வேறுபாட்டை எதிர்த்து, சம ஊதியம் தர வலியுறுத்தினார். பம்பாய் பல்கலைக்கழக செனட்டின் முதல் பெண் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

நாட்டின் முதல் பெண்

ஆனந்தி பாய், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அமெரிக்காவில் மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண்ணும்கூட. குழந்தைத் திருமணம் செய்துகொண் டாலும், பெண்கள் படிக்க வேண்டுமென்பதில் அவருடைய கணவர் கோபால் ஆர்வம் கொண்டிருந்தார். அமெரிக் காவில் மருத்துவம் படிக்க ஆனந்தியைத் தனியாக அனுப் பும் துணிச்சலான முடிவை 1883இல் அவர் எடுத்தார். மேற்கு நாடு ஒன்றுக்கு ஆனந்தி படிக்கச் செல்வதை இந்துப் பழைமைவாதிகள் கடுமையாகக் கண்டித்தனர்.

உலகிலேயே இரண்டாவது மகளிர் மருத்துவக் கல்லூரியான பென்சில்வேனியா கல்லூரியில் 19 வயதில் ஆனந்தி மருத்துவம் படிக்க ஆரம்பித்தார். இளங்கலைப் படிப்பை முடித்தாலும், முதுகலை படிப்பை முடிக்க இயலாத வகையில், அவரை காசநோய் தாக்கியது. 1886இல் ஆனந்தி நாடு திரும்பினார். கோலாப்பூர் அரசவை, அந்த ஊரில் இருந்த ஆல்பர்ட் எட்வர்டு மருத்துவ மனையின் பெண்கள் பிரிவுத் தலைவராக அவரை நியமித்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர் காலமானார்.

இந்தியாவில் பயின்ற முதல் பெண்

காதம்பினி கங்குலி. கல்கத்தா பெத்யூன் கல்லூரியில் படித்ததன் மூலம் இந்தியாவில் பட்டம் பெற்ற முதல் இரண்டு பெண்களில் ஒருவர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே முதல் பட்டம் (1878) பெற்றவரும் இவர்தான். 1883இல் பிரம்ம ஞான சபை சீர்திருத்தவாதி துவாரகாநாத் கங்குலியை அவர் மணந்தார். அதற்குப் பிறகு ஆசிரி யர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பினி மருத்துவம் படித்தார்.

இதன்மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பினி பெற்றார். ஆனந்தி பாய் அமெரிக்காவிலும், காதம்பினி கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் ஒரே ஆண்டில் (1886) மருத்துவப் பட்டம் பெற்றனர். 1892இல் பிரிட்டனுக்குச் சென்று தன் மருத்துவப் படிப்பை கூர்தீட்டிக் கொண்டார். இந்தியா திரும்பிய கொஞ்ச காலத்திலேயே தனியாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.

மக்கள் சேவைக்கு வந்த முதல் பெண்


ரக்மா பாய், நாட்டின் மகளிர் மருத்துவமனை ஒன்றில் சேவையாற்றிய முதல் இந்தியப் பெண். அவரது மாற்றாந்தந்தை ஷாகாராம் அர்ஜுன் மருத்துவர் என்பது இதற்கு முக்கியக் காரணம். குழந்தைத் திருமணத்துக்கு ஆட்பட்டாலும், மணமகன் வீட்டுக்குச் செல்ல மறுத்து மருத்துவம் படிக்க முனைந்தார் ரக்மா. அதற்கான சட்டப் போராட்டத்திலும் வென்றார்.

லண்டன் மருத்துவப் பள்ளியில் அவர் படிக்கச் செல்வதற்கான செலவுக்குப் பொது நிதி திரட்டப்பட்டது. நிதி திரட்ட ஊக்குவித்தவர் பம்பாய் காமா மருத்துவ மனையின் பெண் மருத்துவர் எடித் பீச்சி. 1889இல் லண்டன் சென்ற ரக்மா, 1895இல் நாடு திரும்பி சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். அந்த வகையில் பொது மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண்ணும் இவரே.கேப்டன் அனி திவ்யா (30 வயது), இவர் பதான்கோட்டில் பிறந்தாலும் தன் குழந்தைப் பருவம் முதலே ஆந்திரபிரதேச மாநிலத்தின் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

இந்நிலையில், போயிங் 777 ரக விமானத்தை இயக்கிய முதல் இளம் கமாண்டர் என்ற சாதனையைப் படைத்தார் அனி திவ்யா.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் எனது பெற்றோர், ஆசிரியருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பல தடைகளைக் கடந்து, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து கடின முயற்சியின் மூலமாக இந்த இடத்தை தற்போது அடைந்துள்ளேன்.

