மகளிர்

அய்.பி.எஸ். ஆக ஆணென்ன, பெண்ணென்ன?

அய்.பி.எஸ். ஆக ஆண்களுக்கு இணையாகப் பெண்களாலும் பணியாற்ற முடியும் என்கிறார் பூங்குழலி அய்.பி.எஸ். இவர் 2014 பேட்ச்சின் கேரளா மாநிலப் பிரிவு அதிகாரி.  கன்னூரின் பயிற்சி ஏ.எஸ்.பி.யாகப் பணியாற் றியவர். அய்தராபாத் அகாடமியில் அடுத்த கட்டப் பயிற்சிகளை முடித்து மாவட்ட ஏ.எஸ்.பி. பணிக்காகக் காத்திருக்கிறார்.கரூரைச் சேர்ந்த பூங்குழலி பிளஸ் டூ-வில் அம் மாவட்டத்தின் இரண்டாவது மாணவி. தமிழ்ப் பாடத்தில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார். 2007-இல் பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வழக்கம்போல அய்.டி. துறையில் வேலையில் சேர்ந்தார்.

ஆனால் துறுதுறுப்பும் சுடர்விடும் அறிவும் கொண்ட பூங்குழலிக்குச் சலிப்பு தட்டியது. செய்தித் தாள்கள் மூலம் யூ.பி.எஸ்.சி. ஆர்வம் உண்டானது. தொடர்ந்து முயற்சி செய்தவர் அய்ந்தாவது முயற்சியில் அய்.பி.எஸ். ஆனார். தன்னம்பிக்கையும் நிதானமும் அவசியம்! துணிச்சல் மிக்க பெண்ணாகவும் இருந்த பூங்குழலி யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்ததும் கேரளா பிரிவின் என்.ஜி.ராஜமாணிக்கம் அய்.ஏ.எஸ்., நிசாந்தினி அய்.பி.எஸ். ஆகியோரைச் சந்தித்து ஆலோசனையும் உந்துதலும் பெற்றார்.

முதலில் வீட்டில் தயக்கத்தோடுதான் சம்மதித்தார்கள்.முதல் ஆண்டு சென்னையில் ஒரு யூ.பி.எஸ்.சி. பயிற்சி நிலையத்தில் படித்தாலும் முதல் இருநிலைகளில் தேர்ச்சி பெற்றேனே தவிர நேர்முகத் தேர்வில் தவறிவிட்டேன். இரண்டாவது முயற்சியிலும் இதேதான் நடந்தது. ஆரம்பத் தில் மன அழுத்தம் உண்டானது.

தன்னம்பிக்கை குறை வினால் மூன்றாவது முயற்சியில் முதல்நிலை தேர்விலேயே தவறிவிட்டேன். ஒரு மாற்றம் வேண்டி நான்காவது முயற் சிக்கு டெல்லிக்குச் சென்று வஜ்ரம் ராவ் பயிற்சி நிலையத்தில் படித்தேன். இதிலும் என்னால் தேர்ச்சி பெற முடியாமல் சென்னைக்குத் திரும்பினேன். அய்ந்தாவது முயற்சியில் அய்.பி.எஸ். ஆனேன்.

அத்தனை முயற்சிகளிலும் என்னுடைய பெற்றோர் எனக்கு ஊக்கம் அளித்து செலவும் செய்தது மிகப் பெரிய வாய்ப்பு என மகிழ்கிறார் பூங்குழலி.

அச்சம் தவிர்ப்போம்

அய்ந்தாவது முயற்சிக்கு இடையே ரிசர்வ் வங்கியின் கிரேட் பி, தமிழகத்தின் குரூப் 1 ஆகிய தகுதித்தேர்வுகளை எழுதியது பூங்குழலிக்கு நல்ல பலனை அளித்தது. குரூப் 1-ல் தமிழகத்தின் நான்காவது ரேங்க் கிடைத்தபோது யூ.பி.எஸ்.சி.யில் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் வந்தது.அய்.பி.எஸ். பெண்களுக்கு ஒத்து வராது,

அய்.எஃப்.எஸ். ஆனால் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டிவருமே என பயந்து முதல் நான்கு முயற் சிகளில் அவ்விரண்டையும் பூங்குழலி தேர்ந்தெடுக்கவில்லை. பிறகு, உண்மையை உணர்ந்தவர், அய்ந்தாவது முயற்சியில் அவ்விரண்டையும் குறிப்பிட்டதில் அய்.பி.எஸ். கிடைத்தது.

