மகளிர்

பயங்கரவாதத்துக்கு எதிரான பெண்ணுக்கு அய்.நா. அங்கீகாரம்

நான் தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் என்னை யாராவது கொல்ல வேண்டும் என்று விரும்பினேன் என்று உலகை அதிரவைத்த நாதீயே மூராத், இன்று அய்க்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இராக்கின் கோச்சோ கிராமத்தில் யசீதி இன மக்கள் அதிகம் வசித்துவந்தனர். இவர்கள் சிறுபான்மையினத் தவர். உலகை அச்சுறுத்தி வரும் அய்எஸ் என்று அழைக்கப்படும் அய்.எஸ்.  படைகள், யசீதி இனமக்களை அழிப்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வரு கின்றன.

2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அய்.எஸ். படைகள் கோச்சோ கிராமத்துக்குள் நுழைந்தன. பெண்களையும் குழந்தைகளையும் ஒரு பள்ளியில் அடைத்தன. கிராமத்தில் இருந்த 600 ஆண்களைக் கொடூரமாகக் கொன்று குவித்தன. இதில் நாதீயேவின் சகோதரர்கள் ஆறு பேர் இறந்து போனார்கள். 150 பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக, மொசுல் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஏற்கெனவே சிறைபிடிக்கப் பட்ட 6,700 யசீதி பெண்கள் இருந்தனர். அவர்களைப் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்துவந்தனர். சிறுவர்களைத் தங்கள் படையில் சேர்த்துக்கொண்டனர்.

சில நாட்களுக்குப் பிறகு, நாதீயேவை அலங்கரித்தனர். ஆண்கள் வரிசையாக வந்து பார்வையிட்டனர். ஒரு ராணுவ வீரன் அவரை அழைத்துச் சென்றான். மதம் மாறச் சொன்னான். திருமணம் செய்துகொள்ளச் சொன்னான். அனைத்தையும் மறுத்தார் நாதீயே. ஒரு நாள் இரவு அந்தக் கொடூரத்தை நிகழ்த்தினான். அநாகரிகமான ஆடைகளை அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்தினான். அவனது சக ராணுவ வீரர்களுக்கும் இணங்கும்படி துன்புறுத்தினான். தினம் தினம் பலாத்காரம். கொடுமை தாங்க முடியாமல் தப்பிச் சென்றார். பாதுகாப்புக்காக நின்றிருந்த ஒரு ராணுவ வீரன் அவரைப் பிடித்துவிட்டான்.

அந்த இரவை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது. ஆடைகள் இன்றி ஓர் அறையில் அடைத்தான். அங்கே ஆறு பேர் நான் சுய நினைவை இழக்கும்வரை தொடர்ந்து பலாத்காரம் செய்தனர். சிகரெட்டால் சுட்டனர், அடித்தனர். அந்தக் கொடுமைகளை அனுபவித்த எந்தப் பெண் ணுக்கும் வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது. பலர் தற்கொலை செய்துகொண்டார்கள்.

என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியவில்லை. ஆனால் என்னை யாராவது கொன்றுவிட மாட்டார்களா என்று ஏங்கினேன் என்கிறார் நாதீயே.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் நாதீயே அடைத்து வைக்கப்பட்ட அறையின் கதவு பூட்டப்படாமல் இருந்தது. பக்கத்தில் வசித்த ஒரு குடும்பத்தின் உதவியுடன், அய்.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வெளியே வந்தார் நாதீயே. அங்கிருந்த அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார். பிறகு ஜெர்மனி வந்து சேர்ந்தார். அங்கே உடலுக்கும் மனதுக்கும் மருத்துவம் செய்துகொண்டார்.

இன அழிப்பு, ஆள் கடத்தல், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்றவற்றைக் கொடூரமான முறையில் பின்பற்றிவரும் அய்.எஸ்.சுக்கு எதிராகப் போராட வேண்டும்; யசீதி மக்களை மீட்டெடுக்க வேண் டும் என்று உறுதிபூண்டார் நாதீயே. அய்.நா. சபையில் முறையிட்டார்.

