மகளிர்


பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தினந்தோறும், என் நாட்டுக்காகவும், என் நாட்டு மக்களுக்காகவும் நான் இந்த உதவியைச் செய்கிறேன் என ஈரோடு மாவட்டம்   (கவுந்தப்பாடி) இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் சொல்லி உண்டியலில் காசு போடுகிறார்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்ற இந்த மனப்பான்மையை இவர்களுக்கு ஊட்டியவர் பள்ளித் தலைமை ஆசிரியர் அ.வாசுகி.

இருபது ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் இருக்கும் வாசுகி இதுவரை தான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் முத்திரை பதித்தவர். செயல் வழிக் கற்றல் முறையை அரசு 2006இல்தான் அறிமுகம் செய்தது. ஆனால், 2004லேயே சலங்க பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது மாணவர்களைச் செயல்வழி முறையில் கற்கவைத்தவர் வாசுகி.

படிப்பு மட்டுமே மனிதனாக்காது

படிப்பு மட்டும் போதாது. அன்பு, பாசம், பிறருக்கு உதவும் மனப்பான்மை எல்லாம் சேர்ந்துதான் ஒரு குழந்தையை முழுமையான மனிதராக மாற்ற முடியும் என்கிறார் வாசுகி.

இந்தப் பள்ளியின் மாணவர்கள் தினமும் அன்று என்ன உதவி செய்தார்கள் என்பதை அடுத்த நாள் காலை சபைக் (Assembly) கூட்டத்தில் நான் செய்த உதவி என்று தினம் ஒருவர் வீதம் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லி முடித்ததும், உதவி செய்ய வாருங்கள் தோழர்களே என்று ஒரு மாணவர் அழைப்பார். அங்கிருக்கும் உண்டியலில் வகுப்பு வாரியாக மாணவர்கள் காசு போட்டுவிட்டு, என் நாட்டுக்காகவும் என் நாட்டு மக்களுக்காகவும் இந்த உதவியைச் செய்கிறேன் என்று சொல்லித் தன் பெயரையும் சொல்லிச் செல்வார்கள்.

மாணவர்களே தயாரித்த உண்டியல்

இந்த உண்டியல்கூட மாணவர்களே தயாரித்தது தான். ஆண்டு இறுதியில் சேர்ந்திருக்கும் மொத்தப் பணத்தையும் யாருக்கு என்ன உதவி செய்யலாம் என்று அவர்களே கூடித் தீர்மானிக்கிறார்கள். அவர் களுக்கு வழிகாட்டியாக மட்டும் வாசுகி இருக்கிறார். உள்ளூரில் யாருக்கும் உதவி செய்வதில்லை எனத் தீர்மானித்திருக்கிறார்கள்.

கடலூர் பாதிப்புக்குக் கரம் நீட்டியவர்கள்

இதுவரை, கருணை இல்லங்களுக்குத் தேவை யான பீரோ, நாற்காலிகள், மின்விசிறிகள் ஆகிய வற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். வெள்ளத் தால் பாதிக்கப் பட்ட கடலூர் பகுதி மக்களுக்காக இரண்டாயிரம் ரூபாய் நிதியுடன் வீட்டிலிருந்து அரிசி, பருப்பு என துணை அத்தியாவசியப் பொருட் களையும் கொண்டு வந்து குவித்திருக்கிறார்கள். சென்னை யைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்குச் சீருடைகள், விபத்தில் காயப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒரு மாணவிக்காக இரண்டாயிரம் ரூபாய் உதவி என இவர்களின் ஈகைப் பட்டியல் நீள்கிறது.

சமுதாயத்தின் மோசமான கருத்துகள் எதுவும் இந்தப் பிள்ளைகளின் மனதைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதனால், அவர்களின் சிநேகிதியாக இருக்கிறேன். பொதுவாக ஆசிரியர்கள், கடன் வாங்கிக் கழித்தல் என்பார்கள். ஆனால் நான், உதவி வாங்கிக் கழித்தல் என்று சொல்லிக் கொடுப்பேன். உதவி செய்தால் திருப்பித் தர வேண்டாம் என்பதையும் அவர் களுக்குப் புரியவைப்பேன் என்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார் வாசுகி.

கிடைத்த அங்கீகாரங்கள்

பள்ளி வளாகத்தில் ஏதாவது பொருள் கீழே கிடந்தால் அதை எடுத்துக்கொண்டு போய் அதற் கென வைக்கப் பட்டுள்ள பிரத்யேகப் பெட்டியில் மாணவர்கள் போட்டுவிட வேண்டும். பொருளைத் தவறவிட்டவர் எங்கும் தேட வேண்டாம். அந்தப் பெட்டியிலிருந்து தங்களது பொருளை எடுத்துக் கொள்ளலாம். எந்தப் பொருளையும் இந்த மாணவர்கள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்து வதில்லை.

