மகளிர்

நூறு வயதிலும் சாதிக்கலாம்

நூறு வயது  ஆகும் போது  எழுந்து  நிற்பதே சிரமமான காரியம்.  தாங்கிப்  பிடிக்கும் உதவி இல்லாமல்  நடப்பது என்பது பெரிய  சாதனை. அப்படியிருக்கும் போது நூறுவயதில்  நடப்பது  என்ன  பிரமாதம்..... ஓடியே  காட்டு கிறேன் ..   என்று    ஓட்டப் பந்தயத்தில்  கலந்து கொண்டு  முதலாவதாக  வருவதை இமாலயச் சாதனை என்றுதானே சொல்ல வேண்டும்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த  மன் கவுர்  கனடாவில் அண்மையில் நடந்த அமெரிக்கா மாஸ்டர்ஸ் கேம்ஸ் அமைப்பு  கனடா வான்கூவரில்  ஏற்பாடு செய்திருந்த   முதியோர்கள் ஓட்டப் பந்த யத்தில், தங்க பதக்கம் வென்று,  சுட்டி  முதல் முதி யோர் வரை  அனைவரையும் மலைக்க வைத்திருக் கிறார். மாஸ்டர் கேம்ஸ்  விளையாட்டு போட்டி நான்கு  ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 49 வயதைக் கடந்த யாரும் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

நூறு வயதாகும்  மன்,  100 மீட்டர் ஓட்டப் பந்தய  தூரத்தை  ஓடிக் கடக்க  எடுத்துக் கொண்ட நேரம் ஒரு நிமிடம்  இருபத்தோரு   விநாடிகள். இவருடன்   சுமார் முப்பது பேர் ஓடியுள்ளனர்.   இவர்கள் அனைவரும் எழுபது முதல் எண்பது வயதுக்குள்   இருப்ப வர்கள்.  இவர்களை,   வயதில் பெரிய  மன் கவுர்  பின்னுக்குத் தள்ளி  தங்கப் பதக்கம்  வென் றுள்ளார். இந்த  ஓட்டப்  போட்டியில் கலந்து கொண்ட ஒரே பெண் இவர்தான் என்ற பெருமையும்  மன் கவுருக்குச் சொந்தம்.

“மகன் குருதேவ்  சிங்கிற்கு  வயது  எழுபத் தெட்டு.  குருதேவ்   எனக்குத் தந்த ஊக்கம்தான்  என்னை ஓடவைத்தது.  தொண்ணூற்று மூன்று  வய திலிருந்து   முதியோர்  ஓட்டப் பந்தயத்தில்  கலந்து கொண்டு  வெற்றி பெற்று வருகிறேன். எனக்கு  மூட்டு வலி  எதுவும் கிடையாது.   இதயத்திலும்  பிரச்னை இல்லை. அதனால்  தைரியமாக   ஓட  முடிகிறது. நான் தினமும், அதிகாலை, என்  வீடு அருகே உள்ள பூங்காவில்,  நானூறு   மீட்டர் தூரம்  ஓடுவேன்  பிறகு   யோகா பயிற்சி.   எண்ணெய், நெய் இவற்றிற்கு   எனது  உணவில்  இடம்  இல்லை.

தினமும், அதிக அளவில் பழச்சாறுகளை குடிப்பேன்.  நானே தயாரிக்கும் சைவ உணவை  அளவாக   சாப்பிடுகிறேன். எண் ணெய்யில்  பொரித்த  உணவுவகைகளை சாப்பிடுவதில்லை... இவைதான்   எனது  வெற்றியின் ரகசியம்.

சென்ற  ஆண்டு, கனடாவில் நடந்த ஓட்டப் பந்தயம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டி களில், அய்ந்து தங்கம், அமெரிக்காவில் நடந்த உலக தொடர் விளையாட்டுப் போட்டிகளில்  அய்ந்து தங்கம், 2011இல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில், “அதலெட் ஆப் தி இயர் விருது’ போன்ற பல விருதுகளை பெற்றுள்ளேன்’’ என்கிறார் மன் கவுர் உற்சாகமாக.