பெண்கள் மீதான அடக்குமுறைகள், பாலியல் சமத்துவம் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், நாதீயேவை உரையாற்ற அழைத்தது அய்.நா.
கிராமத்தில் மகிழ்ச்சியாகப் படித்துகொண்டிருந்த நான், இன்று குடும்பம் இழந்து, வீடிழந்து, நாடிழந்து நின்று கொண்டிருக்கிறேன்.

என்னைப் போல ஒவ்வொரு யசீதி பெண்ணும் சித்திரவதை அனுபவித்துவருகிறார்கள். அய்.எஸ். படைகள் நடத்திவரும் கோரமான இன அழிப்புகளுக்கு எதிராக உலகம் ஒன்றுதிரள வேண்டும்.

இவர்களிடம் அடிமைகளாக அடைபட்டிருக்கும் பெண்களை மீட்டெடுக்க வேண்டும் என்று தனக்கு நேர்ந்த கொடூரங்களை விளக்கிப் பேசினார் நாதீயே. உலகம் அதிர்ந்து போனது.

பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அய்.எஸ். பயங்கர வாதம் குறித்துப் பேசிவருகிறார். பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சித்திரவதை அனு பவிக்கும் பெண்களையும் குழந்தைகளையும் மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.

லாமியா ஹாஜி பஷார்

அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட நாதீயேவை சமீபத்தில் ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கான நல்லெண் ணத் தூதுவராக அய்.நா சபை நியமித்திருக்கிறது. தற்போது அய்க்கிய நாடுகள் சபையின் மதிப்புக்குரிய சகாரோவ் மனித உரிமைகள் விருது நாதீயே முராத்துக்கும் அய்எஸ் படையினரிடம் இருந்து மீண்ட லாமியா ஹாஜி பஷாருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

நாதீயே, லாமியா போன்ற பெண்களின் துணிச்சல் மிக்கப் போராட்டம், விரைவில் மற்ற பெண்களின் விடுதலைக்கு வித்திடும்.

தூரிகையால் பேசும் ரம்யா

கோலம் போடும் கைகள் தூரிகை பிடித்தால், பலவற்றை செய்யலாம் என்கிறார் ரம்யா சதாசிவம். சென்னையில் நடை பெறும் ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் தவறாமல் இடம்பெறுகின்றன.

சிற்பங்கள், இயற்கைக் காட்சிகள் ரசிப்பவர்களைத் தாண்டி, யதார்த்த நிகழ்வுகளை ஓவியமாகப் பதிவு செய்து அதில் வெற்றி பெறுகிறவர்கள் வெகு சிலரே. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ரம்யா, கலானந்த் பேட்டியில் இந்த ஆண்டுக்கான பிரபுல்லா தனுகர் விருது நிகழ்வில் சிறந்த ஓவியருக்கான மாநில விருது, ஸ்பந்தன் சிறந்த ஓவியக்கலைஞர் விருது என விருதுகள் வென்று யதார்த்த ஓவியர் களில் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

நான் படித்தது பி.எஸ்சி. பயோடெக்னாலஜி. மேற்கத்தியக் கலையில் டிப்ளமோ பெற்றேன். சிறுவயது முதல் பென்சில் ஓவியங்கள் வரைவேன். அதன்பிறகுதான் ஆயில் பெயின்டிங் மீது கவனம் திரும்பியது. இந்தியக் கலாச்சாரம், கிராம, நகர வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்யத் தொடங்கினேன். ஓவியம் கருத்தைச் செல்வதைவிட கதை செல்வதாக இருக்க வேண்டும்.

உழைக்கும் பெண்களே எப்போதும் என் விருப்பத் தேர்வு. அவர்களை கவுரவிப்பதற்காகவே வண்ணங்களைத் தீட்டுகிறேன் என்று சொல்பவர் சில கண்காட்சிகளில் பங்கேற்றதுடன், தானும் நிறைய ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார்.

பொழுதுபோக்காக ஆரம்பித்ததுதான். சக ஓவியக் கலைஞர்கள் பெண் கலைஞர்களை நன்றாக ஊக்குவிக்கின்றனர். கலை என்பது மனதுக்குத் திருப்தி அளிப்பதாக மட்டுமல்லாமல், நமக்கு வருமானம் ஈட்டித்தரவும் வேண்டும். அதனால் முகநூல் இணையதளம் என இணையதளத்தின் மூலம் ஓவியங்கள் விற்பனை செய்கிறேன். நன்றாக வரையும்போது, கலைத்திறன் நிறைந்த ஓவியங்களுக்கு வாடிக்கை யாளர்களிடம் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

இதனால் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இதற்கு என் அண்ணனும், அப்பாவும் உதவி செய்து வருகின்றனர் என்கிறார் ரம்யா.