இதையெல்லாம் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கும் வாசுகியைத் தேடி விருதுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இடைநின்ற மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்ததற்காக காமராஜர் நல்லிணக்க விருது, புதுமையைப் புகுத்தி யதற்காக அகமதாபாத் அய்.அய்.எம். நிறுவனத்தின் கற்றலில் புதுமையைப் புகுத்தியவர் விருது போன் றவை வாசுகியின் தன்னலம் கருதாச் சேவைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள்.

சமூக அக்கறையுடன் மாணவர்கள் வாழ்வதற் கான வழிகாட்டுதல்களை அளித்திட வாசுகி போன்றவர்கள் பெருகிட வேண்டும்.

வெற்றி பெற இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார் அய்.பி.எஸ். பெற்ற முகம்மது சுஜிதா.எம்.எஸ். 2014ஆம் ஆண்டு பேட்ச்சின் கர்நாடகா மாநிலப் பிரிவின் இளம் அதிகாரியான இவர் ஷிமோகாவில் பயிற்சி பெற்று ஏ.எஸ்.பி.யாகப் பயிற்சி முடித்து அடுத்த பணி ஏற்கத் தயாராக இருக்கிறார்.

தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தில் உயர் நிலை எழுத்தராகப் பணியாற்றிய முகம்மது சல்மானின் ஒரே மகள் சுஜிதா. பள்ளிப் படிப்பில் எப்போதுமே 90 சதவீதம் வாங்கி னாலும் மேல்நிலைக் கல்வியில் மூன்றாவது குரூப்பான வணிகவியலை விரும்பித் தேர்ந் தெடுத்தார் சுஜிதா. கல்லூரிப் படிப்பை முடித்து மூன்றாண்டுகள் அய்.டி. நிறுவனத்தில் வேலை செய்தார்.

பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு யூ.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாரானார். இரண்டு முறை தேர்வு எழுதித் தோல்வியைத் தழுவியதால் சோர்வடைந்து மீண்டும் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு மேலாளரானார். இப் பணியைச் செய்தபடி மீண்டும் படித்து மூன் றாவது முயற்சியில் அய்.பி.எஸ். ஆனார் சுஜிதா.

எதுவும் தடை இல்லை!

அரசுப் பதவியில் உயர்ந்த பதவியை நான் பெற வேண்டும் என்கிற ஆசையோடுதான் அப்பா என்னை வளர்த்தார். நான் ஆறாவது படிக்கும்போது தூத்துக்குடி கப்பல் துறை முகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியான மச்சீந்திரநாதனைப் பார்த்து யூ.பி.எஸ்.சி. எழுதும் ஆர்வம் வந்தது. அதே ஆசையில் வளர்ந்தாலும் படித்தவுடன் கிடைத்த வேலையில் சேர்ந்தேன். முதல் இரண்டு முறை யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெல்ல முடியாமல் மீண்டும் அய்.டி. வேலையில் சேர்ந்தபோது அங்கு என்னுடைய உயர் அதிகாரியான ஷிரயான்ஸ் என்னை மிகவும் ஊக்குவித்தார்.

மூன்றாவது முயற்சியில் நேர்முகத் தேர்வுக் காக தனியார் அய்.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்றேன்.  பயிற்சியாளர் மற்றும் அங்கு படித்து வென்ற அரவிந்தன் அய்.பி.எஸ். ஆகியோரும் வழிகாட்டியாக இருந்தனர். ஆணுக்கு நிகராக என்னை வளர்த்த என் னுடைய பெற்றோர் இப்படிப் பலரின் ஊக்கத்தி னாலும் ஒத்துழைப்பினாலும் அய்.பி.எஸ். ஆனேன் எனப் பெருமிதம் கொள்கிறார் சுஜிதா.

பள்ளியில் மொழிப்பாடமாக இந்தியைப் படித்த சுஜிதா யூ.பி.எஸ்.சி.யிலும் அதையே தேர்ந்தெடுத்து எழுதினார். ஆனால், இந்தியில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் தமிழை மொழிப்பாடமாக எடுத்தார். இதற்காக மூன்று மாதங்கள் கடுமையாகப் படித்தார். விருப்பப் பாடமாக வரலாறை தேர்ந்தெடுத்தார்.

மேற்படிப்பு படிக்கவும் வேலைக்குச் செல்லவும் சுஜிதா வளர்ந்த சூழலில் பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவருடைய பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதற்குச் சுஜிதாவின் தாய் முகம்மது அஜீஸா ஒரு பட்டதாரியாக இருந்தது முக்கியமான காரணம்.