ஆஸ்துமா இருந்தால் அந்த நாட்களில் அதிகமாகலாம்...

“மாதவிலக்குக்கு முன்பும், மாதவிலக்கின் போதும் பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவு குறையும். ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களில் சிலருக்கு இந்த ஹார்மோன் மாறுதல்கள் ஆஸ்து மாவின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம்.

மாதவிலக்கு தவிர, பெண்ணின் உடலில் ஹார்மோன் மாறுதல் களை ஏற்படுத்துகிற வேறு சில விஷயங்களும் ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கலாம். அவை... “கர்ப்பம் கர்ப்ப காலத்திலும் பெண் உடலில் ஹார் மோன் மாற்றங்கள் அதிரடியாக நடக்கும் என்பதால் அப்போது பெண்களுக்கு ஆஸ்துமாவின் தீவிரம் வழக்கத்தை விட அதிகமாகும்.

“முறை தவறிய மாதவிலக்கு சுழற்சி 28 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருகிறவர் களைவிட, காலம் தவறிய சுழற்சியை சந்திக்கிறவர் களுக்கும் ஆஸ்துமா இருந்தால் அதன் தீவிரம் அதிகமாகலாம். “மெனோபாஸ் ஹார்மோன் மாற்றங் களின் உச்சத்தில் இருப்பதால் ஏற்கனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் அதிகமாவதும், சிலருக்கு புதிதாக அந்த பாதிப்பு ஏற்படவும் கூடும்.

மாதவிலக்கு நாட்களில் ஆஸ்துமா தீவிரம் அதிகரிப்பது தெரிந்தால், ஆஸ்துமாவுக்கான சிறப்பு மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பது நலம். கூடவே உணவு முறையிலும் சில மாற்றங்கள் வேண்டும். “வைட்டமின் டி குறைபாடு உள்ளவர் களுக்கு ஆஸ்துமா பாதிப்பு அதிகமிருக்கும்.  மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் டி சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வது, வைட்டமின் டி அதிகமுள்ள பால், முட்டை, மீன் சேர்த்துக் கொள்வது, இளம் வெயிலில் நடப்பது போன்ற வற்றைச் செய்யலாம்.

மரம் நடும் தண்டனை

தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகரில் காவல்துறை மேலாளர் ரேமா ராஜேஸ்வரி  ரொம்பவும் பிரபலம்.   இந்தப் பிரபலத்தின் பின்னணியில்  இருப்பது இவர் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்குத் தந்துவரும்  வித்தியாசமான தண்டனைதான்.

தெலங்கானா மாநிலத்தில், சாலை விபத் துகள் அதிகமாக நடக்கும் இடம் மெஹபூப் நகர்தான். சில  விபத்துகளில்,   உயிரிழப்ப வர்களின் எண்ணிக்கை அதிகமாவது கவலையைத் தருகிறது.

கொலை செய்தால்தான் குற்றவாளி என்பதில்லை.  போக்குவரத்து விதிகளை மீறுபவர்களும் குற்றவாளிகள்தான்.  இப்படி சாலை விதிகளை மீறுபவர்களைக் கொண்டு    மரக்கன்றுகளை  நடச் செய்கிறோம்.  இந்த மரம் நடுதல் என்பது குற்றவாளிகளைக்  கொண்டு   செய்யப்படும் ஒரு சமூக சேவை.   சாலை விதிகளை   மீற வேண்டும்   என்கிற எண்ணத்தைக் குறைக்கும்.

குற்றவாளிகளுக்கு மரம் நடுதல் போக, வழக்கமான அபராதமும் உண்டு. தெலங்கானா அரசாங்கம் மரம் வளர்ப் பதில்   பசுமையை  பெருக்குவதில்   அதிக அக்கறை கொண்டுள்ளது.

செய்த குற்றத்திற்குத்  தண்டனையும்    தருவதோடு...  நாட்டுக்கும்   நல்லது  செய்ய   மரங்களை  நடச் செய்வது   சமூகப் பொறுப் புள்ள  விஷயம்தானே  என்கிறார் ரேமா ராஜேஸ்வரி.

