மகளிர்

அப்போது அந்தப் பெண்ணுக்கு  28 வயது. இனி, தன் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கிவிடும் என அவர் நினைத்திருக்க மாட்டார். ஆனால், அது நடந்தது.

முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்று வதற்காக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு இடுப்புப் பகுதிக்குக் கீழே உறுப்புகள் செயலிழந்தன. அதைச் சரிசெய்ய மூன்று அறுவை சிகிச்சைகள், 183 தையல்கள் என அவரது உடல் ரணப்பட்டது.

வாழ்க்கையை மாற்றிய விபத்து

இத்தனை சிகிச்சைக்குப் பிறகும் அவரால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. சக்கர நாற்காலியே கதியானது. இந்தத் திடீர் முடக்கம் அவரது தன்னம்பிக் கையை முடக்கவில்லை. தனக்குப் பிடித்த விளை யாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை அவர் உயரப் பறக்கவிட்டிருக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்ற தீபா மாலிக்தான் அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர்.

அரியானாவைச் சேர்ந்த தீபா மாலிக், திட்டமிட்டு விளையாட்டு வீராங்கனையானவர் அல்ல. உடலில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு ஓரிடத்திலேயே முடங்கிப் போய்விடாமல் இருப்பதற்காகத் தனக்குள் இருந்த திறமைகளை வெளிக்கொண்டு வரவே விளை யாட்டு வீராங்கனையானார்.

தீபா மாலிக், ராணுவ வீரர் விக்ராம் சிங் மாலிக்கை மணந்துகொண்டு இரண்டு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்துவந்தவர்தான். 1999இல் அவருக்கு உடலில் பிரச்சினை ஏற்பட்டது. முதுகு தண்டுவடக் கட்டியால் அவர் அவதிப்பட்டபோது, அவருடைய கணவர் கார்கில் போரில் ஈடுபட்டிருந்தார். மகளும் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்தார். அந்தக் கடுமையான தருணங்களிலிருந்து மீண்டுதான்  இன்று விளையாட்டில் முத்திரை பதித்தி ருக்கிறார் தீபா மாலிக்.

உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவதற்கு முன்பே நீச்சல், தடகளம், சவால் நிறைந்த பயணம் போன்றவற்றில் தீபா ஈடுபட்டிருந்தார். இவற்றையெல்லாம் குடும்ப வாழ்க்கை கட்டிப்போட்டிருந்தாலும் சக்கர நாற்காலி வாழ்க்கை அவரது மனத்தைப் பெரிய அளவில் பாதித்தது. அதிலிருந்து மீண்டுவர தீபா விரும்பினார். தனக்குப் பிடித்த நீச்சல், தடகளம், சாகச கார் பயணம் போன்றவற்றில் ஈடுபட முடிவுசெய்தார். அதற்கு அவருடைய கணவரும் துணை நின்றார். பாரா விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கியபோது அவருக்கு 36 வயது.  பொதுவாக, விளையாட்டு வீராங்கனைகள் ஓய்வை அறிவிக்கும் வயதில்தான் தீபா விளையாட்டில் காலடி எடுத்துவைத்தார்.

வரலாற்றுச் சாதனை

தன் திறமையை நிரூபிக்க வயதைப் பொருட்படுத்தாமல் மாவட்ட, மாநில அள விலான போட்டிகளில் ஈடுபடத் தொடங்கினார். குண்டெறிதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல் ஆகியவற்றில் தேசிய அளவில் விளையாடினார். தேசிய அளவில் செய்த சாதனைகள்  அவரை, சர்வதேசப் போட்டிகளுக்குச் அழைத்துச் சென்றன. 2011இல் நியூசி லாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வாகையர் பட்டப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றார். குண்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டி அவரது திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டியது. குண்டெறிதல் எப்.53 பிரிவில் பங்கேற்ற தீபா, பக்ரைன், கிரீஸ் வீராங்கனைகளுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் நிகழ்த்தினார்.

2011-2012ஆம் ஆண்டில் உலகத் தரவரிசைப் பட்டியலில் குண்டெறிதலில் இரண்டாம் இடத்தையும் ஈட்டி எறிதல், வட்டெறிதலில் மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினார். அதே ஆண்டில், ஆசிய தரவரிசைப் பட்டியலில் குண்டெறிதல், வட்டெறிதல், ஈட்டி எறிதல் மூன்றிலுமே முதல் இடத்தைப் பிடித்து அவர் சாதனை படைத்தார். வட்டெறிதல், குண்டெறிதல், ஈட்டி எறிதல் என மூன்று வகையான போட்டிகளில் ஈடுபட்டுத் தேசிய அளவில் 45 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை தீபா வென்றிருக்கிறார். இதே போட்டிப் பிரிவுகளில் சர்வதேச அளவில் 13 பதக்கங்களையும் குவித்துள்ளார். தீபா மாலிக், மோட்டார் பைக் விரும்பி ஆவார். இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றிவருபவர். கார் பந்தயத் திலும் ஆர்வம்கொண்டவர். மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் ஹிமாலயன் மோட்டார் பந்தயத்தில் இவர் பங்கேற்றிருக்கிறார். இந்தியாவிலேயே மிகவும் ஆபத்து நிறைந்த பயணம் இது. பாலைவனம் தொடங்கி இமயமலை வரை சுமார் 1,700 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட, சவால்களும் ஆபத்தும் நிறைந்த பந்தயம் இது. கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்திலும் கார் ஓட்டக்கூடிய பாதை இது. இந்த கார் பந்தயத்திலும் தீபா கலந்துகொண்டு சாதனை படைத்திருக்கிறார். இவருக்கென தனியாகத் தயாரிக்கப்பட்ட கார்களில்தான் பங்கேற்கிறார்.

மோட்டார் பிரியையான இவர் ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா அமைப்பிடமிருந்து சிறப்பு உரிமம் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங் கனையும்கூட.  2008இல் யமுனை ஆற்றில் எதிர் நீரோட் டத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நீச்சலடித்து லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றார்.

இது போல  நான்கு முறை லிம்கா சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 2011இல் இந்தியாவின் உயரமான ஒன்பது இடங்களை ஒன்பது நாட்களில் கடந்த முதல் மாற்றுத் திறனாளிப் பெண் என்ற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். 2013இல் அதிகத் தொலைவு பயணம் செய்த மாற்றுத் திறனாளிப் பெண் (சென்னை - டில்லி 3,278 கி.மீ.) என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர்.