இது என் வழி!

> யூ.பி.எஸ்.சி. எழுதுபவர்கள் அரசு இணையதளங்களில் அதன் துறைரீதியான அறிவிப்புகள் மற்றும் திட்ட விளக்கங்களைப் பின்தொடர்வது நல்லது.

> நம் பாடத்திட்டம் தொடர்பானவைகளை மட்டும் படித்துக்கொள்வது அவசியம். இந்தத் தேர்வுக்குப் படிக்க மிக அதிகமான விஷ யங்கள் கிடைக்கின்றன. அத்தனையும் படிக்க நேரம் போதாது. ஆகவே எதைப் படிப்பது எதைத் தவிர்ப்பது என்பதைச் சரியாக முடிவு செய்யவேண்டும்.

> முக்கியமாக மாதிரித் தேர்வுகள் அதிகமாக எழுதிப் பழக வேண்டும். இதற்கான இணையதளங்கள் அதிகமாக வந்துவிட்டன.

> நமக்கு ஏற்படும் சந்தேகங்களை சக தேர்வாளர்கள் அல்லது பயிற்சி நிலையங்களின் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

> இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும்.

> தற்போது யூ.பி.எஸ்.சி.யில் அடிப்படைக் கேள்விகளைத் தவிர்த்துச் சமீபத்திய நிகழ் வுகள் தொடர்பாக அதிகமான கேள்விகள் வருவதாகப் பேச்சுகள் எழுகின்றன. இதை நம்பி அடிப்படைக் கேள்விகளை மட்டும் படிக்காமல் இருக்கக் கூடாது. ஏனெனில், இதை மறுதேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ளது.

> எல்லாவற்றுக்கும் மேலாக நாம் படிக்கும் அடிப்படைக் கேள்விகளின் விடைகள் நம் பணியில் அதிகம் பயன்படும்.

> டில்லியில் பயிற்சி பெற்றால்தான் யூ.பி.எஸ்.சி.யில் வெல்ல முடியும் என்கிற கருத்து நிலவுகிறது. ஆனால் நான் முழுக்கச் முழுக்க சென்னையிலேயேதான் யூ.பி.எஸ்.சி.க் காகப் படித்தேன்; பயிற்சி பெற்றேன்.
> நேர்முகத் தேர்வில் மட்டும் தவறான தகவல்கள் அளித்து ஏமாற்ற முயற்சிக்கவே கூடாது. முதலில் அவர்கள் நம்மைவிடப்

பல ஆண்டுப் பணி அனுபவம் பெற்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதைவிடவும் முக்கியம், நேர் மையும் வெளிப்படைத் தன்மையும் எப் போதுமே நமக்கு வெற்றி தேடித் தரும்.

ரேங்க்கில் அய்.பி.எஸ். பெற்ற சுஜிதாவுக்கு நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைத் துள்ளது. அப்போது அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி, விருப்பப் பாடமான வரலாறு மற்றும் அவர் அதுவரை செய்த பணி தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் எளிதாகப் பதில் தந்தவர், அறியாத கேள்விகளுக்குத் தயங் காமல் தெரியாது எனக் கூறி உள்ளார்.

யூ.பி.எஸ்.சி. தேர்வு என்பது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றும் வேலை வாய்ப்பாகும். இதை அந்தத் தேர்வு எழுதுபவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகாவில் பணியாற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. எனது பெற்றோர் அருகிலுள்ள தமிழகத்தில் இருப்பதால் அடிக்கடி சென்று அவர்களைச் சந்திக்க முடிவது சந்தோஷமே என்கிறார் சுஜிதா.

துணிந்தால் வானமும் வசப்படும்...!

இந்தியாவில் முதன் முதலாக 1000 மணி நேரம் விமானம் ஓட்டி சரலா தக்ரல் தன் னுடைய 21ஆம் வயதில் பிரிவு ஏ விமானி உரிமம் பெற்றார்.

மீண்டும் இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர் தொழில் முறை விமானி உரிமம் பெற்று சாதனைப் படைத்தார். அந்த பட்டியலில் மதுரைக்கு பெருமை சேர்க்கும் விதமாக 19 வயது நிரம்பிய செல்வி காவியா மதுரையின் முதல் பெண் விமானி என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.