இந்த வித்தியாசமான  தண்டனையால்,   மெஹபூப் நகரில்  சுமார்  2,765 செடிகள் நடப்பட்டு விட்டன.
மெஹபூப் நகரைச் சுற்றி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதுதான் தெலுங்கானா காவல்துறையின் திட்டமாம்..  
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள்  இந்த  லட்சியத்தை  நிறைவேற்றுவார்கள் என்று நம்பலாம்..


தேநீர்  விடுதியில்  வேலை பார்க்கும் விளையாட்டு  வீராங்கனைகள்!

14 ஜாம்ஷெட்பூர் நகர், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரில் அண் மையில் துவங்கப்பட்ட லா கிராவிடீ தேநீர் விடுதி இன்று அகில இந்திய அளவில் பிர பலம் அடைந்துள்ளது.

உலக நாடுகளின் தேநீர் மய்யமாகச் செயல்படும் இந்த தேநீர் விடுதி, 105 ரக தேநீரை ஆர்டரின் பேரில் தயாரித்து தேநீர் பிரியர்களுக்கு வழங்கிவருகிறது.

இதற்காக உலகின் பல பகுதியிலிருந்து தேயிலை மற்றும் மூலிகை, வாசனை செடி, வாசனை இலைகள், வாசனைப் பூக்கள் இவற்றை தருவிக்கிறார்கள். நூற்றி அய்ந்து வகை தேநீர் தயாரிப்பதினால் மட்டும் இந்த விடுதி அகில இந்திய பிரபலம் அடைய வில்லை.

இந்த விடுதியில் தேநீர், சிற்றுண்டி, உணவு வகைகள் தயாரித்து பரிமாறும் ஏழு பெண்கள் பேசும், கேட்கும் திறன் இல்லாதவர்கள். விளையாட்டு வீராங்கனைகள். சர்வதேச, தேசிய விருதுகள் பல பெற்றவர்கள்.

தகுதி, திறமை, கிடைத்த விருதுகள் எதுவும் அங்கீ கரிக்கப் படாததினால்.... வேலை எதுவும் கிடைக்காததினால், எதிர்காலம் இருண்டு கேள்விக்கு குறியாகி மிரட்டியதால் மிரண்டு போனவர்கள். அவர்களின் குறைந்த பட்ச வாழ்வாதாரத்திற்காகத் தொடங்கப் பட்டது தான் லா கிராவிடீ.

காது கேட்காத ஊமைகளான இந்த ஏழு பேர்களும் லா கிராவிடீ யை நிர்வகித்து வரும் நேர்த்தி அலாதியானது. விடுதிக்கு வருபவர் களை வரவேற்பது, என்ன வேண்டும் என்று கேட்டு சிற்றுண்டி தயாரித்து வாடிக்கையாளர் விரும்பும் தேநீர் என்ன என்பதை அறிந்து அதைத் தயாரித்து வழங்குவதை ஒரு கலை யாகவே செய்து வருகின்றனர். மவுன உலகில் வாழும் இவர்களின் மொழி சைகை தான்..

லா கிராவிடீ யில் பணிபுரியும் குர்விர் கவுர், கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் இறகுப் பந்தாட் டத்தில் தங்கப் பதக்கம் வென்றவர்.

குர்விர் கவுரின் சைகை மொழி, வாடிக்கை யாளர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்குப் புரிவதில்  சிரமம் ஏதும் இருந்தால்  உதவிக்கு  வந்து  மொழி பெயர்ப்பவர் லா கிராவிடீ யின்  உரிமையாளர் அவினாஷ் துக்கர்.

“ஒரு முறை நான் தற்செயலாக அவினாஷ் துக்கரைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் விருது கிடைத்ததற்குப் பிறகு என்னென்ன மாற் றங்கள் ஏற்பட்டன’’  என்று விசாரித்தார். “விருது கிடைத்தது அவ்வளவுதான்.. அர சாங்க உதவிகள் எதுவும்கிடைக்கவில்லை’’.. என்று சொன்னேன். ஜார்கண்டைச் சேர்ந்த இதர  விளையாட்டு வீராங்கனைகளை ஒன்று சேர்த்தார்.