இதுவும் எங்களால் முடியும்

சார் கொரியர் என்ற வார்த் தைகளைப் படித்ததுமே நம் மனம் ஓர் ஆணின் உரு வத்தைத்தான் கற்பனை செய்து கொள்ளும். மன் னர்கள் காலத்தில் செய்தி கொண்டு செல்லும் தூது வனில் தொடங்கி, தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களின் விநியோகம்வரை ஆண் களின் வசமாகவே இருக் கிறது டெலிவரி துறை. பயண மும், வாகனங்களைக் கையாள் வதும் ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நினைப்பு தான் பெண்களை இந்தத் துறையில் இருந்து தள்ளி வைத்திருந்தது.

தங்கள் அறிவாலும், திறமையாலும் அனைத்தையும் சாத்தியப்படுத்தும் பெண்கள், தற்போது விநியோகத் துறையையும் தங்கள் கையில் எடுத்துவிட்டார்கள். அமேசான் இந்தியா நிறுவனத்தில் டெலிவரி கேர்ள் பணியில் சேர்ந்து, சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஜமுனா ராணி, அப்படியான பெண்களில் ஒருவர்! சென்னை ராமாவரத்தைச் சேர்ந்த ஜமுனா ராணியிடம் புதிய துறையில் அவரது அனுபவம் எப்படி என்று கேட்டோம்.

திருமணத்துக்குப் பிறகு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான் அமேசான் இந்தியா நிறுவனம் பெண்கள் டெலிவரி குழுக்களை ஏற்படுத்தவுள்ளதாகப் படித்தேன். உடனே அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று நினைத்தேன். என் தோழிகள் இருவரும் ஆவலோடு முன்வந்தனர்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து, அமேசான் இந்தியா நிறுவனம் வாய்ப்பளித்தது. வங்கிகள், அய்.டி நிறுவ னங்கள், சில குறிப்பிட்ட குடியிருப்புகள்தான் எங்களின் முக்கிய வாடிக்கையாளர்கள். முதலில் எங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வர்கள், இப்போது எங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இப்போது நாங்கள் இந்தப் பகுதியின் தனி அடையாள மாக இருக்கிறோம் என்று தன் அனுபவங்களை வார்த் தைகளாக்குகிறார் ஜமுனா ராணி.

மேம்படும் பொருளாதாரம்

அலைச்சல் மிகுந்த வேலை சிரமமாக இல் லையா? என்று கேட்டால் எந்த வேலையில்தான் சிரமம் இல்லை? என்று பதில் வருகிறது ஜமுனாவிடமிருந்து. தற்போது ஒன்பது பெண்கள் இந்தத் துறையில் வேலை செய்துவருகிறார்கள். பலரும் முதல் முறையாக வேலைக்குச் செல்கிறவர்கள்.

இந்த வருமானம் எங்கள் குடும்பத்தின் நிலையை உயர்த்தியுள்ளது. குடும்பப் பொருளாதாரம் உயர்வதால் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் அதிகமாகின்றன. நாங்கள் மிக உற்சாகமாக எங்கள் பணியைச் செய்து வருகிறோம். நேரம் தவறாமைதான் எங்களின் சிறப்பு.   ஆர்டர்கள் நிறைய இருக்கின்றன. நேரம் இல்லை என்று விடைகொடுக்கும் ஜமுனா ராணி, பெண்கள் குழு வினரின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளிப்படுத்த மறக்கவில்லை.

ராமாவரம் டெலிவரி ஸ்டேஷனைப் பொறுத்தவரை, காலை எட்டு மணிக்கு வரும் நிறுவன வேனிலிருந்து பொருட்களை இறக்கி, ஒவ்வொருவரும் தங்களுடைய வழித்தடத்தைப் பிரித்துக் கொள்கிறார்கள். தங்கள் பகுதிக்கான விநியோகப் பொருட்களைப் பெரிய பையில் போட்டுக் கொள்கிறார்கள். ஹெல்மெட், யூனிபார்ம் அணிந்து கொண்டு இருசக்கர வாகனங்களில் கிளம்புகின்றனர்.