அவர் கூறியதாவது: நான் மதுரை டி.வி.எஸ் சுந்தரம் பள்ளியில் படித்தேன். சிறு வயதில் ஏற்பட்ட ஒரு சம்பவம், என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளதென்றே சொல்ல லாம். நான் 6ஆம் வகுப்பு படிக்கும் போதிலி ருந்தே எனக்கு விமானம் ஓட்ட வேண்டு மென்கிற ஆசை இருந்தது. சரியாக நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு செய்தித் தாளின் வாயிலாக சென்னையில் தனியாருக்கு சொந்தமான ஓரியண்டல்  ப்ளையிங் கிளப் என்னும் ஒன்று இருப்பதை அறிந்தேன். உடனே அந்த கிளப்பினை தொடர்பு கொண்டு, அங்கு சேருவதைக் குறித்து விசாரித்தேன்.

அவர்கள், நீங்கள் இப்போது கூட வந்து இங்கு பயிற்சி பெறலாம், ஆனால் உங்களுக்கு ஸ்டூடண்ட் பைலட் லைசன்ஸ் மட்டுமே பெற இயலும். மக்கள் பயணிக்கும் விமானம் ஓட்ட உரிமம் வழங்கப்பட இயலாது, அதற்கு நீங்கள் 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை முன்வைத்தார்கள்.

எனவே நான் அவற்றினை மனதில் வைத்து 12ஆம் வகுப்பு வரை படித்தேன். 12ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு அரசாங்கத்துக்கு சொந்தமான ப்ளையிங் கிளப்பில் சேர வேண்டுமென்கிற ஆசை வந்தது. உடனே பெங்களுருவில் அமைந் துள்ள அந்த ப்ளையிங் கிளப்பின் இணையதள முகவரியில் சென்று, விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து  அவர்களுக்கு அனுப்பினேன்.

சில நாட்களில் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, நாங்கள் உங்கள் விண் ணப்பதை ஏற்றுக்கொண்டோம். குறிப் பிட்ட தேதியில் நுழைவுத் தேர்வும், இண்டர் வியூவும் இருக்கிறது என கூறினார்கள். உடனே நான் என் குடும்பத்துடன் அங்கு சென்று தேர்வை எழுதினேன். உடனே தேர்வின் முடிவை அறிவித்துவிட்டார்கள், பின் ஜூன் மாதம் 2013ஆம் ஆண்டு நான் என்னுடைய பயிற்சிகளை தொடங்க ஆரம்பித்தேன். முதல் மூன்று மாதங்கள் தரையைக் குறித்தான வகுப்புகள் நடை பெற்றன. அதன் பிறகு, வானில் பறக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் முதலில் பறக்க ஆரம்பிக்கும் போது, எனக்கு மெய் சிலிர்த்தது. அந்த நாள் வரை நான் விமானத்தில் போனதேயில்லை. முதன் முதலில் விமானத்தில் சென்ற போது, நான் ஓட்டவில்லை. என்னுடைய பயிற்சி யாளர் தான் ஓட்டினார்கள். அது ஒரு அனு பவத்திற்காக நடத்தப்படும் ஒரு சோதனை என்றும் சொல்லலாம். நம்முடைய உடல் அந்த சூழலுக்கு ஏற்றாற்போல் இருக்கிறது என்பதை அறிய நடத்தினர். சுமார் அரைமணி நேரம் அளவில் அது அமைந்திருந்தது.

முதலில் விமானத்தை டேக்-ஆப் செய்த போது எனக்கு சிரிப்பு வந்தது, வயிற்றுக்கும் பட்டாம்பூச்சி பறக்கும் அனுபவம் அது. நாங்கள் ஓட்டும் விமானத் தில் வழிகாட்டும் சாதனங்களை குறைவாகவே பயன்படுத்து வேன். அதிகமாக மேலிருந்து கீழே பார்த்துக் கொண்டு தான் ஓட்ட வேண்டும். முதலில் இருந்த பயம் இப்போது சுத்தமாக இல்லை.

இப்போது என்னுடைய மாணவர் பைலட் உரிமம் இருக்கிறது, இதற்கு பிறகு நான் 5 தேர்வு எழுத வேண்டும், அதில் 3 தேர்வை முடித்து விட்டேன், அதோடு  கூட இப்போது நான் ஓட்டும் விமானத்தில் 200 மணி நேரம் முடிக்க வேண்டும் அதில் இன்னும் நான் 150 மணி நேரங்கள் முடிக்க வேண்டும்.

இவையனைத்தையும் செய்தப் பிறகு என்னுடைய சான்றிதழ்கள் அனைத் தையும்  அவர்களுக்கு அனுப்பினால் அவர்கள் அவற்றை சரி பார்த்துவிட்டு எனக்கு பயணிகள் பயணிக்கும் விமானம் ஓட்டும் உரிமம் அளிப் பார்கள்.