மீதம் ஆறுபேருமே என்னைப் போன்றே பேச முடியாதவர்கள். காதும் கேட்காது. எங்கள் ஏழு பேரைக் கொண்டு இந்தத் தேநீர் விடுதியை உருவாக்கினார். உணவு வகைகள், பல சுவைகளில் தேநீர் தயாரிப்பதைச் சொல்லிக் கொடுத்தார்கள்’’ என்கிறார் குர்விர் கவுர்.

லா கிராவிடீ உரிமையாளர் அவினாஷ், “இப்படி ஏழு திறமையானவர்கள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தொடக்கத்தில் இவர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் தர வேண்டி வந்தது. பயிற்சிக்குப் பிறகு  உணவு தயாரிப்பதில், வாடிக்கையா ளர்களை வரவேற்பதில், ஆர்டர் பெறுவதில், பரிமாறுவதில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டார்கள்.

வாடிக்கையாளர்களுக்கும் திருப்தி. விரை வில், லா கிராவிடீ கிளைகளை ஆரம்பிக்கப் போகிறேன். இந்த வீராங்கனைகள் மாதிரி இன்னும் நூறு பேருக்கு வேலை வாய்ப்பு தரும் திட்டம் உருவாக இந்த ஏழு பெண்களின் உழைப்பு எனக்குத் தந்திருக்கும் நம்பிக் கைதான் காரணம்‘’ என்கிறார் அவினாஷ்.

தன் உடலையே சோதனைக் களமாக
மாற்றிய ஆராய்ச்சியாளர்

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக, மருத்துவ குணமுள்ள தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த வி.மஞ்சுளா.  தற்போது வரை 90 வகையான செடிகளை ஆய்வு செய்துள்ள இவர், அவற்றின் மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் பாதிக்கப்பட்டு வரும் பல்வேறு நோய்களை தீர்க்க முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்.

நோய் தீர்க்கக் கூடிய மருந்துக்கான செடிகளை தேடி காடு, மலைகளில் இவர் சுற்றித் திரியவில்லை. ஆனால், குடியிருப்புகளைச் சுற்றிலும், குப்பை மேடுகளிலும் சாதாரணமாக வளர்ந்து நிற்கும் தாவரங்களிலிருந்தே பல்வேறு நோய்களுக்கும் தீர்வு கண்டுள்ளார்.

செடியின் ஒவ்வொரு உறுப்பையும் எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்ற தேடலையும் தொடங்கியுள்ள இவர், மாரடைப்புக்கு (நெஞ்சு வலி) முக்கிய காரணமான கொழுப்பை கட்டுப்படுத்துவ தற்கான ஆராய்ச்சிக்கு தன் உடலையே பரி சோதனைக் களமாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டவை: “எங்களது குடும்பம் பாரம்பரிய முறையில் தாவரங்களை பயன்படுத்தி வைத்தியம் செய்து வரும் குடும்பம். எனது தாத்தா, தந்தை ஆகியோரின் வழியில் எனக்கும் அதில் நாட்டம் ஏற்பட்டது.

திருமணத்திற்கு பின், மருத்துவத் துறையில் இணை இயக்குநராக பொறுப்பு வகித்த எனது மாமனார் எஸ்.சுப்பிரமணியனும் எனது முயற்சி களுக்கு ஊக்கமாக இருந்தார். ஆங்கில மருத் துவத்தில் (அலோபதி) பல நோய்களுக்கு மருந்து இல்லை, அதுபோன்ற நோய்களுக்கு பாரம்பரிய முறையில் மட்டுமே தீர்வு காண முடியும் ” என கூறி எனது நம்பிக்கைக்கு வலு சேர்த்தார்.