ஒருவருக்கு 20 பொருட்கள்வரை வழங்கப்படு கின்றன. பெரிய பொருட்களாக இருந்தால், வேனில் இருவர் எடுத்துச் செல்கின்றனர்.

அனைத்துப் பொருட் களையும் டெலிவரி செய்துவிட்டு, வீடு திரும்புகின்றனர். மீண்டும் மதியம் மூன்று மணிக்கு டெலிவரி ஸ்டேஷன் வந்து, மறுபடியும் பொருட்களைப் பிரித்துக்கெண்டு பறந்துவிடுகின்றனர். ஆறரை மணிக்குள் டெலிவரிகளை முடித்துவிடுகின்றனர்.

விரைவில் பெண்கள் டெலிவரி ஸ்டேஷன்களை அதிகமாகத் தொடங்க ஆர்வமாக இருக்கிறோம். பெண்கள் டெலிவரி குழுவினருக்கு அமேசான் நிறுவனம் அடிப்படைத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தந்திருக்கிறது. பாதுகாப்புக்காக அனைவரும் பெப்பர் ஸ்பிரே வைத்திருக்கின்றனர். அத்துடன் பாதுகாப்பான இடங்கள் என்று கண்டறியப்பட்ட பின்னரே பெண்கள் குழுவினர் நியமிக்கப்படுகின்றனர் என்கிறார்.

ஒரு பெண் பொருளாதார ரீதியாக சுதந்திரம் அடையும் போது அவளுக்கான வெளி பரந்து விரிவது கண் முன்னே தெரிகிறது!

தளராமல் போராடிய அரசி துர்காவதி

ராணி துர்காவதி, 16-ஆம் நூற்றாண்டில் கோண்ட் பகுதியின் (இன்றைய மத்தியப் பிரதேசம்) அரசியாக 14 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். முகலாயப் பேரரசர் அக்பரின் சமகாலத்தில், அவரது ஆட்சிப் பகுதிக்கு அருகே ஆட்சி புரிந்தவர். முகலாயப் படைக்கு எதிராகவும், அண்டை அரசரான பாஸ் பஹதூர் படைக்கு எதிராகவும் துணிச்சலாகப் போரிட்டவர்.

துர்காவதி, சண்டேல் வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்த சண்டேல் வம்சத்தினர் தான், முகமது கஜினியை எதிர்த்தவர்கள் என்பது மட்டு மில்லாமல், கஜுராஹோ கோயில்களில் உள்ள உலகப் புகழ் பெற்ற சிற்பங்களை வடிப்பதற்குக் காரணமாகவும் இருந்தவர்கள்.

மகனுக்குப் பதிலாக

1524ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி கலஞ்சார் கோட்டையில் (இன்றைய உத்தரப் பிரதேசம்), ராஜபுதன அரசர் கீரத் ராயின் மகளாகத் துர்காவதி பிறந்தார். 1542இல் கோண்ட் அரச வம்சத்தைச் சேர்ந்த தல்பத் ஷாவை மணந்தார்.

மகன் வீரநாராயணுக்கு அய்ந்து வயதான போது, தல்பத் ஷா இறந்தார். இதன் காரணமாகக் கோண்ட் ஆட்சிப் பகுதியை ராணி துர்காவதியே ஆள ஆரம்பித்தார். அதுவரை சிங்கார்கரில் இருந்த தலைநகரை, வியூக முக்கியத்துவம் அடிப்படையில் சாத்பூரா மலைத் தொடரில் உள்ள சவ்ராகருக்கு அவர் மாற்றினார். முதன்மை அமைச்சர் பையோஹர் ஆதார் சிம்ஹா, அமைச்சர் மான் தாக்கூர் ஆகிய இருவரும் துர்காவதி ஆட்சி நடத்த உதவியாக இருந்தார்கள்.