பயணிகள் பயணிக்கும் விமானம் ஓட்ட உரிமம் பெற்றாலும், நான் விமானி அறையில் அமர்ந்து விமானிகள் ஓட்டுவதையே காண வேண்டும். அவர்களிடமிருந்து சுமார் 6 மாத அளவுக்கு கற்க வேண்டும், பின்பு தான் என்னை அந்த விமானம் ஓட்ட அனுமதிப் பார்கள். அதற்கு முக்கிய காரணம், நான் தற்போது ஓட்டும் விமானத்தை 55 நாட்ஸ்ல் டேக்- ஆப் செய்ய வேண்டும், ஆனால் அந்த வகை விமானத்தை நான் 250 நாட்ஸ்ல் எடுக்க வேண்டும். விமானம் ஓட்ட வேண்டும் என்பதை என் மனதினுள் ஒரு குறிக்கோளாக வைத்து இன்று வெற்றிக் கண்டேன்.

என்னுடைய அம்மா கல்பனா, அப்பா ரவிக்குமார் எனக்கு அதிகமாக ஊக்குவித் தார்கள், அப்பா உன் மனசு என்ன சொல் கிறதோ அதை தைரியமாக செய் என கூறி னார்கள்.     நான் ஓட்டிய விமானத்தை அந்த குறிப்பிட்ட விமான நிலையத்தில் யாரும் ஓட்டியது கிடையாது.

காரணம் அந்த விமான நிலையத்தில் ஓடு தளம் மிக குறுகிய ஒன்று. மேலும் அந்த ஓடுதளத்திற்கு அருகி லேயே ஒரு பெரிய பாலம் உண்டு. ஒரு பெண் தனியாக அந்த விமானத்தை ஓட்டியது தான் பெரிய விஷயமாக பேசப்பட்டது. என்னுடைய அடுத்த பயிற்சியாக இனி நான் மைசூர், கோவா போன்ற இடங்களுக்கு செல்வேன்.

முதலில் என்னுடைய பயிற்சியாளருடன், அடுத்து தனியாக செல்லவேண்டும். அதற்கு பிறகு, இரவு நேரப்பயணத்தில் இந்த இடங் களுக்கு செல்ல வேண்டும். என்னுடைய கனவு நான் விமான படையில் சேர்ந்து நம்முடைய நாட்டுக் காக விமானம் ஓட்ட வேண்டு மென்பதே, என கூறினார்.


அதிகரித்து வரும்
மார்பக புற்றுநோய்

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் களில் மார்பகப் புற்றுநோய் இரண்டா மிடத்தில் இருக்கிறது.

இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேருக்கு மார்பகப் புற்று நோய் உள்ளது என்றும், இந்த எண் ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில்  இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது.

உறுதிக்குக் கிடைத்த விருது!

கணவருக்கு உதவிசெய்யத் தென்னை நார் தொழிற்சாலைக்குள் நுழைந்தவர், இன்று இந்தி யாவின் சிறந்த நார் தொழிற்சாலை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் நார் தொழிற்சாலை நடத்தும் கவிதா, முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து வருகிறார். இவர் கிராமப்புறப் பெண்களைக் கொண்டு தென்னை மட்டையில் இருந்து நார் உற்பத்தி செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்.

தென்னை நார், கயிறு உற்பத்தியில் கேரளாவே முன்னிலை வகிக்கிறது. அடுத்தபடியாகத் தமிழ கத்தில் மதுரை, ராஜபாளையம், பொள்ளாச்சி, தென்காசி, திண்டுக்கல், ஈரேடு, திருப்பூர் உட்பட பரவலாக 5,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தென்னை நார், கயிறு தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு உற்பத்தியாகும் நார் மற்றும் தென்னை நார் கட்டிகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கயிறு வாரியம் ஆண்டுதோறும் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்குத்தான் கவிதா தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பெண்களால் கிடைத்த ஊக்கம்

கணவர், குடும்பம், குழந்தைகள் என்று பம்பர மாகச் சுழலும் இல்லத்தரசிதான் கவிதாவும். திடீரென தொழிலதிபர் ஆனது எப்படி?
நான் பி.எஸ்சி. முடித்திருக்கிறேன். என்னுடைய கணவர், தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுவந்தார். குழந்தைகள் வளர்ந்து உயர் கல்வி படிக்கத் தொடங்கியதும் அவருக்கு உதவி செய்வதற்காக எங்களுடைய தென்னை நார் தொழிற்சாலைக்குள் நுழைந்தேன் என்று சொல்லும் கவிதா, கடினமான இந்தப் பணியில் பெண்கள் ஈடுபட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

அவர்கள் உறுதியோடு வேலைசெய்யும்போது நாம் ஏன் தயங்க வேண்டும் என்று நானும் இந்தத் தொழிலில் முழு நேரமும் ஈடுபடத் தொடங்கினேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தத் தொழிற் சாலையை என்னுடைய முழுப் பொறுப்பில் விட்டு விட்டார் என் கணவர் என்று சொல்கிறார் கவிதா.