அதன் பின்னரே, அதற்கான முயற்சியில் தீவிரமாக களம் இறங்கினேன். நம் உடம்பில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக விளங்குவது கல்லீரல். இதன் செயல்பாடு பாதிக்கப் படும் போது, ஒவ்வொரு உறுப்புகளும் தன் பணியை முறையாகச் செய்வதில்லை. இதன் காரணமாகவே நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

மனிதனின் ஆயுளுக்கு திடீர் முற்றுப்புள்ளி வைக்க கூடிய நெஞ்சுவலிக்கு முக்கிய காரணம் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதே. இந்த பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என திட்டமிட்டு, எனது உடலையே பரிசோதனை களமாக்க முடிவு செய்தேன்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை 400 மி.கிராம் வரை உயர்த்தினேன். இதனால் படபடப்பு, மூச்சு திணறல், தோள்பட்டைகளில் வலி, தலைவலி, கண் தெளிவின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட பின், மருத்துவ பரிசோதனைக்குச் சென்றேன்.

பரிசோதனை முடிவுகள் வந்தபோது, உடனடியாக அறுவை சிகிச்சை  செய்யாவிடில், உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள்(அலோபதி) எச்சரித்தனர். ஆனால், பதட்டமின்றி வீடு திரும்பிய நான், ஏற்கெனவே கண்டறிந்த 3 தாவரங்களை சாப்பிடத் தொடங்கினேன்.

3 நாள்களில் மூச்சுத் திணறல், வலி உள்ளிட்ட பாதிப்புகள் சீராகத் தொடங்கின. பயணம் செய்யக் கூடாது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளை கடந்து, என்னால் பேருந்தில் எளிதாக பயணிக்க முடிந்தது.

2 மாதங்களுக்கு பின், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு 180 மி.கிராமாக குறைந்தது. 3 வேளையிலும் இனிப்பு சாப்பிட்ட போதும், சர்க்கரையின் அளவு அதிகரிக்கவில்லை. இதனை அறிவியல் பூர்வமாக விரைவில் நிரூபித்துக் காட்டி, குறிப்பிட்ட 3 தாவரங்களில் உள்ள மருத்துவப் பொருள்களை பிரித்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளேன்.

சளி, காய்ச்சல், இருமல், பல் வலி, கண் வலி, தோல் வியாதிகள் உள்ளிட்ட பாதிப்புகள் தொடங்கி, சர்க்கரை நோய், கல்லீரல், சிறுநீரகம், பெண் களுக்கான எலும்பு தேய்மானம் மற்றும் கர்ப்பப்பை பிரச்சினை, எலும்பு முறிவு, மூட்டுவலி, மஞ்சள் காமாலை, மலச்சிக்கல்  உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும், நம் வீட்டைச் சுற்றி வளரும் தாவரங்களின் மூலம் குணப்படுத்த முடியும்‘’  என்றார் மஞ்சளா.

இந்திய வம்சாவளி சிறுமிக்கு கூகுள் அறிவியல் கண்காட்சி விருது

ஆரஞ்சு பழத்தோலை உறிஞ்சு பொரு ளாகப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தில் நீரைத் தக்கவைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெற முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார் 16 வயதான இந்திய வம்சாவளி தென்னாப்பிரிக்கச் சிறுமி கியாரா நிர்கின்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக கூகுள், தங்கள் அறிவியல் கண்காட்சி விழாவில் 50,000 டாலர்கள் உதவித்தொகையைப் பரிசாக அளித்துள்ளது.

11ஆம் வகுப்பு மாணவியான கியாரா நிர்கின் தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, ‘’தண்ணீர் இல்லாப் பயிர்கள் இனி இல்லை’’ என்ற பெயரில் தன்னுடைய செயல்திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

இந்த செயல்திட்டத்தில், வழக்கமாக உறித்துவிட்டுத் தூக்கியெறியப்படும் ஆரஞ்சு மற்றும் அவகேடோ பழத்தோல்களை உறிஞ்சு பொருளாகக் கையாண்டு, பயிர்களுக்குத் தண்ணீர் அளிக்கமுடியும் என்று நிரூபித்திருக் கிறார் கியாரா.