அய்.பி.எஸ். ஆனதால் இப்போது பெண்களுக்கு அதிக மாக சேவை செய்ய முடிவதை நினைத்து மகிழ்கிறார் பூங்குழலி. இவரது பேட்சின் 150 அய்.பி.எஸ்.களில் 27 பேர் பெண்கள்.

முன்னுதாரணமானவர்

பெண் என்பதற்காக என்னுடைய பெற்றோர் எந்தப் பாரப்பட்சமும் என்னிடம் காட்டியதில்லை. அதனால் நான் துணிச்சலாகவே வளர்ந்தேன். பயிற்சிக்காக தனியாகவே டெல்லியில் தங்கிப் படித்தேன். கன்னூரின் பயிற்சி ஏ.எஸ்.பி.யாக இருந்தபோது சத்திரக்கல் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் பணியில் நல்ல அனுபவம் கிடைத்தது. அரசியல் ரீதியாக பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் அந்தப் பகுதியில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகப் பாராட்டு பெற்றேன்.

குறிப்பாகப் பெண்கள், ஆண் அதிகாரியிடம் சொல்லத் தயங்கும் பிரச்சனைகளை என்னிடம் நேரடியாகச் சொன்னதால் பல வழக்குகளில் எளிதாகத் தீர்வு காண முடிந்தது. இப்போது, என்னிடம் ஆலோசனை கேட்கும் பெண்களுக்கு அய்.பி.எஸ். தேர்ந்தெடுக்கச் சொல்கிறேன் எனப் பெருமிதம் கொள்கிறார்.

செவாலியே விருதுக்கு ஒருபடி மேலே!

நடிகர் கமலுக்கு செவாலியே விருது கிடைத்த பிறகு மீண்டும் என்னைப் பலரும் நினைத்துப் பார்க்கிறார்கள் என்று புன்ன கைக்கிறார் பேராசிரியர் மதனகல்யாணி. புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் பேரா சிரியரான இவர் செவாலியே விருது மட்டு மல்ல, அதைவிட உயரிய விருதான ஒஃபீசியே விருதும் பெற்றிருக்கிறார். இந்தியா வில் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் இவர்தான்!

இந்த மாதிரி விருது எல்லாம் எனக்குக் கிடைக்கும்னு எதிர்பார்த்ததில்லை. கமல் கலைத்துறையில் விருது பெற வுள்ளார். நான் பெற்றது இலக்கியத் துறையில் என்கிறார் 78 வயதாகும் மதனகல்யாணி.

புதுச்சேரியில் பிரெஞ்சு அரசால் நடத்தப்படும் பிரெஞ்சு கல்லூரியான லிசே பிரான்ஸேயில் தமிழ்ப் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணியாற்றியவர் இவர். மூப்பின் காரணமாகப் பழைய தகவல்களை இவரால் தொடர்ச்சியாக நினைவுகூர முடியவில்லை. என் நினைவில் நிற்கிற விசயங்களை மட்டும் சொல்கிறேன் என்றபடி பேசுகிறார் மதனகல்யாணி.

அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதே பெரிய விசயம். ஆனால் எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. என் தந்தையின் ஊக்கத்தால்தான் என்னால் படிக்க முடிந்தது என்று சொல்லும் மதனகல்யாணிக்குத் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளும் அத்துப்படி. அதனால் பிரெஞ்சு கல்லூரியில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

மொழிபெயர்ப்புப் பயணம்

பிரெஞ்சு மாணவர்கள், நம் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றி நிறைய கேட்பார்கள். பல மாணவர்கள் தமிழை ஆர்வத்துடன் படித்திருக்கிறார்கள். மொழிக்கும் இலக்கியத் துக்கும் என் விருப்பப் பட்டியலில் எப்போதும் முதலிடம் உண்டு. தமிழுடன் பிரெஞ்சு இலக்கியமும் பிடிக்கும் என்று சொல்லும் மதனகல்யாணி நோபெல் பரிசு பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் ஆல்பெர் காம்யு எழுதிய லா பெஸ்த் நாவலை கொள்ளை நோய் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பிரெஞ்சு நாவலாசிரியர் பல்சாக் படைப்பான லு பெர் கொர்யோ என்ற நாவலை தந்தை கெரியோ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.

சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கும் அந்த நூல், பிரான்ஸ் நாட்டை நம் கண் முன் நிறுத்தும் என்று சொல்லும் மதனகல்யாணி, எழுத்தாளர் சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ நாவலை பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார். புதுச்சேரி நாட்டுப்புறப் பாடல்கள் என்ற தலைப்பில் 200 பாடல்களைத் தொகுத்து தமிழ், பிரெஞ்ச் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிட்டிருக்கிறார்.

இவரது புதுச்சேரி நாட்டுப்புறக் கதைகள் என்ற மொழிபெயர்ப்பு நூலை பிரான்ஸின் புகழ்வாய்ந்த பதிப்பகமான கர்த்தாலா வெளியிட்டது.

பிரெஞ்சு அறிந்த சிறுவர்களுக்காக சிலப்பதிகார நூலின் சுருக்கத்தைப் படங்களுடன் வெளியிட்டோம்.

கோதலூப், மொரீசியஸ், ரீயூனியன் தீவுகளில் பிரெஞ்சு பேசும் தமிழ்மொழி அறியாத தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் மாரியம்மன் தாலாட்டு, மதுரைவீரன் அலங்காரச் சிந்து முதலியவற்றை இசையோடு ஆனால் பொருள் தெரியாமல் பாடினார்கள்.

அவர்களுக்காக பிரெஞ்சு மொழியில் இரண்டு நூல்களை எழுதினேன். பிரெஞ்சு கவிதைகளைத் தமிழில் தூறல் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளேன் என்று பட்டியலிடுகிறார் பேராசிரியர் மதனகல்யாணி. இதுவரை 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 2009இல் புதுச்சேரி அரசு கலைமாமணி விருது வழங்கி இவரை கவுரவித்தது. 2002இல் செவாலியே விருது கிடைத்தது. அதைத் தொடர்ந்து பிரெஞ்சு அரசின் மேலும் ஒரு உயரிய விருதான ஒஃபிஸியே விருது 2011இல் கிடைத்தது.

முன்பு பிரான்ஸ் அரசு இந்த விருதுகளை போரில் பங்கேற்றோருக்குதான் தந்தது. செவாலியே என்பது குதிரை வீரன் விருது.

அதற்கும் மேல் நிலை ஒஃபிஸியே விருது. இதற்கு மேல் கமாண்டர் என்ற பொருள்படும் கெமாந்தான் விருதும் உள்ளது என்று விருதுக்கு விளக்கம் தருகிறார் மதனகல்யாணி.

ஒருவர் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்கலாம். அவர்களுடைய விருப்பம்தான் முக்கியம் என்று சொல்லும் மதனகல்யாணியின் மொழி மீதான விருப்பம்தான் அவரை விருதுக்கு உரியவராக உயர்த்தியிருக்கிறது.

அன்று ஆடு மேய்த்த சிறுமி
இன்று கல்வித்துறை அமைச்சர்!

வாழ்க்கை என்பது பெரும் போராட்டம்தான்; அதற்காகப் போராடாமல் விட்டுவிட முடியுமா? என்பதை இளம் வயதிலேயே உணரத் தொடங்கியவர் நஜா வெலு பெல்காசம் (Najat Vallaud-Balkacem) இன்று பிரான்ஸின் புதிய முகம் எனக் கொண்டாடப்படும் இவர் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஒரு குக்கிராமத்தில் வறுமைப் பிடியில் வாடிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்.