இவர்களது தொழிற்சாலையில் ஏற்றுமதி ரக நார் யூனிட், நார் கழிவு கட்டி யூனிட் ஆகிய இரண்டு யூனிட்கள் செயல்படுகின்றன. 130 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 99 சதவீதம் பேர் பெண்கள். ஓட்டுநர் பணியை மட்டும் ஆண்கள் கவனித்துக்கொள்கின்றனர்.

மதுரை சுற்று வட்டாரத்தில் உள்ள பத்து கிராமங் களைச் சேர்ந்த பெண்களுக்குத் தங்கள் தொழிற் சாலையில் வேலைவாய்ப்பு அளித்திருக்கிறார் கவிதா. தென்னை நார், தென்னை நார் கழிவுக் கட்டிகளை உற்பத்தி செய்து சீனா, அமெரிக்கா, பெல்ஜியம், இலங்கை, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து  வருகிறார்.

தினமும் ஏழு டன் தென்னை நாரும், அய்ந்து டன் தென்னை நார் கழிவுக் கட்டிகளையும் ஏற்றுமதி செய்கிறேன். தென்னை நாரிலிருந்து தயாராகும் கட்டிகளுக்கு அய்ரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்கு மண்ணுக்கு பதில் இந்த நார் கழிவுக் கட்டிகளில் விதைகளைப் பரப்பி விவசாயம் செய்கின்றனர்.

தென்னை நார் கழிவுத் தூளை உற்பத்தி செய்வது மிகுந்த சிரமம். மூன்று மாதம் வரை தண்ணீரை ஊற்றிப் பதப்படுத்தி, வெயிலில் காயவைத்து அதில் விதை முளைப்புத் திறன் ஏற்படுத்திய பிறகே, ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்தத் தூள் கிலோ எட்டு ரூபாய்க்கு விற்பனை யாகிறது. தென்னை நார் கிலோ எட்டு ரூபாய் முதல் 12 ரூபாய்வரை போகிறது. தற்போது உள்நாட்டு வியாபாரிகள் மூலமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். விரைவில் நானே நேரடியாக ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார்.

தன்னிடம் பணிபுரியும் பெண்களின் குழந்தை களின் கல்விச் செலவுகளுக்கு உதவிசெய்கிறார் கவிதா.

சிறந்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்துகிறார். இதுபோன்ற தொழி லாளர் நலச் செயல்கள் கவிதாவை வெற்றியை நோக்கி நகர்த்துகின்றன.

இந்த விருது இன்னும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி யிருப்பதாகச் சொல்லும் கவிதா, லூதியானாவில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில்  விருது பெறுகிறார்.

கலாம்களை உருவாக்கும் ஆசிரியை!

மாணவர்களைப் புத்தகப் படிப்பில் தேர்ச்சியடைய வைப்பது தான் தலைசிறந்த பள்ளி என்பதை நான் ஏற்க மாட்டேன். பாடத்தைத் தாண்டி அந்த மாணவர்களிடம் எந்த அளவுக்கு தேச பக்தி வளர்ந்திருக்கிறது, மாணவர்களின் தனித்திறமை என்ன, விளையாட்டில் அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள், மாணவர்களின் புதிய முயற்சி என்ன? இதற்கெல்லாம் ஆரோக்கியமான பதிலைச் சொல்லும் பள்ளிதான் உண்மையிலேயே தலைசிறந்த பள்ளி என்கிறார் சபரிமாலா.

திண்டிவனம் அருகிலுள்ள வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். பட்டிமன்றப் பேச்சாளராக இருந்து ஆசிரியப் பணிக்கு வந்தவர். சரியான போக்குவரத்துக்கூட இல்லாத வைரபுரம் பள்ளி மாணவர்கள், இப்போது கடல் கடந்தும் பேசப்படுகிறார்கள். அதற்குக் காரணம் சபரிமாலா.

அப்துல் கலாம் மறைந்தபோது, அவரைப் போன்ற மாணவர் களை நம்மால் ஏன் உருவாக்க முடியாது என்று களமிறங்கினார் சபரிமாலா. `அப்துல் கலாம் ஆகலாம் மாணவர் இயக்கத்தை உருவாக்கினார். பேச்சு வல்லமை கொண்ட மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இதில் சேர்த்தார். அந்த மாணவர்களுக்கு கலாமின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கக் கொடுத்தார். அவர்களைக் கொண்டே கலாமின் கருத்துகளை மடை திறந்த வெள்ளமாகக் கொட்டும் பேச்சாளர் அணிகளை உருவாக்கினார் சபரிமாலா. இவரிடம் பேச்சுப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் முதல் பரிசுகளை அள்ளிக்கொண்டு வந்தார்கள்.