கூகுள் அறிவியல் கண்காட்சி விருது

கூகுள் நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகம் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்க்கும் 13 முதல் 18 வயது வரையிலான இளம் விஞ்ஞானிகளுக்கு, அறிவியல் கண்காட்சி நடத்தி விருது வழங்கி வருகிறது. இதில்தான் இந்திய வம்சாவளி தென்னாப்பிரிக்கச் சிறுமி கியாரா நிர்கின், தன்னுடைய கண்டுபிடிப்புக்காக விருது பெற்றுள்ளார்.

கண்டுபிடிப்பு குறித்து கியாரா கூறும்போது, ‘’சிறுவயதில் இருந்தே எனக்கு வேதியியல் மீது ஆர்வம் அதிகம்.  நிச்சயம் ஒரு நாள் விவசாய அறிவியல் துறையில் விஞ்ஞானி ஆவேன் என்று நம்புகிறேன்.

விவசாயத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப் படும் உறிஞ்சு பொருட்கள் செயற்கை பாலிமர் களால் ஆனவை. இவை தங்களின் நிறையை விட 300 மடங்கு நீரின் எடையை உறிஞ்சித் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை பெற்றவை. ஆனால் இவை மட்கும் திறன் அற்றவை. விலை அதிகமானவை. அக்ரிலிக் அமிலம், சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் பிற வேதிப் பொருட்களால் ஆனவை. என்னுடைய ஆராய்ச்சியில் சிட்ரஸ் அமிலம் இருக்கும் பழங்களில் இயற்கையிலேயே பாலிமர்கள் அமைந்துள்ளதைக் கண்ட றிந்தேன்.

45 நாட்கள் தொடர் பரிசோதனையில், தூக்கி யெறியப்படும் ஆரஞ்சு மற்றும் அவ கேடோ பழங்களின் தோல்களில் இயற்கையி லேயே உறிஞ்சு பொருட்களின் இயல்பு இருப்பதைக் கண்டறிந்தேன். இவை மட்கும் தன்மை கொண்டவை. ஏராளமான அளவு தண்ணீரை உறிஞ்சித் தக்கவைக்கும் தன்மை கொண்டவை. இவற்றால் நிலத்தை எப் போதும் ஈரப்பதமாக வைத்திருக்க முடியும். வழக்கமாகப் பாய்ச்சப்படும் தண் ணீரின் உதவி இல்லாமலே பயிர்களை வளர வைக்க முடியும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் விவசாயிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெருமளவில் பயன்படும்‘’ என்று கூறினார்.


படித்துக் கொண்டே சம்பாதிக்கலாம்

கற்பனை வளமிருந்தால் கல்லூரியில் படிக்கும்போதே கார்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளராக்கி, தொழில் முனைவோ ராகலாம் என்பதை நிரூபிக்கிறார் உருஷா மெஹர்.

சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழகத் தில் கட்டிட வடிவமைப்பு பிரிவில் படித்து வரும் உருஷா, கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் கலைக் கண்ணோடு பார்ப்பவர். தோழிக்குப் பிடித்த ஜீன்ஸ் பேன்ட் பழையதாகிவிட, அதில் ஏதாவது செய்து கொடு என்ற கேட்டிருக்கிறார். வழக்கமாக ஜீன்ஸ் துணியைப் பையாக மாற்றுவதில் விருப்பம் இல்லாமல், நோட்டுப் புத்தகங் களுக்கான அட்டையாக மாற்றியிருக்கிறார். தோழியிடம் மட்டுமல்லாமல், மற்றவர்களி டமும் ஏக வரவேற்பு.