வெற்றியும் அச்சுறுத்தலும்

1556இல் போர் தொடுத்துவந்த அண்டைப் பகுதியான மால்வாவின் அரசர் பாஸ் பஹதூரை ராணி துர்காவதி வீழ்த் தினார். ஆனால், 1562இல் பாஸ் பஹதூரை வீழ்த்திய அக்பரின் படைகள், அந்தப் பகுதியை முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டுவந்தன. மால்வா தங்கள் வசமாகிவிட்ட நிலையில், கோண்ட் பகுதியின் செல்வ வளம் முகலாயர்களுக்கு முக்கிய மாகப்பட்டது. காரா மாணிக்பூரின் ஆளுநர் க்வாஜா அப்துல் மஜி அசஃப் கான், அதைக் கைப்பற்றும் நோக்கத்துடன் 1564இல் கோண்ட் பகுதி மீது போர் தொடுத்தார்.

தடுப்புப் போர்

முகலாயப் படைகளின் பெரும் பலம் பற்றி கேள்விப்பட்ட பிறகும் ராணி துர்காவதி சரணடைய விரும்பவில்லை. முக லாயப் படை பெரிது என்பதால் அதைத் தடுக்கும் முனைப்புடன் நர்மதை - கார் நதிகள் மற்றும் மலைத் தொடருக்கு இடைப்பட்ட நராய் காட்டுப் பகுதிக்குப் படையுடன் துர்காவதி போனார். முகலாயப் படையில் பயிற்சி பெற்ற வீரர்களும் நவீன ஆயுதங் களும் பயன்படுத்தப்பட, துர்காவதியின் படையில் இருந்த வீரர்களோ தேர்ந்த பயிற்சி பெறாதவர்களாகவும், பழைய ஆயுதங்களுடனும் இருந்தார்கள். இருந்தபோதும் துர்காவதி துணிச்சலுடன் தாக்குதலைத் தொடங்கினார்.

முகலாயப் படை சமவெளியில் நுழைந்தபோது துர்காவதி யின் வீரர்கள் தாக்கினர். இந்தச் சமமற்ற போரில் தளபதி அர்ஜுன் தாஸ் மடிய, ராணி துர்காவதியே படைக்குத் தலைமையேற்று வழிநடத்தினார். முதல் நாளில் துர்காவதி முகலாயப் படையை விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.

பிடிபட மறுப்பு

அடுத்த நாளில் அசஃப் கான் பீரங்கிகளுடன் போரைத் தொடங்கினார். இதை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் துர்கா வதி யானையில் வந்தார். இந்தப் போரில் துர்காவதியின் மகன் வீரநாராயண் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. போரில் இருவரும் காயமடைந்து பாதுகாப்பான இடத்துக்குத் தனித்தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர். முகலாயப் படை மூன்று முறை பின்வாங்கினாலும், தளராமல் திரும்ப வந்து போரிட்டுக் கொண்டே இருந்தது.

துர்காவதியின் யானைப் பாகன், ராணியைப் போர்க்களத்தை விட்டு அகலச் சொன்னார். வெற்றி சாத்தியமில்லை என்பதை உணர்ந்தபோது, குறுவாளால் தன்னையே மாய்த்துக்கொண்டார் துர்காவதி. 1564-ம் ஆண்டு ஜுன் 24-ஆம் தேதி அவர் மரணித்தார்.

அடையாளம் புனைதல்

ராணி துர்காவதியைக் கவுரவிக்கும் வகையில் 1983-இல் ஜபல்பூர் பல்கலைக் கழகத்தின் பெயர் ராணி துர்காவதி விஸ்வ வித்யாலயா என்று மாற்றப்பட்டது. ஜபல்பூர் - ஜம்மு தாவி இடையே ஓடும் அதிவிரைவு ரயிலுக்கு துர்காவதி எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களான முகலாயர்களுக்கு எதிராகப் போரிட்ட இந்து வீராங்கனை என்று ராணி துர்காவதியை முன்னிறுத்த இந்து மத அடிப்படைவாதிகள் முயற்சித்துவருகின்றனர். ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி அந்தக் காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு இடையிலான வழக்கமான மோதலாகவே மேற்கண்ட போர்களைக் கருத முடிகிறது. அந்த இடத்தில் ராணி துர்காவதி சரணடைந்துவிடாமல் துணிச்சலாக எதிர்த்துப் போரிட்டது நிச்சயமாகச் சாதாரண விஷயமில்லை.