2012இல் மத்திய அரசு தீபா மாலிக்குக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கவுரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் மாற்றுத் திறனாளி வீராங்கனையும் இவர்தான். 2017இல் பத்ம விருதையும் இவர் பெற்றார். தற்போது 47 வயதாகும் தீபா மாலிக் அடுத்தடுத்த பாரா போட்டிகளில் களமிறங்கிப் பதக்கங்கள் வெல்ல உழைத்துக் கொண் டிருக்கிறார்.

 

 

பாகிஸ்தானியர்கள் வரும் 25ஆம் தேதி தங்களது அடுத்த அரசைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவு அதிக அளவி லான பெண்கள் போட்டியிடுகிறார்கள்.

272 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் தேர்தலில், 171 பெண்கள் போட்டியிடு கிறார்கள்.  ஆணாதிக்கம் கொண்ட பழங்குடிப் பகுதியில் முதன்முறையாக அலி பேகம் என்ற பெண் போட்டியிடுகிறார். மேலும், இந்தத் தேர்தலில் அய்ந்து திரு நங்கைகள் போட்டியிடுகிறார்கள். 2013இல்  நடைபெற்ற தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட அனுமதிக்கப் பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற தீபா

தீபா கர்மாகர் இந்தி யாவின் முன்னணி ஜிம் னாஸ்டிக் வீராங்கனை. ரியோ ஒலிம்பிக் போட்டி யில் வெண்கலப் பதக் கத்தை அவர் நூலிழை யில் தவறவிட்டார்.

காலில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு ஆண்டுகளாக ஜிம் னாஸ் டிக் போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் துருக்கியில் மெர்ஸின் நகரில் நடைபெற்ற மெர்ஸின் உலக சேலஞ்ச் கப் போட்டியில் பங்கேற்றார்.

தகுதிச் சுற்றில் சற்றுச் சிரமத்துடன் 11.85 புள்ளிகளை மட்டுமே பெற்றார். ஆனால், அதற்குப் பிறகு அவர் வெளிப்படுத்திய ஆட்டத்தில் நளினமும் நுணுக்கமும் நிறைந்திருந்தன.

இறுதியில் 14.5 புள்ளிகள் பெற்று அவர் தங்கப்பதக்கம் வென்றார். தீபாவின் அடுத்த இலக்கு ஆசிய விளை யாட்டுப் போட்டியில் தங்கம்  வெல்வது.

பதக்கங்கள் பல வென்ற பளுதூக்கும் வீராங்கனை

மணிப்பூர் மாநிலத்திலிருந்து ஏராளமானோர் விளையாட்டுத் துறையில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். 1980-களில் நூற்றுக்கணக்கான இளம் வீரர்களும் வீராங்கனைகளும் மணிப்பூரிலிருந்து தேசிய அளவிலான விளையாட்டுகளில் காலடி எடுத்துவைத்தனர். அவர்களில் சர்வதேச அளவில் தனது வெற்றிக்கொடியை உயரப் பறக்கவிட்டவர் குஞ்சராணி தேவி.

பளு தூக்குதலில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆதிக்கம் செலுத்திய இவர், பளு தூக்குதலில் இந்தியாவின் முகமாக நீண்ட காலம் ஜொலித்தவர்.

வித்திட்ட விளையாட்டு

இம்பாலில் பிறந்த குஞ்சராணி தேவிக்குச் சிறு வயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம். கால்பந்து, தடகளம் போன்றவை பிடித்தமானவை. நேரம் கிடைக்கும்போது, அருகில் உள்ள மய்யங்களுக்குச் சென்று பளு தூக்குவதை விளையாட்டாகச் செய்துவந்தார். பல விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த குஞ்சராணிக்குத் திடீரெனப் பளு தூக்குதலில் ஈர்ப்பு அதிகமானது. ஒரு கட்டத்தில் பிற விளையாட்டுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, பளு தூக்குதலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

குஞ்சராணி பளு தூக்கி விளையாடியது வீண் போக வில்லை. பள்ளி வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பே மணிப் பூரில் புகழ்பெறும் அளவுக்குப் பளு தூக்குதலில் முன்னேறியிருந்தார். குஞ்சராணிக்கு 17 வயதானபோது 1985இல் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் களமிறங்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதல் போட்டியிலேயே பதக்கங்களை அள்ளினார். 44 கிலோ, 46 கிலோ, 48 கிலோ எடைப் பிரிவு களில் பங்கேற்று இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றினார்.

அழுத்தமான சாதனை

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு அவரது பளு தூக்கும் பயணம் புதிய பாதையில் விரிந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் பங்கேற்ற பெரும்பாலான பளு தூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைத் தன்வசமாக்கினார். 1987இல் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய பளு தூக்கும் போட்டியில் அதிகபட்ச எடை யைத் தூக்கி புதிய தேசிய சாதனையைப் படைத்தார். தேசிய அளவில் அவர் நிகழ்த்திய சாதனைகளும் பெற்ற பதக்கங் களும் சர்வதேசப் போட்டியில் அவர் பங்கேற்க உறுதுணையாயின. முதன்முறையாக 1989இல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற உலக மகளிர் பளு தூக்கும் வாகையர் பட்டப் போட்டியில் குஞ்சராணி பங்கேற்றார். இந்தத் தொடரில் மூன்று விதமான எடைப் பிரிவுகளில் பங்கேற்றவர் மூன்றிலுமே வெள்ளிப் பதக்கங்களை வென்று முதல் முறையிலேயே அசத்தினார்.

இதன் பிறகு 1993ஆம் ஆண்டைத் தவிர தொடர்ச்சியாக ஏழு முறை உலக மகளிர் பளு தூக்கும் போட்டியில் குஞ்சராணி பங்கேற்றிருக்கிறார். இந்தத் தொடர்களில் பதக்கம் பெறாமல் அவர் நாடு திரும்பியதே இல்லை. ஆனால், எல்லாப் போட்டிகளிலும் அவர் வெள்ளிப் பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. தங்கம் வெல்லாவிட்டாலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்ற வெள்ளிப் பதக்கங்கள் அவரது பளு தூக்கும் பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தன.