அப்பா கட்டிடத் தொழிலாளர்; உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இளந்தளிர் நஜா நான்கு வயதில் ஆடு மேய்க்க விடப்பட்டார். வறுமை வாழ்க்கை விளிம் புக்குத் தள்ள ஆப்பிரிக்காவை விட்டுப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் குடியேறும் நிலைக்கு நஜாவின் குடும்பம் தள்ளப்பட்டது.

பிறந்த பூமியை, உறவினரை, நண்பர்களை, பழக்கப் பட்ட கலாச்சாரத்தை திடீரென்று உதறிவிட்டு முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ்க்கையைத் தொடங்குவது மிகப் பெரிய சவால்! பள்ளிப் பாடங்களைப் படிப்பது முதல் பிரெஞ்சு மொழியைப் பேசுவது அதன் கலாச்சாரத்தைப் பழகிக்கொள்வதுவரை திகைப்பும் தடுமாற்றமும் ஆரம்ப நாட்களில் நஜாவுக்கு இருந்தது. ஆனால் தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் துணிச்சலாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டார் இளம் நஜா.

பிரான்ஸின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரிஸ் அரசியல் ஆய்வுகள் கல்வி நிறுவனத்தில் 2002இல் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே வேளையில் பகுதி நேர வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தையும் தாங்கினார். சக மாணவர் போரிஸ் வெலு வோடு காதல் மலரவே கல்வியோடு காதலும் கைகூடியது. இருவரும் 2005இல் தம்பதிகள் ஆனார்கள்.

அரசியல் கல்வி அரசியலுக்கான கதவுகளைத் திறந்தது. வேலையில்லாத் திண்டாட்டம், அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தல், நிறப் பாகுபாடு உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் அன்றைய காலகட்டத்தில் பிரான்ஸில் நிறைந்திருந்தன.

இது போன்ற பிரச்சினைகளில் பிரெஞ்சு அரசு கொண்டிருந்த கொள் கைகள் மீது நஜாவுக்குக் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. ஜனநாயகத்தை நிலைநாட்டவும், குடிமக்களின் உரிமை களைப் பாதுகாக்கவும் அரசியலில் ஈடுபடுவது என முடிவெடுத்து சோஷலிஸ்ட் கட்சியில் 2002இல் சேர்ந்தார். லியான் நகர மேயரான ஜெரார்து கோலம்பை ஆதரித்து முழு மூச்சாக அரசியலில் 2003இல் இறங்கினார். ரோன் - ஆப்ஸ் பிராந்திய சபையின் கலாச்சாரக் கழகத் தலைவராக 2004இல் நஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே சோஷலிஸ்ட் கட்சியின் ஆலோசகரானார்.

2008இல் அவர் முதன்முதலில் களமிறங்கிய லியான் நகருக்கே கவுன்சிலரானார். 2012இல் பெண்கள் அமைச் சகத்தின் அமைச்சரானார். 2013இல் தன்பாலின உறவாளர் களின் திருமணத்தைச் சட்டரீதியாக பிரான்ஸ் அங்கீ கரித்ததை இது வரலாற்று முன்னேற்றம் என துணிச்சலாகப் பாராட்டி ஆதரித்தார். சமூக வலைத்தளமான டிவிட்டரை வெறுப்பு அரசியலுக்குப் பிரயோகிக்கக் கூடாது என்கிற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்காற் றினார். அதை அடுத்து, நகர்சார் விவ காரங்களுக்கான அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அரசாங்கச் செய்தி தொடர்பாளர் எனப் பல பதவிகள் வகித்தார்.

சாதனைப் பெண்

2014இல் பிரான்ஸ் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தபோது பல அமைச்சர்களின் பதவிகள் பறி போயின. ஆனால், நஜாவின் திறமைக்காகவும் போராட்டக் குணத்துக் காகவும், அதுவரை அவர் வகித்துவந்த பொறுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றியதற்காகவும் 2014இல் கல்வித் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புலம்பெயர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் 38 வயதில் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சராக ஆனது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. பிரான்ஸின் முதல் பெண் கல்வி அமைச்சர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் அவர். நிஜமாகவே நஜா பிரான்ஸுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உற்சாக மூட்டும் புதிய முகம்தான்!