செல்பேசி, பேனா போன்றவற்றையும் அதிலேயே வைத்துக்கொள்ளும்படி இருப்ப தால் மாணவர்களும் விரும்புகின்றனர். தொடர்ந்து வண்ண பட்டர் பேப்பர்களைக் கொண்டு விதவிதமான அளவுகளில் நோட்டு புத்தகங்கள் செய்தவர், பிரபலமான வாசகங் களை அட்டையில் வடிவமைத்துக் கொடுக் கிறார். எவர்சில்வர் வாளியில் காப்பர் பெயின்ட் அடித்து, அதில் 3-டி எம்போஸிங்கும் செய்து தருகிறார். - உருஷா மெஹர்
இன்ஸ்டாகிராம் ஆர்டர்கள்

உருஷாவின் வீட்டில் காணப்படும் அலங்காரப் பொருட்கள் ஒவ்வொன்றும் வே றொரு பொருளின் புதிய வடிவமாக இருக் கிறது. என்னுடைய ஒவ்வொரு டிசைனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. பரிசளிக்க வேண்டுமானால் என்னைக் கூப்பிடும் அளவுக்குப் பிரபலமாகிவிட்டேன். இன்ஸ்டா கிராமில் என் படைப்பு களைப் படமெடுத்து, பதிவேற்றினேன்.

இப்போது தொடர்ந்து ஆர்டர்கள் கிடைக்கின்றன. நாக்பூர், அய்தரா பாத் தொடங்கி உள்ளூர் வாடிக்கையாளர்கள் என்று மாத வருமானம் நிறைவைத் தருகிறது. சமீபத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்றபோது, ஒரு பெரிய நிறுவனத்தினர் என் படைப்புகளைப் பாராட்டி, ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றுமே தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் நான் செலுத்திய கவனம், இந்தப் பலனைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பவருக்கு புராடக்ட் டிசைனராகும் கனவிருக்கிறது.

விருப்பமானவற்றில் தீவிர கவனம் செலுத் தினால், அது தானாகவே உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று கூறும் உருஷா, வளரும் தொழில்முனைவோராக அவரது கல்லூரியில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளார்.

நெருக்கடியால் நிறைவேறிய கனவு

சென்னை கெருகம்பாக்கத்தில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலை நிர்வகித்துவரும் இவர், இதுவரை ஒன்றரை லட்சம் பெண்களுக்கு மேல் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப் புணர்வை அளித்ததுடன், சானிட்டரி நாப்கின்கள் செய்வதற்கான பயிற்சியையும் அளித்திருக்கிறார். யுனிசெஃப் அமைப்பின் மாஸ்டர் டிரெயினராக இருந்த இவர், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்.

நாகலட்சுமி, சிறு வயதிலேயே தாயை இழந்தவர். விடுதிகளில் தங்கிப் படித்ததால் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்திருக்கிறார்.

மத்திய அரசு அதி காரியான அப்பாவின் வழிகாட்டுதலால் எலெக்ட் ரானிக் இன்ஸ்ட்ருமெண்டேஷன், பேஷன் டெக்னா லஜி படித்தார். இவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்குச் செல்ல நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும் என்பதால், கெருகம்பாக்கத்தில் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். சில மாதங்களில் திருமணம் நடக்க, அடுத்தடுத்து மகனும் மகளும் பிறந்தனர். கணவருடைய தொழிலில் சுணக்கம் ஏற்பட்டு, பொருளாதார ரீதியாகச் சிக்கல்களைச் சந்தித்த போதுதான், ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார் நாகலட்சுமி.

சின்ன வயசுல இருந்தே ஏதாவது தொழில் தொடங்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, அதுக்கு வழிகாட்ட யாருமில்லாததால இல்லத்தரசிங்கற அடையாளத்தோட மட்டும் இருந்தேன். வீட்ல பணக் கஷ்டம் வந்தப்போதான் என் தொழிலதிபர் கனவு மீண்டும் மேலெழுந்துச்சு என்று சொல்லும் நாகலட்சுமி தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் பெண்கள் கூட்டமாக நிற்பதைப் பார்த்தார். விசாரித்தபோது அவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனே தங்கள் பகுதியில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுயஉதவிக் குழு ஒன்றைத் தொடங்கினார்.

