மகளிர்

கால்பந்து எனும் போராட்டக் கருவி!

கால்பந்து விளையாட்டைப் பெண் உரிமைகளைப் பெறுவதற்கான கருவி யாகக் கருதுகிறேன் என்கிறார் கலிதா போபெல்.

ஆப்கானிஸ்தானில் முதல் பெண்கள் கால்பந்து அணியைத் தோற் றுவித்தவர்களில் ஒருவராகவும் ஆப்கா னிஸ்தான் பெண்கள் கால்பந்து அணி யின் முன்னாள் தலைவராகவும் இருந் தவர். அய்ந்து ஆண்டுகளாக அரசியல் தஞ்சம் பெற்று, டென்மார்க்கில் வசித்து வருகிறார். ஹம்மெல் என்ற தொண்டு நிறுவனத்தில் உலகம் முழுவதும் இரு பாலினத்துக்கும் பள்ளி கால் பந்து அணிகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி, உள்நாட்டுப் போருக்குப் பிறகு பெண்களின் நிலை மிகவும் மோசமானது. ஒருகாலத்தில் சுதந்திரமாகக் கல்வி கற்ற பெண்கள், கடந்த 30 ஆண்டுகளில் வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். கல்வி, வேலை, விளையாட்டு எல்லாமே ஆண்களுக்கான விஷயங்களாகப் பார்க் கப்பட்டன. இதனால் பெண்கள் மிகுந்த மன அழுத்தத் துக்கு ஆளாக்கப்பட்டனர்.

பெண்கள் தங்கள் உரிமை களை மீட்கவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் கால்பந்து விளையாட்டை நேசிக்க ஆரம்பித்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கலிதா.

ஆர்வத்தைத் தூண்டிய கட்டுப்பாடுகள்

அது 2004-ஆம் ஆண்டு. பதினாறு வயது கலிதா வுக்குத் தன் சகோதரனின் கால்பந்து விளையாட்டைப் பார்த்து, தானும் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. விளையாட்டுகளில் பெண்கள் பங் கேற்கத் தடை இருந்த காலகட்டம். கால்பந்து மைதானங்கள் மரண தண்டனைகளை நிறைவேற்றும் இடங்களாக இருந்தன.

கட்டுப்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க அதை மீறும் எண்ணம் அழுத்தமாகப் பதிந்தது. ஓர் ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார் கலிதா. பள்ளியில் தன்னைப் போல ஆர்வம் கொண்ட பெண்களை ஒருங்கிணைத்தார். பெரிய சுவர்களுக்குப் பின்னால் கால்பந்து விளையாடினார்.

ஒரு கட்டத்தில் பெண்கள் விளையாடுவது வெளியே தெரியவந்தது. குப்பைகளையும் கற்களை யும் விளையாடும் பெண்கள் மீது வீசினார்கள். வசை மாரிகளைப் பொழிந்தார்கள். ஆனாலும் பெண்கள் விளையாடுவதை நிறுத்தவில்லை. வெவ்வேறு இடங் களுக்குச் சென்று விளையாட்டைத் தொடர்ந்தனர்.

2007-ஆம் ஆண்டு கலிதாவும் அவரது சகாக் களும் சேர்ந்து ஆப்கானிஸ்தானின் முதல் பெண்கள் கால்பந்து அணியை உருவாக்கினார்கள். ஆனாலும் அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஹெலி காப்டர் இறங்கும் தளத்துக்குச் சென்று பாதுகாப்பாக விளையாடினர். 3 முறை ஹெலிகாப்டர் தளத்தின் வாயிலில் தாலிபான்கள் வெடி குண்டு களை வெடிக்கச் செய்தனர்.

அப்பொழுதுதான் கால்பந்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், பெண்கள் உரிமைகளைப் பெறுவ தற்கான கருவியாக நினைத்தார் கலிதா. பெண்களின் உரிமைகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினார். பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு தைரியமாக வெளியே வர ஆரம்பித்தனர். பெண்கள் கால் பந்தாட்ட அணிகள் உருவாகின. அதே அளவுக் குக் கலிதாவுக்கு அச்சுறுத்தல்களும் அதிகரித்தன. கலிதா மட்டுமின்றி, அவரது குடும்பமும் கொலை மிரட்டல் களுக்கு உள்ளானது.

பெண்களுக்குப் புதிய சீருடை

ஆப்கானிஸ்தானில் வசிக்க இயலாது என்ற நிலை வந்தபோது, நாட்டை விட்டு வெளியேறி, டென்மார்க் கில் அடைக்கலம் புகுந்தார் கலிதா. அங்கிருந்து கொண்டே தன் நாட்டில் பெண்களுக்கான உரிமை களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். அவர் வேலை செய்து வரும் ஹம்மெல் தொண்டு நிறுவனம் விளையாட்டு வீரர் களுக்கான சீருடைகளை வடிவமைத்துக் கொடுக் கிறது. அந்த நிறுவனத்துடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணிக்கான புதிய சீருடையை உருவாக்கியிருக்கிறார் கலிதா. தலையில் ஹிஜாப், கைகளுக்கு உறைகள், கால்களுக்கு லெகிங்ஸ் என்று முழுக்க மூடப்பட்ட சீருடை இது.