சிறு வயது முதலே பொருளாதார சிக்கல், மொழிப் பிரச்சினை, கலச்சார வேற்றுமை ஆகியவற்றை வெற்றியுடன் கடந்து வந்ததற்கு எனது பெற்றோரும், நண்பர்களும் பெரிதும் உதவினர்.


நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், பைலட் பயிற்சி பெற போதுமான அளவு பண வசதி இல்லை. இருப்பினும், எனது பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்து பல சங்கடங்களுக்கு இடையில் பைலட் பயிற்சி பெற வைத்தனர். அவர்கள் இதற்காக செலவு செய்த பணத்தை அவ்வளவு எளிதில் என்னால் சம்பாதித்து விட முடியாது. இதற்கிடையில் பலர் என்னை கேலி செய்தனர். அதிலும் குறிப்பாக எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஏனென்றால், விஜயவாடாவில் யாரும் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. ஆகவே எனக்கும் முழுமையாக தெரியாது.


நான் சிறு வயது முதலே, தெலுங்கு மொழியில் தான் எழுதி, படித்து, பேசிக்கொண்டிருந்தேன். மற்ற இடங்களிலும் தெலுங்கு மொழியே பிரதானமாக இருந்தது. ஆனால், இந்த மொழிப் பிரச்சினையில் இருந்து வெளிவர எனது பயிற்சி மய்யம் பெரிதும் உதவியது. சரியாக ஆங்கிலத்தை உச்ச ரிக்கவும், புரிந்துகொள்ளவும் சிறிது சிரமப்பட்டேன். பிறகு அவற்றை சரி செய்து கொண்டேன். இருந்தாலும், அதை நினைத்து நான் வருந்திய நாட்கள் அதிகம். எனது பைலட் பயிற்சி மய்யம் மிகவும் தரமானது. அங்குதான் விமானியாக அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொண்டேன். இப்போது பைலட்டாக பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் வாழ்நாள் கனவு நிறைவேறியது என்றார்.சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாகப் பணியாற்றும் திருநங்கை செல்வி, ஒரு பிரபலம் தன்னை உற்றுநோக்கும் கண்களைப் பொருட் படுத்துவதில்லை. பொருளற்ற அந்தப் பார்வைகள் உங்களை நொறுக்கிவிட முடியும் என்றால், மூன்றாம் பாலினத்தவரை தேற்றப்போவது யார்? நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள். உங்களை அனைவரும் பார்க்கட்டும். உங்களைப் பற்றியே பேசட்டும். உங்கள் வேலையில் உங்களுக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்துங்கள். அப்போது அது மூன்றாம் பாலினம் என்ற அடையாளமாக மட்டும் இல்லாமல், திறமையின் அடையாளமாக இருக்கும்.

என் பணியிடத்தில் நான் சிறந்த பிசியோதெரபிஸ்டாக இருக்கிறேன். எனது அணுகுமுறையால் நோ யாளிகள் திருப்தியடைகிறார்கள்.

சக ஊழியர்கள் பாராட்டுகிறார்கள். பணியிடத்தில் எனக்கு எவ்விதப் பாகுபாடும் தெரிய வில்லை. எனக்கு ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும் தான் இருக்கிறது.

ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆண், பெண் ஊழியர்களுக்குத் தனித்தனியாக அலுவல் அறை இருப்பது போல் திருநங்கைகளுக்கும் தனியான அலுவல் அறை வேண்டும். அப்போது ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என அனைவருமே சமமான கோட்டில் இயங்க முடியும். திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அதை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும் என்றார்.

பெண்களுக்கான வாழ்வியல் ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் என வளர்ப்பிலேயே மனதளவில் பெண்கள் பலவீனப்படுத்தப்படுகிறார்கள். அந்தக் கற்பித ஒழுக்கங்களுள் முக்கியமானது கற்பு. இதை வைத்துத்தான் பெண்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் தலைநகர் டில்லியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிர்பயா சம்பவம்.

சமூகத்தில் பல தரப்பிலும் இந்தச் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியது. தங்கள் பெண் குழந்தை களின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களுக்குப் பயம் உண்டானது. இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களும் இதனால் மனரீதியாகப் பாதிக்கப் பட்டனர். இதெல்லாம் மறைமுகமான பாதிப்பு என்றாலும், சில சாதகமான அம்சங்களும் உள்ளன. பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இதனால் முன்பைவிடப் பரவலானது. நிர்பயா என்னும் பெயரிலேயே பெண்கள் பாதுகாப்புக்கான பல திட்டங்கள் மத்திய அரசாலும் மாநில அரசாலும் தொடங்கப்பட்டன. சமீபத்தில் சில ரயில்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. நிர்பயா திட்டத்தின் ஒரு பகுதிதான்.