சர்வதேச வெற்றி

உலகப் பளு தூக்கும் போட்டிகள் மட்டுமல்ல; ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் வெண்கலப் பதக்கங்களோடு திருப்தியடைய வேண்டியிருந்தது. 1990 (பெய்ஜிங்), 1994 (ஹிரோஷிமா) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற குஞ்சராணி, 1998இல் பதக்கம் வெல்லாமல் வெறுங்கையோடு திரும்பினார். ஆசிய விளையாட்டுப் போட்டி ஏமாற்றினாலும் ஆசிய பளு தூக்கும் வாகையர் பட்டப் போட்டி அவரை ஏமாற்றவில்லை. 1989இல் (ஷாங்காய்) ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் 1991இல் (இந்தோனேசியா) மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் குஞ்சராணி வென்றார். 1995இல் (தென் கொரியா) 46 கிலோ எடைப் பிரிவில் இரண்டு தங்கங்களை வென்ற அவர், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினார். 1996இல் (ஜப்பான்) இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதங்கங்களை வென்று ஆசிய அளவில் தன் பலத்தை நிரூபித்தார்.

விளையாடத் தடை

1990-களின் இறுதிவரை பளுதூக்கும் போட்டிகளில் ஜொலித்துவந்த குஞ்சராணிக்குப் புத்தாயிரம் ஆண்டு திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் அவரது பளு தூக்கும் வாழ்க்கையில் சறுக்கலாக ஒரு நிகழ்வு நடந்தேறியது. 2001இல் தென் கொரியாவில் நடைபெற்ற சீனியர் ஆசிய பளு தூக்கும் வாகையர் பட்டப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆனால், அந்தத் தொடரின்போது அவருக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில், தடைசெய்யப்பட்ட அனபாலிக் ஸ்டீராய்டை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் வென்ற பதக்கம் பறிக்கப்பட்டது. பளு தூக்கும் போட்டியில் அவர் பங்கேற்க சர்வதேசப் பளு தூக்கும் கூட்டமைப்பு ஆறு மாதங்களுக்குத் தடைவிதித்தது. பளு தூக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்ச்சியாகப் பெருமை தேடித்தந்த குஞ்சராணியின் வாழ்க்கையில் இது ஒரு பின்னடைவு. ஆனால், அந்தத் தடை அவரைப் பளு தூக்குதலில் இருந்து தனிமைப்படுத்திவிடவில்லை. தடை நீங்கிய பிறகு மீண்டும் களமிறங்கியவர், தேசிய அளவில் முன்னைப் போலவே ஜொலித்தார். 2004 ஏதென்சு ஒலிம்பிக்கில் பங்கேற்று அய்ந்தாம் இடத்தைப் பிடித்துப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைக் கோட்டைவிட்டார். ஆனால், ஒலிம்பிக்கில் அவர் விட்ட வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் கழித்து காமன்வெல்த் போட்டியில் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

2006இல் மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் ஒட்டுமொத்தமாக 166 கிலோ பளுவைத் தூக்கிப் புதிய உலக சாதனையைப் படைத்தார். அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தனது தனித்தன்மையை நிரூபித்தார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. சர்வதேச அளவில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குஞ்சராணி வென்றிருந்தாலும் ஒலிம்பிக் பதக்கத்தை மட்டும் அவரால் வெல்ல முடியவில்லை. பதின் பருவத்தில் தொடங்கிய அவரது விளையாட்டுப் பயணம் 43 வயதில் முடிவுக்கு வந்தது. பளு தூக்குதலில் சிறப்பாகச் செயல்பட்ட குஞ்சராணி தேவிக்கு 1990இல் அர்ஜூனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. 1996இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் கே.கே. பிர்லா ஸ்போர்ட்ஸ் விருதும் 2011இல் பத்மசிறீ விருதும் பெற்றார். தற்போது குஞ்சராணி தேவி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டர் ரேங்கில் பணிபுரிந்துவருகிறார். அவ்வப் போது இந்திய மகளிர் பளு தூக்கும் அணியின் பயிற்சியா ளாராகவும் பணியாற்றிவருகிறார்.

 

 

 

பெண்களுக்கு எல்லாம் கிடைப் பதாகச் சொல்லப்படும் நம் நாட்டில் அவர்களுக்குக் கிடைக்காதது பாதுகாப்பு மட்டுமே. வீடு, பணியிடம், பொதுவெளி என எல்லா இடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. அரசும் சமுதாயமும் பாதுகாப்பான சூழ்நிலை யைப் பெண்களுக்கு ஏற்படுத்த வேண் டும் என்பதே ஷைபி மேத்யூவின் (45) கோரிக்கை.

அதை வலியுறுத்தி இருசக்கர வாக னத்தில் தமிழகம் முழுவதும் பயணித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சுமார் 3,750 கி.மீ. தொலைவு நின்றபடியே பயணித்துத் தேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஷைபி மேத்யூ, இரண்டு குழந்தை களுக்கு அம்மா. தையல் கடை நடத்தி வருகிறார். சிறுவயதிலிருந்தே இருசக்கர வாகனத்தின் மீது அவருக்குப் பிரியம் உண்டு. அப்பா, சித்தப்பா, மாமா என யார் வண்டியை எடுத்தாலும் அவர்களுடன் சேர்ந்து சவாரி செல்வார். சிறுவயதில் கிடைத்த அந்த மகிழ்ச்சி குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு அவருக்கு நிலைக்கவில்லை.

குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சொந்த ஊரான கூடலூரை விட்டு அவினாசியில் குடியேறினார். பகலில் ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் வேலை, இரவில் வீட்டிலிருந்தபடியே அக்கம் பக்கத்தினருக்குத் துணிகளைத் தைப்பது என வாழ்க்கை ஓடியது. தனி ஆளாக, தன் உழைப்பால் குழந்தைகளைக் காப்பாற்றி னார். மகளைக் கேரளத்தில் உள்ள பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கவைத்தார். மகளைப் பார்க்க ஒவ்வொரு மாதமும் மூன்று பேருந்துகள் மாறி அவர் பயணம் செய்வார். அந்தப் பேருந்துப் பயணங் களில் ஆண்களின் பாலியல் சீண்டல்கள் அவரைப் பாதித்தன.