வீடு, மனை விற்பனைத் துறையில் வெற்றி பெற்ற வேலசிறீ

சமகாலத்தில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை நிரூபித்துவருகிறார்கள். கடின உழைப்பு தேவைப் படும் துறைகளில்கூடப் பெண் பணியாளர்கள், பெண் தொழில் முனைவோர் உருவாகிவருகின்றனர்.

டாடா நிறுவனம் தனது அபாயகரமான உற்பத்திப் பிரிவில் பெண்களை இதுவரை பணியமர்த்தியதில்லை. நூற்றாண்டு கண்ட அந்த நிறுவனத்திலேயே சமீபத்தில் அந்தப் பிரிவிலும் பெண்கள் நுழைந்துவிட்டனர். ஆனால் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் சில துறைகளில் இப்போதும் பெண்கள் ஈடுபடவே முடிவதில்லை. அப்படியான துறைகளில் ஒன்று பிராப்பர்டி டெவலெப்மெண்ட். கட்டுமானத் துறையில்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றனர். ஆனால் பிராப்பர்டி டெவலெப்மென்ட் முழுக்க முழுக்க ஆண்களின் வசம்தான் உள்ளது.

ஆண்களால் மட்டுமே வெற்றிகாண முடியும் என்கிற அந்தத் துறையிலும் பெண் தொழில் முனைவோர் உருவாக முடியும், வெற்றிகரமாக இயங்க முடியும் என்கிறார் வேலசிறீ. தனது ராம் ஈஸ்வர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் மூலம் சென்னையின் புறநகரப் பகுதிகளில் பல லே அவுட்டுகள், கட்டுமானத் திட்டங் களை நிறைவேற்றியிருக்கிறார். ஆண்கள் மட்டுமே கோலோச்சும் இந்தத் துறையில் இவரால் எப்படி நிற்க முடிகிறது?

முன்பு இருந்த நிலை கொஞ்சம் மாறிவருகிறது என்றாலும், கொஞ்சம் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். யாரை நோக்கி நமது வேலைகள் இருக்கின்றன என்பதில் தெளிவாக இருந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனாலும் இதை ஒரு சவாலாகத்தான் செய்துவருகிறேன் என்கிறார் வேலசிறீ.

இவரது சொந்த ஊர் நாகர்கோவில். படிப்பதற்காக 1997இல் சென்னை வந்திருக்கிறார். இங்கு சித்தி வீட்டில் தங்கி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே தொழில்முனைவோராக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் எந்தத் துறையில் என்பதில் தெளிவில்லை. சட்டம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனது தொடர்புகள் மூலம் சின்னச் சின்ன பிசினஸ் புராஜெக்ட்டுகள் செய்திருக்கிறேன்.

ஆனால் அதை நிறுவனம் என்கிற அளவுக்கெல்லாம் யோசிக்கவில்லை. சட்டப் படிப்புடன் எம்.பி.ஏ.வும் வைத்திருந்ததால் சில கார்ப்பரேட் நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினேன். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வேலைகள் சோர்வைத் தந்ததால் முழுமையாக தொழில்முனைவில் கவனம் செலுத்தினேன் என்று தான் கடந்து வந்த பாதையைப் பற்றிச் சொல்கிறார் வேலசிறீ.

ஏற்கெனவே இருந்த தொடர்புகளை மீண்டும் புதுப்பித்து, நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு துணிச்சலாக இந்த நிறுவனத் தைத் தொடங்கியிருக்கிறார் வேல. சட்டம் பயின்றவர் என்பதால் ஆவணங்களைச் சரிபார்ப்பது, சட்டரீதியான சிக்க லைத் தீர்ப்பது போன்ற விஷயங்கள் இவருக்கு அத்துப்படி. நிர்வாகவியல் அனுபவமும் இருந்ததால் முறையான நிர்வாகத் தையும் தன்னால் கொண்டுவர முடிந்தது என்கிறார் மகிழ்ச்சியுடன்.