நீச்சல்... வீல் சேர்... கூடைப் பந்தாட்டம்:
மாற்றுத் திறனாளி மாதவி சாதனை

இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்று மருத்து வர்கள் சொல்லி விட்டதால் வீழ்ச்சி உறுதியாகி விட்ட நிலையில் வாசல்படிவரை வந்து விட்ட மரணத்தை வென்றவர் மாதவி லதா.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோய் என்னைத் தாக்கியது. முதுகெலும்பு தீவிரமாகப் பாதிக்கப்பட்டது. முதுகெலும்பும் வடிவத்தில் குருகிப் போனது. அதனால் ஒரு நுரையீரல் அமுக்கப்பட்டது.

உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனை சுவாசிக்க ஒரு நுரையீரல் போதுமானதாக இல்லை. குறைந்த ஆக்சிஜனை மட்டும் சுவாசிக்க முடிந்ததால், தசைகள் உறுதி இழந்து தளரத் தொடங்கின. கூடப் போனால் ஒரு ஆண்டு பிடித்து நிற்கலாம் என்று கெடுவும் குறித்தாகி விட்டது. தண்டுவட அறுவை சிகிச்சை உடனடியாகத் தேவை என்று சொன் னார்கள். ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு எதையும் உறுதி யாகச் சொல்ல முடியாது என்ற அபாய அறிவிப்பு என்னை மேலும் திகிலடையச் செய்தது.

இந்த இக்கட்டான நிலைமையில்தான் பிஸியோதெரபிஸ்ட் ஆனந்த ஜோதியைச் சந்தித்தேன். எனது மருத்துவ அறிக்கைகளை அலசி முடித்து, தண்ணீருக்குள் உடல் பயிற்சி செய்து பாருங்கள்... நிச்சயம் முன்னேற்றம் உண்டாகும்.. கணித்துவிட்ட மரணத்தைத் தள்ளிப் போடலாம் என்ற உற்சாக வார்த்தை களைச் சொன்னார். நானும் நீந்தத் தயாரா னேன். இதைக் கேள்விப் பட்ட அனைவரும் எழுந்து நிற்க முடியாத மாதவி... நீந்துவதா.. என்று கேலி செய்தார்கள்.

வீட்டிலும் நான் நீந்த முடிவு செய்ததில் சம்மதம் இல்லை. போலியோவினால் பாதிக்கப்பட்ட கால்களினால் உடலின் எடை யைத் தாங்க முடியாது. அதே சமயம், நீரில், உடலின் எடையை தண்ணீரின் மேலுந்து சக்தி பகிர்ந்து கொள்வதினால், கால்களில் உடலின் முழு எடையும் இறங்குவ தில்லை. இந்த விஞ்ஞான உண்மையை பிசியோதெரபிஸ்ட் புரிந்து கொண்டதால், நீந்துதலை பரிந்துரைத் தார். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்..

நீச்சல் குளத்தில் இறக்கிவிடப்பட்டு .. மெல்ல மெல்ல நீந்தக் கற்றுக் கொண்டேன். தளர்ந்த தசைகள் உறுதியாயின... உயிர் அத்தனை சீக்கிரம் என்னை விட்டுப் பிரியாது... எனக்கும் எதிர்காலம் உண்டு என்பதைப் புரிந்து கொண்டேன். நீச்சலைத் தொடர்ந் தேன்... நீச்சலை ஆதாரமாக்கி ஏதாவது சாத னை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். எனக்கு பன்னாட்டு வங்கி ஒன்றில் வேலை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நடத்தப்படும், கார்ப்பொரேட் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கத் தீர்மானித்தேன். நான் நூறு மீட்டர் தூர நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு நீந்தினேன்.

என்னால் அந்த தூரத்தை முழுமையாக நீந்த முடிந்தது. என்னைப் பொறுத்தமட்டில் உடல் குறை இல்லாதவர்களுடன் சேர்ந்து நீந்தியது பெரிய சாதனை. மிகுந்த உற்சாகம் தரும் விளையாட்டு வீரர் என்ற பட்டம் தந்து கவுரவித்தனர். இந்தக் கவுரவம் ஒரு புதிய திருப்பத்திற்கு வித்திட்டது.