“அப்படித்தான் ஒரு நாள் என் மகளைப் பார்த்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தேன். நானும் என் தோழியும் நின்று கொண்டிருந்த இடத்துக்கு பக்கத்தில் ஒருவர் குடித்து விட்டு  எங்களிடம் தவறாக நடந்து கொண்டார். கோபத்தில் நான் அவரை அடித்து விட்டேன். பிரச்சினை பெரிதாகி விட்டது. அடிவாங்கியவர் இன்னும் சிலரை போன் செய்து வரவழைத்தார். பேருந்தை காவல்நிலையத்தில்  நிறுத்தச் சொல்லியும் ஓட்டுநர் நிறுத்தவில்லை. பேருந்தில் இருந்த ஆண்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசிவரை நாங்கள் மட்டுமே எங்கள் பாதுகாப்புக் காகச் சண்டையிட்டோம்” என்று ஷைபி சொல்கிறார்.

பெண்களுக்காக ஒரு பயணம்

பேருந்திலும் ரயிலிலும் தான் எதிர் கொண்ட பாலியல் சீண்டல்கள் ஷைபிக்கு வேதனை அளித்தன. தனியாக வசிக்கும் அவரைப் போன்ற பெண்களுக்குப் பாது காப்பான நிலை என்றைக்குக் கிடைக்கும் என யோசித்தார்.  இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடு வதற்காக, மகனுக்காக வாங்கிய பைக்கை அவர் ஓட்டத் தொடங் கினார். ஷைபி பைக் ஓட்டுவதைப் பலரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். அதுவே ஷைபிக்குத் தன்னம்பிக்கை யையும் தைரியத்தையும் அளித்தது. பைக் ஓட்டுவதையே பெண்களுக்கான விழிப் புணர்வு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என ஷைபி நினைத் தார். உடனே அதைச் செயல்படுத்தினார்.

 

நண்பர்களின் ஆலோசனைப்படி, பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அவினாசியில் இருந்து சேலம் சென்று மீண்டும் அவினாசிக்குத் திரும்பினார். 250 கி.மீ. தொலைவுக்கு பைக் ஓட்டியது தான் அவர் மேற்கொண்ட முதல் விழிப் புணர்வுப் பயணம். அது அளித்த உந்து தலில் மேலும் புதுமையாக ஏதாவது சாதிக்க நினைத்தார்.

“பைக்கில் உட்காராமல் நின்று கொண்டே ஓட்டினால் வித்தியாசமாக இருக்கும் என்று என் மகன் சொன்னான். எனக்கும் அது பிடித்திருந்தது. தமிழ கத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் செல்வதற்கான வழிகளைத் திட்டமிட் டோம். குறிப்பாக நகர்ப் பகுதிகளின் வழியாகச் செல்லாமல், கிராமங்களின் வழியாகச் செல்ல நினைத்தேன். அதற்காக மாவட்டக் காவல்துறை அலுவலகங்களில் அனுமதி வாங்கினேன்” எனப் பெருமிதத் துடன் ஷைபி சொல்கிறார்.

வலியை மறக்கடித்த சாதனை

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கி யத்துவம் கொடுப்போம்; இயற்கை விவசா யத்தைக் காப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 8 அன்று ஊட்டியிலிருந்து புறப்பட்டார். பின்னர் சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாகத் திருச்சிக்கு வந்தார். பின் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் வந்து கடலோரமாக நாகப் பட்டினம், கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், சென்னை என 32 மாவட்டங்களிலும் நின்றபடியே பைக் ஓட்டினார். எட்டு நாட்களில் மூவாயிரம் கி.மீ.க்கு மேல் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார். சென்னையில் தன் பயணத்தை முடித்த வருக்கு முன்னாள் மேயர் மா.சுப்பிர மணியன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பயணத்தை நிறைவு செய்த பிறகும் தனது வண்டியிலேயே அவினா சிக்குச் சென்றார். நின்று கொண்டே வண்டி ஓட்டுகிறது கடினம்தான். இருந் தாலும் என் கோரிக்கை நிறையப் பேருக் குப் போய்ச் சேர வேண்டும்; அவர் களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண் டும் என்று கஷ்டத்தை மீறி சவாலான இந்தப் பயணத்தை மேற்கொண்டேன் என்கிறார் ஷைபி.

மாற்றத்துக்கான பெண் மீனாட்சி

கல்லூரிப் படிப்பை முடித்தோமா வேலைக்குச் சேர்ந்தோமா என்று தன் கனவைச் சுருக்குவதில் மீனாட்சிக்கு விருப்பம் இல்லை. அதுதான் அவருக்கு நாடகக் கலைஞர், பறை - சிலம்பம் பயிற்சியாளர், மாதவிடாய் சுகாதாரப் பிரச்சாரகர், ரேடியோ ஜாக்கி எனப் பலமுகங்களைக் கொடுத்துள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் மீனாட்சி, தான் விளையும் பயிர் என்பதை இளமையிலேயே நிரூபித்தவர். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் பள்ளி, கல்லூரி நாட்களில் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றாலும் படிப்பிலும் சிறப்பான இடத்தைப் பிடித்தார்.

பார்வையை விசாலமாக்கிய சென்னை

சென்னை கல்லூரியில் தங்கள் மகளைப் படிக்க வைக்க மீனாட்சியின் பெற்றோர் தயங்க, அடம் பிடித்துப் பட்டம் முடித்தார் மீனாட்சி.

சென்னை வந்த பிறகு என் பார்வை விசாலமானது. பல்கலைக்கழகப் பேராசிரியர் அழகர் சார்தான் சமூகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அப்போது நிமிர்வு கலையகம் சார்பில் நடந்த ஓராண்டு பறையாட்டப் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டேன் என்று சொல்லும் மீனாட்சிக்கு, அந்தப் பயிற்சியில் சேர்வதே பெரும்பாடாக இருந்தி ருக்கிறது.

நான் பறையடிக்கக் கற்றுக் கொள்ளக் கூடாது  என்று வீட்டில் கடுமை யான எதிர்ப்பு. தமிழர்களோட பாரம்பரிய கலையைக் கற்றுக் கொள்வதில் என்ன தப்பு? என்று கேட்பவர், பறையாட்டப் பயிற்சிக்காகப் பெற்றோரிடம் பணம் கேட்கவில்லை. நண்பர்களின் உதவியால் சில அகாடமி களில் சுயமுன்னேற்ற வகுப்புகள் எடுப்பதைப் பகுதிநேர வேலையாகச் செய்தார். அப்படிக் கிடைத்த பணத்தில் பறை, சிலம்பாட்டம் கற்றுக் கொண்டேன் என்கிறார் மீனாட்சி.

ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு நாடக நடிப்பும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி என்பதால் மீனாட்சியும் நாடகங்களில் நடிக்கக் கற்றுக்கொண்டார்.

நாடகத்தால் உண்டான மாற்றம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டி ருந்தபோது, தாகம் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அறிமுகம் மீனாட்சிக்குக் கிடைத்தது. அதன் பிறகு, அந்த அமைப்பில் இணைந்து பல கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

பொது இடங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் பெண்களின் பிரச் சினைகள், மாதவிடாய் சுகாதாரம் போன்றவை குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் அவர் மேற்கொண்டுள் ளார்.

தற்போது தாகம் தொண்டு நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் மீனாட்சி, குடி சைப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பறையாட்டம், சிலம்பம், வீதி நாடகம் ஆகியவற்றைக் கற்றுத் தருகிறார்.

ஒரு முறை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த ஒரு நாடகத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். நாடகத்தைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் கண் கலங்கினர். நாடகத்தில் நாங்க சொன்ன விஷயங்களைக் கேட்டு அவங்க வீட்டுப் பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைப்போம் என்று சொன்னார்கள்.

ஒரு நாடகத்தின் மூலம் இப்படியொரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்னு அப்போதான் புரிஞ்சுது என்று சொல்லும் மீனாட்சி, மூன்று ஆண்டுகளாக சென்னை அகில இந்திய வானொலியில் பகுதிநேரத் தொகுப்பா ளராகப் பணியாற்றிவருகிறார்.

இவர்களின் தாகம் அமைப்பு சார்பில் மே 28 உலக மாதவிடாய் சுகாதார நாளன்று மாதவிடாய்க்காக ஒரு பாடலைத் தயாரித்துள்ளது.   என்ற அந்தப் பாடலை அவர்கள் குழுவினரே எழுதியும் பாடியும் உள்ளனர்.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நாட்டு நலப் பணிகள் மூலமாகதான் சமுதாயத்துக்குத் தொண்டு செய்ய முடியும்னு நினைத்திருந்தேன். ஆனால், கலை என்னை வேறொரு இடத்துக்குக் கொண்டு வந்திருக்கு என்று சொல்லும் மீனாட்சிக்கு ஒரு கலைக்கூடத்தைத் தொடங்க வேண்டும் என்பதுதான் ஆசை.

 

இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாடுகளில் குழந்தைக் கடத்தல் மிகச் சாதாரணமாகிவிட்டது. ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான குழந் தைகள் கடத்தப்படுவதாகப் புள்ளிவிவ ரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வர்கள், பெற்றோரால் தவறவிடப்பட்ட வர்கள் அல்லது வீட்டிலிருந்து  கோபத்தில் வெளியேறியவர்கள். இப்படிக் குடும்பத் தைவிட்டுப் பிரிந்த குழந்தைகள் மீண்டும் குடும்பத்தினருடன் இணைவது மிகவும் குறைவு.

இப்படிக் காணாமல்போன குழந்தை களை மீட்டு அவர்களுடைய பெற்றோரி டம் ஒப்படைக்கும் பணியை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரயில்வே காவல்துறை அதிகாரி செய்துவருகிறார். இரண்டு ஆண்டுகளில் 900-க்கும் அதிக மான குழந்தைகளை மீட்பது சவாலான காரியம். ஆனால், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பணியாற்றும் துணை ஆய்வாளர் ரேகா அதைச் சாதித்திருக்கிறார்.

சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம்

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரேகா, 2014-இல் ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலைக்குச் சேர்ந்தார். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 2015இல் பொறுப்பேற்றுக்கொண்டார். தன் அன் றாடப் பணிகளுக்கிடையே, ரயில் நிலையத்தில் ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவார்.

பொதுவாகக் காலை எட்டு மணிக் கெல்லாம் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கும் நேரத்திலேயே மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு வந்துவிடும் ரேகா, இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறார். 2016இல் ஆண்டில் மட்டும் சுமார் 434 குழந்தை களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த ரேகா, 2017இல் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறார்.

இரண்டே ஆண்டுகளில் 950-க்கும் அதிகமான குழந்தைகளை மீட்டு ரயில்வே துறைக்கு பெருமை சேர்த்த ரேகாவைக் கவுரவிக்கும் விதமாக பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் அவரைப் பற்றிய பாடத்தை மகாராஷ்டிர அரசு சேர்த்திருக்கிறது. ரேகாவின் இந்த மீட்புப் பணிகளுக்கு அவருடைய குழு வினர் உறுதுணையாக இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டு மீட்புப் பணி ரேகாவின் செயல்பாட்டையும் அணுகு முறையையும் செம்மையாக்கியிருக்கிறது. ரயில் நிலையத்தில் இருக்கும் குழந்தை களின் உடல் மொழி, உதவிக்காக ஏங்குவது, பசியில் வாடுவது போன்ற நுட்பமான உணர்வுகளை மிக எளிதில் அவர் கண்டுகொள்கிறார். அதனால் ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தை களை அவரால் அடையாளம் காண முடிகிறது. பல நேரம் மொழி முக்கியப் பிரச்சினையாக இருந்தாலும், தான் காட்டும் அன்பின் மூலம் சம்பந்தப்பட்ட குழந்தையின் மனத்தில் இடம்பிடித்து விடுகிறார் ரேகா.

குழந்தைகளைக் காப்பகத்தில் விட் டாலும், பெற்றோருடன் அனுப்பும்வரை சில குழந்தைகளை ரேகா அவ்வப்போது சந்தித்துப் பேசுவதும் வாடிக்கையாகி விட்டது. குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்ததோடு கடமை முடிந்து விட்டதாக நினைக்கக் கூடாது என்று சொல்லும் ரேகா, அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படவோ, விருப்பமின்றி அங்கிருந்து வெளி யேறவோ கூடாது என்பதிலும் அக்கறை யோடு செயல்படுகிறார்.

ரேகாவின் குழுவினர், குழந்தையின் ஒளிப்படத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அவர்களுடைய பெற்றோரைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், வெறும் 10 சதவீதக் குழந்தை களே, அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் இணைய முடிகிறது என்று வேதனையாகக் கூறுகிறார் ரேகா மிஸ்ரா.