இதுவரை தனிப்பட்ட முறையில் எந்த நெருக்கடிகளையும் சந்தித்ததில்லை என்று சொல்லும் வேலக்கு, அரசு அமைப்புகளில் இருந்து அனுமதி பெறுவதில் தாமதம், நீண்டகால நடைமுறைகள், அதிகப் போட்டி, லாப விகிதம் குறைவு போன்றவைதான் சவாலாக இருக்கின்றன. இந்தச் சவால்களைக் கண்டு அவர் அயர்ந்துவிடவில்லை. பிரச்சினைகளைக் கண்டு விலகிச் செல்லாமல் அவற்றை எதிர் கொண்டு, சட்டரீதியாக அணுகுவதன் மூலம் சரிசெய்துவிடு கிறேன். தவிர யாருடனும் போட்டி போடு வதில்லை.

இங்கு முக்கியத் தேவையே வெளிப்படையான அணுகுமுறைதான். நான் எனது வாடிக்கையாளர்களுக்கு அந்த நம்பிக்கையை அளிக்கிறேன். எந்த வகையிலும் வில்லங்கம் இல்லாத பத்திரங்கள், தவணை முறைத் திட்டங்களில் தெளிவான போக்கு என வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சிக்கலும் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்று சொல்லும்போது அவர் குரலில் அசாத்தியமான தன்னம்பிக்கை தொனிக்கிறது.

சட்டத் துறையில் உள்ள தொடர்புகளை வைத்துத் தனக்கான வட்டத்தை உருவாக்கிக்கொண்ட வேலசிறீக்கு இதுதான் பாதுகாப்பு தருகிறது. தனது திட்டங்கள் எல்லாமே நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய விலையில் இருப்பதும் தனக்குக் கைகொடுக்கிறது என்கிறார். அய்.டி. துறை சார்ந்தவர்களை மட்டுமே குறி வைக்காமல், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்களைத் தன் வாடிக்கையாளர்களாக இவர் கருதுகிறார்.

தொழிலில் முனைப்புடன் சமூக அக்கறையும் கொண்ட வேலசிறீ, சமூக நோக்கங்களுக்காகவும், குழந்தைகளின் கல்விக்கும் செலவிட்டுவருகிறார். தற்போது இந்தத் தொழிலுடன் கார்ப்பரேட் சட்ட ஆலோசனை, கட்டுமான வேலைகளிலும் கவனம் செலுத்துகிறார். அன்னச்சாவடி என்கிற சமூக சேவை அமைப் பைத் தொடங்கும் முயற்சியும் இருக்கிறது என்று சொல்லும் வேலசிறீ ஒரு விஷயத்தில் அசாத்தியமான தெளிவுடன் இருக்கிறார். பெண்கள் எவ்வளவு படித்தாலும், திறமை இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தை நிர்வகிப்பது, குழந்தைகளைக் கவனிப்பது என்று சுருங்கிவிடக் கூடாது.

குடும்பம் என்பது பெண்களுக்கு மட்டுமேயான கடமையில்லை. கணவன், மனைவி இருவரும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் எனது கணவரும் என்னை ஊக்குவிக்கவே செய்கிறார். குடும்பப் பொறுப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டியது அவசியம்தான். அதற்காக நமக்கான கனவுகளை நாமே புதைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்கிறபோது நமக்குத்தான் குற்ற உணர்ச்சி உருவாகும் என்கிறார் தீர்க்கமான குரலில்.

தன் தொழிலின் அடுத்த கட்டமாக ஒருங்கிணைந்த குடியிருப்பு நகரம், தனி வில்லா குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கிறார். பெண்கள் அதிகம் இல்லாத துறையில் கால் பதித்து வெற்றிபெற்றிருக்கும் வேலசிறீ, குடும்பத்தையும் வேலையையும் சரியாகத் திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம், பல பெண் தொழில்முனைவோர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

Banner
Banner