வைரபுரம் பள்ளியை மற்ற பள்ளிகளும் திரும்பிப் பார்க்க, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 75 மாணவர்கள் கலாம் ஆகலாம் மாணவர் இயக்கத்தில் உறுப்பினரானார்கள். இவர்களைக் கொண்டு கலாம் போல் ஆகலாம் மாணவர் பட்டிமன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். கலாமின் நினைவு தினத்தில் அய்ம்பதாவது பட்டிமன்றத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

சரியாகப் பேச முடியாமல் திக்கிப் பேசும் மாணவர் ஒருவர், பட்டிமன்றத்தில் பேச ஆரம்பித்த பிறகு  இதில் கிடைத்த வருமானத்தில்   15 ஆயிரம் ரூபாயில் தனது தந்தையின் கடனை அடைத்திருக்கிறார். எட்டாம் வகுப்பு மாணவி சுஜித்ரா மதுரையில் திருக்குறள் தமிழ் என்ற தலைப்பில் 45 நிமிடம் பேசினார். அந்த உரைவீச்சைக் கேட்டு வியந்த தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று, தங்கள் பள்ளி விழாவுக்கு சுஜித்ராவைச் சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தது.

24 குழந்தைப் பாடல்களைத் தொகுத்து ஆடல் பாடல் ஏ.பி.எல். என்ற தலைப்பில் இசை மாலையாக்கி, மாணவிகள் நளினியும் கமலியும் நடனமாடும் குறுந்தகடு ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் சபரிமாலா.

ஆரம்ப வகுப்புகளிலிருந்தே மாணவர்கள் தமிழை இலக் கணப் பிழை இல்லாமல் வாசிக்கப் பழக வேண்டும் என்பதற்காகவே தாய்மொழி பயிலகம் ஒன்றை உருவாக்கி யிருக்கிறார். வகுப்பறைக்குள் திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் மணக்கிறது.

எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தமிழன்னை தந்த வரமாக நினைக்கிறேன். கலாம் வாழ்க்கையைப் படித்த மாணவர்களிடம் வித்தியாசத்தைப் பார்க்கிறேன். அவர்கள் டியூஷன் செல்வதில்லை. இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பிறருக்கு உதவ நினைக்கிறார்கள். நல்ல பண்புகள் மேலோங்கியிருக்கின்றன.

அப்துல் கலாம் அமைப்பில் உள்ள மாணவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற பிறகும் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். மாணவர்களின் பேச்சுகளை நூலாக்கி, அனைத்துப் பள்ளி களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். கலாம் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்கிறோம். நிச்சயம் எங்களிடமிருந்தும் கலாம்கள் தோன்றுவார்கள்! நம்பிக் கையோடு கூறுகிறார் சபரிமாலா.


சரித்திர சாதனை படைத்த தீபா மாலிக்

பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தீபா மாலிக். ரியே நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வீல் சேரில் உட்கார்ந்தபடியே சக்கர நாற்காலியில் பங்கேற்று, குண்டு எறிதல் போட்டியில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றபோது பார்வை யாளர்கள் இமைக்க மறந்தனர்.

டில்லியைச் சேர்ந்த 45 வயதான தீபாவுக்கு, கடந்த 14 ஆண்டுகளில் முதுகில் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்தபோதும் மார்புக்குக் கீழ் உடல் இயங்கவில்லை. அதற்காக அவர் சோர்ந்துவிடவும் இல்லை. மோட்டார் ஸ்போர்ட்ஸ், நீச்சல், ஈட்டி எறிதல் வீராங்கனையாகத் தன்னை மாற்றிக்கெண்டு, தன்னம்பிக்கையூட்டும் பேச் சாளராகவும் மாறினார்.

வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற வாய்ப்பு கிடைத்தபோதும் அதை மறுத்து டில்லியிலேயே பயிற்சியைத் தொடர்ந்தார் தீபா. விளையாட்டில் சாதிக்க வெளிநாடுதான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை என தீவிரமாக நம்பியவர், பயிற்சியாளர் வைபவ் சிரேஹி வழங்கிய கடும் பயிற்சிகளையும் தட்டாமல் செய்து இந்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

என் உடலில் கட்டி இருப்பது கண்டறியப் பட்டபோது, அனைத்துத் தேவைகளுக்கும் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதால், நான் வீட்டேடு முடங்கிப் போவேன் என்று பலரும் நினைத்தார்கள். அதைப் பொய்யாக்க வேண்டும் என்பதற்காகவே நீச்சல், குண்டு எறிதல் என நிறையப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். அறுவை சிகிச்சை தந்த வலியும் வேதனையும் என்னை நானே உணரும் புதிய பாதையில் என்னை இட்டுச் சென்றன. பாராலிம்பிக் போட்டிக்குத் தேர்வான பின், கண்டிப்பாகப் பதக்கம் வென்றுதான் வீடு திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தேன். சரியான திட்டமிடல் இந்த வெற்றியைச் சாத்திய மாக்கி யிருக்கிறது.