பொதுவாக, 13 முதல் 16 வயதுடை யவர்கள்தான் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறிவிடுவதாகச் சொல் லும் ரேகா, அப்படி வருபவர்களில் பெரும் பாலானவர்கள் மும்பை ரயில் நிலை யத்தில் தஞ்சமடைகின்றனர் என்றும் சொல்கிறார். முகநூல் நண்பர்களைச் சந்தித்து உதவி கேட்கவோ தங்களுக்கு விருப்பமான நட்சத்திரத்தை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ அவர்கள் மும்பைக்கு வருகிறார்கள் என்று கூறும் ரேகா, அவர்கள் குழந்தைக் கடத்தல் கும்பலின் கையில் சிக்காமல் காப்பாற்றி, பெற்றோரிடம் ஒப்படைப்பதில் மிகுந்த நிம்மதி கிடைப் பதாக நெகிழ்கிறார்.

மொழி கடந்த அக்கறை

சென்னையில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பெண்களை ரேகா மீட்டி ருக்கிறார். மும்பை ரயில் நிலையத்தில் மிகவும் அச்சத்துடன் நின்றிருந்த அந்தப் பெண்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை ரேகா உணர்ந்தார்.

தமிழில் மட்டுமே பேசத் தெரிந்த அவர்களை, அவர்களுடைய பெற் றோரிடம் ஒப்ப டைக்கச் சிரமப்பட்டார் ரேகா. அவர்கள் எதற்காகக் கடத்தப் பட்டார்கள் என்பதை மொழிபெயர்ப் பாளர் உதவியோடு அறிந்துகொண்டார்.

பிறகு தமிழகத்தில் அவர்களுடைய பெற்றோர் கொடுத் திருந்த புகார் குறித்து கண்டறிந்து, அவர் களைக் குடும்பத் தினரோடு சேர்த்து வைத்தார்.

எந்தக் குழந்தையும் தனது பால்ய வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்பதில் ரேகா உறுதியுடன் இருக்கிறார் குறிப்பிடத்தக்கது.

சாதிக்க துடிக்கும் கால்பந்தாட்ட பெண்கள்

கால்பந்துக்கு உழைக்கும் மக்களின் விளையாட்டு என்ற பெயரும் உண்டு. உலகம் முழுவதும் அதிக ரசிகர் களைக் கொண்ட விளையாட்டும் இதுதான். தற்போது ரசியாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளைப் பார்க்க ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அந்நாட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்தப் பரபரப்புக்குச் சிறிதும் குறைவில்லாமல் இருக்கிறது சென்னை வியாசர்பாடி பகுதி. இங்கே வீட்டுக்கு ஒருவர் கால்பந்து விளையாடுகிறார்!

குடிசைவாழ் குழந்தைகள் கல்வி, திறன் மேம்பாட்டு மய்யம் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாண வர்களுக்கு முல்லை நகர் கால்பந்து மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிபெறும் இந்த மய்யத்தில் பெண்கள் அணியைச் சேர்ந்தவர்கள் மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்குத் திறமைசாலிகள்.

வியாசர்பாடி பகுதி மக்கள் மரடோனா, ரொனால் டோ, மெஸ்ஸி எனப் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களின் பெயர் களைத் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கும் அளவுக்கு அந்த விளையாட்டின் மீது ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். நிஜ கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவில் கால்வாசி அளவே இந்த மைதானம் உள்ளது. ஆனால், இங்கு பயிற்சி பெற்ற பாரதி அரசு மகளிர் கல்லூரி மாணவி பீமாபாய் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற தோடு, பல்கலைக்கழகம், மாநில அளவிலான கால்பந்துக் குழுக்களிலும் இடம் பெற்றுள்ளார். கோதியா கோப் பைக்காக  ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

நான் பள்ளிக்கு சென்று விட்டு வரும்போதெல்லாம் இந்த மைதானத்தைக் கடந்துதான் வீட்டுக்குப் போவேன். இங்கு நிறைய பேர்  கால்பந்து விளையாடுவதைப் பார்த்ததும் எனக்கும் விளையாட ஆசை வந்தது. ஏழாவது படித்த பொழுது  மிகவும் அடம்பிடித்து பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். பொதுவாக வியாசர்பாடி என்றாலே கெடுபிடியான இடம் என்று  சொல்லுவார்கள். அந்தப் பெயரை மாற்ற நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம்.

எங்கள் ஏரியாவே குட்டி பிரேசிலாக மாறியிருக்கிறது. காலையில் கஞ்சியை மட்டும் குடித்து விட்டுக்கூட விளை யாட வருவோம். ரொம்ப கடினமான நிலையில்  நாங்கள் தேசியப் போட்டிகளில் கலந்து கொள்கிறோம். நிறைய பேர் படிப்புக்காக உதவுவார்கள். ஆனால் எங்களை மாதிரி ஏழ்மை நிலையில் இருந்து வருகிறவர்களுக்கு ஊக்கமும் ஊட்டச்சத்தான உணவும்தான் தேவை. இதுக்கு யாராவது உதவினால் நல்லது என்று சொல்லும் பீமாபாய், வறுமை யைத் திறமையால் விரட்டும் முயற்சியில் முனைப்புடன் இருக்கிறார்.

மாற்றம் தந்த விளையாட்டு

செம்மண் தரையாக இருந்த மைதானத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் செயற்கைப் புல்தரை போடப் பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே புல்தரையை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திவருவதால் மைதானம் ஆங்காங்கே சேத மடைந்திருக்கிறது. மின்விளக்குகளும் பழுதாகியுள்ளன. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மாணவிகள் பலர் கால்பந்துப் பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வத்துடன் வந்தபடி இருக்கிறார்கள்.

குடிசைவாழ் குழந்தைகள் கல்வி, திறமை மேம்பாட்டு மய்யத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தங்கராஜ், முன்னாள் தேசிய கால்பந்து வீரர். இந்தப் பகுதியில் நிறைய குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்களை மீட்டு, பள்ளியில் சேர்க்கத்தான் 1997இல் இந்த மய்யத்தை நண்பர்களோடு சேர்ந்து தொடங்கினோம். குழந்தைகளுக் குப் படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட வேண்டும் என்று ஃபுட்பால் பயிற்சி கொடுத்து, அவர்கள் மனநிலையை மாற்றுவதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது என்று சொல் லும் தங்கராஜ், தங்கள் நோக்கம் நிறைவடைந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

வாய்ப்பே வாழ்க்கை

அரக்கோணத்தைச் சேர்ந்த கவுசல்யாவின் பெற்றோர் விவசாயிகள். தங்கள் மகள் விளையாட்டுத் துறையில் சாதிப்பாள் என்ற நம்பிக்கையோடு அவரைக் கால்பந்துப் பயிற்சி வகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். பி.ஏ. தமிழ் படித்து வரும் கவுசல்யா, கடந்த மூன்று ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வருகிறார். எங்களுக்குக் கிடைக்கும் குறைந்த வாய்ப்பைப் பயன்படுத்திதான் சாதிக்க நினைக்கிறோம். ஆனால், தனியார் கல்லூரி மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைப்பதில்லை. வாய்ப்பு கொடுத்தால் தானே சாதிக்க முடியும்? எங்கள் வாழ்வே இந்த விளையாட்டை நம்பித்தான் இருக்கிறது என்கிறார் அவர்.