எலக்ட்ரோ ஷூ நிர்பயா சம்பவம் தந்த பாதிப்பால் நிகழ்ந்திருக்கும் மற்றொரு சாதகமான விஷயம் எலக்ட்ரோ ஷூ. இது காலணி மட்டுமல்ல; பாலியல் கொடுமைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கக்கூடிய கருவி. இதைக் கண்டுபிடித் திருப்பது 17 வயதுப் பள்ளி மாணவன் சித்தார்த் மண்டலா. தனது பள்ளித் தோழன் அபிஷேக்குடன் இணைந்து அவர் இந்தக் கருவியைக் கண்டுபிடித் துள்ளார்.

சமூகப் போராளியான தன் தாயுடன் பல போராட்டங்களில் சிறுவனாகக் கலந்துகொண்ட அனுபவம் சித்தார்த்துக்கு உண்டு. அதுபோல நிர்பயா சம்பவத்தையொட்டி அன்றைய ஆந்திர மாநிலத்தில் நடந்த பேரணியிலும் 12 வயதிலேயே சித்தார்த் கலந்துகொண்டார். பெண்கள் பாதுகாப்பு குறித்த முழக்கங்கள் அந்தப் பேரணியில் எழுப்பப் பட்டன. அவருடைய தாயும் பெண்கள் பாதுகாப்புக் காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர். இந்த வீட்டுச் சூழலும் நாட்டுச் சூழலும் சிறுவனான சித் தார்த்தைப் பாதித்தன. பெண்கள் பாதுகாப்புக்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது.

நீதியமைப்பு அறைகூவலான காரியமான இதை சித்தார்த் தன் தலைச்சுமை எனக் கொண்டார். அப்போதே அதற்கான வேலைகளைத் தொடங் கினார். அதற்காகத் தன் பள்ளித் தோழன் அபிஷேக்கைத் துணைக்கு அழைத்துக்கொண்டார். இந்த முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் பாலியல் வன்முறைத் தடுப்புக் கருவி.

இந்தக் கருவியைக் காலணியுடன் இணைத்து உருவாக்க வேண்டும். ஆபத்துக் காலத்தில் காலணியில் இந்த சர்க்யூட் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் அழுத்த வேண்டும். உடனடியாக இந்த அழுத்தம் தரும் ஆற்றலால் 0.1 ஆம்பியர் மின்சாரம் உற்பத்தியாகி கருவி வேலையைத் தொடங்கும். கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள பெண்ணின் பெற்றோருக்கு அல்லது காவல் துறைக்கு அபாய அறிவிப்பைக் கடத்தும்.

இந்தக் கருவியில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த அபாய அறிவிப்பு எப்படி அளிக்கப்படும், தொலைபேசி வழியிலா, தனி அபாய ஒலியெகுழுப்பும் வழியிலா என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. மேலும், இதைச் சோதனை முறையில் பயன்படுத்த முயன்றபோது காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் துறைசார் பொறியாளர்களின் உதவியைச் சித்தார்த் நாடியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு உரிமம் வாங்கி வைத்துள்ள சித்தார்த் இதைப் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றங்கள் செய்து விரைவில் சந்தை யில் அறிமுகப்படுத்தவுள்ளார்.

பழங்குடியினரின் கல்வித் தாய்

கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாத பழங்குடி கிராமத்தில் பிறந்த, கல்வியறிவற்ற துளசி முண்டா, இருபதாயிரம் மாணவர்களுக்குக் கல்வித் தாயாக மாறியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கும் கியோன்ஜார் என்ற மலைக் கிராமத்தில் 1947ஆம் ஆண்டு பிறந்தவர் துளசி முண்டா. கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத அந்தப் பகுதி மக்கள் தங்களுடைய குழந்தைகளைச் சுரங்க வேலைகளுக்கும் கால்நடைகளை மேய்ப்பதற்கும் அனுப்பி வருமானம் ஈட்டி

வந்தனர். இந்தப் பின்னணியில் தன்னுடைய சிறுவயதில் இருந்தே படிக்க வேண்டும் என்ற தீராத தாகத்துடன் இருந்தவர் துளசி. பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் தன்னுடைய விதவைத் தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்துவந்தார். பன்னிரண் டாவது வயதில் அருகில் உள்ள செரண்டா கிராமத்தில் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து கொண்டு இரும்புச் சுரங்கங்களில் பாறைகளை வெட்டியெடுப்பது, கழிவுப் பொருட்களி லிருந்து இரும்பைப் பிரித் தெடுப்பது போன்ற வேலைகளைச் செய்துவந்தார். இதற்கு வாரக் கூலியாக இரண்டு ரூபாய் வழங்கப்பட்டது. இரும்புச் சுரங்கத்தில் வேலைக்குச் சென்றாலும் படிக்க வேண்டும் என்ற அவரது மன உறுதி துருப்பிடிக்கவில்லை.