ஹிஜாப் அணிந்து ஆடும்போது திடீரென்று கண்களை மறைக்கும். கீழே விழுந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும்போது அந்தச் சீருடை மிகுந்த புழுக்கத்தைக் கொடுக்கும். இந்தப் புதிய சீருடை ஆப்கானிஸ்தானின் கலாசாரத் தையும் பிரதிபலிக்கிறது, வீராங்கனைகளுக்கு வசதி யாகவும் இருக்கிறது. இனிமேலாவது பெண்கள் கால்பந்து விளையாட அனுமதிக்க வேண்டும். குடும் பத்தை விட்டு, நாட்டை விட்டுத் தனியாக இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஆனால் என்னைப் போல உரிமை கேட்டுக் குரல் கொடுத்தவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆப்கனைச் சேர்ந்த பல விளையாட்டு வீராங்கனைகள் அய்ரோப் பிய நாடுகளில் வசிக்கிறார்கள். எங்கள் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பும் பெண்கள் உரிமைகளும் மதிக்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். அப் பொழுது தாய் நாடு திரும்புவேன். என் நாட்டுக்காகப் பெண்கள் அணியை ஒலிம்பிக்கில் பங்கேற்க வைப் பதுதான் என் லட்சியம்.

தான் ஒரு பெண் என்பதையும் எங்கள் நாட்டுக் கொடிக்குக் கீழ் அணி வகுப்பதையும் ஆப்கன் பெண்கள் பெருமையாக நினைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன் என்கிறார் கலிதா.

பெங்களூருவில் விந்தியா என்கிற பி.பி.ஓ. நிறுவனத்தை நடத்தி வருகிறார் பவித்ரா. ஒரு சிலர் வியாபாரத்தில் சாதிப் பார்கள், சிலர் சமூக சேவையில் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால், இவரோ தனது நிறுவனத்தில் சமூக சேவையை இணைத்துவிட்டதோடு வியாபாரத்திலும் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிறுவனத்தில் மொத்தம் 600 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகள் என்பதுதான் பெரிய விஷயம்.

முதலில் 10 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளித்தவர் இப்போது 100 சதவிகித பணியிடங்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கே அளித்து நிரப்பியுள்ளார்.  அவர்களுக்கு வேலைவாய்ப்போடு உணவு, தங்குமிடம் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பிறவசதி களையும் செய்து வருகிறார்.

அது மட்டுமின்றி இயல்பு வாழ்க்கை நடத்த மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இப்போது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பலரின் கனவுகள் நனவாகி உள்ளன. அவர்களால் தங்கள் குடும்பத்தை சிறப்பாக நடத்த முடிகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப் படும் மிகப்பெரிய நிறுவனம் இது.

தனது 22 வயதில் இதைத் தொடங்கும்போது தெரிந்தவர் களிடமிருந்து வாழ்த்துவதற்கு கைகள் நீண்டதே தவிர உதவப் பெரிதாக யாரும் முன்வரவில்லை. இப்போது உதவி களோடு விருதுகளும் சேர்ந்து குவிகின்றன. இவரது கண வரும் இவரோடு இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை. சமீபகாலமாக சென்னை மக்கள் பார்த்து பரவசம் அடைந்த விஷயம் மெட்ரோ ரயில்.  வாகன நெரிசலில் சிக்கிச் சிதைந்த சென்னை மக்களுக்கு தற்போதைய மகிழ்ச்சியான வரவு இந்த மெட்ரோ. அதிலும் சென்னை  மெட்ரோ ரயிலை இயக்குபவர்களில் பெண்களும் இருக்கிறார்கள் என்றால் அது சுவாரஸ்யம்தானே? அட, ஆச்சரியமும்  மகிழ்ச்சியும் கலக்க சென்னை மக்கள் இப்பெண்களை ரொம்பவும் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

பெண் சைக்கிள் ஓட்டினாலே சந்தோஷப்பட்ட நாட்களைக் கடந்து இன்று கார், கப்பல், விமானம் என்று அனைத்தையும்  வசப்படுத்திக் கொண்டனர். சாதாரணமாக ராட்டினத்தில் அமர்ந்தாலே, கண்ணை மூடி கத்திய பெண்கள், இன்று உயர உயர பறக்கத்  தொடங்கிவிட்டனர். சாதனையாகட்டும் சாகசமாகட்டும் எந்த எல்லையையும் தொட்டு விடுவோம் எனத் துடிப்போடு  கிளம்பிவிட்டனர் இன்றைய இளம் பெண்கள்.