மீதமுள்ள வாழ்க்கை முழு வதும் நினைவுகூர இந்த வெற்றி போதும் என்று சொல்லும் தீபா, தான் பெற்ற இந்த வெற்றி, நாட்டில் உள்ள பிற மாற்றுத் திறனாளிப் பெண்கள் சமூகத் தடைகளை உடைத்து, அவர்களின் கனவை நோக்கிப் பயணிக்க உந்து சக்தியாக இருக்கும் என நம்புவதாகச் சொல்கிறார். அவரது நம்பிக்கை இன் னும் பல வீராங்கனைகளை உரு வாக்கும்!

எனக்காக என் கணவர் தன் வேலையைக்கூட விட்டுவிட்டார். பைக்கராகத் தொடர் வதே என் விருப் பம். விளையாட்டு வீராங்கனையாக இருப்பது இன்னும் சவால்தான். ஆனால் நாம் பெறும் வெற்றிதான் அந்தச் சவாலுக்குக் கிடைக் கிற பரிசு! என்கிறார் தீபா.


மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர்

தமிழக மாநில எல்லை வரையறுக்கப்படுவதற்கு முந்தைய மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி.

சமூக சீர்திருத்தவாதியான அவர் சிறு வயதிலிருந்தே பெண்கள் மேம்பாட்டுக்காக உழைத்தவர். 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்றாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று சேவை செய்யவும் ருக்மிணி லட்சுமிபதி தவறவில்லை.

தேர்வு பெற்ற முதல் பெண்

மதராஸ் மாகாணத்தில் ஆங்கிலேயர் - இந்தியர் என்ற இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்ட பிறகு, மதராஸ் மாகாண சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் 1934-ல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் சார்பில் ருக்மிணி வெற்றி பெற்றார். இதன் மூலம் மதராஸ் மாகாணத்துக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் பெண் என்ற பெரு மையை அவர் பெற்றார். 1937-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அவர், மதராஸ் மாகாண சட்டப் பேரவையின் துணை சபாநாயகராகவும் பொறுப்பேற்றார்.

இரண்டாவது உலகப் போருக்கு முன்னதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1939இல் மதராஸ் மாகாண காங்கிரஸ், அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியது. தொடர்ந்து காந்தி விடுத்த அழைப்பின் பேரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அதில் ஈடுபட்ட ருக்மிணி லட்சுமிபதி 1940இல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மருத்துவ வளர்ச்சிக்கு ஊக்கம்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946இல் நடைபெற்ற மதராஸ் மாகாண இரண்டாவது சட்டப்பேரவை தேர்தலில் ருக்மிணி லட்சுமிபதி வெற்றிபெற்றார். அப்போது டி. பிரகாசம் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் ருக்மிணி இடம்பெற்றார். அவருக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டது.

மதராஸ் மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த முதல் பெண் அமைச்சர் அவரே. மாகாணத்தில் நல்ல மருத்துவக் கல்லூரிகளின் தேவையையும், மருத்துவப் பணியில் இந்தியர்களை நியமிக்க வேண்டியதன் முக்கியத் துவத்தையும் வலியுறுத்தினார். அப்போது மதுரையிலும் ஆந்திரத்தின் குண்டூரிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ருக்மிணி கையெழுத்திட்டார். இந்திய மருத்துவ முறைகளுக்குக் கவனம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். அவருடைய கணவர் அசண்ட லட்சுமி பதி பிரபல ஆயுர்வேத மருத்துவர் என்பது குறிப் பிடத்தக்கது.

நாடு விடுதலை பெற்ற பிறகு மதராஸ் மாகாண அமைச்சரவை கலைக்கப்பட்டாலும், 1951இல் இறக்கும் வரை ருக்மிணி எம்.எல்.ஏவாகத் தொடர்ந்தார். அதன் பிறகு மதராஸ் மாகாணம் மறுவரையறை செய்யப்பட்டதால், பழைய மாகாணத்தில் செயல்பட்ட ஒரே பெண் அமைச்சர் அவரே.

அவரை கவுரவப்படுத்தும் வகையில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்கள் அமைந் துள்ள சாலைக்கு ருக்மிணி லட்சுமிபதி சாலை  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Banner
Banner