 

 

 

 

 

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி ஆட்டம் அது. 2016இல் மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியாவும் நேபாளமும் மல்லுக்கட்டின. மைதானத்தில் கால்பந்து ரசிகர்கள் ஆர்ப்பரித்துக்கொண் டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் அந்தப் பெண்ணின் கடைசி ஆட்டத்தைக் காணவே அங்கே குவிந்திருந்தனர். அந்தப் பெண் நடுகள வீராங்கனையாகப் பம்பரம்போல் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தார்.

அந்தப் பெண்ணுக்கு 36 வயது என்று நம்புவது கடினமே. இளம் பெண்களுக்கு நிகராக அநாயாசமாக விளையாடினார். இறுதியில் இந்திய மகளிர் கால்பந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. அந்த வெற்றியோடு தனது சர்வதேசக் கால்பந்து பயணத்தை அந்தப் பெண் முடித்துக் கொண்டார்.  அந்தப் பெண்தான் ஆயினம் பெம்பெம் தேவி.

வட கிழக்கு மாநிலங்களில் இயல்பாகவே கால்பந்து காதலர்கள் அதிகம். வீதியில் சிறுவர்களும் சிறுமிகளும் கால்பந்தை உதைத்துக் கொண்டிருப்பது அங்கு வாடிக்கை. பெம்பெம் தேவிக்கும் இப்படித்தான் கால்பந்து விளையாட்டு அறிமுகமானது. பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் வீதியில் வியர்க்க விறுவிறுக்கக் கால்பந்தை உதைத்து விளையாடிக்கொண்டிருப்பார்.

நன்றாகப் படித்தபோதும், தேவியின் கால்பந்து ஆர்வம் அவருடைய அப்பா நாகேஷோர் சிங்குக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. மிகவும் ஏழ்மையான குடும்பம் அவர் களுடையது. கூலித் தொழில் செய்துதான் அவருடைய அப்பா பிள்ளைகளைப் படிக்க வைத்தார். ஆனாலும், வீட்டிலிருந்த சகோதரர்களும் சகோதரிகளும் கொடுத்த ஆதரவால் தேவியின் கால்பந்துக் காதல் தீவிரமானது.

கால்பந்து விளையாட்டு நுணுக்கங்களை விரைவாகவே கற்றுக்கொண்ட தேவி, 1991இல் 11 வயதிலேயே யாவா கிளப்புக் காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். கால்பந்தை லாகவமாக உதைக்கும் அவரது திறமையால், 13 வயதிலேயே மணிப்பூர் சப் ஜூனியர் அணியில் அவருக்கு இடம் கிடைத்துவிட்டது. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் அவர் பந்தைக் கடத்தும் திறமையைப் பார்த்துத் தேசிய கால்பந்து தேர்வாளர்கள் மலைத்துப்போயினர். 1994இல் தனது 15 வயதில் தேசிய அணியில் தேவி இடம்பிடித்தார்.

அதுவரை ஒழுங்காக படிக்கிற வேலையை பார் என்று கறார் குரலில் கண்டித்த அவருடைய அப்பா, அதன் பிறகு தேவியின் படிப்பில் கண்டிப்பு காட்டவில்லை. தேசிய அணியில் தேவி இடம்பிடித்ததும் அவரது சர்வதேசக் கால்பந்து இன்னிங்ஸ் தடபுடலாகத் தொடங்கியது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் தேவி மட்டும் ஜெட் வேகத்தில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிக்கொண்டிருந்தார்.

1997ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இந்திய மகளிர் அணி பயிற்சி பெற்று திரும்பியபிறகு, வெற்றிகளைக் குவிக்கக் தொடங் கியது. அதற்கு தேவியின் ஆட்டமும் முக்கியக் காரணம். இன்னொரு புறம் மணிப்பூர் அணி சார்பாகப் பங்கேற்று, தேசிய அளவிலும் பல சாதனைகளை அரங் கேற்றினார். 1998இல் மணிப்பூர் காவல்துறையில் காவலர் பணி இவரைத் தேடி வந்தது. மிகக் குறைந்த சம்பளமே கிடைத்தாலும், அந்தப் பணத்தைக் கொண்டு நிம்மதியாகக் கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடினார்.

தேசிய அளவில் 19 தொடர்களில் பங்கேற்று 16 வெற்றிகளை மணிப்பூர் அணிக்குப் பெற்றுத் தந்திருக்கிறார் தேவி. இதில் 9 வெற்றிகள் மணிப்பூர் அணியின் கேப்டனாக அவர் சாதித் தவை. 2003இல் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். தேவியின் துடிப்பான ஆட்டத்தால், இந்திய அணி ஏ.எஃப்.சி. கோப்பைக்குத் தகுதி பெற்றது. 2012ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக அணியை அவர் வழிநடத்தியிருக்கிறார்.

2010இல் ஆசிய கோப்பை 2012இல் தெற்காசிய கால்பந்து வாகையர் பட்டம் உட்பட5 சர்வதேசத் தொடர்களை இவரது தலைமையின் கீழ் இந்திய அணி வென்றது. 85 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ள தேவி 50-க்கும் அதிகமான கோல்களை அடித்திருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பெம்பெம் தேவிக்குத் தனி மதிப்பு உண்டு. 2014இல் மாலத்தீவில் உள்ள ரேடியண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்காக அவர் விளையாடினார். அந்த அணி 2014, 2015 ஆண்டுகளில் கோப்பையை வெல்லவும் தேவி காரணமாக இருந்தார்.