சென்னை நகரின் மொத்த அழகையும் நெரிசலையும் பறவைப் பார்வையில் நிமிடத்தில் கடக்கும் இந்த மெட்ரோ பெண்களை  பாராட்டியே ஆகவேண்டும். முதல் கட்ட மெட்ரோ வழித்தடமான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் ப்ரீத்தி, ஜெயசிறீ என்ற  இரண்டு பெண் ஓட்டுநர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். தற்போது மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலான நீட்டிப்பில் மேலும் மூவர் இணைக்கப்பட்டு அய்ந்து பெண் இயக்குநர்கள்  செயல்படுகிறார்கள். பெண் ரயில் ஓட்டுநர்களைத் தவிர்த்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து மெட்ரோ ரயிலை கட்டுப்படுத்துவதும் பெண்  என்றால் அது பெண்களுக்கு கூடுதல் சிறப்புதானே? மெட்ரோ ரயில் இயக்குவதைப் பற்றி பெண் ஓட்டுநர்கள் கூறும்போது  விடாமுயற்சியும் உடன் பணியாற்றுபவர்கள் கொடுக்கும் ஊக்கமுமே இந்தத் துறையில் அவர்கள் வெற்றிகரமாய் செயல்படுவதற்கு  காரணம் என்கின்றனர்.

மேலும் நிறைய பெண்கள் இத்துறைக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான லோகோ பைலட் பணி  அறிவிப்பு, செய்தி நாளேடுகளில் வெளியானபோது அதற்கென விண்ணப்பித்து முதலில் ஆன்லைனில் தேர்வு எழுதினோம்  வெற்றியும் பெற்றோம். பின்னர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு அதிலும் தேர்வான பிறகு மருத்துவப் பரிசோதனை முடிந்து  டில்லி மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனங்களில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றோம்.இதில் தியரி மற்றும் ரயில் ஓட்டுநர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. உடன் வேலை செய்யும் மெட்ரோ ரயில் நிறுவன  ஊழியர்கள் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தினர். நாங்கள் மெட்ரோ ரயிலை இயக்குவதைப் பார்த்து எங்கள் குடும்பத்தினரும்  மகிழ்ச்சி அடைகின்றனர். பொதுமக்களும் பெண் ஓட்டுநர்களான எங்களைப் பார்த்து பெருமை அடைகின்றனர்.   

2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்த பெருமை சாக்ஷி மாலிக் கையே சேரும்.

தன்னுடன் மோதியவரை யாருமே எதிர்பாராத கடைசி விநாடிகளில் வீழ்த்திப் பதக்கம் வென்றதன் மூலம் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் 23 வயது சாக்ஷி! ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நான்காவது இந்தியப் பெண், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் அய்ந்தாவது நபர் என்று அடுக்கடுக்கான அடையாளங்களை ஏற்படுத்தி யிருக்கிறார் சாக்ஷி.

சானியா மிர்சா

டென்னிஸ் உலகத் தர வரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததோடு அதை 80 வாரங்களுக்கும் மேலாகத் தக்கவைத்திருக்கிறார் சானியா மிர்சா. இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீராங் கனையான இவர் தன் சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டார். அது தொடர்பான பேட்டியின் போது குடும்பம், குழந்தை என செட்டில் ஆவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. உலகின் முதல் நிலை  வீராங்கனையாக இருப்பது என்பது வாழ்க்கையில் செட்டில் ஆவது இல்லையா? என்று தெளிவுடன் பதில் சொன்ன விதம் பலரையும் கவர்ந்தது.

தீபா கர்மகார்

இந்தியாவின் புதிய அடையாளமாகக் கொண்டாடப் பட்டவர் தீபா கர்மகார். இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் துறைக்குப் புத்துயிர் கொடுத்தவர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் என்ற சாதனை படைத்ததன் மூலம் திரிபுராவின் தங்க மகளாக இருந்த தீபா, இந்தியாவின் சாதனை மகளானார்.

தீபா மாலிக்

2016 பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முதல் பெண் என்ற பெருமிதத்தைப் பெற்றிருக்கிறார் தீபா மாலிக். அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகளால் மார்புக்குக் கீழே உடல் பாகங்கள் செயல்படாத நிலையிலும் தன்னம்பிக்கையோடு அவர் புரிந்த சாதனை, தீபா மாலிக்கை வெற்றிப் பெண்ணாக மிளிரச் செய்தது.

பி.வி.சிந்து

2016 ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார் பி.வி.சிந்து. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார். இந்தியாவில் இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் என்று யாஹூ நிறுவனம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் கிரிக்கெட் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக் கிறார் பி.வி. சிந்து.

தடகள வீராங்கனை சாந்தி

தடகள வீராங்கனை சாந்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார். தன் மூன்று ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம் இது என சாந்தி குறிப்பிட்டுள்ளார். 2006ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் சாந்தி. ஆனால் அதன் பிறகு நடந்த பாலினச் சோதனையின் முடிவால் சாந்தியின் பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பொறுப்பு, பல இளம் வீரர்களை உருவாக்குவதற்கான களமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

105 வயது பெண்மணி சாலு மரத திம்மக்கா

105 வயது சாலு மரத திம்மக்கா. கர்நாடக மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பைத் தாண் டாதவர். நெடுஞ்சாலைகளில் 4 கி.மீ. நீளத்துக்கு வரிசையாகக் கிட்டத்தட்ட நானூறு ஆலமரக் கன்றுகளை நட, அவை இன்று மரங்களாகித் தழைத்திருக்கின்றன. கடந்த 75 ஆண்டுகளாக மரங்கள் வளர்ப்பது பராமரிப் பதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டவர்.  

Banner
Banner