குழு தொடங்கினால், ஏதாவது தொழில் செய் யணுமே. எனக்கு டெய்லரிங் தெரியுங்கறதால அதைத்தான் முதல்ல ஆரம்பிச்சேன். காஞ்சிபுரம் பி.டி.ஓ. ஆபிஸுக்கும் மாவட்டத் தொழில் மய்யத் துக்கும் போய் என்னென்ன தொழில் தொடங்கலாம், அதுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்னு விசாரிச்சேன் என்று சொல்லும் நாகலட்சுமி, எட்டு தையல் மிஷின்களோடு தனது தொழிலை விரிவுபடுத்தினார்.

நட்சத்திர ஓட்டல்களில் வைக்கப்படும் கைக் குட்டை தயாரிக்கும் ஆர்டர் பெரிய அளவில் கிடைத்தது. நல்ல வருமானம் வந்தாலும் வருடத்தில் ஒன்பது மாதங்கள் மட்டுமே வேலை. மீதியிருக்கும் மூன்று மாதங்களுக்கு என்ன செய்வது?

அப்போதான் என்.அய்.எஃப்.டி. சார்பில் தரம ணியில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி நடக்கப் போறதைப் பத்தி தகவல் கிடைச்சுது. தமிழகம் முழுவதும் இருந்து 32 பேர் அந்தப் பயிற்சியில கலந்துக்கிட்டோம். பயிற்சி முடிஞ்சதும் யாருமே தொழில் தொடங்கத் தயாராக இல்லை. காரணம் அங்கே பயிற்சி மட்டும்தான் கிடைச்சுது. ஒரு பொருளைத் தயாரிக்கறதைவிட, அதைச் சந்தைப்படுத்தறதுதான் முக்கியம். சானிட்டரி நாப்கின்களை எப்படி விற்பனை செய்யறதுன்னு தெரியாம பலரும் தயங்க, நான் துணிஞ்சு இறங்கினேன் என்று புன்னகைக்கிறார் நாகலட்சுமி.

ஆரம்பத்தில் இவருடன் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த இருவர் சேர்ந்து தொழில் தொடங்கியிருக் கிறார்கள். நாளடைவில் அவர்கள் விலகிக் கொள்ள, தொழில் தொடங்குவதற்காக வாங்கிய கடன் தொகை முழுவதும், இவரது தலையில் விழுந்தது.

எப்படிச் சமாளிக்கப்போறோம்னு முடங்கி உட்காராம, அடுத்து என்னன்னு யோசிச்சேன். யாரையும் நம்பாம நானே களத்தில் இறங்கினேன். சிவில் சப்ளை ஆபிஸுக்குப் போனேன். 24 அமுதம் சிறப்பு அங்காடிகளில் விநியோகிப்பதற்கான ஆர்டர் எனக்குக் கிடைச்சுது. அதுக்கப்புறம் ஏறு முகம்தான். வேலை செய்தே ஆகணும்னு கட்டாயம், ஏதாவது ஒரு தொழில்ல சாதிக்கணுங்கற விருப்பம். இது ரெண்டும்தான் எனக்கு இப்போ அங்கீ காரத்தைக் கொடுத்திருக்கு என்று சொல்லும் நாகலட்சுமி, பதினைந்து ஆண்டுகளாக சுயதொழில் செய்துவருகிறார்.

இயற்கை வழியில்

தனக்கு வருகிற ஆர்டர்களைப் பல சுயஉதவிக் குழுக்களுக்கும் பிரித்துக் கொடுக்கிறார். நாப்கின் தயாரிப்பில் பல புதுமைகளைச் செய்ய இவரது தொழில்நுட்ப அறிவு கைகொடுக்கிறது.

வாடிக்கையாளர்களின் கருத்துக்கு ஏற்பதான், ஒவ்வொரு மாடலையும் நான் மேம்படுத்தி யிருக்கேன் என்று சொல்லும் நாகலட்சுமி, தாவரப் பொருட்களையும் மூலிகைப் பொருட்களையும் பயன்படுத்தி நாப்கின்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
Banner