கால்பந்தின் தூதுவர்: சிறந்த கால்பந்தாட்டக்காரருக்கான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் விருது 2001, 2013 ஆகிய ஆண்டுகளில் தேவிக்கு வழங்கப்பட்டது. ஆனால், அர்ஜூனா விருது அவ ருக்குக் கடந்த ஆண்டுதான் கிடைத்தது. அதற்கு முன்புவரை அந்த விருதுக்கு அவரது பெயர் பரிசீலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது  கெட்டவாய்ப்பாகும்.

ஃபிபா அமைப்பின் இந்திய கால்பந்து தூதராகவும் தேவி இருந்திருக்கிறார்.  மணிப்பூரில் தலைமைக் காவலராக அவர் பணி புரிந்துவருகிறார்.

தீயணைப்புதுறையில் சாதனைப் பெண்

ஆடவர் மட்டும் எனப் பலரும் நினைத்திருந்த தீயணைப்புத் துறையில் கால்பதித்த முதல் பெண் அர்சினி கனேகர். நாக்பூரைச் சேர்ந்த இவர், இளங்கலை படித்த போது தேசிய மாணவர் படையில்  சேர்ந்தார். அதன் பின் அர்சினியின் வாழ்க்கையில் புதிய உத்வேகம் பிறந்தது. என்.சி.சி. சீருடை அணிந்தவர், ஏதாவது ஒரு சீருடைப் பணியில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று, இந்தியாவின் முதல் பெண் தீயணைப்புத்துறை அதிகாரி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

தோழி காட்டிய வழி

இளங்கலை முடித்தபின் எம்.பி.ஏ-வில் சேர்ந்தார். ஆனால், சீருடைப் பணி மீதான காதலும் அதில் சாதிக்க வேண்டும் என்ற கனவும் அர்சினியை உள்ளிருந்து இயக்கின. நண்பர்களுடன் பேசும்போதுகூடத் தன் கனவு குறித்தே அர்சினி ஆர்வத்துடன் பேசுவார். நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்புத் துறைக் கல்லூரியில் வழங்கப் படும் மூன்றரை ஆண்டு பயிற்சிப் படிப்பு பற்றித் தோழி மூலமாகத் தெரிந்துகொண்டார். மறுநாளே, தோழியுடன் நாக்பூருக்குச் சென்று நுழைவுத் தேர்வையும் எழுதினார். வாரங்கள் உருண்டோடின. எம்.பி.ஏ. படிப்பும் தொடர்ந்தது. திடீரென ஒரு நாள் நாக்பூர் தீயணைப்புத் துறைக் கல்லூரியிலிருந்து அழைப்புக் கடிதம் வந்தது. நாக்பூர் சென்ற அர்சினிக்கு, வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது. கல்லூரிக்குள் சென்றபோதுதான் இதுவரை அந்தக் கல்லூரியில் பெண்கள் யாரும் பயின்றதில்லை என அர்சினிக்குத் தெரிந்தது. அது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவரது லட்சியத்துக்கு வலுச்சேர்த்தது.

கடினத்தை வென்ற மன உறுதி

ஆண்களுக்கு மட்டுமே விடுதி இருந்ததாலும் மூன்றரை ஆண்டுகளும் கல்லூரியிலேயே தங்கிப் பயில வேண்டும் என்பதாலும் அர்சினியைச் சேர்த்துக் கொள் வதில் கல்லூரி நிர்வாகத்துக்கு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு அர்சினியைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளச் சிறப்பு அனுமதி பெற்றது. கல்லூரியில் பெண்கள் விடுதி இல்லாததால், வீட்டி லிருந்து கல்லூரிக்கு வந்து படிக்க சிறப்பு அனுமதியும் அர்சினிக்கு வழங்கப்பட்டது. தினமும் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொள்வது அர்சி னிக்குக் கடினமாகவே இருந்தது. பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல, அதிகாலையிலேயே வீட்டிலிருந்து அர்சினி புறப்பட்டுச் செல்வார். மேலும், பயிற்சியின்போது பெண் என்பதால் எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. அதை அர்சினி விரும்பவும் இல்லை.

நான்தான் அந்தக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண். எனவே, பயிற்சி வகுப்புகளுக்குத் தாமதமாகச் செல்லக் கூடாது என்பதில் உறுதியோடு இருந்தேன். என் செயல்பாடு மூலம் அடுத்தடுத்து சேரப்போகும் மாணவிகளுக்கு அளவுகோலை நிர்ணயிக்க விரும்பினேன். அங்கே கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். ஆனால், மாண வர்களைவிட நான் பின்தங்கிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன். பயிற்சியின்போது ஒருபோதும் நான் பின்தங்கியது இல்லை என்கிறார் அர்சினி.

நெருப்போடு விளையாட்டு

கல்லூரிப் படிப்பின் போதே, கல்லூரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நடைபெறும் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் பணிக்கு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள். 2001இல் சிலிண்டர் வெடித்ததால் சீரடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி அர்சினிக்குக் கிடைத்தது. சிறிய அள விலான தீ விபத்து என்பதால், அதைப் பெரிய சிக்கலோ சவாலோ இல்லாமல் கட்டுப்படுத்திவிட்டார் அவர்.

2002இல் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்து இந்தி யாவின் முதல் தீயணைப்பு வீராங்கனை என்ற வரலாற்றை அர்சினி படைத்தார். 2005இல் டில்லியில் பணியாற்றிய போது, ஒரே நாளில் அய்ந்து தீ விபத்துகளைக் கட்டுப் படுத்தும் நெருக்கடியான சந்தர்ப்பம் அர்சினிக்கு அமைந் தது. அதில் ஒரு நகரில் உள்ள காலணி குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீயின் காரணமாக ஒட்டு மொத்தக் கட்டடமும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. அதன் எதிரே இருந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் மீதிருந்து தண்ணீரை அடித்தும் தீ கட்டுப்பட வில்லை. இறுதியாக அர்சினியும் அவருடைய குழுவினரும் உயிரைப் பணயம் வைத்து, தீ விபத்து நேர்ந்த கட்டடத்தின் மேற்பகுதிக்குச் சென்று தண்ணீரை அடித்துத் தீயை அணைத்தனர்.  இந்திய விமானப் படையின் முதல் ஹெலிகாப்டர் பைலட் சிவானி குல்கர்னி தான் அர்சினியின் ரோல் மாடல். என்.சி.சி-யில் இணைந்த போது அவரைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந் தால், அன்று முதல் சிவானி யைப் போல் சீருடைப் பணியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

Banner
Banner