கல்வியே ஆயுதம்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுயமாகப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். பெண் கல்வியையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்தி 1961ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாலதி சௌத்ரி, ரோமா தேவி, நிர்மலா தேஷ்பாண்டே ஆகியோரின் பேச்சு துளசி முண்டாவுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

வறுமை, வேலையின்மை, மூடநம்பிக்கை போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கும் தன்னுடைய கிராம மக்களுக்குக் கல்விதான் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரே ஆயுதம் என்ற முடிவுக்கு வந்தார்.

மீண்டும் தன்னுடைய கிராமத்துக்குச் சென்று பழங்குடி மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தார். ஆனால், கிராம மக்களோ வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை.

இதை மாற்ற கிராமத் தலைவரிடம் முறையிட்டு, சுரங்கங்களில் வேலை செய்யும் குழந்தைகளை மாலை நேரத்தில் படிக்க அனுப்புமாறு கேட்டார். மாணவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களுடைய பெற்றோர்களிடம் பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

திண்ணைப் பள்ளி

வீட்டுத் திண்ணையிலேயே மாணவர்களுக்குப் பாடங்களைப் போதிக்க ஆரம்பித்தார். மாணவர்களுக்கான புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்குக் கிராமச் சந்தையில் காய்கறிகளை விற்றுப் பணம் ஈட்டினார். அவரது மாலைப் பள்ளியில் முதலில் முப்பது மாணவர்கள் படித்துவந்தனர். நாளடைவில் ஏராளமான மாணவர்கள் துளசி முண்டாவிடம் பாடம் கற்கத் தொடங்கினார்கள். அவர்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க அருகில் உள்ள இடத்தில் கூடாரம் அமைத்து ஆதிவாசி விகாஸ் சமிதி என்ற பெயரில் பள்ளியை ஆரம்பித்தார்.

கடந்த அய்ம்பது ஆண்டு களாகத் தனிநபராகத் தன்னுடைய முயற்சியால் இருபதாயிரம் மாணவர்கள் கற்க வழிவகை செய்துள்ளார் துளசி முண்டா.

தேடிவந்த விருது

தொய்வில்லாத இந்தப் பணிக்காக மத்திய அரசின் பத்மசிறீ விருதையும், ஒடிசா மாநில அரசின் சமூக சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றிருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை   என்ற பெயரில் இயக்குநர் அமியா பட்நாயக் திரைப் படமாக எடுத்துள்ளார். துளசி முண்டாவின் கல்விக்கான இந்த நெடும்பயணம் இன்றும் தொடர்கிறது.

தற்போது ஆதிவாசி விகாஸ் சமிதி பள்ளியில் பத்தாம் வகுப்புவரை உள்ளது. அங்கு 500 மாணவர்கள் படித்துவருகிறார்கள். இதில் மாணவி களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


தெரியுமா உங்களுக்கு!

பெண்களுக்கு மார்பக புற்று நோயின் அறிகுறிகளை முன் கூட்டியே கண்டுபிடித்தால், குணப்படுத்தும் வாய்ப்பு உண்டு.  ஹிகியா டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தை துவங்கி, ‘ஈவா’ என்ற ஒரு கருவியை உருவாக்கினார். இது பெண்கள் அணியும் உள்ளாடை வடிவில் உள்ளது. இந்த உள்ளாடையில் உள்ள, 200 உயிரி உணரிகள், மார்பகத்தின் வெப்ப நிலை, ரத்த ஓட்டம் போன்றவற்றை கண் காணித்து, ஒரு மொபைல் செயலிக்கு அனுப்புகிறது. வாரம் ஒரு முறை, 90 நிமிடங்களுக்கு பெண்கள் இதை அணிந்து, அளவுகளை எடுத்து வந்தால் போதும். மார்பக புற்று நோய் அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே தெரிந்துகொண்டு மருத்துவரை அணுகலாம்.  Banner
Banner