முதல் நீச்சல் போட்டி அனுபவத்திற்குப் பின், உடல்குறைவுள்ளவர்களுக்காக நடக்கும் தேசிய பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டேன். மூன்று முறை தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறேன். நாற்பதாவது வயதில் தேசிய சாம்பியன் என்பது ஒரு சந்தோஷமான நிகழ்வுதானே..

உடல் குறை உள்ளவர்களுக்கு நாமும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவில் உருவானதுதான் “ஆமாம்.. எங்களாலும் முடியும்‘ என்ற அமைப்பு. மாற்றுத் திறனாளி களின் விளையாட்டுத் திறமைகளை வெளியே கொண்டுவர பாடுபடும் அமைப்பு.

மாற்றுத் திறனாளிகளும் விளையாட்டில் பங்கு பெற்று முத்திரை பதிக்கலாம்.. என்ற நம்பிக்கையை இந்த நிறுவனம் தந்து வருகிறது. அது போன்று தமிழ்நாட்டில் நீந்துதலில் விருப்பம் உள்ள உடல்குறையுள்ளவர்களுக்காக, பாராலிம்பிக் நீந்துவோர் சங்கம் 2011-இல் துவங்கப்பட்டது. தொடக்கத்தில் நீச்சலில் நான் உட்பட நாலு பேர் தான் ஈடுபட்டிருந்தோம். இப்போது முன் னூறு மாற்றுத்திறனாளிகள் இந்த சங்கத்தின் பயனாளிகளாக இருக்கிறார்கள். இதில் அறுபது பேர் தமிழ் நாட்டின் சார்பாக சமீபத் தில் நடந்த தேசிய நீச்சல் போட்டிகளில் பங் கெடுத்துள்ளார்கள்.

இந்த முயற்சிக்குப் பின் இன்னொரு திருப்பம் ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு கூடைப் பந்தாட்டம் ஆடு வது என்ற புதுமையான முயற்சி குறித்து ஆலோசித்தேன். இங்கிலாந்தைச் சேர்ந்த இட்ர்ண்சிறீங் இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், ஒரே அலைவரிசை சிந்தனையுள்ள சிலருடன் சேர்ந்து ஒரு அமைப்பை 2014-இல் உரு வாக்கினோம்.

இந்த அமைப்பின் துவக்கத்தில் சில சிரமங்களைச் சந்தித்தோம். வீல் சேரில் அமர்ந்தபடி, கூடைப் பந்து விளையாடுவது இந்தியாவில் புதிதாக தொடங்கப்படும் முயற்சி. பலரிடம், பல அமைப்புகளிடம் ஆலோ சனைகள் கேட்டு இந்த அமைப்பிற்கு ஒரு வடிவம் கொடுக்க முடிந்தது. இந்த முயற்சியில் தோளோடு தோளாகவும் அதற்கு மேலும் துணையாக நிற்பவர் கல்யாணி ராஜாராமன் என்பவர். அவர்தான் இந்த அமைப்பிற்கு பொதுச் செயலாளர்.

இந்தக் கூட்டு முயற்சியில் 2014- இறுதியில் முதல் வீல் சேர் கூடைப் பந்தாட்டப் போட்டி சென்னையில் அரங்கேறியது. அய்ந்து அணிகள், தமிழ்நாடு, டில்லி, கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா சார்பாக விளையாடின. தொடர்ந்து, ஜப்பானில் நடந்த ஆசிய பசிபிக் கருத்தரங்கில் அழைப்பின் பேரில் நானும் கல்யாணியும் கலந்து கொண்டோம்.

2015-லும் இந்தப் போட்டிகள் டில்லியில் நடந்தன. போட்டியில் நானும் கலந்து கொண் டேன். 2020-இல் டோக்கியோவில் வீல் சேர் பாஸ்கட் பால் போட்டிகள் நடக்கப்போகின்றன. அதில் கலந்து கொள்ள இந்திய அணியை உருவாக்க வேண்டும்.

அந்த குறிக்கோளில் எங்கள் சங்கத்தின் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம்.. வீல் சேர் பாஸ்கட் பால் போட்டிகள் உலகில் சுமார் 150 நாடுகளில் நடக்கின்றன. இப் போதுதான் இந்தியா இதை விளையாட ஆரம்பித்துள்ளது... என்று சொல்லும் மாதவி தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். சென் னையில் பணிபுரிகிறார்.  

Banner
Banner